சினிமா
Published:Updated:

வாசகர் மேடை: வித்டிரா வித்தகன்!

ரஜினி
News
ரஜினி

கங்காணிகள்... எப்போதும் குட்டிக் கொண்டேயும் வேலை ஏவியும் கோள் மூட்டியபடியும் இருப்பார்கள்.

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் கதை என்னவாக இருக்கலாம். அதன் ஒன்லைன் ப்ளீஸ்...

சினிமா நட்சத்திரமான ரஜினியை அரசியலுக்கு வர வேண்டும் என்று குரல் கொடுப்பவர்களையெல்லாம் கடத்துகிறது ஒரு கும்பல். அந்த கும்பலைக் கண்டுபிடித்துச் சிறையில் அடைத்துவிட்டு அரசியலுக்கு வந்து முதல்வர் ஆகிறார் ரஜினி.

பெ.பாலசுப்ரமணி

ரஜினி பாளையங்கோட்டைச் சிறையில் ஜெயிலராக இருக்கிறார். இடைவேளைக்கு முன் அங்கிருக்கும் அதிகாரிகளால் வீண்பழி சுமத்தப்பட்டு `ரஜினி பட ஃபார்முலா' படி விரட்டப்படுகிறார். அப்போது சபதம் எடுக்கும் ரஜினி, திகார் சிறைக்கு ஜெயிலர் ஆவதே `ஜெ யிலர்' படத்தின் ஒன்லைன். (இனிமே கேட்பீங்க?)

ராம்ஆதிநாராயணன்

ஜெயிலில் இருந்துகொண்டு வெளியில் ஷாப்பிங் செல்லத் திட்டம் தீட்டும், வில்லி ரம்யா கிருஷ்ணனின் முயற்சியை முறியடிக்கும் ஜெயிலர் ரஜினிகாந்த்!

நா.இரவீந்திரன்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் கோகிலா, குழந்தைகள் கடத்தல் கும்பல் மூலம் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருக்கும் டாக்டர் வருண்... இவர்கள் இருவரின் உதவியுடன் இன்டர்நேஷனல் டிரக்ஸ் மாபியாவைத் தேடிச்சென்று கைது செய்து சிறையில் அடைக்கிறார் ஜெயிலர்.

SowThanishka

அண்ணாத்த படத்தில் தங்கை சென்டிமென்ட் என்றால், ஜெயிலர் படத்தில் மகள், பேரன் சென்டிமென்ட். மருமகனைக் கொன்றுவிட்ட ரவுடிகளை, அதே சிறையில் கைதியாக நுழைந்து, ஜெயிலராக மாறி வதம் செய்து, மகள், பேரனிடம் செய்த சத்தியத்தை நிறைவேற்றுவதே கதை.

amuduarattai

வாசகர் மேடையில சொல்ற ஒன்லைன் கதை எது நல்லா இருக்கோ, அத வச்சு திரைக்கதை எழுதுவாங்களோ...

sasitwittz

கைதிகளைத் திருத்தி நல்ல வாழ்க்கைக்கு அனுப்பற கதை... என்ன பாக்கறீங்க, `பல்லாண்டு வாழ்க' மாதிரி இருக்கா..? எம்.ஜி.ஆர் படத்தை உல்டா பண்றதுதானே ரஜினி படத்துக்குத் தொன்றுதொட்டு வழக்கம்.

SENTHIL_WIN

வாசகர் மேடை: வித்டிரா வித்தகன்!

அலுவலகங்களில் ஹெச்.ஆர் என்ற பதவி வருவதற்கு முன்பு, பின்பு..?

முன்பு: கங்காணிகள்... எப்போதும் குட்டிக் கொண்டேயும் வேலை ஏவியும் கோள் மூட்டியபடியும் இருப்பார்கள்.

பின்பு: HR... இவை அனைத்தும் செய்துவிட்டு வார இறுதியில் outing ஏற்பாடு செய்து `இவன் நல்லவனா கெட்டவனா' என்று யோசிக்க வைப்பார்கள்.

கீதா பூபேஷ்

மொத்த அலுவலகத்தையே ஒத்தை ஆளாக நிர்வகித்து வந்த மேனேஜரின் புது அவதாரம்தான் இன்றைய ஹெச்.ஆர். ஒரே வித்தியாசம், இன்று அலுவலகத்தின் ஒவ்வொரு டிபார்ட்மென்டுக்கும், ஒவ்வொரு ஃப்ளோருக்கும் ஒரு ஹெச்.ஆர்.

