அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

‘ரயில் திருட்டு... பாலத்தைக் கழற்று’ - யாரு சாமி நீங்கள்லாம்..?

பாலம் திருட்டு!
பிரீமியம் ஸ்டோரி
News
பாலம் திருட்டு!

ஓவியங்கள்: ஜீவா

`ரயிலில் திருட்டு நடப்பதைக் கேட்டிருப்போம்... அந்த ரயிலே திருட்டுப்போனதைக் கேட்டதுண்டா... செல்போன் திருட்டைப் பார்த்திருப்போம், செல்போன் கோபுரமே திருடப்பட்டதை கேள்விப்பட்டிருக்கிறோமா... `ஹே எப்புட்றா’ என்று ஆச்சர்யப்படும் வகையில் நடந்த திருட்டுச் சம்பவங்களின் தொகுப்பு இங்கே...

‘ரயில் திருட்டு... பாலத்தைக் கழற்று’ - யாரு சாமி நீங்கள்லாம்..?

ரயில் திருட்டு!

பீகார் மாநிலம், கர்ஹரா ரயில்வே யார்டில், கடந்த மாதம் ஒரு டீசல் ரயில் இன்ஜின் பழுது பார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்தது. ரொம்ப தாமதமாக இன்ஜினை சரிபார்க்கச் சென்ற ரயில்வே பொறியாளர்கள், `எங்கடா... இங்க இருந்த ரயிலைக் காணோம்?’ என வடிவேலு பாணியில் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். இது தொடர்பாக மூன்று பேரைப் பிடித்து விசாரித்த காவல் அதிகாரிகள் அரண்டே போய்விட்டார்கள். `எத்தனை நாளைக்குத்தான் சின்னச் சின்ன இரும்புத்துண்டுகளையும், நட்டுகளையும் திருடி விற்பது... அந்த இன்ஜின் சும்மாதானே நிக்குது... ஒரேயடியா அதை லவட்டினா என்ன..?’ என்று சிந்தித்து, செயலில் இறங்கியிருக்கிறார்கள் இவர்கள்.

சும்மா சொல்லக் கூடாது... கடும் உழைப்பு. அந்த யார்டைக் குறிவைத்து சப்வே மாதிரி, சுரங்கம் தோண்டியிருக்கிறார்கள். தினமும் ரயில் இன்ஜினின் ஒவ்வொரு பார்ட்டாகக் கழற்றி, தங்களின் வாடிக்கையான இரும்புக்கடையில் கொண்டுபோய் போட்டிருக்கிறார்கள். எறும்பு அரித்த கடலை உருண்டைபோல, இப்படி முழு இன்ஜினையும் சாக்குமூட்டைகளில் அள்ளியிருக்கிறார்கள். நம்பவே முடியாத காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இரும்புக்கடைக்கு வண்டியை விட்டிருக்கின்றனர். அங்கே சுமார் 13 சாக்கு மூட்டைகளில் எஞ்சியிருந்த ரயில் இன்ஜின் பாகங்களைக் கைப்பற்றிய பிறகே, ‘அடேங்கப்பா’ என்று மூவரையும் கைது செய்திருக்கிறார்கள். எஸ்கேப் ஆன இரும்புக்கடை முதலாளியைப் பிடித்தால்தான், இதேபோல வேறு பெரிய திருட்டு எதுவும் நடந்திருக்கிறதா என்று தெரியும் என்கிறது போலீஸ். பீகார் மக்களுக்கு இந்தச் செய்தி பெரிய அதிர்ச்சியைத் தந்திருக்காது என்கிறார்கள். காரணம், கடந்த ஆண்டு பூர்ணியாகோர்ட் ரயில்வே வளாகத்தில் மக்கள் பார்வைக்காக நிறுத்தப்பட்டிருந்த பழைய டீசல் ரயில் இன்ஜினை, அந்த ரயில் நிலையத்தின் பொறியாளரே திருட்டுத்தனமாக விற்றுவிட்டாராம்!

‘ரயில் திருட்டு... பாலத்தைக் கழற்று’ - யாரு சாமி நீங்கள்லாம்..?

டிரான்ஸ்ஃபார்மர் திருட்டு!

தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகிலுள்ள கெண்டையனஹள்ளி கிராமத்தில் லோ வோல்டேஜ் பிரச்னை இருந்ததால், புதிதாக 64 கேவி இம்ப்ரூவ்மென்ட் டிரான்ஸ்ஃபார்மரை அமைத்தது மின்சார வாரியம். புதிய டிரான்ஸ்ஃபார்மர் வைக்கப்பட்ட சில நாள்களிலேயே, நள்ளிரவில் மீண்டும் மின்தடை ஏற்பட்டு கிராமமே இருளில் மூழ்கியது. என்னடா இது என்று பொழுது விடிந்ததும் போய்ப் பார்த்திருக்கிறார்கள் மக்கள். டிரான்ஸ்ஃபார்மரைக் காணவில்லை! மின்தடை ஏற்படுத்தி, சாதுர்யமாக டிரான்ஸ்ஃபார்மரைத் தூக்கிச் சென்ற திருட்டுக் கும்பல், அதிலிருந்த ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் கம்பிகளை அபேஸ் செய்திருக்கிறது. இதேபோல, சேலம் சங்ககிரி, பாண்டிச்சேரி திருக்கனூர் போன்ற ஊர்களிலும் டிரான்ஃஸ்பார்மர்களைத் திருடி பவர் காட்டியிருக்கிறார்கள்!

‘ரயில் திருட்டு... பாலத்தைக் கழற்று’ - யாரு சாமி நீங்கள்லாம்..?

செல்போன் கோபுரம் திருட்டு!

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகிலுள்ள பெருமாள்பாளையத்தில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு செல்போன் டவர் இயங்கிவந்தது. கடந்த ஜூலை மாத இறுதியில் 10 பேர்கொண்ட கும்பல் ஒன்று அங்கிருந்த காவலாளியிடம் சில போலியான ஆவணங்களைக் காட்டி, “நாங்கள் கம்பெனி ஆட்கள். செல்போன் டவர் செயல்படாமல் இருப்பதால், அதை வேறு இடத்துக்கு மாற்றியமைக்கப்போகிறோம்” என்று சொல்லி சுமார் 40 லட்சம் மதிப்பிலான செல்போன் டவர், ஜெனரேட்டர், பவர்பிளான்ட், ஏசி பேட்டரி என மொத்தத்தையும் கிரேன் மூலம் பார்ட் பார்ட்டாகக் கழற்றி, லாரியில் ஏற்றிக்கொண்டு ஜூட் விட்டுவிட்டார்கள். சில நாள்கள் கழித்து உண்மையான செல்போன் டவர் பராமரிப்புப் பணியாளர்கள் வர, வெறும் கான்கிரீட் தளம் மட்டுமே எஞ்சியிருந்திருக்கிறது. காவலாளி நடந்ததைச் சொல்ல, தொடர்பு எல்லைக்கு வெளியே சென்ற அந்தத் திருடர்களை வாழப்பாடி போலீஸார் தேடிப்பிடித்து, திருநெல்வேலியில் கைதுசெய்திருக்கிறார்கள்.

இந்தச் சம்பவத்தால் உஷாரான நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் உள்ள செயல்படாத செல்போன் டவர்களின் நிலைமை குறித்து ஆய்வுசெய்தபோது, இப்படி 600 டவர்கள் மாயமாகியிருப்பது தெரியவந்தது!

‘ரயில் திருட்டு... பாலத்தைக் கழற்று’ - யாரு சாமி நீங்கள்லாம்..?

ஏடிஎம் மெஷின் திருட்டு!

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகிலுள்ள கூலிபாளையத்தில் பேங்க் ஆஃப் பரோடா வங்கியும், அதன் ஏடிஎம் மையமும் இருக்கின்றன. அந்த ஏடிஎம்-மை உடைத்துத் திருட முயன்ற கும்பல், அதை உடைக்க முடியாததால், காரில் கயிறு கட்டி முழு ஏடிஎம் இயந்திரத்தையும் அடியோடு பெயர்த்துச் சென்றிருக்கிறது. மறைவான இடத்தில்வைத்து, அதை உடைத்து பணத்தை எடுத்துக்கொண்டு, காலி இயந்திரத்தை வீசிவிட்டுப் போய்விட்டது. ஏழு தனிப்படைகளை அமைத்து விசாரித்த தமிழக காவல்துறை, கடைசியில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஆறு கொள்ளையர்களைக் கைதுசெய்தது. விசாரணையின்போது, திருட்டில் ஈடுபடுத்தப்பட்ட கார் யாருடையது என்று போலீஸ் கேட்க, “நஹி மாலும் சார்... அதுவும் திருட்டு காடி...’ என்று சொல்லி அதிரவைத்திருக்கிறார்கள் கொள்ளையர்கள்.

