
இவதாண்டா முழிச்சிக்கிட்டுக் கிடக்கா. எனக்கு மகன்னா, இவளுக்குப் புருஷன் இல்லையா... பின்னாடி போயி கையக்கால கழுவிட்டு வா. நீங்களும் கைகாலக் கழுவிட்டு வாங்கய்யா
“பழிவாங்கும்போது ரெத்தங்கள் அமைதியாகின்றன!’’ - மூர்க்கர்கள்
1979 - மழைக்காலம், அதிகாலை 5.15 மணி, தூத்துக்குடி.
அடர் சாம்பல் நிற வானம். மழை வரும்போலிருந்தது. வானில் ஒரு நட்சத்திரமுமில்லை. தூத்துக்குடி புறவெளிப் பகுதியிலிருக்கும் அந்தப் பழைய பெரிய வீட்டின் வாசலில், மஞ்சள் குண்டு பல்ப் எரிந்து கொண்டிருக்கிறது. அறுபதுக்கு மேல் தாண்டிய ஒரு வயதான பெண்ணும், அவளின் மருமகளும் இரவெல்லாம் தூங்காமல் வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருக்கிறார்கள். இருவருக்கும், எதையோ எதிர்பார்த்துப் பிரயாசையோடு காத்திருக்கும் முகம்.
பிளசர் லைட் வெளிச்சம். வீட்டின் பெரிய கேட்டை ஒருவன் இறங்கித் திறக்க, பிளசர் உள்ளே நுழைகிறது. அந்த வயதான பெண் இதைத்தான் எதிர்பார்த்திருப்பார்போல. காரின் அருகில் போய் நின்றவள், அதிலிருந்து இறங்கிய தன் மகனிடம் நடுங்கிய குரலில் கேட்டாள்.
“என்னடா அவெய்ங்க ரெண்டு பேரையும் முடிச்சிட்டியா?’’
பிளசரிலிருந்து இறங்கிய காளியப்பன், தன் தலையை ஆட்டி, ஆமாமெனத் தெரிவித்தான்.
“நீ என்னத்துக்கும்மா இவ்வளவு நேரம் முழிச்சிட்டுக் கிடக்க?”
“இவதாண்டா முழிச்சிக்கிட்டுக் கிடக்கா. எனக்கு மகன்னா, இவளுக்குப் புருஷன் இல்லையா... பின்னாடி போயி கையக்கால கழுவிட்டு வா. நீங்களும் கைகாலக் கழுவிட்டு வாங்கய்யா...’’ அவனோடு உடன் வந்த எல்லோரும் நகர்ந்தார்கள். காளியப்பன் அப்படியே, அங்கேயே நின்றான். மற்றவர்கள் வீட்டின் பின்பக்கம் நோக்கி ரெத்தக்கறையைக் கழுவச் சென்றார்கள். காளியப்பன் அருகிலிருந்த பெண்ணைப் பார்த்தான். அந்தப் பெண்ணின் முகத்தில் உடையப்போகும் அணைக்கட்டுபோலக் கண்ணீர் கரைகட்டி நின்றது. விடியவிருக்கும் வானத்தை அண்ணாந்து பார்த்து, கை உயர்த்திக் கும்பிட்டவாறே முழங்கால் போட்டபடி காளியப்பனின் கால்களை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு ஓவெனக் கத்திக் குலுங்கிக் குலுங்கி அழுதாள். நின்றுகொண்டிருந்தவனின் கால்களில் முத்தமிட்டாள். காளியப்பன், அவளைத் தடுத்துத் தூக்க நினைத்தான். அவள் அப்படியே அவன் கால்களின் மேல் முகத்தை வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக அதில் முத்தமிட்டுக்கொண்டேயிருந்தாள்.
“என்ன மதினி இதெல்லாம்... என் அண்ணனைக் கொன்னாய்ங்கன்னா நான் பாத்துக்கிட்டு இருப்பனா... எந்திரி மதினி... ம்மா... இங்க வாம்மா... என்னம்மா இதெல்லாம்...’’
நெடுநேரமாக அவள் அப்படியே முத்தமிட்டபடியே கிடந்தாள்.
இந்தா ஏ லெட்சுமி... இப்போ அழுகய நிறுத்துறியா... என்னாங்குறேன்... ஏ கேக்குதா இல்லையாடி... எந்திரி லெட்சுமி. தாட்டியமா இருக்க வேண்டாமா?”

“ஏ... மதினி...”
“ச்சேய்... இன்னும் மதினி கொதினின்னுக்கிட்டுக் கிடக்க. கூட்டிக்கிட்டு மச்சு வீட்டுக்குப் போலே...’’
“எம்மா பேசாம கெட...’’