ஆர்.ஹரிகோபி

முன்பு மேலிடத்தில் யார் நம்மைப்பற்றிப் போட்டுக்கொடுக்குறாங்கன்னு சின்னதா ஒரு குழப்பம் இருக்கும். இப்போது தெளிவாக அது ஹெச்.ஆர் தான் என்பது உறுதியாகிறது.

அ.பச்சைப்பெருமாள்

முன்பு: எப்போது வேண்டுமானாலும் வா. எப்போது வேண்டுமானாலும் போ. ஆனால் வேலையை முடிக்க வேண்டியது உன் பொறுப்பு.

பின்பு: காலை இந்த நேரத்துக்குள் வந்தே ஆகவேண்டும். எப்போது வேண்டுமானாலும் போ. ஆனால் வேலையை முடிக்க வேண்டியது உன் பொறுப்பு.

IamUzhavan

ஒரு ரவுண்டு இன்டர்வியூ எக்ஸ்ட்ரா ஆகியிருக்கு...

. RavikumarMGR

முன்பு: அலுவலகத்தில் எல்லோரும் ஓ.பி அடிப்பார்கள். பின்பு: ஹெச்.ஆர் மட்டும் ஓ.பி அடிக்கிறார்.

vikneshmadurai

அறிவிப்பு, வாபஸ் என்று தொடரும் தி.மு.க ஆட்சிக்காக ஸ்டாலினுக்கு ஒரு சிறப்புப்பட்டம் கொடுப்பது என்றால் என்ன கொடுக்கலாம்?

நீர்க்குமிழி அறிக்கை விடும் நீதி தவறா முதல்வர்.

டி.ஜெயசிங்

`சொன்னதைச் செய்யோம்' ஸ்டாலின்!

மூ.மோகன்

வாபஸ் வேந்தன்

தார்சி எஸ்.பெர்னாண்டோ

வாக்குக்கொடு ; திருப்பி எடு தலைவர்.

லீலாராம்

ஜகாபதி

பா.து.பிரகாஷ்

ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்குப் பல குழுக்கள் அமைத்து வேலை கொடுக்கும் வாரி வள்ளல்.

SriRam_M_20

வித்டிரா வித்தகன்.

Sivakum31085735

வாபஸ் வாரியத் தலைவர்.

amuduarattai

செல்லப்பிராணிகளுக்குப் பேசத் தெரிந்தால் அவை நம்மிடம் என்ன சொல்லும்?

நாய் : உன் வீட்டுல உள்ள கோபத்தையெல்லாம் என்கிட்ட ஏன் காட்டுறன்னு வாய்விட்டுக் கேட்டுடும்.

பா.சக்திவேல்

உனக்கு சுகர் வந்தா நீ வாக்கிங் போ, அதுக்கு ஏன் உன்கூட என்னையும் இழுத்துட்டுப் போற?

கு.வைரச்சந்திரன்

தொட்டியில் நீந்தும் வண்ண மீன்: டேய் மவனே, சன் டே நீ மட்டும் சிக்கன், மட்டன்னு வெளுத்து வாங்குற. எனக்கு அதே உருண்டைதானா, போய் கொஞ்சம் புழு வாங்கிட்டு வாடா!

அ.ரியாஸ்

பூனை: எனக்கு தினமும் காலையில ஒரு டம்ளர் பால், ராத்திரி ஒரு டம்ளர் பால் எடுத்து வைங்க. இல்லன்னா பால் பாத்திரத்தை உருட்டி விட்டு யாருக்கும் காபி இல்லாம செஞ்சிடுவேன்!

கே.எம்.ரவிச்சந்திரன்

இப்படிப் பாசம் காட்டுறேன்னு மோசம் பண்றியேடா... உங்க பிள்ளையை வளர்க்கிறேன்னு நாங்க என்னைக்காவது காட்டுக்குள்ள தூக்கிட்டுப் போயிருக்கோமா?

அஜித்

டைகர்னு பேர் வச்சுட்டு தினமும் தயிர் சோறு போடறீங்களே... இது நியாயமாரே?!

ரிஷிவந்தியா

கழுதை: நாங்கபாட்டுக்கு `நாம உண்டு நம்ம வேலை உண்டு'ன்னு இருக்கோம். பாழாய்ப் போன அரசியலை நாங்க பேசுறதா எதுக்கு அட்டைப்படத்துல போடுறாங்க?

balebalu

கிளி: போய் உழைச்சு முன்னேறுற வழியைப் பாரு. என்ன சீட்டு எடுத்துப் போடச்சொல்லித் தொல்ல பண்ணாத!

nandhu_twitts

தமிழ் சினிமாக்களில் நீதிமன்றக் காட்சிகளில் உங்களால் பொறுத்துக்கொள்ளவே முடியாதது எது?

