சமூகம்
Published:Updated:

இந்த நிலை மாற வேண்டும்!

பல்துறை ஆளுமைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பல்துறை ஆளுமைகள்

2023-ம் ஆண்டிலேனும் நிகழவேண்டிய மாற்றங்கள் குறித்து, பல்துறை ஆளுமைகளின் எதிர்பார்ப்புகள்...

``கர்நாடக அரசுப் பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தபோது, அவர்களைப் பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை. தேர்வு எழுதவும் அனுமதிக்க மறுத்ததால், 20,000 முஸ்லிம் மாணவிகள் பள்ளித் தேர்வு எழுத முடியவில்லை. இதற்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோதும், அந்தத் தீர்ப்பை எதிர்த்து போடப்பட்ட மேல்முறையீட்டை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அவசரம் காட்டவில்லை. இரு நீதிபதிகளின் கருத்து வேற்றுமையால் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. மாணவிகளுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கிறது. இன்னும் சமுதாயத்தை மதத்தின் அடிப்படையில் பிரித்து, சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் தரும் நிலைமைதான் இருக்கிறது. இது போன்ற பல சம்பவங்கள் வெறுப்பரசியலால் உருவாக்கப்படுவது 2022-ன் மறக்க முடியாத நிகழ்வுகளாக மாறிவருகின்றன. இந்த நிலை மாறுமா?’’

- கே.சந்துரு, மேனாள் நீதிபதி

கே.சந்துரு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஆர்.பாலகிருஷ்ணன்
கே.சந்துரு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஆர்.பாலகிருஷ்ணன்

``கடந்தகாலத் துன்பங்கள்... முக்கியமான பேரிடராக, நாடுகளுக்கிடையிலான பகைமை மேகமாகச் சூழ்ந்திருந்தன. இந்தியாவின் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றம், அமைதியாக மாறுவதற்கு இயற்கையும், இறை அருளும் துணை நிற்கட்டும். உலகில் எந்த மூலையிலும் போரின் தாண்டவம் நிகழக் கூடாது. போர் மாபெரும் தீமைகளையேதான் விளைவிக்கும். வெற்றிபெற்ற நாடோ, தோல்வியடைந்த நாடோ ஒன்றின் மீது ஒன்று ஆதிக்கம் செலுத்தத் துடிப்பதால் பொருளாதார வீழ்ச்சியும், உயிரிழப்புகளும், நோய்மையின் தாக்கமும் ஏற்பட்டு, அவை அடுத்த தலைமுறையை வளர்ச்சிப் பாதையிலிருந்து துண்டித்துவிடுகின்றன. வருகின்ற புத்தாண்டு மானுட சமூகத்துக்கு போரற்ற அமைதியின் புத்தாண்டாக, அன்பின் புத்தாண்டாக மலரட்டும்!’’

- தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

“ `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’, `யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கருத்தியல் மலர்ந்த பூமியில், சாதியும் பேதமும் இடையில் புகுந்தது மிகப்பெரிய சறுக்கல்.‌ அதை இப்போதே களைவது நம் பொதுப் பொறுப்பு. சமத்துவத்தின் தொடக்கப்புள்ளி சுயசாதி மறுப்பு. சாதிக்குள் இருந்துகொண்டு சமவுரிமை பேசுவது கடைந்தெடுத்த போலித்தனம். சமூக அடுக்கின் அடித்தட்டில் வீசும் பிணவாடையை மறைத்துக் கசிகிறது பொதுப்புத்தி. நாம் வல்லரசு ஆவதைவிட முக்கியமானது ஒரு நல்ல சமுதாயமாக வாழ்வது.‌ விளிம்பில் நிற்கும் கடைசி மனிதனின் சார்பில் நின்று பேசவேண்டியது நம் அனைவரின் கடமை. வெறுப்புணர்வு இல்லாத பொறுப்புணர்வு வளர்ப்போம். தீண்டாமை என்னும் தீமையை முற்றிலும் வேரறுப்போம்!’’