“நான் அன்னைக்கே என்னடா சொன்னேன். சரி சரின்னு தலையாட்டுன..?”
“அதுக்குன்னு நேரம் காலம் இல்லயா?”
‘‘இவ ஒரு வருஷமா அழுகயும் கண்ணீருமா கிடக்கா. பாக்க முடியலை...”
லெட்சுமி எழுந்து கண்களைத் துடைத்தபடி, “இனிமே நான் அழலை. இன்னிக்கி சந்தோஷமா இருக்கேன். என் புருஷனைக் கொன்னவய்ங்கள காவு வாங்கிட்டு வந்திருக்க. இனிமே நான் அழ மாட்டேன்.’’
பிடாரியாய் விரித்துப்போட்டுக் கிடந்த தலைமயிரைக் கட்டி, கொண்டை போட்டுக்கொண்டு காளியப்பனின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு அவனை வீட்டின் மாடிக்கு அழைத்துப்போனாள் லெட்சுமி.
காளியப்பனின் அம்மா கத்தினாள். “ஏ... கொஞ்ச நேரம் யாரும் மச்சு வீட்டுக்குப் போக வேண்டாம்.’’
மச்சு வீட்டு அறைக்குள் போய் இருவரும் கதவடைத்துக்கொண்டார்கள். எல்லோருக்கும் நன்றாகவே புரிந்தது. லெட்சுமி காளியப்பனின் ரெத்தக்கறை படிந்த வேட்டியையும் சட்டையையும் ஒவ்வொன்றாகக் கழற்றிவிட்டாள். தன் உடுதுணிகளையும் உருவி நிர்வாணமானாள். ரெத்தக்கறை படிந்த வேட்டியையும் சட்டையையும் முகத்தின் முன் விரித்துப் பிடித்துப் பார்த்துவிட்டு, கண்களை மூடி அந்த ரெத்தக்கறையை ஆழ்ந்து நுகர்ந்து, நிம்மதிப் பெருமூச்சுவிட்டபடி கண்களைத் திறந்தாள். வேட்டியைக் கட்டிலின் மேல் விரித்தாள். காளியப்பனுக்கு இவள் என்ன செய்கிறாள் என்று கேள்வியாயிருந்தது. ரெத்தக்கறை படிந்த வேட்டியில் தன் முதுகைச் சாய்த்துப் படுத்துக்கொண்டாள். காளியப்பனுக்கு நன்றிக்கடன் பட்டவளைப்போலத் தன்னை முழுமையாகக் கொடுத்தாள். இருவர் உடம்பிலும் வியர்த்து வியர்த்து ரெத்தக்கறை முழுக்க உடம்பில் ஒட்டிக்கொண்டது. இருவரும் கருவைக்காட்டு சாரைப்பாம்புகள்போலப் பின்னிக்கொண்டார்கள்.
எல்லாம் முடித்து, லெட்சுமி குளித்து ஈரத்தலையில் துணியைச் சுற்றிக்கொண்டு பட்டுசேலை உடுத்தி வந்தாள். வெளியே வருகையில் தூரத்தில் கூட்டத்தின் நடுவே காளியப்பன் மொட்டை போடுவதற்காக அமர்ந்திருந்தான். சட்டையுமில்லாமல், வேட்டியும் கட்டாமல் டிரவுசரோடு உட்கார்ந்திருந்தான். உடம்பு முழுக்க லெட்சுமி வாசம் வீசும் ரெத்தக்கறை. காளி திரும்பிப் பார்த்தான். லெட்சுமி ஈரத்தலையைத் துவட்டியபடியே அவனைப் பார்த்துச் சிறியதாகப் புன்னகைத்தாள். நாவிதர் கிண்ணத்திலிருந்து நீரைக் கையில் மொண்டு காளியின் தலையில் குளிரத் தெளித்துவிட்டு, மழிப்பானிலிருந்த பழைய பிளேடை எடுத்துத் தூர எறிந்துவிட்டு புதிய பிளேடை வைத்தார். கருகருவென நெஞ்சுவரை அவனுக்குத் தாடி கிடந்தது. தலைமுடியும் சுருண்டு தோள்பட்டையில் கிடந்தது. இருபத்தெட்டு வயதில் நாற்பது வயது ஆள்போலத் தெரிந்தான். போன வருடம் வரை காளி மிகவும் சாதாரணமாக ஏதோவொரு வேலைக்குப் போய்க்கொண்டு தன் வேலையுண்டு, சோலியுண்டு என்று இருந்தவன். என்றைக்கு சமுத்திரத்தின் ஆட்கள் இவனின் அண்ணனை வெட்டிச் சாய்த்தார்களோ, அன்றையிலிருந்து அவன் வேறோர் ஆளாக மாறிப்போனான். வீட்டுக்குள்ளேயே அவன் அம்மையின் முன்னால் புகைத்தான், குடித்தான். தலையிலும் கன்னத்திலும் நாவிதர் கைபடாமல் இருந்தான்.
