வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்துக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள கிரீன் சர்க்கிள் பகுதியைச் சுற்றிக்கொண்டுதான் அனைத்து வாகனங்களும் மாநகருக்குள்ளேயும் நகரைவிட்டு வெளியிலும் செல்ல முடியும். நான்கு பக்கமும் வாகனங்கள் ஒரே நேரத்தில் கடக்க முற்படுவதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. `ஈ’ மொய்ப்பதைப்போல் வாகனங்கள் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன.

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற அவசர ஊர்திகள் செல்வதிலும் சிக்கல் நீடிக்கிறது. கிரீன் சர்க்கிள் பகுதியில் நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளையும் வியூகங்களையும் மேற்கொண்டபோதும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியவில்லை. `பீக் அவர்ஸ்’ என்று சொல்லக்கூடிய அலுவலக நேரத்தில், சொல்ல முடியாத அளவுக்கு வாகன ஓட்டிகள் படாத பாடுபடுவார்கள்.
கடந்த செப்டம்பர் மாதம் 17-ம் தேதி, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் தலைமையிலான சட்டப் பேரவை பொது கணக்குக் குழுவினர் வேலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கிரீன் சர்க்கிள் பகுதியைப் பார்வையிட்ட துரைமுருகன், ``கிரீன் சர்க்கிளின் சுற்றளவு மிகவும் அதிகமாக உள்ளது. திருநெல்வேலியில் இதுபோன்று இருந்த ரவுண்டானாவால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதன் சுற்றளவை குறைத்த பிறகு, போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. அதே போன்று, வேலூரில் உள்ள கிரீன் சர்க்கிளின் சுற்றளவையும் குறைக்க வேண்டும். அப்போதுதான், போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண முடியும்’’ என்று செய்தியாளர்களிடம் கூறினார். இதே கருத்தை வேலூர் மக்களவைத் தொகுதி எம்.பி கதிர் ஆனந்த் உட்பட பல்வேறு தரப்பினரும் கூறியிருந்தனர்.
இந்த யோசனை குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டோம். ``கிரீன் சர்க்கிளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் பலவிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆலோசனைகள் மூலம் சிலவற்றை சரிசெய்துவருகிறோம். கிரீன் சர்க்கிளின் சுற்றளவை எக்காரணம் கொண்டும் குறைக்கவோ மாற்றவோ கூடாது என்று நெடுஞ்சாலைத்துறையும் தேசிய நெடுஞ்சாலைத்துறையும் அறிவுறுத்தியிருக்கின்றன.

ஏனெனில், மேல் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் வடிவத்துக்கு ஏற்பவும் தூண்களைத் தாங்கக்கூடிய பலம் பொருந்திய திறனுடனும்தான் கிரீன் சர்க்கிளின் சுற்றளவு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் அளவைக் குறைக்கும் பட்சத்தில் பாலத்துக்கு பாதிப்பு உண்டாகும் என்கிறார்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள். எனினும், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான வேறு வழிகளை ஆராய்ந்து வருகிறோம். யார் வேண்டுமானாலும் `ஐடியா’ கொடுக்கலாம். ஏற்கக்கூடிய கருத்துகளாக இருந்தால் அவசியம் ஏற்றுக்கொல்வோம்’’ என்றனர்.