அரசியல்
அலசல்
Published:Updated:

வேடந்தாங்கல் அருகே கல்குவாரி... ஆபத்தில் பறவைகளின் உணவுக் களஞ்சியம்!

எடமச்சி ஏரி
பிரீமியம் ஸ்டோரி
News
எடமச்சி ஏரி

டாரஸ் லாரிகள் செல்லும்விதமாக ஏரிக்கரையோரம் மண்ணை உயர்த்தி மிகப்பெரிய சாலையமைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

பறவைகள் பறக்கும் ஆகாயம், கீழே மலைத்தொடர், அதையொட்டிய ஏரியில் மீன்பிடிக்கும் சிறுவர்கள், வயல்வெளிகள், வேலையாட்கள், கால்நடைகள், கோயில், சின்னஞ்சிறிய வீடுகள் என ஓவியம்போலக் காட்சியளிக்கின்றன எடமச்சி, நெற்குன்றம் கிராமங்கள். நாம் அங்கு நேரில் சென்றபோது, “இனி இந்த கிராமங்களில் கல்குவாரிகளின் தூசு படரும், வெடிச் சத்தத்தில் பறவைகள் அலறும், வீடுகளில் கீறல் விழும், வாழ வழியின்றி நாங்கள் இடம்பெயரக்கூடும்” என்று தங்கள் அச்சத்தைப் பதிவுசெய்தார்கள் அந்தப் பகுதி மக்கள்!

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, ஆனம்பாக்கம் பஞ்சாயத்தில் இருக்கின்றன இந்த எடமச்சி, நெற்குன்றம் கிராமங்கள். மாவட்டத்திலேயே மூன்றாவது பெரிய ஏரியான `எடமச்சி ஏரி’ இந்த இரு கிராமங்களுக்கு இடையேதான் அமைந்திருக்கிறது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த கிராமத்துக்கு, இடியாக வந்து இறங்கியிருக்கின்றன புதிய கல்குவாரி அமைப்பது தொடர்பான அறிவிப்பும், அதற்கான முதற்கட்டப் பணிகளும்.

வேடந்தாங்கல் அருகே கல்குவாரி... ஆபத்தில் பறவைகளின் உணவுக் களஞ்சியம்!

ஊர் மக்களுக்காகச் சட்டப் போராட்டம் நடத்திவரும் ஓய்வுபெற்ற மேஜர் அர்ஜுன் கோபாலரத்னத்தைச் சந்தித்தோம். ``எடமச்சி ஏரியை நம்பி நெற்குன்றம், எடமச்சி, ஆனம்பாக்கம், பொற்பந்தல், கணபதிபுரம், மாமண்டூர், பாலேஸ்வரம், சின்னாலம்பாடி உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 2,000 ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. இந்த கிராமங்களுக்கான தனிச்சிறப்பே வேடந்தாங்கல் பறவைகள்தான். இங்கிருந்து 15 கி.மீ தொலைவில்தான் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமும், கரிக்கிலி பறவைகள் சரணாலயமும் அமைந்திருக்கின்றன. தேசம்விட்டு, கடல் கடந்து வரும் வெளிநாட்டுப் பறவைகளெல்லாம் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்கு மட்டும்தான் அந்த சரணாலயத்தைப் பயன்படுத்துகின்றன. மற்றபடி உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதெல்லாம் சுற்றுவட்டாரத்திலுள்ள எங்கள் கிராமங்கள்தான். குறிப்பாக, எங்கள் எடமச்சி ஏரியிலிருக்கும் மீன்களை, வயல்வெளிகளிலுள்ள பூச்சி - புழுக்களை, மலைகளில் இருக்கும் பழங்களை உண்பதற்காக நாள்தோறும் ஏராளமான பறவைகள் வந்து செல்கின்றன...” என ஊரின் சிறப்பைப் பற்றிப் பேசியவரிடம் `இப்போது என்னதான் பிரச்னை?’ என்று கேட்டோம்.``இப்படிச் சூழலியல் முக்கியத்துவம் நிறைந்த எங்கள் கிராமங்களில் 2.77 ஹெக்டேர் பரப்பளவுக்குப் புதிதாக கல்குவாரி அமைக்க ஒரு தனியார் நிறுவனம் தொடர்ந்து முயன்றுவருகிறது. கடந்த 2021-ம் ஆண்டே சுற்றுச்சூழல் அனுமதி வாங்கிவிட்டதாகக் கூறி, பணிகளை மேற்கொள்ள முயன்றனர். அதற்கெதிராக ஊர் மக்கள் போராட்டங்கள் நடத்தியதுடன், கலெக்டருக்கும் மனு கொடுத்தோம். கிராமத்துக்குள் லாரிகள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம். பின்னர்தான், காப்புக்காடான (Reserve Forest) எடமச்சி மலைப்பகுதியை சமூகக் காடு (Social Forest) என்று மாற்றிக் குறிப்பிட்டும், அருகில் பெரிய ஏரி இருப்பதை மறைத்தும், பொய்யான அறிக்கையுடன் விண்ணப்பித்து அந்த நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி வாங்கியிருப்பதை அறிந்தோம். உடனே தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நான் வழக்கு தொடர்ந்தேன். அந்தத் தீர்ப்பில், வழக்கு முடியும்வரை எந்தப் பணியையும் நிறுவனம் மேற்கொள்ளக் கூடாது எனத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த உத்தரவையும் மீறி தற்போது அந்தப் பகுதியில் சாலை அமைப்பதற்கான பணிகளை அந்த நிறுவனம் செய்திருக்கிறது. அவர்கள் இன்றுவரை மாசு கட்டுப்பாடு வாரிய அனுமதி, செயல்திட்ட அனுமதி (CTO), கனிம வளத்துறை அனுமதி உள்ளிட்ட எந்த அனுமதியையும் பெறவில்லை” என அடுக்கடுக்காக குற்றம்சாட்டினார் அர்ஜுன் கோபாலரத்னம்.

