அலசல்
Published:Updated:

நர மாமிசம்... ரத்த அபிஷேகம்... மண்டை ஓடு... நடுஜாம பூஜை... திகில் கிளப்பும் வேலூர் அகோரி!

அகோரி
பிரீமியம் ஸ்டோரி
News
அகோரி

நீண்ட தலைமுடி, வாட்டசாட்டமான உடல்வாகுடன் இருப்பவர் பிணம் எரிக்கப்பட்ட சாம்பலைத் தண்ணீரில் கரைத்து, முகம் தொடங்கி உடல் முழுவதும் பூசியிருந்தார்.

மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து, தனது கையையும் நெஞ்சையும் சூலாயுதத்தால் கீறிக்கொண்டு அந்த ரத்தத்தால் காளி, காட்டேரி சிலைகளுக்கு அபிஷேகம் செய்து மிரட்சியை ஏற்படுத்துகிறார் வேலூரைச் சேர்ந்த அகோரி ஒருவர். காசியில் கற்றுக்கொண்ட வித்தையை அவர் காட்பாடியில் கட்டவிழ்த்து விடுவதுதான் மிரட்சிக்குக் காரணம்.

அமானுஷ்ய உணர்வை ஏற்படுத்தும் அந்த அகோரி குறித்த தகவல்கள் கிடைக்கவே, வேலூர் மாவட்டம், காட்பாடி பிரம்மபுரத்தில் இருக்கும் அவரது அகோரா காளி மாந்திரீக மையத்துக்குச் சென்றோம். கோயிலின் தோற்றமே கலக்கத்தை ஏற்படுத்தியது. 23 அடி உயரத்தில் அகோரா காளியின் சிலை உக்கிரமாகக் காட்சியளித்தது. சிலையின் முன்பாக பிரமாண்டமான யாக குண்டமும், அதன் நான்கு திசைகளில் நான்கு மண்டை ஓடுகளும் வைக்கப்பட்டிருந்தன. அருகிலுள்ள சுயம்பு வடிவிலான கபால பைரவர், ரத்தக் காட்டேரி சிலைகளின்மீது ரத்தம் தோய்ந்திருந்தது. கோயிலுக்குள் சென்று அகோரியைச் சந்தித்தோம்.

நீண்ட தலைமுடி, வாட்டசாட்டமான உடல்வாகுடன் இருப்பவர் பிணம் எரிக்கப்பட்ட சாம்பலைத் தண்ணீரில் கரைத்து, முகம் தொடங்கி உடல் முழுவதும் பூசியிருந்தார். நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு... கையில் ஆளுயர சூலாயுதம்... இவற்றைவிட அதிர்ச்சியை ஏற்படுத்தியது, அவரது கழுத்தில் அணிந்திருந்த மனித மண்டை ஓடுகள். 11 மண்டை ஓடுகளை மாலையாகக் கோத்து அணிந்து படுபயங்கரமாகக் காட்சியளித்தார். நாம் மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தபோதே ஒரு சேவலைக் கொண்டுவந்தவர், கழுத்தை கரகரவென அறுத்து கபால பைரவர் சிலைக்கு ரத்த அபிஷேகம் செய்தார். பின்னர், யாக குண்டத்தின் முன்பு அமர்ந்து மாந்திரீக வழிபாடு நடத்தினார்.

அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘‘நான் அகோரி ராம்ராஜ். செய்வினை, சூனியம், பேய் ஓட்டுதல், வசியக்கட்டு போன்ற பிரச்னைகளுக்கு என்னால் தீர்வுத் தர முடியும். இதற்காகக் காசிக்குச் சென்று, 12 வருடங்கள் தங்கியிருந்து ஏழு குருமார்களிடம் முறையாக தீட்சை பெற்றிருக்கிறேன். காசியில் தங்கியிருந்தபோது, மனித மாமிசத்தைச் சாப்பிட்டிருக்கிறேன். பிணங்களின்மீது அமர்ந்தும் பூஜை செய்வேன். அப்போதுதான் முழு அகோரியாக மாற முடியும்.

நர மாமிசம்... ரத்த அபிஷேகம்... மண்டை ஓடு... நடுஜாம பூஜை... திகில் கிளப்பும் வேலூர் அகோரி!

இந்த உலகில் பேய், பிசாசு, துஷ்ட சக்திகள் ஏராளமாக இருக்கின்றன. அவையெல்லாம், அருவ உருவம் என்பதால், சாதாரண மனிதனின் கண்களில் படாது. ஆனால், ஒவ்வொருவராலும் உணர முடியும். என்னைத் தேடி வருபவர்களிடம், அவர்களின் தலையெழுத்தை கணித்துச் சொல்கிறேன். அருள்வாக்கு, ஜோதிடத்தின்மீது எனக்குத் துளியும் நம்பிக்கையில்லை. நான் பெயரைவைத்தே விதியைச் சொல்பவன்’’ என்றவரிடம், ‘‘எப்போதுமே இப்படித்தான் மண்டை ஓடுகள் அணிந்து, அகோரி தோற்றத்தில் இருப்பீர்களா?’’ என்று கேட்டோம்...

