
15 ஆண்டுகளாக நீதி கேட்டு போராடும் முதியவர்!
`` `கள்ளச்சாராய கும்பலிடம் மாமூல் வாங்குகிறார்’ என்று நான் புகார் கொடுத்ததால், என்மீது ஆசிட் வீசிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தண்டனை வழங்க வேண்டும்’’ எனக் கடந்த 15 ஆண்டுகளாக நீதி கேட்டுப் போராடிக்கொண்டிருக்கிறார் 68 வயது முதியவர் லட்சுமணன்.
வேலூர் மாவட்டம், சிங்கல்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். சமூக ஆர்வலரான இவர் போலீஸ் இன்ஃபார்மராகவும் இருந்தார். 07-04-2007 அன்று நள்ளிரவு இவர்மீது ‘ஆசிட்’ வீசி கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பின்னர் உயிர்பிழைத்த லட்சுமணன், நீதிக்காக வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். தழும்புகளோடு நீதிமன்றத்துக்கு வந்திருந்த முதியவர் லட்சுமணனிடம் பேசினோம்.
‘‘சட்டவிரோதக் கும்பல்கள் கள்ளச்சாராயம் காய்ச்சி, ஊர் முழுவதும் விற்றுக்கொண்டிருந்த நேரம் அது. இதையெல்லாம் தடுக்கவில்லையென்றால், பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிடும் என்ற அக்கறையோடு போலீஸாருடன் இணைந்து, ‘போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கமிட்டி’யில் செயல்பட்டேன். அப்போது வேப்பங்குப்பம் எஸ்.ஐ-யாக பணியமர்த்தப்பட்ட புகழ், சாராயக் கும்பலுடன் கைகோத்து கமிஷன் பெறுவதிலேயே குறியாக இருந்தார். எனவே, அவர் குறித்து உயரதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துவந்தேன்.
இந்த நிலையில், சாராயப் பொட்டலங்களுடன் தன்னிடம் சிக்கிய ஆனந்தன் என்பவனிடம் 12 ஆயிரம் ரூபாயை மாமூல் வாங்கி விடுவித்த புகழ், ஓரிரு நாள்களிலேயே மேலும் பணம் கேட்டு ஆனந்தனுக்கு மிரட்டல் விடுத்தார். ஆனந்தன் பணம் தர மறுக்கவே அவரது வீட்டுக்கே சென்று, பொருள்களை அடித்து நொறுக்கிய புகழ், வீட்டிலிருந்த 30,000 ரூபாய் பணத்தையும், ரேஷன் கார்டு போன்ற அடையாள ஆவணங்களையும் அள்ளிச்சென்றுவிட்டார்.
ஆனந்தனின் தந்தை எனக்குத் தெரிந்தவர் என்பதால், நடந்த விவரங்களையெல்லாம் அவர்கள் என்னிடம் சொன்னதுடன், அந்த ஆவணங்களை மட்டுமாவது வாங்கித்தருமாறு கேட்டுக்கொண்டனர். பாதிக்கப்பட்ட தரப்பினரை டி.ஐ.ஜி-யைச் சந்திக்கவைத்து புகாரளிக்கச் செய்தேன். இதனால் ஆத்திரமடைந்த புகழ், என்னை ஒழித்துக்கட்டுவதற்குத் திட்டமிட்டார்.
இதற்காக சம்பவத்தன்று இரவு என்னை வேப்பங்குப்பம் காவல் நிலையத்துக்கும் வரச்செய்தார். ஆனால், ஸ்டேஷனில் எஸ்.ஐ புகழ் இல்லை. ஆனாலும் நள்ளிரவு 12 மணி வரை அவருக்காகக் காத்திருந்த நான், ‘காலையில் வருவதாக’க் கூறிவிட்டு என் ஸ்கூட்டரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். என்னிடமே போன் செய்து நான் தனியே செல்வதை உறுதிசெய்துகொண்டார் புகழ். மாதனூர் வழியாகச் சென்றபோது, ஒரு பைக்கில் என்னைப் பின்தொடர்ந்து வந்த காவலர் பத்மநாபன், எஸ்.ஐ புகழ் ஆகியோர், ‘என்மேலயே கம்ப்ளெயின்ட் கொடுக்கிறியா... இதோட நீ ஒழிஞ்சடா...’ என்று சொல்லி, ‘ஆசிட்’டை என்மீது ஊற்றிவிட்டு, தப்பிவிட்டனர்.