வேடந்தாங்கல் அருகே கல்குவாரி... ஆபத்தில் பறவைகளின் உணவுக் களஞ்சியம்!
வேடந்தாங்கல் அருகே கல்குவாரி... ஆபத்தில் பறவைகளின் உணவுக் களஞ்சியம்!

``Madras Naturalists’ Society (MNS) ஆய்வுப்படி இந்தப் பகுதியில் 75 வகையான தாவர இனங்கள், 70 வகையான பறவையினங்கள், 100 வகையான பூச்சியினங்கள் இருப்பதைப் பேராசிரியர்கள் முருகவேல், நரசிம்மன் மற்றும் ஆய்வு மாணவர்கள் உறுதிசெய்திருக்கின்றனர். கல்குவாரி, கிரஷர் அமைந்தால் இவை அனைத்தும் அழிந்துபோகும். மேய்ச்சலுக்கு இடமில்லாமல் போகும். வெடிச் சத்தத்தால் பறவைகள் வராமல் போகும். ஏரிகள், வயல்களில் தூசுகள் படிந்து நஞ்சாகும். தூசு படிந்த காற்றைச் சுவாசிக்கும் மக்களுக்கு நுரையீரல் பாதிப்புகள் ஏற்படும்” என பாதிப்புகளை அடுக்கினார் விவசாயி ஜெயராமன்.

மற்றொரு விவசாயி பார்த்தசாரதி, ``டாரஸ் லாரிகள் செல்லும்விதமாக ஏரிக்கரையோரம் மண்ணை உயர்த்தி மிகப்பெரிய சாலையமைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தச் சாலை அமைந்தால், ஏரியிலிருந்து கால்வாய்களுக்குச் செல்லும் நீர்வழித்தடம் அடைபடும். மழைக்காலங்களில் கரை உடைந்தால், மொத்த கிராமமே நீரில் மூழ்கும்” என்று அச்சம் தெரிவித்தார்.

பெண்களோ, ``இங்குள்ள தாமரைக் குளத்திலிருந்துதான் நாங்கள் குடிநீர் எடுக்கிறோம். குவாரி அமைத்தால் குடிநீர் கெட்டுப்போகும். ஊருக்குள் பெரிய பெரிய டாரஸ் லாரிகள் வந்தால் ஓடியாடி விளையாடும் எங்கள் குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு... எங்கள் வீடுகளையெல்லாம் சாதாரண குண்டு கற்களையும், மண்ணையும் சேர்த்துத்தான் கட்டியிருக்கிறோம். இங்கிருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கும் மதூர் கிராமத்தின் கல்குவாரியில் வெடிவைத்தாலே வீடுகள் அதிர்கின்றன. எங்கள் ஊரிலேயே குவாரிக்காக வெடிவைத்தால் வீடுகள் நிச்சயம் இடிந்துவிடும். எங்களுக்குக் கல்குவாரியும் வேண்டாம், அதில் வேலையும் வேண்டாம். நாங்கள் விவசாயத்தைவைத்தே பிழைத்துக்கொள்கிறோம்” என்று ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

மேஜர் அர்ஜுன் கோபாலரத்னம்
மேஜர் அர்ஜுன் கோபாலரத்னம்

நெற்குன்றம், எடமச்சி மக்களின் பிரச்னை குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியிடம் விளக்கம் கேட்டோம். ``ஏற்கெனவே இந்தப் பிரச்னை பற்றி மக்கள் மனு கொடுத்திருக்கிறார்கள். குவாரி அமைப்பதற்கான அனுமதியையும், அங்கிருந்து பாறைகளை வெட்டி எடுத்துச் செல்லும் அனுமதியையும் எங்கள் மாவட்ட நிர்வாகம்தான் வழங்க வேண்டும். ஒருபோதும் காப்புக்காடுகள் அருகே குவாரி அமைப்பதற்கான அனுமதியை நாங்கள் வழங்க மாட்டோம். மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கிவரும் கல்குவாரிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும் ஆய்வுகள் மேற்கொண்டுவருகிறோம்” எனத் தெரிவித்தார்.