பயங்கரமாகச் சிரித்தவர், ‘‘இல்லை... நானும் மனிதன்தானே... மயான பூஜை செய்யும்போதும், யாக குண்டம் முன்பாக அமரும்போதும் இந்தக் கோலத்தில்தான் அமர வேண்டும். இல்லாவிட்டால் பூஜை பலிக்காது. மயான பூஜை என்பது காட்டேரியை வசியம் செய்வது. நள்ளிரவு 12 மணிக்கு அருகிலிருக்கும் மயானத்துக்குச் செல்வேன். சடலம் எரிக்கப்படும் எரிமேடையில் அமர்ந்து, பொம்மையை வைத்து பூஜிப்பேன். மந்திரம் சொல்லி முடித்த பிறகு, பொம்மையின்மீது சேவலை அறுத்து ரத்தத்தைக் கொட்டி, உடுக்கை அடித்து பூஜையை முடிப்பேன்.

நடுஜாமத்தில் யாரையும் அழைத்துச் செல்ல மாட்டேன். என்னுடைய சீடர்கள் ஏழு பேர் இருக்கிறார்கள். எப்போதாவது அவர்கள் வந்தால் உண்டு. வாரம் ஒரு முறையாவது காட்டேரிக்கும் கபால பைரவருக்கும் கோழி, ஆடுகளை பலிகொடுத்து அபிஷேகம் செய்வேன். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என் நெஞ்சையும், வலது கையையும் சூலாயுதத்தால் அறுத்து, ரத்தத்தைப் பிழிந்தெடுத்து காளி, காட்டேரி இருவருக்கும் அபிஷேகம் செய்கிறேன். அசுத்தமான பொருள்களைச் சாப்பிடுகிறேன். என்னுடைய மலத்தையே உண்டு, சிறுநீரைக் குடித்து என்னை நானே வருத்திக்கொள்வதன் மூலம் சிவபாதம் அடைய முயல்கிறேன்.

தமிழகத்தில் பிணங்களின் மேல் அமர்ந்து பூஜை செய்தால் பிரச்னைதான் வரும்... தேவையில்லாமல் போலீஸுக்கு பதில் சொல்ல வேண்டும். அதற்காகத்தான் அடிக்கடி காசிக்குச் சென்றுவருகிறேன். அங்கு ஒரு மண்டலம், அதாவது 48 நாள்களுக்குப் பிணங்களின் மேல் அமர்ந்து பூஜை செய்வேன். அமாவாசையில் மிளகாய் யாகம் செய்யும்போது, பொதுமக்கள் பலரும் குடும்பம் குடும்பமாகக் கலந்துகொண்டு தரிசனம் செய்கிறார்கள்’’ என்றவர், நள்ளிரவில் நடைபெறும் மயான பூஜைக்கான வேலைகளை கவனிக்கத் தொடங்கினார்.

கோயில் அருகில் வசிக்கும் மக்களிடம் பேசினோம். ‘‘அகோரி சாமியாரைப் பார்த்தப்ப ஆரம்பத்துல பயம் இருந்துச்சு. இப்போ கொஞ்சம் பயம் குறைஞ்சிருக்கு. ஆனாலும், கோயில்ல நிறைய மண்டை ஓடுகளைப் பார்க்கும்போது, நெஞ்சு படப்படப்பாகி `பக்’குனு இருக்குது. வெளியூர்ல இருந்தெல்லாம் நிறைய பேர் அவரைப் பார்க்க வர்றாங்க. அகோரி சாமியாரு நைட்டுல சுடுகாட்டு பூஜைக்குப் போறாரு. இங்க என்னமோ இருக்கு’’ என்றவர்கள், “அவரு நடுராத்திரி சுடுகாட்டுக்குப் போறப்ப நாங்க யாரும் எதிர்ப்பட மாட்டோம்... நீங்க வேணும்னா அவர்கூட ஒரு முறை சுடுகாட்டுக்குப் போயி பார்த்துட்டு வந்து சொல்றீங்களா?” என்றார்கள்.

நடிகர் வடிவேலுவின் காமெடிதான் நினைவுக்கு வந்தது... “நடுராத்திரி 12 மணிக்கு நான் ஏன்டா சுடுகாட்டுக்குப் போகணும்!” என்று நினைத்தபடியே நடையைக் கட்டினோம்!