- ஆர்.பாலகிருஷ்ணன் , ஒடிசா மாநில முதல்வரின் சிறப்பு ஆலோசகர்

``ஆப்கானிஸ்தானில் கல்லூரி வாசலில் இளம்பெண் ஒருவர் கையில் ‘இக்ரா’ என்று எழுதப்பட்ட பதாகையுடன் நின்றுகொண்டிருந்தார். `இக்ரா’ என்றால் ‘To seek knowledge’ என்று பொருள். `எனக்குக் கல்விதான் வேண்டும்’ என்று ஒரு பெண் தன்னந்தனியாக அங்கு போராடிக்கொண்டிருக்கிறார். அதை மொத்த உலகமும் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறது. இரானில் நடக்கும் மனித உரிமை மீறலுக்கு இதுவரை எந்தக் குரலும் எழுப்பப்படவில்லை. ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்தால், 81 குழந்தைகள் இறந்திருக்கிறார்கள். பெற்றோர்களே தங்கள் கையால் அல்லவா அந்த மருந்தைக் கொடுத்திருப்பார்கள்... வாழ்நாள் முழுவதும் அவர்கள் நிம்மதியாக வாழ முடியுமா... பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக உலகில் நிகழும் வன்முறைகள் களையப்பட வேண்டும்!’’

- பாரதி பாஸ்கர், பட்டிமன்றப் பேச்சாளர்

பாரதி பாஸ்கர், த.செ.ஞானவேல், ச.தமிழ்ச்செல்வன்
பாரதி பாஸ்கர், த.செ.ஞானவேல், ச.தமிழ்ச்செல்வன்

``பட்டியலின மக்கள் அருந்தும் குடிநீர்த் தொட்டியில் மலம் கழிக்கிற சிறுமையான செயல் சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம், இடையூரில் நடந்தது. சாதி எப்படி மனிதர்களைக் கீழ்த்தரமாகச் சிந்திக்கவும் செயல்படவும் வைக்கும் என்பதற்கான நிகழ்கால சாட்சி இந்தச் சம்பவம். ‘இப்பல்லாம் யாரு சாதி பார்க்குறாங்க’ என்று நம்மில் பலர் எண்ணிக் கொண்டிருக்கும் காலத்தில்தான் ‘இரட்டைக்குவளை’ முறையையும், பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்லக் கூடாது என்ற தடையையும் கடைப்பிடிக்கிறார்கள். இதெல்லாம் நடந்தது 2022-ல்... எனில், எத்தனையோ நூற்றாண்டுகளாக சாதியின் பெயரால் எவ்வளவு கொடுமைகள் நிகழ்ந்திருக்கும். இது போன்ற அவலங்கள் இனி நடைபெறக் கூடாது என்று மனம் விரும்பினாலும், மன மாற்றம் ஏற்படாத சமூகத்தில், சாதி இருக்கும் வரை இந்த அவலம் தொடரவே செய்யும். அதற்கு எதிராக நம்மால் முடிந்த ஒரு சிறிய முயற்சியையாவது செய்ய முன்வர வேண்டும் என விரும்புகிறேன்!’’

- த.செ.ஞானவேல், திரைப்பட இயக்குநர்

``பெரியாரின் வழிவந்த திராவிடக் கட்சிகள், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியிலிருக்கும் மாநிலத்தில் ஆணவக்கொலைகளைக்கூட நிறுத்த முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டில் இனி ஒருபோதும் ஆணவக்கொலைகளே நடக்காத சூழல் உருவாக வேண்டும். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களைப் பாதுகாக்க சமத்துவபுரம்போல, காதல்புரங்களை உருவாக்கிப் பாதுகாக்க வேண்டும்.

குஜராத் தேர்தலில் பா.ஜ.க கூடுதல் பலத்துடன் ஆட்சிக்கு வந்திருக்கிறது. பா.ஜ.க-வின் கருத்தியல் ஆபத்தானது. மக்கள் விரோதமானது. ஹிட்லரின் வாரிசுகளான இவர்களால் மனிதப் பேரழிவு நிச்சயமென்பதால், இதுபோன்ற வெற்றி மீண்டும் நிகழவே கூடாது என்று ஆசைப்படுகிறேன்.

ரஷ்யாவும் உக்ரைனும் போரைக் கைவிட்டுவிட்டுப் பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும். உலகில் இனியெங்கும் போரே நிகழக் கூடாது!’’

- ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர்

``குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகு ஏற்பட்ட கலவரத்தில், ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு, முன்விடுதலையும் அவர்கள் விடுதலையை இனிப்பு வழங்கி, அந்தக் கிராமத்தினர் கொண்டாடிய மனநிலையும் என்னை வெகுவாக பாதித்தது. தமிழ்நாட்டில் சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலைசெய்யப்பட்ட வழக்கின் குற்றவாளியான யுவராஜை, அந்தச் சமூகத்தின் காவல் நாயகனாகப் பார்க்கும் மனநிலையையும் என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. தன் சமூகத்துக்காகவும், மதத்துக்காகவும் பெருங்குற்றம் செய்யும் மனிதர்களை ஆதரிப்பது மனிதகுலத்துக்கே ஆபத்தான, அபத்தமான போக்கு. இது மாற வேண்டும் என்று விரும்புகிறேன்!’’

