சமூகம்
Published:Updated:

வேற தொழில் எதுவும் தெரியாது ஐயா! - வாகனத் திருட்டு கும்பல் தலைவனின் ஜி.பி.எஸ் டெக்னிக்!

வாகனத் திருட்டு கும்பல்
பிரீமியம் ஸ்டோரி
News
வாகனத் திருட்டு கும்பல்

டூப்ளிகேட் சாவிகளை வைத்து குறிப்பிட்ட வாகனத்தை இரவோடு இரவாகத் திருடிக்கொண்டு கோவைக்குச் சென்றுவிடுவான் ஆஸ்டின்

திருடிய வாகனங்களை ஒருவருக்கு விற்ற பிறகும், அது இருக்குமிடத்தை ஜி.பி.எஸ் கருவி மூலம் கண்டுபிடித்து, மீண்டும் திருடி வேறு ஒருவருக்கு விற்கும் ‘பலே’ வாகனத் திருட்டு கும்பல் சென்னையில் கைதாகியிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாகச் சரக்கு வாகனங்களையும், சொகுசு கார்களையும் குறிவைத்துத் திருடிவந்த இந்தக் கும்பலின் தலைவனும் வசமாகச் சிக்கியிருக்கிறான். திருடிய யுக்தி தொடங்கி, அந்தப் பணத்தில் சீரியல் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தது வரையிலான அவனின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்த அயனாவரம் போலீஸார் அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார்கள்.

சென்னையில் சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் சரக்கு வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தன. இது தொடர்பாக சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் மட்டும் கடந்த மூன்று மாதங் களில் நான்கு புகார்கள் பதிவாகின. இதேபோல் பல்வேறு காவல் நிலையங்களிலும் சரக்கு வாகனங்களும், சொகுசு கார்களும் திருடப்பட்டது தொடர்பாக 25-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்திருந்தன. இது தொடர்பாக சென்னை தெற்கு கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்ஹா உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் விசாரணையில் இறங்கினர். வாகனங்கள் திருட்டுப்போன இடங்களிலுள்ள சிசிடிவி காட்சிகளின் மூலம் குமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பிரபல வாகனத் திருடன் ஆஸ்டின் எபன் இன்பராஜின் கைவரிசை இது எனத் தெரியவந்தது. இதையடுத்து ஆஸ்டினைக் கைதுசெய்த போலீஸார், அவன் அளித்த தகவலின்பேரில் வழக்கறிஞர் உட்பட நான்கு பேரைக் கைதுசெய்திருக்கிறார்கள்.

 ஆஸ்டின்
ஆஸ்டின்

இது குறித்து தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். ``கைதுசெய்யப்பட்ட ஆஸ்டின் மீது ஏற்கெனவே தமிழகம் முழுவதும் 35-க்கும் மேற்பட்ட வாகனத் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவன் வாகனங்களைத் திருடும் ஸ்டைலே தனி. குமரியிலிருந்து சென்னைக்கு வரும் ஆஸ்டின், பேசின் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் என்பவனுடன் சேர்ந்து சாலையோரங்களில் நிற்கும் மினி சரக்கு வாகனங்களை நோட்டமிடுவான். தாமோதரன் அந்த வாகனங்களின் மாடல்களுக்கேற்ப டூப்ளிகேட் சாவிகளைத் தயார்செய்வதில் ஸ்பெஷலிஸ்ட். டூப்ளிகேட் சாவிகளை வைத்து குறிப்பிட்ட வாகனத்தை இரவோடு இரவாகத் திருடிக்கொண்டு கோவைக்குச் சென்றுவிடுவான் ஆஸ்டின். அங்கு தன்னுடைய கூட்டாளிகள் மூலம் திருடிய வாகனத்தை விற்றுவிட்டு மீண்டும் சென்னைக்குத் திரும்புவான். கைதுசெய்யப்பட்ட ஆஸ்டின், தாமோதரன் இருவரும் அளித்த தகவலின்படி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் தனகோபால், ஜெயராஜ், கோவையைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்கிற இமாம்அலி ஆகிய புரோக்கர்களைக் கைதுசெய்திருக்கிறோம்.

வேற தொழில் எதுவும் தெரியாது ஐயா! - வாகனத் திருட்டு கும்பல் தலைவனின் ஜி.பி.எஸ் டெக்னிக்!

