சினிமா
தொடர்கள்
Published:Updated:

‘எம்.ஜி.ஆரா வாழ 20 லட்சம் செலவு!’

நாமக்கல் எம்.ஜி.ஆர்
பிரீமியம் ஸ்டோரி
News
நாமக்கல் எம்.ஜி.ஆர்

என் மாப்ளகூட சினிமாலதான் இருக்கார். யார் தெரியுமா? சொன்னா ஷாக் ஆகிடுவீங்க, டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ்தான் அவர்.

சின்ன எம்.ஜி.ஆர், கறுப்பு எம்.ஜி.ஆர்களுக்கு இப்போது ஓய்வுக்காலம். இந்த இடைவெளியில்தான் நாமக்கல் எம்.ஜி.ஆர் ‘உழைக்கும் கைகள்’ என்று ஒரு படத்தில் நடித்திருப்பதோடு செய்தித்தாள் விளம்பரம், போஸ்டர்கள் என்று பப்ளிசிட்டி தூள் பறக்க, ‘யாரு சார் இது, எனக்கே பார்க்கணும்போல இருக்கே’ என்று கிளம்பிப் போனேன்.

“என் நிஜப் பெயர் சுப்பிரமணி. சின்ன வயசுல இருந்தே எம்.ஜி.ஆர் ரசிகன். காலேஜ் டைம்ல அவர் மாதிரியே வேஷம் போட்டு மாறுவேடப் போட்டில மேடை ஏறிப் பேசினேன். அதுக்குப் பெரிய வரவேற்பு கிடைச்சது. கூடவே பாராட்டி 500 ரூபா பணமும் கிடைச்சது. அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் எம்.ஜி.ஆர் மாதிரியே வாழ்ந்துட்டு இருக்கேன். இதுபோக பழைய கலைப்பொருள்களை வாங்கி விக்கிறது, பழைய தேக்கு மரங்களை வாங்கி விக்கிறது, சமையல் மஞ்சள் தூள் விற்பனைன்னு நானும் தொழிலதிபர்தான் தம்பி! இத்தனை தொழில் பண்றவன் வாத்தியாரோட நடிப்புத் தொழிலை விட்டுடுவேனா? அதான் நாமக்கல் எம்.ஜி.ஆர் ஆகிட்டேன்” என்றவர், அடுத்து சொன்ன விஷயம் செம ஆச்சர்யம்!

‘எம்.ஜி.ஆரா வாழ 20 லட்சம் செலவு!’

“என் மாப்ளகூட சினிமாலதான் இருக்கார். யார் தெரியுமா? சொன்னா ஷாக் ஆகிடுவீங்க, டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ்தான் அவர். என் மனைவி சிவகுமாரியோட சொந்தத் தம்பிங்க முருகதாஸ். என்னதான் அவர் என் மாப்ளயா இருந்தாலும் இப்போ பெரிய டைரக்டர். அதனால முருகதாஸ்னு வேணாம். முருகதாஸ் சார்னு நான் சொல்றதா எழுதிக்கோங்க. எனக்குக் கல்யாணம் ஆகும்போது முருகதாஸ் சார் சின்னப் பையன். அவர் பிளஸ் டூ முடிச்சிட்டு சினிமாவுல சேர்த்து விடச்சொல்லி வீட்ல ஒரே அடம். நான்தான் அவர்கிட்ட ‘மாப்ள நீங்க முதல்ல டிகிரி முடிங்க, அப்பறம் நானே உங்களை சினிமாவுல சேர்த்து விடுறேன்’னு சொன்னேன். என் பேச்சைக் கேட்டு திருச்சி போய் படிச்சாரு. ஒருமுறை என் மாமனார் ஆஸ்பத்திரில உடம்பு சரியில்லாம இருந்தப்போ அங்கே நடந்த சம்பவத்தைத்தான் பின்னால அவர் ‘ரமணா’வா எடுத்தாரு. இப்பவும் சென்னை வந்தா அவர் வீட்ல தங்குவேன். என் மாப்ள சினிமாவுல பெரிய டைரக்டரா இருக்குறது எனக்குப் பெருமைதான். அதுக்காக அவர் படத்துல நடிக்கிற ஆசையெல்லாம் இல்ல. ஏன்னா நான் பழைய ஸ்டைல்ல படம் பண்றேன். அவர் வேற மாதிரி பண்றார் அதனால...” என்றவர், “சரி, அதை விடுங்க தம்பி, நான் நடிகனான கதையைச் சொல்றேன்” என ஆரம்பித்தார்.

