அலசல்
அரசியல்
Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூனியர் வாக்கி டாக்கி

- `இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

இன்ஸ் குடுமி ஏட்டு கையில்!

சூரியோதய மாவட்டத்தில், கடற்கரையை ஒட்டியுள்ள மங்கலமான காவல் நிலையம் அது. அங்கு இன்ஸ்பெக்டராக இருப்பவருக்கு காந்தியின் சிரிப்புமீது பற்று அதிகமாம். அதற்காக அவரைக் கட்டப்பஞ்சாயத்துக் கூட்டம் எப்போதுமே சூழ வலம்வருகிறதாம். ஸ்டேஷன் லிமிட்டுக்குள் அரங்கேறிவரும் கட்டப்பஞ்சாயத்துக் கொடுமைகளையும், அது சம்பந்தமான புகார்களையும் உடனுக்குடன் மேலே ரிப்போர்ட் செய்துவிடுகிறாராம் புதிதாக வந்த உளவு ஏட்டு. இதனால், தனது பஞ்சாயத்து ராஜ்ஜியத்துக்கு பங்கம் ஏற்படுவதாக, உளவு ஏட்டுடன் மல்லுக்கட்டிவருகிறாராம் இன்ஸ். விறுவிறுப்பான இந்தக் குடுமிபிடி சண்டைதான் மங்கல காவல் நிலையத்தில் ‘ஹாட் டாப்பிக்’காக ஓடுகிறது!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘கிடைக்கிறதை அள்ளிக்க வேண்டியதுதான்!’

தமிழகத் தலைநகரில் குட்கா தொடர்பான வழக்குகளில் ‘லட்டுகள்’ பெற்றதால், உப்பு மாவட்டத்துக்குத் தூக்கியடிக்கப்பட்டவர் ‘பெல்’ ஆய்வாளர். கடலோரப் பகுதி என்பதால், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனையும் புழக்கமும் இங்கு அமோகம். இந்தப் போதை மாஃபியாவிடம் தலைக்கு இரண்டு லட்டுகள் வசூலித்துவருகிறாராம் பெல் அதிகாரி. அண்மையில், அதிகமாக விற்றுத் தீர்க்கும் முக்கியப் பெண் வியாபாரியிடம் கூடுதலாக ஒரு ‘லட்டு’ கேட்க, அந்தப் பெண்ணின் மகனோ கோபத்தில், ஆய்வாளரின் கார் கண்ணாடியை அடித்து உடைத்துவிட்டாராம். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட உயரதிகாரியும் பெல் ஆய்வாளரை எச்சரித்திருக்கிறார். ஆனால், “முடிஞ்சா டிரான்ஸ்ஃபர்தானே பண்ணுவாங்க. அதுவரைக்கும் கிடைக்கிறதை அள்ளிக்க வேண்டியதுதான்” என வலிக்காத மாதிரியே கெத்து காட்டிவருகிறார் அந்த பெல் ஆய்வாளர்!

ஜூனியர் வாக்கி டாக்கி

கணவருக்கு மது; காக்கிக்கு மாது!

‘ஜில்’ மாவட்டத்தில், நீர்மின் உற்பத்தி நடைபெற்றுவரும் பகுதியின் அருகிலிருக்கிறது ஒரு காவல் நிலையம். அதில் பணிபுரிந்துவந்த காக்கி ஒருவர், சமீபத்தில் பெண் போலீஸ் ஒருவரிடம் திருமண ஆசைகாட்டி ஏமாற்றியதாகக் கைதானார். வயது 50 ஆனாலும் பெண்கள் விஷயத்தில் படு வீக்கான இந்த முப்பாட்டன், ஏற்கெனவே கோயில் மலை அடிவாரப் பகுதியிலுள்ள திருமணமான பெண் ஒருவருடன் நெருங்கிப் பழகிவந்திருக்கிறார். ஒருநாள் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு இரவில் சென்ற முப்பாட்டனார், பெண்ணின் கணவருக்கு அளவுக்கு அதிகமாக மதுவை ஊற்றிக்கொடுத்து மட்டையாக்கியிருக்கிறார். பின்னர் ‘ஐம்பதிலும் ஆசைவரும்...’ என்று பாடியபடியே அந்தப் பெண்ணுடன் தனிமையில் இருந்திருக் கிறார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர், முப்பாட்டனாரை ரோட்டில் இழுத்துப்போட்டு தர்ம அடி கொடுத்து விரட்டினார்களாம். இந்த விவகாரம்தான், முப்பாட்டனாரின் லீலைகளையெல்லாம் தோண்டித் துருவிக் கைதுசெய்வதற்கு மூலகாரணமாக அமைந்ததாம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘டூ வீலருக்கு 500, மினி வேனுக்கு 1,000!’’

கடல் மாவட்டத்தில் செயல்பட்டுவந்த நடிகர் பெயர்கொண்ட எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலை, ‘தானே’ புயலுக்குப் பிறகு திவாலாகிப்போனது. கடந்த 10 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் அந்தத் தொழிற்சாலையின் இரும்புப் பொருள்களை, சமூகவிரோத கும்பல்கள் திருடிச் செல்வதாகப் புகார்கள் குவிந்தன. இதையடுத்து, திருட்டைத் தடுப்பதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ‘அப்பாடா... இனி திருட்டுப்போகாது’ என்று புகார் கொடுத்த வர்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட... பாதுகாப்புக்கு வந்த காக்கிகளோ ‘ஒரு நாளைக்கு டூ வீலருக்கு 500 ரூபாய், மினி வேனுக்கு 1,000 ரூபாய்’ எனத் திருட்டுக் கும்பலிடம் வசூல்வேட்டை ஆடிவருகிறார்களாம். எதிர்த்து கேட்டால், ‘மேலிடம் வரை பங்கு கொடுக்கிறோம்’ என்று கேட்பவர்களை மிரட்டுகிறார்களாம்.

ஜூனியர் வாக்கி டாக்கி

தனலட்சுமிக்காகப் போட்டியிடும் காக்கிகள்!

தொழில் நகரிலுள்ள மேடான காவல் நிலையம் அது. கல்லூரிகள் அதிகம் இருக்கும் இந்தப் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே கஞ்சா உள்ளிட்ட பல போதைப்பொருள்கள் தாராளமாகப் புழங்கி வருகின்றன. போதைப்பொருள்களின் ‘ஹப்’பாக விளங்குவதால், நகரின் மற்ற ஸ்டேஷன்களைவிடவும் இங்கு கலெக்‌ஷன் கொட்டுகிறதாம். அதனால், இந்த ஸ்டேஷனை ‘தனலட்சுமி’ என கோட்வேர்ட் வைத்து அழைக்கின்றனர் லோக்கல் காக்கிகள். ‘எப்படியாச்சும் தனலட்சுமி ஸ்டேஷன்ல வேலை பார்த்துடணும்’ என்கிற லட்சியத்தில், வி.ஐ.பி சிபாரிசுகளுக்காக முட்டிமோதிக்கொண்டிருக்கின்றனர் சில காக்கிகள்!