அரசியல்
அலசல்
Published:Updated:

“கோடி கோடியாக சுருட்டுகிறார்கள்...” - நிதி நிறுவனத்தை நோக்கி நீளும் புகார்கள்...

நிதி நிறுவனம்
News
நிதி நிறுவனம்

நிருபரை மிரட்டும் போலீஸ் இன்ஸ்பெக்டர்!

‘ஏமாற்றாதே... ஏமாற்றாதே... ஏமாறாதே... ஏமாறாதே...’ என்கிற பாடலை நம்நாட்டின் ‘பொருளாதார கீதம்‘ என்றே அறிவிக்கலாம். அந்த அளவுக்கு, புதிது புதிதாகப் புறப்பட்டு வந்து மக்களை ஏமாற்றிக்கொண்டேதான் இருக்கிறார்கள். மக்களும் ஏமாந்தபடியே இருக்கிறார்கள். ‘சதுரங்க வேட்டை’ சமாசாரங்கள் ஏற்கெனவே வரிசைகட்டி நிற்கும் சூழலில், புதிதாக இணைந்திருக்கிறது... ‘பத்திரம் எழுதுறோம்... பங்குச் சந்தையில போடுறோம்‘ என்கிற குயுக்தியான திட்டம்!

‘வேலூரைச் சேர்ந்த ஐ.எஃப்.எஸ் (International Finance Services) நிறுவனம், அரசு அமைப்புகளிடமிருந்து எந்த அனுமதியும் பெறாமல், ஆண்டுக்கு 24% வட்டி வருமானம் தருவதாகப் பத்திரத்தில் கையெழுத்திட்டு தந்து, பல ஆயிரம் நபர்களிடம் பல நூறு கோடிகளை வசூலித்துவருகிறது’ என்கிற புகார் வேலூர் சுற்றுவட்டாரத்தில் பரவத் தொடங்கி, சென்னை வரை வந்து நம் காதுகளை எட்டியது.

“கோடி கோடியாக சுருட்டுகிறார்கள்...” - நிதி நிறுவனத்தை நோக்கி நீளும் புகார்கள்...

வேலூருக்குச் சென்று விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் இங்கே...

“சத்துவாச்சாரி அருகேயிருக்கும் வள்ளலார் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் சுந்தரம். இவருக்கு ஜனார்த்தனன், வேத நாராயணன் என இரண்டு அண்ணன்கள். ‘பங்குச் சந்தை நிபுணர்’ என்று சொல்லிக்கொள்ளும் லட்சுமி நாராயணன், பங்குச் சந்தையின் போக்கு பற்றி, தான் கணிப்பவற்றை மீடியாக்களில் விளம்பரமாகக் கொடுப்பார். பங்குச் சந்தைகளைக் கட்டுப்படுத்தும் அமைப்பான ‘செபி’யின் (SEBI) விதிகளை மீறும் வகையில் இந்த விளம்பரங்கள் இல்லை. அதேசமயம், ‘பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் ஈட்டித் தருகிறேன்’ என்று சொல்லி, பலரிடமும் பணம் வாங்க ஆரம்பித்தார்கள் லட்சுமி நாராயணன் சகோதரர்கள். இதற்கு உரிய அனுமதி பெற வேண்டும். அப்படியல்லாமல் தனிநபர்களோ, குழுவோ அல்லது நிறுவனங்களோ நிதி திரட்டுவது ‘செபி’யின் விதிமுறைகளை மீறும் செயல்.

வேலூரிலுள்ள ஹெச்.டிஎஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவற்றில் இவர்கள் வைத்திருந்த கணக்குகள் மூலம், பிறரிடமிருந்து பணம் வாங்கவும், திரும்பத் தரவும் செய்தார் லட்சுமி நாராயணன். ஒரு கட்டத்தில், சுமார் 44,000 பணப் பரிவர்த்தனைகள் நடந்த நிலையில், லட்சுமி நாராயணனை அழைத்த வங்கித் தரப்பினர், ‘பணப் பரிவர்த்தனைக்கான ஆதாரங்களைக் கொடுங்கள்’ என்று கேட்டனர். அவரால் தர முடியாத நிலையில், ‘இந்தப் பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் சந்தேகத்துக்குரியவை’ (Suspicious Transaction Report) என்று ரிசர்வ் வங்கிக்கு ரிப்போர்ட் அனுப்பிவிட்டது ஹெச்.டி.எஃப்.சி வங்கி.

