
பத்து ரூபாயை உள்ளே வைக்கும்போது, ஒரு சிகரெட் துண்டு ஜானின் கைக்குள் சிக்கியது. கஞ்சா வைத்துச் சுருட்டிய அந்த சிகரெட்டை ரூபாய் தாளோடு மறைத்து தன் உள்ளங்கைக்குள் வைத்துக்கொண்டான்.
“பகைகொண்டவனுக்கு ஒவ்வோர் இரவும் அச்சம் மிகுந்ததுதான். சிலநேரம் இரவில், தன் நிழலை நோக்கியே அவன் ஆயுதம் எடுப்பான்!” - மூர்க்கர்கள்
பெரிய பர்லாந்தின் வீட்டு காம்பவுண்டுக்குள், ஜான் புல்லட்டை ஓட்டிக்கொண்டு நுழையும்போது, வெளியே பெரிய பர்லாந்தின் மகள் அமலி முற்றத்தில் ஒரு சேரில் அமர்ந்திருந்தாள். எதிர்பார்த்திருந்ததைப்போல ஜானைப் பார்த்ததும், அமலி தன் வீட்டுக்குள் எட்டிப் பார்த்தபடியே எழுந்து அவன் அருகில் ஓடிவந்தாள். அமலியின் வீட்டினுள்ளே கரன்ட் இல்லாததால், மெழுகுவத்தி ஏற்றிவைத்து இரண்டு பேர் அமர்ந்திருப்பது கண்ணாடி அடைத்த ஜன்னலின் வழியே நிழலாகத் தெரிந்தது. ஜான் சாவியைத் திருகியதும் புல்லட்டின் சப்தமும் வெளிச்சமும் அணைந்து, வீடு மீண்டும் இருளால் மூடப்பட்டது.
அமலி புல்லட்டின் அருகில் ஓடிவந்து மெல்ல ஜானிடம் கேட்டாள். “சார் என்ன இவ்வளவு தூரம் வந்துருக்கீங்க..?” ஜான் சுற்றுமுற்றும் பார்த்தபடி சிறு தயக்கத்துடன், “சமுத்திரத்துக்குச் சாப்பாடு எடுத்துட்டு வந்தேன். அவரு இல்லையா?” என்று கேட்டபடியே அவள் வீட்டு முற்றத்துப் பக்கம் ஆட்கள் வருகிறார்களாவெனப் பார்த்தான். குறிப்பாக பிளசர் நிறுத்துமிடத்தைப் பார்த்தபடியே “உங்க அப்பா இல்லையா?” என்றான் கமுக்கமான குரலில்.

அவள் பதில் ஏதும் சொல்லாமல், ஜானின் அருகில் மிகவும் நெருக்கமாக வந்து அவன் தலைமுடியைப் பிடித்து இழுத்து, ஒரு முத்தமிட்டு சட்டென விலகிக்கொண்டாள். இருளின் தைரியத்தில் இப்போது ஜானும் அவளை இழுத்து முத்தமிட நினைத்து அவள் கையைப் பிடித்தான். அவள் உதறிக்கொண்டு ஓடினாள். எக்கி அவள் கையைப் பிடிக்க நினைக்கையில், ஜான் அமர்ந்திருக்கும் புல்லட் தடுமாறியது. அவன் புல்லட்டை ஸ்டாண்ட் போட்டு வேகமாக இறங்கும்போது, கேட் பக்கமிருந்து பிளசரின் மஞ்சள் வெளிச்சம் பாய்ந்துவந்து அவன்மீது அடித்தது.
ஜான் ஒரு நொடி தடுமாறிப்போனான். புல்லட்டும் அவனும் வழியில் நின்றுகொண்டிருந்ததால், பெரிய பர்லாந்து ஹாரன் அடித்தார். சட்டென வியர்த்து அவசர அவசரமாகத் தடுமாறியபடியே புல்லட்டை நகர்த்த முயன்றான். ஈரத் தரையில் டயர் புதைந்துகொண்டு புல்லட் நகர மறுத்தது. பெரிய பர்லாந்து மீண்டும் ஹாரன் அடித்தார். ஜானுக்கு உள்ளங்கை வியர்த்து வேக வேகமாக மூச்செடுத்தது. கண்களால் அமலியைத் தேடினான். அவள் எப்போதோ ஓடிப்போய் முற்றத்தில் கிடக்கும் சேரின் அருகில் நின்றுகொண்டிருந்தாள்.