‘ரயில் திருட்டு... பாலத்தைக் கழற்று’ - யாரு சாமி நீங்கள்லாம்..?

பாலம் திருட்டு!

பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் பாயும் ஆரா ஆற்றின் குறுக்கே 1972-ம் ஆண்டு கட்டப்பட்ட பழைமையான இரும்புப்பாலம் ஒன்று இருந்தது. சுமார் 12 அடி உயரமும், 60 அடி நீளமும் 500 டன் எடையும்கொண்ட இந்தப் பாலத்தை, பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையில் ஒரு கும்பல் ஜேசிபி வாகனம், கேஸ் கட்டர்கள் மூலம் வெட்டி எடுத்துக்கொண்டிருந்தது. அப்போது கிராம மக்கள், `யாரடா அம்பி?’ எனக் கேட்க, ‘நந்தா’ பட கருணாஸ் பாணியில் `நாங்க நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள், இதை எடுத்துட்டு புதுப்பாலம் கட்டணும். செத்த இரும்புக்கம்பிகளை இறக்கிவெக்கிறேளா?’ எனும் தொனியில் மக்களிடமே உதவியும் கேட்டிருக்கின்றனர்.

அதை நம்பிய மக்கள், மூன்று நாள்கள் ஊதியமே இல்லாமல் தங்கள் உடல் உழைப்பைக் கொட்டிக்கொடுத்து, தளவாடங்களை லாரியேற்றி வழியனுப்பி வைத்திருக்கிறார்கள். அதன் பின்னர்தான் வந்தவர்கள் திருடர்கள் என்பதும், பாலத்தை அகற்றி அல்ல; திருடிச் சென்றிருக்கிறார்கள் என்பதும் மக்களுக்கு விளங்கியிருக்கிறது. அப்புறம் என்ன... போலீஸில் புகார் கொடுத்து, இரு அரசு ஊழியர்கள் உட்பட எட்டுப் பேரை உள்ளே தள்ளியிருக்கிறார்கள்.

‘ரயில் திருட்டு... பாலத்தைக் கழற்று’ - யாரு சாமி நீங்கள்லாம்..?

ஆம்புலன்ஸ் திருட்டு!

சென்னையிலிருந்து நள்ளிரவில் `லிஃப்ட்’ கேட்டுக் கேட்டு, விழுப்புரம் வந்து சேர்ந்த ஓர் ஆசாமி, அங்கிருந்த ஓட்டுநர்களிடம் `நான் திருநெல்வேலிக்குப் போக வேண்டும். என்னை ஏதாவது வாகனத்தில் ஏற்றி அனுப்பிவையுங்கள், கையில் காசில்லை’ எனக் கதறியிருக்கிறார். இரக்கப்பட்ட ஆம்புலன்ஸ் உரிமையாளர் பிரகாஷ், காலையில் வண்டி ஏற்றிவிடுவதாகக் கூறி அதுவரை தனது வாகனத்திலேயே ஓய்வெடுக்கச் சொல்லியிருக்கிறார். 

தூங்குவதுபோல் நடித்த அந்த ஆசாமி, பிரகாஷ் இல்லாத நேரம் பார்த்து, ஆம்புலன்ஸைத் திருடிக்கொண்டு சிட்டாகப் பறந்துவிட்டார். எங்கு தேடியும் ஆம்புலன்ஸையும் ஆசாமியையும் காணாத பிரகாஷ், காவல் நிலையத்துக்குச் சென்று புகாரளித்தார். அதேசமயம், பெட்ரோல் தீர்ந்து பாதை தெரியாமல் விழித்துக்கொண்டிருந்த திருட்டு ஆசாமி, பிரகாஷுக்கே மீண்டும் உதவி கேட்டு போன் போட்டிருக்கிறார். அப்புறம் என்ன... அந்த நபர் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலேயே பெரிய காரியங்களைச் செய்த இவர்கள், ஜெயிலுக்குள் என்னென்ன சேட்டைகள் செய்தார்களோ தெரியவில்லை!