சினிமா
Published:Updated:

வாசகர் மேடை: அன்புமணி ஆகிய நான்...

சிவகார்த்திகேயன்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவகார்த்திகேயன்

விகடனாருக்கு அன்புமணி மேல் அப்படி என்ன கோபமோ?

காதலுக்குத் தூது போய் மாட்டிக்கொண்ட சுவாரசியமான அனுபவம் இருக்கா? சொல்லுங்களேன்!

காதலுக்குத் தூது போய் காதலனாக மாறிய அனுபவம் உங்களுடைய கணக்கில் வருமா என்று தெரியவில்லை.

சா. செல்வராஜ்

1990-ல் ஃப்ரெண்ட் என் பக்கத்து வீட்டுப் பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்து அனுப்பினான். அவள் அண்ணனிடம் மாட்டிக் கொண்டேன். அவன் என் னடான்னா, ஒரு லெட்டரைக் கொடுத்து என் ட்யூஷன் சார் பொண்ணுக்குக் கொடுக்கச் சொன்னான். தொழிலை மாத்துறாய்ங்கன்னு அத்தோட அந்தப் பொழப்ப விட்டுட்டேன்.

ARiyasahmed

போன தூது எல்லாமே மாட்டிக்கிட்டதுதான்! காதலிக்கத்தான் கொடுத்து வைக்கலன்னு பார்த்தா, தூது போகக்கூட லாயக்கு இல்லன்னு பேர் எடுத்ததுதான் மிச்சம்...

Rajasekar4795

பிப்ரவரி 14, பிறந்தநாள் காதலிக்கு வாழ்த்து அட்டை வாங்கிக்கொடுக்க நண்பனுக்கு உதவ, அதிலுள்ள ஆங்கில வாசகத்துக்கு அர்த்தம் கேட்க, இரு கேட்டுச் சொல்றேன்னு நம்மாள் சொல்ல, ‘ச்சீ...கிரீட்டீங்ஸ் வாங்கக்கூடத் தெரியாதா’ எனப் பொங்க, அதுக்குப்பின் நண்பன் என்கூட பேசறதில்ல ப்ரோ.

DevAnandR155

வாசகர் மேடை: அன்புமணி ஆகிய நான்...

கமல் தயாரிப்பில் நடிக்கும் சிவகார்த்திகேயன், பழைய கமல் படத்தை ரீமேக் செய்து நடிப்பது என்றால் எந்தப் படத்தை ரீமேக் செய்யலாம்?

சிகப்பு ரோஜாக்கள்

M.செபஸ்டியன், மதுரை

‘தெனாலி’ - சிவகார்த்திகேயனுக்கு அட்டகாசமாகப் பொருந்தும்.

க கீர்த்தனா, சென்னை

கமலின் ‘சிங்காரவேலன்’ படத்தை சிவகார்த்திகேயன் ரீமேக் செய்து நடிக்கலாம். நல்ல என்டர்டெய்னராக இருக்கும்.

செந்(தில்)வேல்

‘காதலா காதலா’ படத்தை ரீமேக் செய்யலாம்... கமல் - பிரபுதேவா கேரக்டர்களில் எஸ்.கே - சந்தானம் நடித்தால், காசு மேல காசு கொட்டும்... கல்லா கட்டும்..!

கே.லக்‌ஷ்மணன்

அவள் அப்படித்தான். கமல் ரோலில் சி.கா-வும், ரஜினி ரோலில் வி.சே-வும் ஆக்ட் கொடுக்கலாம். ப்ரியாவாக நயன்தாரா. ஒரு பிளாக் பஸ்டர் படம் நிச்சயம்.

எஸ்.வாஜூ

‘ஜப்பானில் கல்யாணராமன்’ சிவகார்த்திகேயனுக்குக் கச்சிதமாகப் பொருந்தும்.

கதீஜா ஹனீபா

‘மைக்கேல் மதன காமராஜன்’ - நிச்சயமா அவரால வெரைட்டி காட்ட முடியும்.

எஸ்.பழனிவேல்

புன்னகை மன்னன்

அ.ரியாஸ், சேலம்.

ராமதாஸும் நீண்டநாள்களாக ஆசைப்படுகிறார். அன்புமணி தமிழக முதல்வராக ஐடியாக்கள் ப்ளீஸ்...

தர்மபுரி அல்லது பென்னாகரம் தொகுதியில் ஜெயிப்பவரே தமிழக முதல்வர் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.

