Published:Updated:

“தவறுகளை மறைக்கவே பலிகொடுத்தார்களா?”

அருண் முருகையா
பிரீமியம் ஸ்டோரி
News
அருண் முருகையா

அருண் முருகையா மர்ம மரணம்... சிக்கலில் கார்த்தி சிதம்பரம்!

‘வாசன் ஐ கேர்’ உரிமையாளர் டாக்டர் அருண் முருகையாவின் திடீர் மரணம், தொழிலதிபர்கள் வட்டாரத்தில் மட்டுமல்லாமல் அரசியல் அரங்கிலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ‘‘காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரத்தின் தவறுகளை மறைப்பதற்காக, அருண் முருகையாவை பலிகொடுத்துவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது’’ என்று தமிழக பா.ஜ.க-வினர் சந்தேகம் எழுப்புகின்றனர்.

தமிழகத்தில் தொடங்கப்பட்டு சிங்கப்பூர், மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கிளைபரப்பியிருக்கிறது `வாசன் ஐ கேர்’ நிறுவனம். இந்தியா முழுக்க 170-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்படும் அந்த நிறுவனத்தின் உரிமையாளரான அருண் முருகையாவுக்குக் கோடிக்கணக்கில் சொத்துகள் இருந்தன. ஆனால், இறுதிக் காலத்தில் சிலரது நெருக்கடிகளால் பின்னடைவைச் சந்தித்ததுடன், கடன்காரர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தார் அருண் முருகையா. இந்தநிலையில் நவம்பர் 16-ம் தேதி காலை சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள அவரது வீட்டில் திடீர் மரணமடைந்தார். ‘ஹார்ட் அட்டாக் காரணமாக அவர் உயிரிழந்தார்’ என்று மருத்துவ வட்டாரத்தில் சொல்லப்பட்டாலும், அவரது திடீர் மரணம் பல்வேறு தரப்பிலும் மர்மமாகவே பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக அருண் முருகையாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரித்தோம். ‘‘அருண் முருகையாவின் குடும்பத்தினர் பாரம்பர்ய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவரின் அப்பா வாசன் முருகையா, கரூர் தொகுதியின் எம்.பி-யாக இருந்தவர். வாசன் முருகையாவுக்கு இரண்டு மனைவிகள். முதல் தாரத்துக்குப் பிறந்தவர்தான் அருண் முருகையா. திருச்சியில் ஏ.பி.சி மருத்துவமனை, வாசன் மெடிக்கல் ஆகியவற்றை நடத்திவந்தவர், கடந்த 2008-ல் வாசன் ஐ கேர் மருத்துவமனையைத் தொடங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினரின் ஆதரவாளராகவும் இருந்தார் அருண் முருகையா.

“தவறுகளை மறைக்கவே பலிகொடுத்தார்களா?”

சம வயதுடையவர்கள் என்பதால், சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துடன் அருண் முருகையா நெருங்கிப் பழகியதுடன், தொழில் பார்ட்னராகவும் இருந்திருக்கிறார். இந்தநிலையில், கடந்த 2011-ம் ஆண்டு வாசன் ஐ கேரின் 100-வது கிளையை, சிதம்பரத்தின் சொந்த ஊரான காரைக்குடியில் திறந்தார். அந்தக் கிளையைத் திறந்துவைத்தவர் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங். அந்த விழாவில் அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழக ஆளுநர் ரோசையா, தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதன் மூலம் வாசன் ஐ கேரின் அரசியல் செல்வாக்கு வெளியுலகுக்குத் தெரியவந்தது” என்றவர்கள், அதன் பிறகு எழுந்த சர்ச்சைகளையும் பகிர்ந்துகொண்டார்கள்.

“சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, வாசன் ஐ கேர் நிறுவனத்துக்கு வங்கிக் கடன் உள்ளிட்ட பல சலுகைகள் அளிக்கப்பட்டதாகவும், சிங்கப்பூர், மொரீஷியஸில் இருக்கும் வாசன் ஐ கேர் நிறுவனத்தில் பல நூறு கோடிகளை கார்த்தி சிதம்பரம் முதலீடு செய்திருக்கிறார் என்றும் அப்போதைய பா.ஜ.க எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்கள். இந்த விவகாரத்தை மையப்படுத்தி சுப்பிரமணியன் சுவாமி, ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோரும் சிதம்பரம் குடும்பத்தினருக்கு எதிராகச் சாட்டையைச் சுழற்றினார்கள். இதனால், நெருக்கடிக்குள்ளான கார்த்தி சிதம்பரம், ஒருகட்டத்தில் வாசன் ஐ கேரிலிருந்து தனது பங்குகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

இதற்கிடையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும், அந்நியச் செலாவணி மோசடி புகார் தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையினர் வாசன் ஐ கேர் அலுவலகத்தில் தொடர் விசாரணை நடத்தியதால், அந்த நிறுவனத்துக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டு, வணிகம் படிப்படியாகச் சரியத் தொடங்கியது. தொழில் மற்றும் பண நெருக்கடியைச் சரிசெய்துகொள்வதற்காக சிங்கப்பூர், மலேசியாவைச் சேர்ந்த நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளும் கைகூடவில்லை. கூடவே பண நெருக்கடியும் அதிகரித்ததால், கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் அருண் முருகையா.

