திருக்கதைகள்
திருத்தலங்கள்
ஜோதிடம்
Published:Updated:

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
உதவலாம் வாருங்கள்

உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள்.

அன்பார்ந்த வாசகர்களே...

ங்களில் பலருடைய விருப்பத்துக்கிணங்க, மீண்டும் வெளியாகிறது, `உதவலாம் வாருங்கள்' பகுதி. இது உங்களுக்கு மிகப் பரிச்சயமான - பிடித்தமான பகுதி என்பதை அறிவோம். எனினும், புதிய வாசகர்களுக்காக சில விளக்கங்கள்...

ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங் கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.

உதவலாம் வாருங்கள்

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க் கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லிய மாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம். சந்தேகமோ, விளக்கமோ... அவற்றுக்கான பதில் விளக்கங்களோ, உதவி குறித்த தகவல்களோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களுடைய தெளிவான முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

ன் தாயார் சிறுநீரகத் தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் பலனில்லை. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு சிவத்தலம், சிறுநீரக நோயைத் தீர்க்கவல்ல பரிகாரத்தலம் என்று கேள்வியுற்றேன். அந்தத் தலம் குறித்த துல்லியமான விவரம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் பகிர்ந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.

- கே.மீனாட்சி, சென்னை-151

எனக்கு ஏழுமுக ருத்ராட்சம் வழிபாட்டுக்குத் தேவைப்படுகிறது. அது எங்கு கிடைக்கும். கிடைக்கும் இடம், முகவரி மற்றும் தொலைபேசி எண் குறித்த விவரம் இருந்தால் பகிருங்களேன்.

- ச.பரமசிவம், வள்ளியூர்

சிவவாக்கியர் பாடல்கள் போன்று சித்தர் பெருமக்கள் அருளிய பாடல் தொகுப்பு அடங்கிய தனி நூல், விளக்கவுரையுடன் கிடைக்குமா?

- கே.என்.ரமேஷ், ஊத்துக்காடு

என் மகள் கருவுற்றிருக்கிறாள். அவளின் பொருட்டு திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயிலில் உரிய வழிபாடு, அர்ச்சனை ஆராதனை செய்ய விரும்புகிறேன். அதற்கான நடைமுறை என்ன? விவரம் தெரிந்தவர்கள் வழிகாட்டுங்களேன்.

- எஸ்.மீனாட்சி, பாளையங்கோட்டை

உதவலாம் வாருங்கள்

`தூர்வா கணபதி வழிபாடு’ என்று விநாயகருக்கான வழிபாடு ஒன்று உண்டு. சிறு வயதில் குடும்பத்துடன் அந்த வழிபாட்டைச் செய்திருக்கிறோம். ஆனால், தற்போது அதுகுறித்த நியதிகள் மறந்துபோய்விட்டன. குறிப்பிட்ட வழிபாட்டினை விளக்கும் புத்தகம் ஏதேனும் உள்ளதா அல்லது அந்த வழிபாடு குறித்து அறிந்தவர்கள் விளக்கினால், நன்றாக இருக்கும்.

- ஜெ.முருகன், முசிறி

முனிவர் வியாக்ரபாதருக்கான ஜீவ சமாதி எந்தத் தலத்தில் உள்ளது. அந்த மகானின் சாந்நித்தியம் உள்ள ஆலயத்துக்குச் சென்று வழிபட விரும்புகிறேன். விவரம் அறிந்தவர்கள் உதவுங்களேன்.

- எம்.நடராஜன், சென்னை-54

திருச்செந்தூர் முருகன் கோயில் இலை விபூதி பிரசாதத்தை உரிய கட்டணம் கட்டி ஆன்லைனில் பெற முடியுமா... இணையதளத்தில் ஆய்வு செய்ததில் உரிய விவரங்களைப் பெற முடியவில்லை. கோயிலுக்கு நேரில் சென்றால்தான் இலை விபூதிப் பிரசாதம் கிடைக்குமா?

- கோ.ஆறுமுகம், விழுப்புரம்

உதவிக்கரம் நீட்டியவர்கள்...