சென்னை புதுப்பேட்டை, கோவை உக்கடம் பகுதியிலுள்ள பழைய, விபத்துக்குள்ளான வாகனங்களை உடைக்கும் இடங்களிலிருந்து பயன்பாட்டில் இல்லாத ஆர்.சி புக்குகளை இந்தக் கும்பல் விலைக்கு வாங்கியிருக்கிறது. அதிலிருக்கும் நம்பர் பிளேட், இன்ஜின் நம்பர், சேஸ் நம்பர்களை இவர்களின் திருட்டு வாகனங்களுக்குப் பயன்படுத்தி விற்றிருக்கிறார்கள். அதோடு நூதன முறையில் இன்னொரு டெக்னிக்கையும் இந்தக் கும்பல் பயன்படுத்தியிருக்கிறது. அதாவது, திருட்டு வாகனங்களைத் தெரிந்தே வாங்குபவர்கள், அதிலிருக்கும் ஜி.பி.எஸ் கருவிகளை நீக்கிவிடுவதுண்டு. ஆனால், ஆஸ்டின் கும்பல் தாங்கள் திருடிய வாகனங்களில் ரகசியமாக நான்குக்கும் மேற்பட்ட ஜி.பி.எஸ் கருவிகளைப் பொருத்திவைத்திருப்பார்கள். அதன் மூலம் திருடி விற்ற அதே வாகனத்தை மீண்டும் திருடி, வேறு நபருக்குக் கைமாற்றியிருக்கிறார்கள். இதன் மூலம் பலரிடம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறது இந்த வாகனத் திருட்டு கும்பல்” என்றனர் விரிவாக.

பிரபல வாகனத் திருடனான ஆஸ்டின் குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``ஆஸ்டின் எபன் இன்பராஜ் ஆரம்பத்தில் பழைய கார்களை வாங்கி விற்கும் புரோக்கராக இருந்தான். கடந்த 1996-ம் ஆண்டு நாகர்கோவில் கோட்டார் பகுதியில், அவன் வாங்கி விற்ற கார் திருடப்பட்ட வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றான். சிறையில் கிடைத்த நட்பு மூலம் கார் மற்றும் சரக்கு வாகனங்களைத் திருடுவதையே தொழிலாக மாற்றிக்கொண்டான். இதன் மூலம் கிடைத்த வருவாயில் ஆடம்பர வாழ்க்கை வாழத் தொடங்கினான். வாகனங்களை வெவ்வேறு ஊர்களில் விற்கும் அளவுக்குத் தன் நெட்வொர்க்கைப் பெரிதாக்கிக்கொண்டான். சென்னை வடபழனியிலிருக்கும் குறிப்பிட்ட ஒரு லாட்ஜில் தங்கும் ஆஸ்டின், சீரியல் நடிகைகளுடன் தனிமையில் இரவுப் பொழுதைக் கழிப்பான். இதற்காக சீரியல் நடிகைகளுக்கு லட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைத்திருக்கிறான். சமீபத்தில் அயனாவரம் பகுதியில் திருடிய சரக்கு வாகனங்களை விற்ற பணத்தையும் ஒரு சீரியல் நடிகைக்கே செலவழித்திருக்கிறான். அதை உறுதிப்படுத்தும் வகையில் அந்த சீரியல் நடிகையுடன் அவன் எடுத்துக்கொண்ட வீடியோ ஆதாரமும் ஆஸ்டினின் செல்போனில் இருந்தது” என்றார்.

தாமோதரன் - தனகோபால் - சாகுல் ஹமீது - ஜெயராஜ்
தாமோதரன் - தனகோபால் - சாகுல் ஹமீது - ஜெயராஜ்

இதுவரை ஏழு சரக்கு வாகனங்கள் மற்றும் கார்களை ஆஸ்டினின் கும்பல் திருடியிருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அவற்றை மீட்க போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். ஆஸ்டினிடம் போலீஸார், `ஏன் வாகனங்களைத் திருடுகிறாய்?’ என்று கேட்டதற்கு... “வேற தொழில் எதுவும் தெரியாது ஐயா. இந்தத் தொழில்லதான் நல்ல வருமானம் கிடைக்குது” என்று வாக்குமூலம் அளித்திருக்கிறான்.

இந்த வாக்குமூலம் வேடிக்கையாக இருந்தாலும், சிறையிலிருந்து வெளிவரும் பலரும் திருந்தி வருவது மாதிரி தெரியவில்லை. அங்கேதான் ‘மாஸ்டர் டிகிரி’யே முடிக்கிறார்கள் என்பதை, சிறைத்துறையும் காவல்துறையும் ‘கவனிக்க’ வேண்டும்!