தொடர்ச்சியான ஹாரன் சப்தம் கேட்டு, வீட்டுக்குள்ளிருந்து அமலியின் அம்மாவும், வேறொரு கிறிஸ்தவக் கன்னியாஸ்திரீயும் வெளியே வந்து எட்டிப்பார்த்தார்கள். ஜான் புல்லட்டை நகர்த்த சிரமப்படுவதைப் பார்த்து அமலியின் அம்மா கத்தினார். “ஏ... அமலி, கூடப்போயி அந்த வண்டிய அப்படி ஓரமாத் தள்ளிவிட உதவி பண்ணா என்ன...” அமலி அதற்காகவே காத்திருந்தவளைப்போலத் துள்ளிக் குதித்து புல்லட்டை நோக்கி ஓடினாள். பின்னாலேயே கன்னியாஸ்திரீயும் வந்தார். அதற்குள் ஜான் புல்லட்டை நகர்த்தி ஓரமாக ஒதுங்கி வழிவிட்டிருந்தான்.
பெரிய பர்லாந்து, பிளசர் ஜன்னலின் வெளியே தலையை நீட்டிச் சிரித்தபடியே... “என்னலா ஸ்டெல்லா எப்போம் வந்த..?” என்று கன்னியாஸ்திரீயிடம் கேட்டுக்கொண்டே பிளசரை செட்டில் நிறுத்திவிட்டு வந்தார். இரண்டு பேரும் முத்தமிட்டுக்கொண்டதை அவர் பார்த்திருப்பாரோவென்று ஜானுக்கு உள்ளுக்குள் திகிலடித்தது. அமலிக்கும்தான்.
பர்லாந்து, அவன் யார் என்பதுபோல இருட்டுக்குள் ஜானைக் கூர்ந்து பார்த்தார். அந்த நேரத்தில்தான் மின்சாரம் சட்டென வந்து வீடு முழுவதும் பிரகாசமானது. எல்லோரின் முகமும் இப்போது நன்கு துலக்கமாகத் தெரிந்தன. வழிமறித்து நின்றுகொண்டிருந்தது சமுத்திரத்தின் புல்லட் என்பதைப் பார்த்ததும் புரிந்துகொண்டார் பர்லாந்து. அதனருகே நிற்பது ரோசம்மாவின் மகன் என்பதும், சமுத்திரத்தைத் தேடி இங்கே வந்திருக்கிறானென்பதும் அவருக்குச் சொல்லாமலே விளங்கிவிட்டது.
எல்லோரின் பார்வையும் ஜான்மீது படிந்திருந்தது. ஜான் பர்லாந்தைப் பார்த்து, சமுத்திரத்துக்குத் தன் அம்மா சோறு கொடுத்து விட்டிருப்பதாகச் சொன்னான்.
“அவன் கல்லறைக்குப் போயிட்டு இங்க வரலயே... அங்க தோணியில கிடக்கானா பாத்தியா..?’’ என்று கேட்டவாறே தன் சட்டைப் பைக்குள்ளிருந்து ஒரு பனாமா சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தார். பர்லாந்தின் மனைவி, கன்னியாஸ்திரீயான அவரின் தங்கை ஸ்டெல்லா இருப்பதாகச் சைகை காட்டியதும் பற்றவைத்த சிகரெட்டைக் கீழே போட்டு அணைக்க எத்தனித்தார்.
ஸ்டெல்லா அவரைத் தடுத்து “ஏண்ணே ஒண்ணே கால் ரூபாய வேஸ்ட் பண்ற. எல்லாம் தெரிஞ்சதுதானே. சீக்கிரம் அதைக் குடிச்சுட்டு சாப்பிட வா... உனக்குப் பிடிக்குமேன்னு விரால் மீன் குழம்பு வெச்சிருக்கேன்” என்றாள். பர்லாந்து, ஜானைப் பார்த்து ‘நீயும் வந்து சாப்ட்டுப் போ’ என்றார். அமலிக்கு அதில் சந்தோஷமும், ஜானுக்கு முத்தம் கொடுத்ததை அப்பா பார்க்கவில்லையென்பதும் நிச்சயமானதால் ‘அப்பாடா’ என்று நிம்மதியும் ஒருசேர வந்தது.