இது ஒருபுறமிருக்க, கடனுக்கு மருந்துப் பொருள்களை வழங்கிய பல்வேறு நிறுவனங்களுக்குக் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் பணம் கொடுக்காமல் இருந்ததால், அவர்கள் தரப்பிலும் வீட்டுக்கு வந்து பிரச்னை செய்ததாகக் கூறப்படுகிறது. இப்படி எல்லா பக்கமும் நெருக்கடியில் சிக்கியிருந்ததால், மன உளைச்சலின் உச்சத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம்” என்றார்கள்.

இது குறித்து தமிழக பா.ஜ.க தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் மாநிலத் தலைவர் நிர்மல்குமாரிடம் பேசினோம். ‘‘டாக்டர் அருண் எனக்கு நெருங்கிய நண்பர். அவர் சிறிய வயதில் கடின உழைப்பால் அசுர வளர்ச்சி அடைந்தவர். வாசன் ஐ கேர் நிறுவனம் நலிவடைந்ததற்கு முக்கியக் காரணமே சிதம்பரம் குடும்பத்தினர்தான். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

வெளிநாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட வாசன் ஐ கேர் நிறுவனத்தின் முக்கால்வாசிப் பங்குகளை கார்த்தி சிதம்பரம்தான் வைத்திருந்தார். எதிர்க்கட்சிகள் கிளப்பிய பிரச்னையால் பங்குகளைத் திருப்பிக் கொடுத்ததுடன், அவர் கொடுத்த தொகையைவிட அதிக தொகையை மிரட்டி வாங்கியிருக்கிறார். கார்த்தி சிதம்பரம் நெருக்கடி கொடுத்ததால்தான், வெளிநாடுகளில் இருக்கும் சில நிறுவனங்களுக்குப் பணத்தை அருண் அனுப்பியிருக்கிறார். இதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து, இவரின் நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.

அருண் முருகையா
அருண் முருகையா

அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இவற்றையெல்லாம் அருண் சொல்லவில்லை. அவர் அன்றே வாய் திறந்திருந்தால் கண்டிப்பாகத் தப்பித்திருப்பார். ஆனால், இதையெல்லாம் அவர் ஏன் மறைத்தார் என்பது இன்றுவரை மர்மமாக இருக்கிறது. அந்நியச் செலாவணி மோசடி, கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக அடுத்த மாதம் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்ததாகவும் சொல்கிறார்கள். விசாரணைக்கு ஆஜரானால் நிச்சயம் கைது செய்யப்படுவோம் என்ற அச்சமும் அருணுக்கு இருந்தது. அதனால், கார்த்தி சிதம்பரம் பற்றிய உண்மைகளை வெளியுலகத்துக்குச் சொல்லப்போவதாக நண்பர்கள் வட்டாரத்தில் அருண் சொல்லிக்கொண்டிருந்தார். இந்த நிலையில்தான், அவரது மரணம் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியிருக்கிறது.

2ஜி ஊழலில் தி.மு.க-வுக்காக சாதிக் பாட்ஷாவைப் பலிகொடுத்ததுபோல, காங்கிரஸ் கட்சியிலுள்ள சிதம்பரம் குடும்பத்துக்காக அருண் முருகையாவை பலிகொடுத்திருக் கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, அவரின் மர்ம மரண வழக்கை முழுமையாக விசாரிக்க வேண்டும். அப்படி விசாரித்தால் பல உண்மைகள் வெளியுலகுக்குத் தெரியவரும்’’ என்றார் விளக்கமாக.

கார்த்தி சிதம்பரத்தைத் தொடர்புகொண்டு இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டோம். முழுமையாகக் கேட்டுக்கொண்டவர், ‘‘அவங்க சொல்றதுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. என்னோட ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கத்துல என்னோட விளக்கத்தைப் பதிவு செஞ்சிருக்கேன். அதைப் பார்த்துக்கோங்க’’ என்று கடுகடுப்பான குரலில் சொல்லி இணைப்பைத் துண்டித்தார்.

உடனடியாக அவரது ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்துக்குச் சென்று பார்த்தோம். அருண் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலைத்தான் தெரிவித்திருக்கிறாரே தவிர, வேறு எந்த விளக்கத்தையும் சொல்லவில்லை. இது தொடர்பாகப் பேச மீண்டும் அவரைத் தொடர்பு கொண்டோம். நமது அழைப்பை அவர் ஏற்கவேயில்லை.

கார்த்தி சிதம்பரத்தின் காலைச் சுற்றும் பாம்பாக மாறியிருக்கிறது அருண் முருகையா மரண விவகாரம். அது எப்போது கொத்தும் என்று யாருக்கும் தெரியாது!