
கல்லாங்காய். சும்மா லாகவமாய் உள்ளங்கைகளிலும் புறங்கைகளிலும் தாங்கி, பிற கல்லசையாமல் ஒரு கல் எடுத்து...
? இளையராஜா பயோபிக் எடுத்தால் அதில் யார் ராஜாவாக நடிக்கலாம்?
இப்ப வாசகர் மேடைல டாபிக்கலா படம் போட ஒருத்தர் வேணும், அதானே? விஷ்ணு விஷால் பேர் போட்டுக்கங்க!
பா.ஜெயக்குமார்
இளையராஜாவின் பயோபிக்கிற்கு ஜி.எம்.குமார் பொருத்தமாக இருப்பார்.
வெ.சென்னப்பன்
`இளைய' ராஜாவாக யுவன் ஷங்கர் ராஜாவையும், `வயதான' ராஜாவாக கங்கை அமரனையும் நடிக்க வைத்தால் `ராஜ களை' கொப்பளிக்கும்..!
கே.லக்ஷ்மணன்
பசுபதி நடித்தால் பசக்குன்னு பத்துப் பொருத்தங்கள் பொருந்தும்.
ப.சீனிவாசன்
நடிப்புத்திறன், உருவ ஒற்றுமை காரணமாக இளையராஜாவாக எம். எஸ். பாஸ்கர் நடிக்கலாம்.
Meenalochani Pattabiraman
பிரகாஷ்ராஜ் அல்லது நாசர்.
க.விஜயபாஸ்கர்
சிறுவயது ராஜாவாக வினித், அதற்கடுத்த காலகட்டத்தில் இளையராஜாவே நடித்தால் பயோபிக் கூடுதல் உயிர்ப்புடன் இருக்கும்.
ஜெ. ஜான்சி சுப்புராஜ்
``எனக்கு ராஜாவா நான் வாழுவேன்’’னு அவரே நடிக்க முன்வந்தால் அற்புதமாக இருக்கும்.
PG911_twitz

? ஸ்டாலின் ஆட்சியின் நூறு நாள்கள். ஒரு பிளஸ், ஒரு மைனஸ் சொல்லுங்களேன்...
பிளஸ்: எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்விகளுக்கு பதில்சொல்லிக் காலம் கழிக்காமல், கொரோனாத் தடுப்பு நடவடிக்கைப் பணியிலேயே முழுக்கவனம் செலுத்திய விதம்.
மைனஸ்: அமைச்சர்களுக்குப் பேச்சுச் சுதந்திரக் கட்டுப்பாடு விதிக்காதது.
அ. சுகுமார்
கோயில் ஆக்கிரமிப்புகளை மீட்டெடுப்பது பிளஸ்; அடிக்கடி பரவலாக ஏற்படும் மின்வெட்டு மைனஸ்!
வி.சி. கிருஷ்ணரத்னம்
பெறப்பட்ட மனுக்கள் மேல், தனி அதிகாரி நியமித்து நடவடிக்கை எடுத்தது பிளஸ் என்றால், ‘வாக்குறுதிகளை எந்தத் தேதியில் நிறைவேற்றுவோம் என்று சொன்னோமா?’ என பொறுப்புள்ள அமைச்சரே மழுப்பியது மைனஸ்.
வெ. ராமானுஜம்
பிளஸ் : `ஸ்டாலின் தான் வாராரு நல்லாட்சி தரப்போறாரு’ பாடல் வரியை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவது.
மைனஸ்: பள்ளிக்கூடத்தை மூடிவிட்டு டாஸ்மாக்கைத் திறந்திருப்பது.
ஜெரி.D.டார்வி
பிளஸ்: தமிழரே தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர், காவல் துறை இயக்குநர், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர்.
மைனஸ்: எந்த வேலையும் என்ன ஏதுன்னு புரியவே 3 மாதம் ஆகும். இது கொரோனா காலம், முதல் இரண்டு மாதங்கள் அதில் கவனம் செலுத்தியதால், அவசரப்பட்டு ஏதும் சொல்லக்கூடாது.
