Election bannerElection banner
Published:Updated:

சென்னை: வாட்ஸ்அப்பில் வந்த ஆபாச வீடியோ - மை இந்தியா கட்சி வேட்பாளர் வீரலட்சுமி போலீஸில் புகார்

வேட்பாளர்  வீரலட்சுமி
வேட்பாளர் வீரலட்சுமி

பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனர் வீரலட்சுமியின் வாட்ஸ்அப் நம்பருக்கு தொடர்ந்து ஆபாச வீடியோக்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.

சென்னை, ராமாபுரத்தைச் சேர்ந்தவர் வீரலட்சுமி. இவர், தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனர். இவர், மவுன்ட் துணை கமிஷனர் பிரபாகரனைச் சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில், ``நான் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் மை இந்தியா கட்சி சார்பாக போட்டியிடுகிறேன். அதற்காக 17-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்தேன். அதன் பிறகு என்னுடைய செல்போனுக்கு குறிப்பிட்ட ஒரு நம்பரிலிருந்து ஆபாசமான வீடியோக்கள், போட்டோக்கள் வந்தன. தொடர்ந்து வந்ததால் அதிர்ச்சியடைந்தேன். எனவே சம்பந்தப்பட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கும்படி துணை கமிஷனர் பிரபாகரன், சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சங்கர்நகர் போலீஸார், வீரலட்சுமியின் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திவருகின்றனர்.

வீரலட்சுமிக்கு வந்த ஆபாச வீடியோ
வீரலட்சுமிக்கு வந்த ஆபாச வீடியோ

இந்தநிலையில் வேட்பாளர் வீரலட்சுமி, ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``நான் தேர்தலில் போட்டியிடுகிறேன். எனக்கு மனஉ ளைச்சல் ஏற்படுத்துவதற்காகவும் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கவும் தொடர்ந்து என்னுடைய வாட்ஸ்அப்பில் ஆபாச வீடியோக்களை ஒரு நபர் அனுப்பிக்கொண்டிருக்கிறார். இது தொடர்பாக புகாரளித்திருக்கிறேன். சம்பந்தப்பட்டவர்மீது போலீஸார் மூன்று நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நான் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் சம்பந்தப்பட்டவரை நானே பிடித்து பல்லாவரம் சந்தைக்கு அழைத்து வருவேன். அங்கு அவரை நிர்வாணப்படுத்தி தண்டனை கொடுப்பேன். இது என் தாய்மீது சத்தியம்" என்று வீடியோவில் பதிவு செய்திருக்கிறார்.

Vikatan

இது குறித்து வீரலட்சுமியிடம் பேசினோம். ``நான் இருக்கும் வாட்ஸ்அப் குரூப் ஒன்றில், அட்மின் நம்பரிலிருந்து ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் 17-ம் தேதி பகிரப்பட்டன. அதன் பிறகு என்னுடைய தனிப்பட்ட செல்போன் நம்பருக்கும் தொடர்ந்து ஆபாச வீடியோக்கள் வந்தன. அந்த வீடியோக்களை அனுப்பியவர்மீது நடவடிக்கை எடுக்கும்படி புகாரளித்திருக்கிறேன்.

நான் 17-வயதிலிருந்து பெண்களின் நியாயத்துக்காகவும் உரிமைக்காகவும் போராடி நீதி வாங்கிக் கொடுத்திருக்கிறேன். எனக்கு ஒரு பிரச்னை என்றால் சம்பந்தப்பட்டவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நானே தண்டனை கொடுக்கத் தயாராக இருக்கிறேன். இந்தச் சம்பவத்தால் நான் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் பரவாயில்லை” என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

வீரலட்சுமி
வீரலட்சுமி

``நீங்கள் எப்போதிலிருந்து அந்த வாட்ஸ்அப் குரூப்பில் இருக்கிறீர்கள்?’’

``எனக்கே தெரியவில்லை. நிறைய வாட்ஸ்அப் குரூப்பில் இருக்கிறேன். அதைப்போலத்தான் அந்தக் குரூப்பில் என்னுடைய நம்பரையும் சேர்த்திருந்தார்கள். நான் பல்லாவரம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்த பிறகுதான் இது போன்ற ஆபாச வீடியோக்கள் வந்தன. அந்த வாட்ஸ்அப் குரூப் அட்மின் யாரென்று எனக்கு தெரியவில்லை."

``காவல் நிலையத்தில் புகாரளித்த பிறகு நீங்கள் எதற்கு இப்படியொரு வீடியோவை வெளியிட்டீர்கள்?’’``சம்பவத்தன்று நான் டி.வி நிகழ்ச்சியில் பங்கேற்றுக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச வீடியோக்கள் வந்தன. உடனடியாக துணை கமிஷனரைச் சந்தித்து புகாரளித்தேன். அதன் பிறகும் எனக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பப்பட்டுவந்தன. அதனால்தான் சம்பந்தப்பட்டவரை எச்சரிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டேன்."

``உங்களுக்கு வீடியோக்களை அனுப்பியவர் யாரென்று தெரியுமா?’’

``இதுவரை தெரியவில்லை. கேரளா என்று தகவல் கிடைத்திருக்கிறது. சைபர் க்ரைம் போலீஸாரிடம் ஆதாரங்களைக் கொடுத்திருக்கிறேன். நிச்சயம் யாரென்று தெரிந்துவிடும்."

``தேர்தல் பணி, பிரசாரம் எப்படியிருக்கின்றன?’’

``பல்லாவரம் தொகுதியிலுள்ள குடியிருப்பு சங்க நிர்வாகிகளைச் சந்தித்துவருகிறேன்." என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு