Published:Updated:

`உங்களுக்கு தண்டனை அளிக்க உள்ளேன்; உடனே அறிவியுங்கள்!'- தீர்ப்புக்கு முன்பு நீதிபதி- வைகோ உரையாடல்

சத்யா கோபாலன்

தேசத் துரோக வழக்கில் வைகோ குற்றவாளி எனத் தீர்ப்பு.

வைகோ
வைகோ

தி.மு.க ஆட்சிக்காலத்தில், அதாவது கடந்த 2009-ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ராணி சீதை மன்றத்தில், `நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியது இந்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இருந்ததால், வைகோ மீது தேசத் துரோக வழக்கு மற்றும் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது ஆகிய பிரிவுகளில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வைகோ
வைகோ

இதுதொடர்பான வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று, இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை 10:30 மணிக்கு சிறப்பு நீதிமன்றம் கூடியது. நீதிபதி சாந்தி அடங்கிய அமர்வு முன்பு இரண்டாவது வழக்காக வைகோவின் தேசத் துரோக வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கில் வைகோ பெயர் அழைக்கப்பட்டதும் அவர் நேரில் வந்து ஆஜரானார். வைகோவைப் பார்த்த அடுத்த கனத்தில் நீதிபதி சாந்தி அவரிடம், '' இந்த வழக்கில், நான் உங்களுக்கு தண்டனை அளிக்கவுள்ளேன். அதை இன்றே அறிவிக்கலாமா அல்லது திங்கள் கிழமை, அதற்கு மேல் அறிவிக்கலாமா?’' என்று கேட்டார்.

நீதிமன்றம்
நீதிமன்றம்

அதற்கு வைகோ, ''இன்றே அறிவியுங்கள்'' என்று கூறினார். பின்னர் நீதிபதி, ''இந்த வழக்கில் உங்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கிறேன்'' என்றும் ''பத்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்'' என்றும் தீர்ப்பளித்தார். தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் தனக்கான அபராதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தினார் வைகோ. மேலும், தீர்ப்பை நிறுத்திவைக்கக் கோரியும் ஜாமீன் வழங்கக் கோரியும் வைகோ மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து, மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக, ஒரு மாதம் தீர்ப்பை நிறுத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.