NedumaranJ
பிளஸ் : முக்கியப் பிரமுகர்களைச் சந்திக்கச் செல்லும்போது, சால்வை, பொக்கேவுக்குப் பதில் புத்தகம் வழங்கும் வழக்கத்தை அனைத்துத் துறைகளிலும், நிலைகளிலும் பரவலாக்கி, பழக்கமாக்கி விட்டது.
மைனஸ் : பேருந்து, மின் கட்டணம் உயர்ந்துவிடுமோ என மக்களைப் பதற்றத்தில் வைத்துள்ளது.
JaNeHANUSHKA
? `என்னென்ன சொல்றார் பாருங்க.’ இப்படி நீங்கள் இந்த ஆண்டு கேள்விப்பட்ட விஷயம் ஒன்று சொல்லுங்களேன்...
``எம்.ஜி.ஆருக்கு நான்தான் ஆலோசனை சொன்னேன்’’ என்று சசிகலா ஆடியோ ரிலீஸ் செய்தபோது..!
சிவம்
ஒவ்வொரு குடும்பத்தின் பேரிலும் 2.63 லட்சம் கடன் வைத்துவிட்டு `வெற்றிநடை போடும் தமிழகமே’ என்று எடப்பாடி சொன்னது.
தினேஷ் ராஜ்
`மன் கி பாத்' நிகழ்ச்சியைக் கேட்கும் போதெல்லாம் இதான் தோணும்!
நா.இரவீந்திரன்
‘ஆண்டு வருமானம் ஆயிரம் ரூபாய்’ என்று சீமான் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டது.
saravankavi
டெல்லிக்குப் போய் அவசரமாக மோடியைச் சந்தித்த பிறகு, எதற்காகச் சந்தித்தோம் என்று ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கொடுத்த விளக்கம்.
balasubramni1
இந்த வரன் வேண்டாம் என்பதற்குச் சொல்லும் காரணம்... உதாரணம் - சும்மாதான் பதிவு பண்ணினோம், அவசரம்னா வேற இடம் பாருங்க.
kalagowri91
யானைப்பசிக்குச் சோளப்பொரி போல், பட்ஜெட் தமிழக மக்களுக்குப் பெருத்த ஏமாற்றம் என்று சோளப்பொரிகூட கொடுக்காத
அ.தி.மு.க-வின் ஜெயக்குமார் பேசியதைக் கேட்ட போது தோன்றியது.
JarifAshiq

? இந்த விளையாட்டை ஒலிம்பிக்கில் சேர்த்தால் நாம் தங்கம் வெல்லலாம். இப்படியான ஒரு விளையாட்டு சொல்லுங்களேன்...
ஒலிம்பிக்கில் கலந்துக்காமலே, ஜெயிக்கிறவங்கள நம்ம குரூப்ல சேர்த்து ஜெயிக்கிற பா.ஜ.கட்சி விளையாட்டு..! தங்கம், வெள்ளி, வெண்கலம் எல்லாம் நமக்குத்தான்!
சாரதா ராம்
கல்லாங்காய். சும்மா லாகவமாய் உள்ளங்கைகளிலும் புறங்கைகளிலும் தாங்கி, பிற கல்லசையாமல் ஒரு கல் எடுத்து...
நளி2K20
`தண்ணீர் லாரி வந்தவுடன் பாய்ந்து ஓடி, குடத்தில் தண்ணீர் பிடிப்பது.' தமிழ்நாட்டுப் பெண்களுக்குத் தங்கத்தைப் பெற்றுத் தரும் விளையாட்டு.
க.கீராசந்த்
சோகத்தைக் காட்டுறதுக்கு தாடி வளர்க்கும் போட்டி வெச்சா, இந்தியாவுல ஒருத்தர் தங்கம் என்ன, வைரம், பிளாட்டினம்னு மெடல் வாங்குவாரு.
RamuvelK
கபடியைச் சேர்த்தாலே போதும் நிச்சயமா நமக்குத்தான் பதக்கம்! அடுத்தவன் காலை வாரிவிடற விளையாட்டாச்சே... நம்மள அடிச்சுக்க முடியுமா?!
h_umarfarook
ரிலே ரேஸ் போல, ஒரு புரளியை உருவாக்கி, அதை வேகமாகப் பரப்பும் போட்டி வைத்தால், தங்கம் மட்டுமல்ல, வெள்ளி, வெண்கலம், அலுமினியம் என எல்லா மெடலும் நமக்கே.
amuduarattai
? ஆஃபருக்கு வாங்கி, நீங்கள் வீட்டில் சும்மா வைத்திருக்கும் பொருள் என்ன?