ஜனார்த்தனன், லட்சுமி நாராயணன் சுந்தரம்
ஜனார்த்தனன், லட்சுமி நாராயணன் சுந்தரம்

அதற்குப் பிறகு, ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தை, பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாற்றினார்கள். பணத்தை நேரடியாக வாங்குவதை நிறுத்திவிட்டு, ஏஜென்ட்டுகள் மூலம் வசூலிக்க ஆரம்பித்திருக்கின்றர். இந்த ஏஜென்ட்டுகள், ‘என்னுடைய அவசர நிமித்தம் வியாபார அவசியச் செலவுக்கு வேண்டி’ என்கிற வகையில் பத்திரங்களில் எழுதிக் கொடுத்துவிட்டு, பொதுமக்களிடமிருந்து லட்சம் லட்சமாகப் பணம் வாங்குகிறார்கள். ‘100 ரூபாய்க்கு மாதம்தோறும் இரண்டு ரூபாய் வட்டி வழங்கப்படும்’ என்று பத்திரங்களில் குறிப்பிடுகிறார்கள். ‘பத்திரத்தில் குறிப்பிடுவது என்னவோ 2%தான். ஆனால், மாதம்தோறும் 6% தருவோம்’ என்று வாய்மொழி வாக்குறுதி தருகின்றனர். இப்படியாகக் கோடி கோடியாக வசூலித்துவருகிறார்கள்.’’

மேலே நீங்கள் வாசித்தவை காட்பாடி மற்றும் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடம் பேசித் திரட்டிய தகவல்கள்.

அந்த வகையில் இவர்களிடம் முதலீடு செய்திருக்கும் காட்பாடியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் பேசியபோது, ‘‘ஏழு மாசத்துக்கு முன்னாடி ரூ.10 லட்சத்தை டெபாசிட் செஞ்சேன். மாதம் 5% வட்டின்னு கணக்கு போட்டு, மாதா மாதம் ரூ.50,000 கொடுத்தாங்க. அப்புறம், டெபாசிட் செஞ்ச ரூ.10 லட்சத்தையும் ரிட்டர்ன் வாங்கிட்டேன். இப்போ, திரும்பவும் ரூ.20 லட்சம் டெபாசிட் செஞ்சிருக்கேன். ஷேர் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட்டுனு சொல்லித்தான் பணம் வாங்குறாங்க’’ என்றார்.

மாதம் 5% வட்டி என்றால், ஆண்டுக்கு 60% வட்டி. கொள்ளையடித்தால்கூட இந்த அளவுக்கான வட்டியை மாதம்தோறும் தர முடியுமா என்பது ரிசர்வ் வங்கிக்கே வெளிச்சம்!

பங்குச் சந்தையில் இயங்கிவரும் சிலரிடம் இது தொடர்பாகப் பேசினோம், “முதலீடு செய்வதாகச் சொல்லி பத்திரம் எழுதித் தந்தால், செபியிடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால், அனுமதி அத்தனை எளிதாகக் கிடைக்காது. ஆகவேதான், இப்படிக் கடன் வாங்கியதுபோல பத்திரம் எழுதித் தருகிறார்கள். மேலும், இந்தப் பத்திரத்தைவைத்து இந்த நிறுவனத்தின்மீது யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பில்லை. ஏஜென்ட்டுகள்தான் கடைசியில் மாட்டிக்கொள்வார்கள்’’ என்றார்கள்.

இப்படிப் பணத்தை வசூலிப்பதற்கும் லட்சுமிநாராயணன் பிரதர்ஸுக்கும் உண்மையிலேயே தொடர்பிருக்கிறதா அல்லது வேண்டுமென்றே புகார் கிளப்புகிறார்களா... என்கிற கேள்விகளோடு, லட்சுமி நாராயணனின் அண்ணன் ஜனார்த்தனனைத் தொடர்புகொண்டு, ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும், இந்த நிறுவனத்தை நடத்துவதற்காக செபி உட்பட பல்வேறு அரசு அமைப்புகளிலிருந்து அனுமதி பெற்றது தொடர்பாகவும் விளக்கம் கேட்டார் விகடனின் வேலூர் நிருபர் லோகேஸ்வரன்.

‘‘முகாந்திரமில்லாத கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. ‘பார்லே ஜி பிஸ்கட் கம்பெனி உங்களுடையது, பெப்சி கோக் நிறுவனம் உங்கள் உறவினருடையது என்று என் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்’ என்று உங்களிடம் கேட்டால், நீங்கள் பதில் சொல்வீர்களா... ஐ.எஃப்.எஸ்-ஸுக்கும் எனக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது... அப்படியே சம்பந்தமிருந்தாலும், ஐ.எஃப்.எஸ் என்பது பப்ளிக் லிமிடெட் கம்பெனி. என்மீதும், என் நிறுவனத்தின் மீதும் கூறப்படும் எந்தவிதமான குற்றச்சாட்டுக்கும் உங்களிடம் பதில் சொல்ல முடியாது’’ என்று முடித்துக்கொண்டார் அவர்.