- ஹலிதா சமீம், திரைப்பட இயக்குநர்

``எதிர்வரும் வருடத்தில் மட்டுமல்ல, இனி எப்போதும் மானுடத்துக்கு நேரக்கூடாத துயர், போர். இரண்டு உலகப் போர்கள் விட்டுச் சென்ற நாசங்களிலிருந்து இன்னும் முழுமையாக மானுடம் மீளவில்லை. 2022-ல் தொடங்கியிருக்கும் ரஷ்யா-உக்ரைனுக்கு இடையிலான மோதல், போரின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறது. அணுவுலையின் ஆபத்துகளை அறியாத நிலமில்லை அது. இன்றும் செர்னோபில், அணுவுலை விபத்தின் மரண சாட்சியாக நின்றுகொண்டிருக்கிறது. அணு ஆயுதங்கள் கைவசம் இருக்கும் நிலையில், ரஷ்யா-உக்ரைனுக்கு இடையிலான மோதல் அணு ஆயுதப் போராக மாறினால், அது மானுடத்தின் பேரழிவுப் பாதையாகவே இருக்கும். மெல்லக் கொல்லும் சூழல் பேரழிவுகளுக்கிடையில், இந்தப் பேரழிவையும் பூமி தாங்காது. போரற்ற பூமியே 2023-ல் உலகின் உன்னதமான நோக்கமாக இருக்கட்டும்!’’

- கோ.சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்

ஹலிதா சமீம், கோ.சுந்தர்ராஜன், கனிமொழி மதி, பாமரன்
ஹலிதா சமீம், கோ.சுந்தர்ராஜன், கனிமொழி மதி, பாமரன்

``கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவிகித உள் ஒதுக்கீட்டை வழங்கி, அதைச் சட்டமாக்கி, சமூகத்தின் விளிம்பில் வாழும் மக்களுக்கு அரசும் நீதிமன்றங்களும் இழைத்த கொடூரம் இந்த ஆண்டில் மட்டுமல்ல, இனி ஒருபோதும் நடக்கக் கூடாது. `சமத்துவம்’ என்ற அடிப்படை உரிமை ஆதிக்க வர்க்கத்துக்கு மட்டுமே உரியதாகக் கட்டமைக்கப்படுகிறது. சமூக அடுக்கில் கீழே தேக்கிவைக்கப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையில் ஊடுருவி, அரசியலமைப்புச் சட்டத்தை மீறியிருக்கிறார்கள். அனைத்து உரிமைகளும் ஆதிக்க சாதியினருக்கு ஏற்றதாக மாற்றியமைக்கப்படுவது, டாக்டர் அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் கண்ட சமத்துவ சமூகம் என்ற ஆதார விழுமியங்களை அடித்து நொறுக்கும் மிக மிக அவலமான செயல். இது மாற வேண்டும்... மாற்ற வேண்டும்!’’

- கனிமொழி மதி, வழக்கறிஞர்

``மலக்குழி மரணங்களை பச்சைப் படுகொலை என்றே கூறுங்கள்” என்கிறார் பெசவாடா வில்சன். அவரின் போராட்டங்களாலேயே மனித மலத்தை, மனிதரே அள்ளும் அவலநிலைக் கெதிராக சட்டம், 1993-ல் உருவானது. தமிழ்நாடு அரசு போர்க்கால நடவடிக்கையாக இதைக் கருத்தில்கொண்டு இந்தத் துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஐந்து வயதிலிருந்தே போலியோவால் பாதிக்கப்பட்ட டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் சாய்பாபா பொய்க் குற்றச்சாட்டால் சிறையிலடைக்கப்பட்டார். 90 சதவிகிதம் உடல் இயக்கமின்றிசிறையில் வாடும் பேராசிரியர் இந்த ஆண்டாவது விடுதலையாக வேண்டும்.

உக்ரைன் யுத்தம், சூடான் மக்கள் அகதிகளாவது நிறுத்தப்படவும், ஈழ இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கப்பெறவும் இந்த மனிதகுலம் மனிதத்தன்மையோடு நடந்துகொள்வதும் கனவாக இல்லாமல் நனவாக வேண்டும்!’’

- பாமரன், எழுத்தாளர்