ஆஃபர்ல வாங்கினாலே தேவையில்லாத ஆணிதான்.
செந்தில்வேல்
மி வி.ஆர் (Mi Virtual Reality) பிளேயர். நான்கு வருடத்திற்கு முன் வாங்கியதை நான்கு மாதங்கள்கூடப் பயன்படுத்தவில்லை.
சுந்தரபாண்டியன்
சேஃப்டி லாக்கர். பிஃப்டி ருபீஸ்கூட சேமிக்க முடியாததால் சிவனே என்று ஒரு மூலையில் கிடக்கிறது.
ரிஷிவந்தியா
ஆஃபரில் கிடைத்த `ட்ராவல் பேக்ஸ்.'
(எனக்கு மட்டுமல்ல, நம்ம பிரதமர்க்கும்தான்..!)
மணிமேகலை பாலு
சமீபத்தில் செல்போன் வாங்கியபோது ஆஃபர்க்கு வாங்கிய ஸ்பீக்கர். அதில் நான் கேட்கும் பாடல்கள் மகளுக்குப் பிடிப்பதில்லை. ‘சுத்த போர், நிறுத்தும்மா’ என்பாள். அவள் கேட்கும் பாடல்கள் எனக்குப் பிடிப்பதில்லை. பாடல் வரிகளே கேட்காமல் ஒரே இரைச்சல், ‘ஆஃப் பண்ணு’ என்பேன்.மொத்தத்தில் யாருமே உபயோகிக்காமல் பரணில் உள்ளது.
A.Umarani
ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் 20 சதவிகித ஆஃபர் முப்பது சதவிகித ஆஃபர் என்று வாங்கி, திறக்காமலே வைத்திருக்கும் புத்தகங்கள் நிறைய!
ஆசிக் ஜாரிஃப்
வெஜிடபிள் சிலைஸிங் கட்டர். அரிவாள்மணைக்கு மிஞ்சிய ஆயுதமில்லை.
சி.நீலவேணி
ஹேர் டிரையர் - அடர்த்தியாகத் தலையில் முடி இல்லாததாலும், டவலால் துவட்டினாலே சென்னை சூட்டிற்கு முடி உலர்ந்துபோய் விடுவதாலும், ஸ்டூடியோ செட் பிராப்பார்ட்டி மாதிரி அம்போ எனக் கிடக்கிறது.
ParveenF7
``அம்மா, வீட்ல சும்மா இருக்கிற பொருள் எதும்மா?’’
``நீ மட்டும்தான்டா.’’
pbukrish
எனக்கு வந்த ஆஃபர் லெட்டரே இன்னும் சும்மாதான் இருக்கு, இந்தக் கொரோனாவால.
Vasanth920
சோனி கம்பெனி டேப் ரெக்கார்டர் ஒண்ணு பல வருஷமா சும்மாவே கிடக்குது. அதோடு சேர்ந்து ஒரு பெட்டி நிறைய கேஸட்டுகள். வயித்தெரிச்சலாதான் இருக்கு. இதைச் சொல்ல ஒரு சான்ஸ் தந்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ்!
RamAathiNarayen
டின்னர் செட். வாங்கின நாள் தொட்டு யாரையுமே டின்னருக்குக் கூப்பிடவே இல்லை.
ARiyasahmed

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!
1. சுப்பிரமணியன் சுவாமி தமிழக பா.ஜ.க தலைவர் ஆனால் என்னென்ன காமெடிகள் நடக்கும்?
2. தி.மு.க அரசின் வழக்குகளைத் தவிர்க்க எடப்பாடி - பன்னீருக்கு ஜாலி ஆலோசனைகள் ப்ளீஸ்...
3. ஏலியன்களைப் பார்த்தால் நீங்கள் கேட்க விரும்பும் கேள்வி..?
4. பரோட்டா பற்றி ‘சுவையான’ கவிதை எழுதுங்களேன்...
5. 2040-ல் நம் முன்னணி ஹீரோக்கள் என்ன பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருப்பார்கள்?
உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com