‘ஐயோ, அம்மா... எரியுதே..!’ என்று கதறிய என் உடல்மீது அந்தப் பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்தனர். குடும்பத்தினர் வந்து என்னை மருத்துவமனையில் சேர்த்து, ஒருவழியாக நான் உயிர் பிழைத்துவிட்டேன். ஆனாலும், என்னுடைய வலது காது முழுவதுமாக வெந்துவிட்டது. வலது பக்க மூக்கின் துவாரமும் அடைத்துவிட்டது. பற்கள் கொட்டிவிட்டன. கழுத்து நரம்புகள் விரைத்து தலையையும், மார்புப் பகுதியையும் பிடித்து இழுக்கிறது. எதையும் என்னால் மென்று சாப்பிட முடியாது. வாயையும் அதிகம் திறந்து பேச முடியாது. 15 ஆண்டுகளாகியும் வலி கொஞ்சமும் குறையவே இல்லை. நடைப்பிணமாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இன்னமும் ரணம் ஆறவில்லை.
என்மீது ஆசிட் வீசியது தொடர்பாக எஸ்.ஐ புகழ், காவலர் பத்மநாபன் இருவர் மீதும் மனித உரிமைகள் ஆணையம் தொடங்கி டி.ஜி.பி அலுவலகம் வரை தொடர்ச்சியாகப் புகார் கொடுத்தேன். இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆனால், நீண்ட நாள்களாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், வேலூர் நீதிமன்றத்தில் நானே தனிப்பட்ட வழக்கு தொடர்ந்தேன். என் வழக்கை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட பிறகே சி.பி.சி.ஐ.டி போலீஸாரும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த இரண்டு வழக்குகளுமே நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணையை எட்டியிருக்கின்றன. வழக்கை நடத்துவதற்காகவும், என் மருத்துவ சிகிச்சைக்காகவுமே என் வீட்டை ரூ.5 லட்சத்துக்கு அடமானம் போட்டுவிட்டேன். அதை இப்போது வரை என்னால் மீட்க முடியவில்லை.
ஆனால், எஸ்.ஐ-யாக இருந்த புகழ், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வு பெற்றுவிட்டார். தற்போது திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்துவருபவர், வழக்கின் சாட்சிகளை கலைக்கப் பார்க்கிறார். 15 ஆண்டுகள் போராடிவிட்டேன். நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்னமும் காத்திருக்கிறேன்’’ என்றார் நீதிமன்ற வாசலில் கண்ணீர்விட்டபடி...
இது பற்றி, இன்ஸ்பெக்டர் புகழிடம் விளக்கம் கேட்டதற்கு, ‘‘வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இருக்கிறது. நான் குற்றவாளியா, இல்லையா என்பதையும் நீதிமன்றம்தான் சொல்ல வேண்டும். மனித உரிமைகள் ஆணையம் நடத்திய விசாரணையிலும், துறைரீதியிலான விசாரணையிலும் என்மீதான குற்றச்சாட்டை லட்சுமணனால் நிரூபிக்க முடியவில்லை. ஒரு சாட்சிகூட அவருக்கு ஆதரவாக இல்லை. இப்போது நடக்கும் வழக்குகளிலும் எனக்குச் சாதகமாகவே தீர்ப்பு வரும் என்று நம்புகிறேன்’’ என்கிறார்.
வாய்மை எதுவோ அதுவே வெல்லட்டும்!