பர்வீன் யூனுஸ்

விகடனாருக்கு அன்புமணி மேல் அப்படி என்ன கோபமோ? (எந்த மாற்றம் வந்தாலும் இந்த மாற்றம் வராது எனத் தெரிந்திருந்தும் இப்படி ஒரு கேள்வி கேட்கிறாரே..?!)

ரிஷிவந்தியா

அன்புமணி அவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து ஜெயித்தால் முதல்வர் பதவி. தோற்றால் கவர்னர் பதவி.

- ப.சோமசுந்தரம்

கடலூரில் ஒரு பயோ டெக்னாலஜி கல்லூரியை ‘தமிழகம்’ என்ற பெயரில் டாக்டர் ராமதாஸ் ஆரம்பித்து, அதில் அன்புமணியை முதல்வராக்கலாம். ‘தமிழக’த்துக்கு முதல்வர் என்றும் ஆகிவிடும்.

லீலாராம் தக்கலை

ஸ்டாலின் அவர்களை ஆறுமாதம் ஃபாரின் டூர் அனுப்பி வைத்துவிட்டு (பா.ம.க செலவில்தான்) அன்புமணியைத் தமிழக முதல்வராக்கலாம்?!

KmFarook6

‘பால் பொங்கும், பச்சத் தண்ணி எப்படிப் பொங்கும்?’ அன்றே கணித்தார் வடிவேலு!

pbukrish

ஆத்தி, நம்மகிட்ட 5 கோடியெல்லாம் இல்லைங்க... நான் பாட்டுக்கு ஏதாவது ஐடியா கொடுத்து கேஸ் போட்டுட்டாங்கன்னா வம்பு.

valarselvan

வாசகர் மேடை: அன்புமணி ஆகிய நான்...

தமிழ் சினிமாப் பாடல்களில் உங்களுக்கு நீண்ட நாள்களாகப் புரியாத விஷயம் எது?

இப்ப வர்ற சினிமாப் பாடல்களே புரியாத விஷயமாகத்தான் இருக்கிறது.

ஆர்.பிரசன்னா, திருச்சி

ஹீரோ அண்ட் ஃபேமிலி குடும்பத்தோட குதிச்சு கும்மாளம் போடற ஒரு பாட்டு... இது முடிஞ்ச அடுத்த செகண்ட் வில்லன் அண்ட் கோ வந்து, குருவி சுடற மாதிரி ஒவ்வொருத்தரையும் போட்டுத் தள்றது... இது ஏன்னு ரொம்ப நாளா எனக்குப் புரியலீங்...

ஆர். பத்மப்ரியா

தேவையில்லாத இடத்தில் தேவையில்லாத பாடலைப் போட்டால் படத்திற்குத் தேவையில்லாத ஒன்னுன்னு தெரிஞ்சும் தேவையில்லாமல் பாடலைப் போடுவதுதான்.

பெ.பாலசுப்ரமணி

கூடவே இருந்தவர்களை வில்லன் போட்டுத்தள்ளி, சற்று நேரத்தில் ஹீரோவும் ஹீரோயினும் குத்துப் பாட்டுக்கு ஆடுவது!

அ.ரியாஸ், சேலம்

அம்மாவோ அப்பாவோ இறந்துவிட்டால் அழுகை வரும் அல்லது சோகம் வரும், ஆனால் பாட்டு வருவது எப்படி என்பதுதான் புரியாத விஷயம்.

ப.இராஜகோபால்

அறுபது டெசிபல் வாய்ஸில் பாடும் குரலைக் கேட்டு பத்தாவது மாடியிலோ, ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலோ இருக்கும் ஹீரோவோ ஹீரோயினோ உணர்ச்சி வயப்பட்டு, பாடுபவர்களைத் தேடி வருவது மில்லியன் டாலர் கேள்வி.

எம். விக்னேஷ்

பல கோடி ரூபாய் செலவு செய்து படமாக்கப்பட்ட பாடலை, எண்ட் கிரெடிட்டில் பிளே பண்ணுவது எதற்குன்னே புரியலை!

நா.இரவீந்திரன்

சில பாடல்களில் ஹீரோ நடுரோட்டில் திடீரென்று ஆடத் தொடங்கினால் ரோட்டில் செல்லும் சிலர் உடனே அவருடன் சேர்ந்து ஆடுவது! அதுவும் ஒரே மாதிரி நடன அசைவுகளில் ஆடுவதெல்லாம் அன்பிலீவபிள்!