இந்த நிலையில், கடந்த ஜூன் 21-ம் தேதியன்று, நிருபர் லோகேஸ்வரனைத் தொடர்புகொண்ட காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன், “ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தை மிரட்டியதாக உங்கள்மீது புகார் வந்திருக்கிறது. விசாரணைக்காக நீங்கள் காட்பாடி காவல் நிலையத்துக்கு வர வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார். விகடன் குழுமச் சட்டக்குழுவுடன் ஆலோசித்துவிட்டு, காட்பாடி காவல் நிலையத்துக்குச் சென்று தேவையான விவரங்களை அளிக்கும்படி நிருபரிடம் கூறியிருந்தோம். ஜூன் 24-ம் தேதி மாலை மீண்டும் போனில் அழைத்த ஆய்வாளர் ஆனந்தன், “உங்கள்மீது சி.எஸ்.ஆர் போட்டுவிட்டேன். நாளை காலையில் வந்து என்னைச் சந்திக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார். மறுநாள் காலையில் காவல் நிலையத்துக்கு நம் நிருபர் சென்றபோது, ஆனந்தன் அங்கே இல்லை. தொடர்ந்து, மூன்று முறை போனில் அழைத்தபோதும், ஏற்கவில்லை. மாலை 6 மணியளவில் மீண்டும் போன் செய்தபோது, “இன்று பிஸியாக இருந்துவிட்டேன். பிறகு அழைக்கிறேன்’’ என்று மட்டும் கூறியிருக்கிறார் ஆனந்தன்.

“கோடி கோடியாக சுருட்டுகிறார்கள்...” - நிதி நிறுவனத்தை நோக்கி நீளும் புகார்கள்...

இந்த நிலையில், 26-ம் தேதி காலை வேலூர் மாவட்ட எஸ்.பி ராஜேஸ்கண்ணன் தரப்பிலிருந்து நம் நிருபரைத் தொடர்புகொண்ட தனிப்பிரிவு போலீஸார் (ஸ்பெஷல் பிராஞ்ச்), “விகடன் மீதும், உங்கள் மீதும் வந்த புகார் தொடர்பாக இதுவரை எஸ்.பி-யின் கவனத்துக்குத் தெரிவிக்கப்படவில்லை. அதைக் கேள்விப்பட்டு, ஆய்வாளர் ஆனந்தனை அழைத்து விசாரித்திருக்கிறார். ‘இன்னமும் சி.எஸ்.ஆர் போடவில்லை’ என்று எஸ்.பி-யிடம் ஆனந்தன் கூறியிருக்கிறார்’’ என்று கூறியிருக்கின்றனர்.

இந்நிலையில், ஐ.எஃப்.எஸ் தரப்பிலிருந்து, சி.எஸ்.ஆர் காப்பி ஒன்று வெளியில் பகிரப்பட, அது நம் கைகளுக்கும் வந்துசேர்ந்தது. இதையடுத்து, வேலூர் எஸ்.பி தரப்பில் விசாரித்தபோது, ‘சி.எஸ்.ஆர் போட்டது உண்மைதான். அதை கேன்சல் செய்யச் சொல்லி எஸ்.பி உத்தரவிட்டுவிட்டார்’ என்று சொன்னார்கள். காட்பாடி டி.எஸ்.பி-யான பழனி, நம் நிருபரைத் தொடர்புகொண்டு அதை உறுதிப்படுத்தியுள்ளார்.

காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “இந்த விவகாரத்தில், ஆய்வாளர் ஆனந்தன் தனிப்பட்ட முறையில் சி.எஸ்.ஆர் போடாமலேயே ஏதோ ஆதாயம் தேடப் பார்த்திருக்கிறார். ஆய்வாளர் ஆனந்தன், லாட்ஜ் நடத்துவது உள்ளிட்ட வேறு சில தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தில் 3 கோடி ரூபாய் வரை முதலீடும் செய்திருக்கிறார். அதனால்தான் நிருபரை மிரட்டப் பார்த்திருக்கிறார்’’ என்றார்கள்.

லட்சுமி நாராயணன் சகோதரர்கள் செய்யும் அனைத்துமே சட்டவிதிகளுக்கு உட்பட்டுத்தான் நடக்கின்றன என்றால், நாம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்வதில் என்ன தயக்கம் இருக்கிறது... அதைவிடுத்து, கேள்விகளை எழுப்பிய நிருபர் மீதே புகார் தந்திருக்கிறார் ஜனார்த்தனன். இது, தன்னைப் பற்றி யாரும் எதுவும் கேட்கக் கூடாது என்று மிரட்டும் செயலன்றி வேறில்லை. இப்போதும்கூட தங்கள் தரப்பு விளக்கங்களை அவர்கள் தரும் பட்சத்தில் பிரசுரிக்கத் தயாராகவே இருக்கிறோம்.

ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தில் மட்டுமல்ல, எந்த நிறுவனத்தில் பணம் போடுவதாக இருந்தாலும், அந்த நிறுவனம் தொடர்பாகப் பல வகையிலும் விசாரித்து, நம் பணம் மோசம் போகாது என்பதை உறுதிசெய்துகொண்ட பிறகுதான் மக்கள் அதில் பணத்தைப் போட வேண்டும். அளவுக்கதிகமாக லாபம் கிடைக்கும் என்கிற ஆசையில் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தைப் போட்டுவிட்டு, பிற்பாடு கூப்பாடு போடுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை!