Published:Updated:

வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி ராகிங் விவகாரம் - மற்ற கல்லூரிகளில் என்ன நிலவரம்?!

ராகிங் காட்சி
News
ராகிங் காட்சி

பிற தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வெளிவராத ராகிங் சம்பவம் இன்னும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது என்று திகிலைக் கிளப்புகிறார்கள் ஆசிரியர்கள்.

Published:Updated:

வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி ராகிங் விவகாரம் - மற்ற கல்லூரிகளில் என்ன நிலவரம்?!

பிற தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வெளிவராத ராகிங் சம்பவம் இன்னும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது என்று திகிலைக் கிளப்புகிறார்கள் ஆசிரியர்கள்.

ராகிங் காட்சி
News
ராகிங் காட்சி

கமல்ஹாசன் நடித்த `வசூல்ராஜா’ என்ற திரைப்படத்தில், முதலாமாண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களை அரை நிர்வாணமாக நடனமாடச்சொல்லி சீனியர்கள் சிலர் ராகிங் செய்து கொடுமைப்படுத்துவார்கள். அதேபோல ஒரு சம்பவம்தான் வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி விடுதியில் நடந்திருக்கிறது. புதிதாகச் சேர்ந்த ஜூனியர் மாணவர்களை, சீனியர் மாணவர்கள் 'ராகிங்' செய்த வீடியோ காட்சி கடந்த வாரம் வெளியாகி, தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வேலூர் மாவட்டம், பாகாயத்திலுள்ள வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் பயின்றுவருகிறார்கள்.

ராகிங் காட்சி
ராகிங் காட்சி

அந்த மாணவர்களில் பெரும்பாலானோர் கல்லூரியின் விடுதியில் தங்கி, படித்துவருகின்றனர். இந்நிலையில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்து கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கிய ஜூனியர் மாணவர்களை, மழையில் அரை நிர்வாணமாக விடுதியின் உள் வளாகத்தைச் சுற்றி வரச்சொல்லி, தண்ணீர் குழாயைவைத்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். மேலும், அங்கு தேங்கியிருந்த மழைநீரீல் விழுச் சொல்லியும், தண்டால் எடுக்கச் சொல்லியும், இரு மாணவர்களை கட்டிப்பிடிக்கச் சொல்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகின.

இதற்குப் பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஏழு மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. அதேபோல, போலீஸாரும் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரியில் ராகிங் விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருக்கிறது.

ராகிங் கொடுமை
ராகிங் கொடுமை

இந்தச் சம்பவத்தையொட்டி பிற மருத்துவக் கல்லூரிகள் எப்படி இருக்கின்றன என்று விசாரித்தோம். சென்னையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்கள் சிலர் நம்மிடம் பேசுகையில், "பொதுவாக கல்லூரியைவிட விடுதிகளில்தான் அதிகமாக ராகிங் நடக்கிறது. எந்த அளவுக்கு என்றால், 'சீனியருக்கு வணக்கம் வை', 'கடைக்குப்போய் ஏதாவது வாங்கிட்டு வா', 'ரெக்கார்டு எழுது’ எனச் சொல்வது...  என சின்னச் சின்ன அளவில் இருக்கிறது. இதுவும் தவறுதான் என்றாலும், ஜூனியர் மாணவர்கள் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பதால், புகார் எதுவும் பதிவு செய்யப்படுவதில்லை. அதேநேரத்தில், மாணவர்களை எரிச்சலடைய வைக்கும் சம்பவம் குறித்து புகார் வந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டுதான் வருகிறது. ஆனால், வேலூர் கல்லூரியில் நடைபெற்றதுபோல, சமீபத்தில் அரசுக் கல்லூரிகளில் எந்த ராகிங் சம்பவமும் நடைபெறவில்லை" என்றனர்.

அதேநேரத்தில்,`பிற தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வெளிவராத ராகிங் சம்பவம் இன்னும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது’ என்று திகிலைக் கிளப்புகிறார்கள் ஆசிரியர்கள்.

இது குறித்து சென்னை புறநகரில் உள்ள சில மருத்துவக் கல்லூரிகளின் பேராசிரியர்கள் நம்மிடம் பேசுகையில், ``ராகிங் என்பது மருத்துவக் கல்லூரிகளுக்கே இருக்கும் சாபம் என்று சொல்லலாம். கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டி தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்கள், கடுமையாக இருக்கும் கல்லூரிகளை விரும்புவதில்லை. இதனாலேயே, மருத்துவக் கல்லூரிகள், பிற உயர்கல்வி கல்லூரிகளைக் காட்டிலும் ஃப்ரீயாக இருக்கின்றன. ராகிங் குறித்து பாதிக்கப்படும் மாணவர்கள் வெளியே சொன்னால், அந்த மாணவர்கள் குழுவாக கல்லூரியில் ஒதுக்கப்படும் சூழ்நிலையும் இருக்கிறது.

ராகிங் காட்சி
ராகிங் காட்சி

இதற்கு பயந்துதான் பாதிக்கப்படும் மாணவர்கள் வெளியே சொல்வதில்லை. தமிழ்நாட்டில் 1998-ம் ஆண்டு நிகழ்ந்த மாணவி மரணத்தைத் தொடர்ந்துதான் கேலி வதையிலிருந்து பெண்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்றப்பட்டு, நடைமுறையில் இருக்கிறது. அதன் பின்னர்தான், கல்லூரிகளில் ராகிங் குறைந்திருக்கிறது என்றே கூறலாம். தற்போது வேலூர் சம்பவத்தைப் பிரதானமாகவைத்து, மருத்துவக் கல்லூரிகளில் திடீர் ஆய்வுநடத்தி விசாரித்தால்தான் உண்மைநிலை தெரியவரும்" என்றனர்.