தன் அம்மையின், மதினியின் அழுகையை தினம் தினம் கேட்டுக்கொண்டு அவனால் சும்மா இருக்க முடியவில்லை. அவன் அம்மாதான் ஒருநாள் வந்து கதறி அழுதாள். “எலே காளி... நெதம் நெதம் தூங்க முடியலடா... கிழிஞ்சு குடல் சரிஞ்ச வயித்தோட நெதம் அவன் வீட்டு வாசல்ல வந்து நிக்கான். `எம்மா சோறு போடு... எம்மா சோறு போடு’ன்னு...”
அவன் மதினியும் அழுதாள். “பிள்ள ராத்திரிக்கெல்லாம் அழுவுதான். `சாமிய பாக்கப் போயிட்டு அப்பா எப்போம்மா வருவார்’னு கேட்டு நச்சரிக்கிறான் காளி... `சித்தப்பாவப் போயி அப்பாவக் கூட்டிட்டு வரச் சொல்லு’ன்னு நெதம் அழுக…’’
இரண்டு பெண்களின் அழுகையையும் அன்றாடம் அவனால் கேட்க முடியவில்லை. அன்றைக்குச் சபதம் எடுத்துக்கொண்டான். வருஷம் திரும்புவதற்குள் தன் அண்ணனைக் கொன்றவனை தான் பழிவாங்க வேண்டுமென்று.

பாதி மொட்டை போட்டுக் கொண்டிருக்கும்போது, கேட்டுக்குள் நான்கைந்து பிளசர்கள் நுழைந்தன. நிறைய விருந்தினர்கள் வந்தார்கள். எல்லோருமே லெட்சுமியின் பிறந்த வீட்டுக்காரர்கள். தன் மகளைப் பார்த்து ஆதரவாக, பரிவாக வந்து கையைப் பிடித்தார்கள். லெட்சுமியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்கள். அவள் ‘ஆமாம்’ என்பதுபோல் தலையசைத்து, இரண்டு பேரையும் பழிவாங்கிய விஷயத்தை நொடியில் சொன்னாள். எதிரெதிரே சந்திப்பவர்களுக்கு அந்த பதில் அப்படியே தொடர்ந்து சென்றது.
பின்னால் கறிச்சோறு தயாராகிக் கொண்டிருந்தது. காளியின் அண்ணன் படம் பெரிதாக வைக்கப்பட்டு அதில் மாலையிட்டிருந்தார்கள். லெட்சுமியின் ஆறு வயது மகன் அப்போதுதான் எழுந்து, கூட்டமாக இருக்கும் தனது வீட்டை மருங்க மருங்கப் பார்த்தபடியே காளியிடம் வந்தான். ``சித்தப்பா... சித்தப்பா...’’ என்று அழைத்தபடியே அவன் மொட்டைத்தலையைத் தடவிக்கொடுத்தான். லெட்சுமியின் அப்பா, அந்தப் பையனைக் கையில் தூக்கிக்கொண்டு, “இனிமே அப்பான்னு கூப்பிடணும். சித்தப்பான்னு கூப்பிடக் கூடாது” என்று சொன்னபடியே, அவனை அங்கிருந்து கொண்டுபோனார். கொடிமரத்தின் கார் வீட்டுக்குள் நுழைந்தது. நொடியில் எல்லாருமே அமைதியானார்கள். காளி அவனைப் போய் வரவேற்றான். இருவரும் கட்டிக்கொண்டார்கள். ``எங்க இருந்தாலும் உங்க அண்ணன் இனிமே சந்தோஷமா இருப்பாண்டா…’’
காளி அவனை வீட்டின் பின்கட்டுக்கு அழைத்துப் போனான். அவனோடு நேற்று கொலையில் பங்கெடுத்தவர்கள் பின்னாலேயே போனார்கள். விடியற்காலையிலேயே அந்த இடம் குடியும் உற்சாகமுமாக மாறிக்கொண்டிருந்தது.
அதேநேரம், சமுத்திரத்தின் ஆட்கள் இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட செய்தி ஊருக்குள் வரத் தொடங்கியது. சமுத்திரத்தின் வீட்டின் முன்னால் அவரின் ஆட்கள் கூடியிருந்தார்கள். பிணங்கள் தூத்துக்குடி கவர்மென்ட் ஆஸ்பத்திரி பிரேதக் கிடங்கில் கிடந்தன!
(பகை வளரும்...)