ஜான், “இல்ல... நான் இன்னொரு நாள் சாப்புட்டுக்குறேன்...’’ என்று புல்லட்டை ஸ்டார்ட் செய்யப் பார்த்தான். அது ஸ்டார்ட் ஆகாமல் முரண்டு பிடித்தது. நான்கைந்து முறை மிதித்துப் பார்த்தும் அசைந்து கொடுக்கவில்லை. ஜானுக்குப் பீதியானது. எல்லோரும் அவன் கிளம்புவதற்குக் காத்திருந்தார்கள். ஸ்டெல்லா அவன் அருகில் வந்து, “கீழ இறங்கு, நான் கிக்கர் அடிக்கிறேன்’ என்று புல்லட்டைக் கையில் பிடித்தார். ஜானுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மறுபேச்சில்லாமல் ஸ்டெல்லாவிடம் வண்டியை ஒப்படைத்தான். அவள் சிரித்துக்கொண்டே புல்லட்டை நேராக நிறுத்தி ஸ்டாண்ட் போட்டாள். பிறகு, வண்டியின் வலது புக்கமாக வந்து கிக்கரை ஓங்கி மிதித்தாள். முதல் கிக்கிலேயே `டுபு டுபு டுபு டுபு’வென… புகை கக்கி புல்லட் ஸ்டார்ட் ஆனது.
“பார்த்து ஓட்டிட்டுப் போ...” என்றபடியே புல்லட்டை அவன் கையில் கொடுத்துவிட்டு ஸ்டெல்லா வீட்டுக்குள் நுழைந்தாள். பர்லாந்தும், அவர் மனைவியும் உள்ளே நுழைய, அமலி வேண்டுமென்றே தாமதமாக அவர்கள் பின்னே சென்று, வாசலைத் திரும்பிப் பார்த்தாள். ஜான் திரும்பிக்கூடப் பார்க்காமல் பெரிய பர்லாந்தின் வீட்டு கேட்டைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்தான்.
கை கால்களைக் கழுவிக்கொண்டு பர்லாந்து ஸ்டெல்லாவிடம் கேட்டார்.
“எப்போம் வந்த..?”
“இப்போ சாயந்தரம்தான் ஸ்கூல் முடிஞ்சு கிளம்புனேன். வரும்போதே திருநவேலியிலயிருந்து விரால் மீனு வாங்கிட்டு வந்தேன்.”
“ம்...”
பெரிய பர்லாந்துக்கு ஸ்டெல்லா ஏன் வந்திருக்கிறாள் என்பது தெரியும். இரண்டு தரப்பிலிருந்தும் ஒவ்வொரு சாவு நடக்கும்போதும் அவள் வருகை நிகழ்வது வாடிக்கைதான். இரு தரப்பிலும் ரத்தம் சிந்திவிட்டது என்றாலே பர்லாந்தின் மனைவி பாளையங்கோட்டை துறவற மடத்துக்கு போனைச் சுழற்றிவிடுவாள். ‘இந்த மாதிரி ஆகிடுச்சு. உடனே கிளம்பி வந்துருங்க...’ என்பதுதான் அவள் அப்போதைக்கு உதிர்க்கும் வார்த்தையாக இருக்கும்.
ஸ்டெல்லா சிஸ்டர் மிகவும் தைரியசாலி. திருமண வாழ்க்கை மேல் நம்பிக்கை இல்லாமல் இறைவனின் சேவகத்தில் ஐக்கியமாகிவிட்டார். கத்தோலிக்க கிறிஸ்தவ துறவற மடத்தில் ஒரு பெரிய குடும்பத்துப் பெண் சேர்வது ஆரம்பத்தில் பெரிதாகப் பேசப்பட்டது. பிறகு அந்தப் பேச்சு அடங்கிவிட்டது.
ஸ்டெல்லா, பர்லாந்துகளின் அப்பாவுக்கு இரண்டாம் தாரத்து மகள். சின்ன பர்லாந்தைவிட இரண்டு வயது மூத்தவள். தன் அண்ணணும் தம்பியும் இப்படி அடித்துக்கொள்வதில் அவளுக்குத் துளியும் சம்மதமில்லை. பர்லாந்து சகோதரர்களும், அவர்கள் குடும்பமும் மீண்டும் ஒன்றுசேர வேண்டும் என்பதுதான் அவள் தினமும் ஜெபத்தில் வைக்கும் வேண்டுதலே.
ஜான் முழங்காலளவு நனைத்த அலைகளில் இறங்கி, சோற்றுத் தூக்கை எடுத்துக்கொண்டு தோணியில் ஏறிக்கொண்டிருந்தான். சமுத்திரம் புல்லட் சத்தத்தைவைத்தே அவன் வருகையை கணித்துவிட்டான். தோணியின் மேல் தளத்தில் ஏறி, “அம்மா சோறும் ‘கட்டக்கால்’ குழம்பும் குடுத்துவிட்டா” என்று அவனிடம் நீட்டினான். அதுவரையிலும் மிகுந்த பசியோடிருந்த சமுத்திரம், தட்டை எடுத்துக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தான். ஜானிடமிருந்து தூக்குச்சட்டியை வாங்கி, தட்டில் கவிழ்த்தினான்.
சோற்றைக் குமித்து அம்பாரமாய் அதில் குழம்பை ஊற்றினான். ஒவ்வொரு கைப்பிடிச் சோற்றுக்கும் ஒரு துண்டு பன்றிக்கறி வைத்து உருட்டி உருட்டித் தின்றான். “நீயும் கூடவந்து ஒக்காரு... சாப்பிடலாம்” என்று ஜானை அழைத்தான் சமுத்திரம். ஜானுக்கு சமுத்திரத்தோடு சாப்பிடுவது ரொம்பவே பிடித்தமானதுதான். ஆனாலும், ஏதோவொன்று அவனைத் தடுக்கும். “இல்ல நான் கிளம்புறேன்” என்று வண்டிச்சாவியை அவனிடம் கொடுத்துவிட்டுத் திரும்பினான்.

ஆணியில் தொங்கும் தன் சட்டையைக் காட்டி, “சட்டப்பைக்குள்ள துட்டு இருக்கும். எடுத்துட்டுப் போயி உங்கம்மகிட்ட குடு” என்றான் சமுத்திரம். ஜான் அதற்குள் கையை விட்டுத் துழாவிப் பணத்தை எடுத்தான். மூன்று நூறு ரூபாய் நோட்டுகள் சில பத்து ரூபாய்த் தாள்கள் இருந்தன. “எவ்வளவு எடுத்துக்க..?” என்று சிறு தயக்கத்தோடுக் கேட்டான்.
“அதுல பத்து ரூபாய வெச்சுட்டு மிச்சத்த எடுத்துக்க.”
பத்து ரூபாயை உள்ளே வைக்கும்போது, ஒரு சிகரெட் துண்டு ஜானின் கைக்குள் சிக்கியது. கஞ்சா வைத்துச் சுருட்டிய அந்த சிகரெட்டை ரூபாய் தாளோடு மறைத்து தன் உள்ளங்கைக்குள் வைத்துக்கொண்டான். தோணியிலிருந்து இறங்கி கடற்கரை மணலில் நடந்தபோது, கஞ்சா சிகரெட் கசங்கி வளைந்துபோயிருந்தது. ஜான் திரும்பித் தோணியைப் பார்த்தான். சமுத்திரம் சாப்பிட்டு முடித்திருக்க மாட்டான் என்ற நம்பிக்கை வந்ததும், அந்த கஞ்சா சிகரெட்டை மூக்கினருகில் வைத்து வாசம் பிடித்தான். பிறகு அதை உதட்டில் ஏந்தி, பற்றவைத்தான். தலைக்கு மேலும், தலைக்குள்ளும் நட்சத்திரங்கள் கன்னா பின்னாவென்று அலைபாய்ந்தன.
இன்னும் ஓரிரு வாரத்தில் தீபாவளிப் பண்டிகை... பண்டிகையின் முதல்நாள் அந்தச் சம்பவத்தை நடத்திவிட வேண்டுமென்று காளியப்பனின் வீட்டில்வைத்து கொடிமரம் நாள் குறித்திருந்தான். அங்கிருந்த வெள்ளையடித்த சுவரில் ஒருவன் அடுப்புக்கரியால் ‘கடா பாண்டி’ என்று எழுதினான்.
(பகை வளரும்...)