வாசகர் மேடை: வித்டிரா வித்தகன்!

முக்கியத் தடயமான வீடியோ கேசட்டை பாம்பு, குரங்கு ஆகியவை பத்திரமாக நீதிமன்றத்துக்குக் கொண்டு வந்து சேர்ப்பது.

ஆர்.பத்மப்ரியா

தீர்ப்பு வரும்போது திடீரென புதிய ஆதாரம் அல்லது சாட்சியைக் கொண்டு வந்து தருவதால் தீர்ப்பின் சாரமே மாறுவதுதான் எரிச்சல் காட்சி.

அ.சுகுமார்

பல நீதிமன்றக் காட்சிகளை சினிமாக்களில் பார்த்துப் பழக்கமாகிவிட்டதால் நாம் நீதிமன்றம் சென்று தயாராகும்போது, நமது வக்கீல் நம்மிடம் வந்து `ஆம் அல்லது இல்லை என்று பதில் சொன்னால் போதும்' என்பார். இன்னொரு பராசக்தி கணேசன் உருவாவதை இப்படியெல்லாம் தடுத்துவிடுகிறார்கள்.

மணவை ஜோசப் செல்வராஜ்

வாதங்களைக் கேட்டுவிட்டு, மூக்குக் கண்ணாடியைக் கழற்றிவிட்டு தன் கலங்கிய கண்களை நீதிபதி துடைத்துக் கொள்ளும் கேலிக்கூத்து!

ஆர்.ஸ்ரீகாந்தன்

அவ்வளவு கஷ்டப்பட்டு ஆர்க்யூமென்ட் பண்ணி நீதிபதி கிட்ட வழிஞ்ச பிறகும்கூட அக்யூஸ்ட் பேச்சைக் கேட்டு வக்கீல் வண்டு முருகனைச் சிறைக்கு அனுப்பி வைத்ததைத்தான் ஏத்துக்கவே முடியல.

saravankavi

கஷ்டத்தில் இருக்கும் ஹீரோவ ஜட்ஜ் காப்பாத்துவாருன்னு பார்த்தா, வில்லன்களிடம் இருந்து ஜட்ஜய்யா குடும்பம், பேரன், பேத்திகளையும் சேர்த்து ஹீரோ காப்பாத்திக்கிட்டு இருப்பார்!

pbukrish

ஏகப்பட்ட வருடங்களையும், மக்கள் பணத்தையும் வீணடித்த ஒரு வழக்கில் கூட்டல் கணக்கைத் தப்பா சொல்லி விடுதலை பண்ணுவது. ஓ, நீங்க சினிமாக் காட்சியில் கேட்டீர்களா?

h_umarfarook

`சட்டப்படி இது தப்புன்னாலும் நியாயப்படி உங்களை விடுவிக்கிறேன்'னு நீதிபதி சொல்வது.

urs_venbaa

வாசகர் மேடை: வித்டிரா வித்தகன்!

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

1. எம்.என் நம்பியார் பயோபிக்கில் இப்போதைய நடிகர்களில் யார் நடித்தால் பொருத்தமாய் இருக்கும்?

2. விரைவில் 5ஜி இணையசேவை வரப்போகிறது. இந்த நேரத்தில், பழைய பட்டன் போன்களில் நீங்கள் மிஸ் பண்ணும் விஷயம் எது?

3. கும்பல் கும்பலாய் கிளம்பிச் செல்லும் தன் கட்சித் தலைவர்களைத் தடுக்க ராகுல் காந்திக்கு ஐடியா கொடுங்களேன்...

4.90ஸ் கிட்ஸ் 2k குழந்தைகளுக்கும், 2k குழந்தைகள் 90ஸ் கிட்ஸுக்கும் பரஸ்பரம் ஒரு அட்வைஸ் தரலாமென்றால் என்ன தருவார்கள்?

5. ‘மாநாடு’ படம் போல, ‘பொதுக்குழு’ எனத் தலைப்பு வைத்து அ.தி.மு.க-வின் தற்போதைய விவகாரங்களை ‘செல்லும், செல்லாது, ரிப்பீட்டு’ எனப் படமாக எடுத்தால், அதில் யார் சிம்பு? யார் எஸ்.ஜே.சூர்யா? யார் எஸ்.ஏ.சந்திரசேகர்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002. இ-மெயிலில் அனுப்ப:

vasagarmedai@vikatan.com