சென்ற இதழில் மங்கையர்க்கரசியாரின் சரிதத்தை விளக்கும் `தெய்வப் பாவை மங்கையர்க்கரசியார்’ எனும் புத்தகம் குறித்த விவரத்தைப் பகிரும்படி செங்கொட்டை வாசகர் கோ.லட்சுமிபதி கேட்டிருந்தார். அதற்கு, `குறிப்பிட்ட அந்த நூல் என் வசம் உள்ளது. முனைவர் கி.சுப்பிரமணியம் எழுதிய நூல் அது. கோவை ஆதிரை பதிப்பகம் வெளியீடு. புத்தகம் தேவையெனில், அந்தப் பதிப்பகத்தில் விசாரிக்கலாம். தேவைப்படின், என்னிடமுள்ள புத்தகத்தை நகலெடுத்து அனுப்புகிறேன்’ என்று பதில் அளித்துள்ளார் சென்னை பெசன்ட்நகர் வாசகர், கி.முருகன்.

`சென்னை- செங்கல்பட்டு அருகில் மலைக்கு மேல் கோயில்கொண்டிருக்கும் பெருமாள் ஒருவருக்குப் புடவையையே வஸ்திரமாக அணிவிப்பார்கள் எனும் அபூர்வ தகவல் ஒன்றைக் கேள்விப்பட்டேன். அந்தக் கோயில் எங்குள்ளது என்பது பற்றி தகவல் தெரிந்தால் சொல்லுங்களேன்.’ என்று சென்ற இதழில் சென்னை வாசகர் எம்.சஞ்ஜீவி ராயன் கேட்டிருந்தார். வாசகர் குறிப்பிட்ட கோயில் குறித்த விவரம் இதோ:

கல்யாண வரம் அருளும் பெருமாளின் திருத்தலங்களில் ஒன்று ஔஷதகிரி. சென்னை - செங்கல்பட்டு மார்க்கத்தில் உள்ளது சிங்கபெருமாள்கோவில். இங்கிருந்து ஒரகடம் செல்லும் வழியில் சுமார் 8 கி.மீ தொலைவில், ஆப்பூர் எனும் கிராமத்தின் வலப்புறம் அமைந்திருக்கிறது ஒளஷதகிரி. இதன்மீது கோயில் கொண்டிருக்கும் பெருமாளுக்குப் புடவை சாத்தி வழிபடுகிறார்கள் பக்தர்கள்!

பொதுவாக பெருமாளின் திருமார்பில் திருமகளும் தாயாரும் இருப்பதை நாம் பல தலங்களில் தரிசித்திருப்போம். ஆனால், ஒளஷதகிரி கோயிலில் அருளும் ஸ்ரீநித்ய கல்யாண பிரசன்ன வேங்கடேச பெருமாளே திருமகளாக தரிசனம் தருவதாக ஐதிகம். அதன் காரணமாகவே இங்கே பெருமாளுக்கு ஆறு கஜ புடவை வஸ்திரமாகப் பக்தர்களால் சாத்தப்படுகிறது. கல்யாண வரம் வேண்டிவருபவர்கள் பெருமாளுக்குப் புடவை சாத்துவதாக வேண்டிக்கொள்கிறார்கள்.

மலையின் மீது கோயில் கொண்டிருக்கும் பெருமாளை தரிசிக்க 508 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.கருவறையில் ஸ்ரீநித்ய கல்யாண பிரசன்ன வேங்கடேச பெருமாள் சங்கு சக்கரம் ஏந்தியும், அபய-வரத ஹஸ்தம் காட்டியபடியும் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தருகிறார். சித்தர்களும், அகத்திய மகரிஷியும் வழிபட்ட பெருமாளே இங்கு எல்லாமுமாக இருப்பதாக ஐதிகம். ஆகவே, பெருமாளையும் கருடாழ்வாரையும் தவிர வேறு தெய்வங்களோ, சந்நிதிகளோ இல்லை. அனுமன் இலங்கைக்குச் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் வழியில் விழுந்த சிறு குன்றே ஒளஷதகிரியாக இங்கு காட்சி தருகிறது. அற்புத மூலிகைகள் நிறைந்த மலை என்று இதைக் குறிப்பிடுகிறார்கள்.

கேள்விகள், தகவல் பகிர்வுகளை அனுப்ப வேண்டிய முகவரி:

`உதவலாம் வாருங்கள்'

சக்தி விகடன், 757, அண்ணாசாலை

சென்ன-600 002

Email: sakthi@vikatan.com