San8416

அருகிலேயே இருந்தாலும் இடையில் வந்து பாட்டை நிறுத்தாமல், டூயட் பாடி முடிக்கும் வரை காத்திருந்து கடைசியா ஹீரோயின் அப்பாவோ அண்ணனோ அவளைக் கோபத்துடன் இழுத்துச் செல்வது...

balebalu

காதல் தேசத்தில் வரும் ‘முஸ்தபா... முஸ்தபா...’ பாட்டு. கடைசி வரை யாரு முஸ்தபான்னே தெரியல!

urs_venbaa

90களின் டி.வி அனுபவங்களில் இப்போது எதை மிஸ் பண்ணுகிறீர்கள்?

கிரிக்கெட் மேட்ச் ஒளிபரப்பின்போது எல்லோர் வீட்டிலும் டி.வி இல்லாததால் டி.வி இருக்கும் வீடுகளில் அக்கம் பக்கத்தினர் சேர்ந்து கூடி நொறுக்குத் தீனி கொறித்துக்கொண்டு விசில் அடித்துக் கைதட்டி ஆரவாரமாக மேட்ச் பார்ப்பது கிட்டத்தட்ட கிரவுண்டுக்கே போனது போல குஷியாக இருக்கும். இப்போது தனியாகப் பார்க்கும்போது அந்தக் கலகலப்பு மிஸ்ஸிங்.

மீனலோசனி பட்டாபிராமன்

அப்போதெல்லாம் டி.வி புரோகிராம் குறித்து ரசிகர் விமர்சனங்களை வாரம் ஒருமுறை டி.வி-யில் அலசுவார்கள். ஒருவர் கடிதங்களைப் படிக்க, மற்றவர் சப்பைக்கட்டாகக் கட்டுவார். அந்த நிகழ்ச்சியை பயங்கரமாகக் கலாய்ப்போம். இப்போதெல்லாம் அப்படியொரு நிகழ்ச்சி இல்லவே இல்லையே!

வித்யா வாசன்

பெப்ஸி உமாவின் கீப் டிரையிங், கீப் ஆன் டிரையிங் என்னும் நம்பிக்கை வார்த்தையைத்தான்!

அ.ரியாஸ், சேலம்

டி.வி நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் மொட்டை மாடிக்குச் சென்று ஆண்டெனாவை அட்ஜஸ்ட் செய்த அப்பாவையும், அந்த ஆண்டெனாவையும்.

அ.பச்சைப்பெருமாள்

டெக்கும், வீடியோ கேசட்டுகளும் வாடகைக்கு எடுத்து ஒரே நேரத்தில் வரிசையாக இரண்டு மூன்று படங்கள் பார்த்ததைத்தான்.

எ .முகமது ஹுமாயூன்

வேறென்ன, வாஷிங் பவுடர் நிர்மா விளம்பரப் பாட்டுதான்...

கொ.ச.அமிர்தகடேஸ்வரன்

பிளாக் அண்ட் வொயிட் டி.வி-யை அடிக்கடி மிருதங்கம் மாதிரி தட்டித் தட்டி(?) உற்சாகப்படுத்திக்கொண்டே பார்த்து ரசித்தது டச்சிங்... டச்சிங்...

jerry46327240

ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கெல்லாம் வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கத் தொடங்கிடும். “சக்தி சக்தி சக்திமான்...!” கேட்கும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.

IamJeevagan

ஷட்டர் வைத்த டைனோரா டி.வி பெட்டி. அதை மூடுவதும் திறப்பதும் ஒரு அலாதி அனுபவம்.

manipmp

1. மாதம் ஒரு குழு அமைக்கும் ஸ்டாலின், ஜாலியாகக் குழுக்கள் அமைப்பது என்றால் என்னென்ன குழுக்கள் அமைக்கலாம்?

2. ‘நானும் தமிழன்தான்’ என்று சொல்லும் ராகுல் தமிழ் சினிமாவில் நடிப்பது என்றால் என்ன படத்தில் நடிக்கலாம்?

3. தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில் நீங்கள் ரசித்த சுவையான சம்பவம்?

4. ‘ஈயம் பூசுன மாதிரியும் இருக்கும், பூசாத மாதிரியும் இருக்கும்’ என்பதற்கு ஓர் உதாரணம்..?

5. உடல் எடையைக் குறைக்கிறேன் என்று உங்கள் நண்பர்கள் செய்யும் காமெடிகளைச் சொல்லுங்களேன்...

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!