“நான் பார்க்க எம்.ஜி.ஆர் மாதிரி இருந்தாலும் முழுமையா எம்ஜியாரா மாறணும்னு ஒரு கட்டத்துல முடிவு பண்ணினேன். டாக்டர்கிட்ட போய் வாய், தாடை எல்லாம் ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன், கடவாய்ப் பல்லை எல்லாம் கழட்டி மாட்டிக்கிட்டேன், அதுபோக காது மடலையும் சின்னதா சர்ஜரி பண்ணி அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டேன். இப்ப நல்லா உத்துப்பாருங்க. எம்.ஜி.ஆர் எப்படி இருப்பாரோ அப்படியே இருக்கேனா?

‘எம்.ஜி.ஆரா வாழ 20 லட்சம் செலவு!’

ஆரம்பத்துல ஆயிரம் ரூபாய், ரெண்டாயிரம் ரூபாய்க்கு எம்.ஜி.ஆர் மாதிரி மேடைகள்ல ஆட ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா வரைக்கும் போய்ப் பார்த்துட்டு வந்தாச்சு. இப்போ உள்ளூர் நிகழ்ச்சிகள்ல 50,000 வரைக்கும் வாங்குறேன். வெளிநாடுன்னா 2 லட்சம் வரைக்கும் கேக்குறேன். இப்போ மூணு பாஸ்போர்ட் முடியப்போகுது. அவ்ளோ நாடு சுத்திட்டேன்.

2011-ல ‘இதயத்தில் ஒருவன்’னு ஒரு படம் பண்ணினேன். அது சுமாரா போச்சு. இப்போ ‘உழைக்கும் கைகள்’ பண்ணியிருக்கேன். சத்யராஜ் சாரே இந்தப்படத்தோட டிரெய்லரை ரிலீஸ் பண்ணினது எனக்கு பெருமையான விஷயம். படமும் இப்போ ரிலீஸ் ஆகி 40 தியேட்டர்ல நல்லா ஓடிக்கிட்டிருக்கு” என்றவரிடம் “இப்படி எம்.ஜி.ஆராகவே வாழ்றதுக்கு எவ்வளவு செலவாகுது?” என்றேன்.

“90 கோட் சூட் வெச்சிருக்கேன். 30 விக் இருக்கு. 50 ஷூ இருக்கு. இது போக ‘அடிமைப்பெண்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ மாதிரியான ஸ்பெஷல் டிரஸ்களை எனக்கு எங்க நாமக்கல் M.R டெய்லர் தச்சுக்கொடுக்கிறார். நானும் பல பேட்டிகள்ல அவர் பேரச் சொல்லிட்டேன், யாருமே போடமாட்டேங்குறாங்க, நீங்களாவது போடுங்க ப்ளீஸ். இதெல்லாம் சேர்த்து எப்படியும் 20 லட்சத்துக்கு மேல ஆச்சு. வெயிட்டாதானே பேமென்ட் வாங்குறோம். அதுக்கேத்த மாதிரி செலவும் பண்ணணும்ல.”

‘எம்.ஜி.ஆரா வாழ 20 லட்சம் செலவு!’

``சரி எம்.ஜி.ஆரை நேர்ல பார்த்திருக்கீங்களா?’’

“ஒருமுறை ஒரு கல்யாணத்துக்கு மேட்டூர் வந்திருந்தார். அப்போ நான் காலேஜ் படிச்சிட்டிருந்தேன். அவர் கார் கதவு தொறந்ததும் ஓடிப்போய் கை கொடுத்தேன். அவர் புடிச்ச புடி இரும்புப்புடி. அப்போ நான், `தலைவரே ஆட்சியைக் கவுத்திட்டாங்கன்னு நீங்க கவலைப்படாதீங்க, மாணவர்கள் நாங்க இருக்கோம். திரும்பவும் நீங்கதான் முதலமைச்சர்’னு சொல்லிட்டு வந்தேன். மறக்க முடியாத சம்பவம் தம்பி அது.”

“இப்போ இருக்கிற இ.பி.எஸ், ஓ.பி.எஸ், சசிகலா அரசியல் பற்றி?”

“இ.பி.எஸ், ஓ.பி.எஸ் கட்சியை அழகா கொண்டுபோறாங்க, சசிகலா, இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இணைந்து செயல்பட்டால் சந்தோஷமா இருக்கும். மேடையிலகூட நான் அரசியல் பேசினதில்ல, டான்ஸ்தான் ஆடுவேன். என்கிட்ட அரசியல் பத்திக் கேட்டா இதுக்கு மேல என்னப்பா சொல்றது” என்று செல்லமாய் அலுத்துக்கொள்கிறார் நாமக்கல் வாத்தியார்.