
அந்த இருள் விலகாத அதிகாலையில், ஓன்றிரண்டு தெருவிளக்குகள்தான் எரிந்தன. எந்தெந்த திசைகளிலிருந்தோ டைனமோ வெளிச்சத்தில் லுங்கி கட்டிய மனிதர்கள் தங்கள் சைக்கிளை வேகமாக அழுத்தியபடி வந்தனர்
“பகைகொண்ட மனிதர்களின் அருகிலிருப்பவர்கள் அதை அணைக்க விரும்புவதில்லை. அது அணைவதையும் அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் ஊதி ஊதிப் பகையைப் பெருக்குகிறார்கள். பகை எல்லோரையும் எல்லாவற்றையும் எரித்துச் சாம்பலாக்குகிறது!” - மூர்க்கர்கள்
காலை ஆறு மணி ஆகியும் ஊர் கறுத்த மேகங்களோடு இருளடைந்து கிடந்தது. தலைகூட ஈரமாகாதபடிக்கு அவ்வளவு பொடித்தூறல் போட்டுக்கொண்டிருந்தது. கடற்கரைச் சாலையில் சமுத்திரத்தின் புல்லட் சப்தம், வரிசையாக நிற்கும் உப்புப் பாத்திகளைக் கடந்து போய்க்கொண்டிருந்தது. வலதுபுறம் கடல்பக்கம் திரும்பிப் பார்த்தான். தூரத்தில் கருநீல வானத்தில் பளிச்சென ஒரு பெரிய மின்னல் வெட்டு. கனத்த இடி சப்தம். தூரத்தில் எங்கேயோ கடலுக்குள் மழை பெய்துகொண்டிருந்தது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் மார்ச்சுவரியை நெருக்கி வந்துகொண்டிருந்தான். தூரத்தில் மார்ச்சுவரியின் வெளியே பெரிய கூட்டம் நின்றுகொண்டிருப்பது கலங்கலாகத் தெரிந்தது. பெண்கள் நிறைய பேர் நெஞ்சிலடித்து அழுதபடி அப்போதும் ஓடிவந்துகொண்டிருந்தார்கள். அழுகைச் சத்தம் மார்ச்சுவரி அருகில் வந்ததும் ஓலமாக மாறியது. “ஏ... மதினி... இப்பிடிப் பண்ணிட்டாய்ங்களே...”, “எம்மே... இப்படியா செய்வாய்ங்க..?”, “ஐயோ...” எனப் பெண்களின் அழுகைக் குரல்கள் எதிரொலித்தன.
“ஏலா... இப்போம் வாய மூடுதீகளா என்ன... ஆளாளுக்கு ஊல விட்டுட்டுக் கிடக்கீக... என் அண்ணன் மவனக் கொன்னவய்ங்க அத்தன பேரையும் நாளைக்கி பொழுது விடியுறதுக்குள்ள இதே சவக்கிடங்குல ஓலைப்பாயில சுத்திவெக்கல... நான் ஒத்த அப்பனுக்குப் பொறக்கல...’’ கோபமும் அழுகையுமாகத் தளர்ச்சியான குரலில் ஒரு பெரியவர் கத்திக்கொண்டிருந்தார்.
அந்த இருள் விலகாத அதிகாலையில், ஓன்றிரண்டு தெருவிளக்குகள்தான் எரிந்தன. எந்தெந்த திசைகளிலிருந்தோ டைனமோ வெளிச்சத்தில் லுங்கி கட்டிய மனிதர்கள் தங்கள் சைக்கிளை வேகமாக அழுத்தியபடி வந்தனர். ஒரு சிலர் டார்ஜ் லைட் வெளிச்சத்தில் பதற்றமான ஓட்டமும் நடையுமாக மார்ச்சுவரிக்கு வந்துகொண்டிருந்தார்கள். சமுத்திரம் புல்லட்டைக் கொண்டுவந்து மார்ச்சுவரிக்கு எதிரிலிருக்கும் டீக்கடை ஓரத்தில் நிறுத்தினான். டீக்கடைக்காரன் அதுவரை ஒலித்துக்கொண்டிருந்த சிவாஜி கணேசன் பாடலைச் சட்டென நிறுத்திவிட்டு, மடித்துக் கட்டியிருந்த லுங்கியைக் கரண்டைக்கால் வரை இறக்கிவிட்டான். ஒரு கணேஷ் பீடியைப் பற்றவைத்துக்கொண்டு, சமுத்திரம் சாலையைக் கடந்து மார்ச்சுவரி நோக்கிப் போனான்.

யாரோ கூட்டத்துக்குள்ளிருந்து, ``சமுத்திரத்துக்குத் தாக்கல் சொல்லியாச்சா?’’ என்று குரல் கொடுத்தார்கள். இறந்தவனின் சித்தப்பாவான அந்தப் பெரியவர் கோபமாகக் கத்தினார், “அந்தப் புழுத்திக்கு என்ன மயித்துக்குலே சொல்லணும்... இதெல்லாம் அந்தத் தாயோளியாலதான வந்துச்சு...” அதேநேரம் சமுத்திரம் ரோட்டைத் தாண்டி கூட்டத்துக்குள் வர வர கூட்டம் விலகி வழிவிட்டது. சமுத்திரம் வந்தது தெரியாமல் பெரியவர் இன்னும் கத்திக்கொண்டிருந்தார். ஒன்றிரண்டு பேர் அவரை “உஷ்...” என்று காட்டி பேச்சை நிறுத்தச் சொன்னார்கள். சமுத்திரம் அவர் எதிரில் வந்து நின்றான். அவர் அப்படியே வெலவெலத்துப் பேச்சில்லாமல் நின்றார். சமுத்திரம் பீடியைத் தூக்கிப் போட்டுவிட்டு அவரை அழைத்துக்கொண்டு மார்ச்சுவரிக்குள் போனான். கூடவே சமுத்திரத்தின் ஆள் ஒருவனும் பின்னாலேயே போனான்.
இரண்டு பிணங்களையும் அறுத்து, கூறாய்வு செய்யக் கிடத்திவைத்திருந்தார்கள். கண்கொண்டு பார்க்க முடியவில்லை. கழுத்தில்லாத திம்மராசுவின் உடலருகில் தலை தனியாகச் சாக்குப்பையில் வைக்கப்பட்டிருந்தது. ராயப்பனின் முகமும் நெஞ்சுக்கூடும் சிதைந்து கிடந்தன. சமுத்திரம் தலையை ஆட்ட, உடன் வந்தவன் சாக்குப்பைக்குள்ளிருந்து தலையை எடுத்து முண்டத்தின் அருகில் வைத்தான். அதை இறுக்கமாக சிறிது நேரம் பார்த்தபடியேயிருந்த சமுத்திரம், பிணம் அறுப்பவரிடம், “இந்தத் தலைய முண்டத்தோட சேத்துவெச்சு தச்சு காடாத் துணி சுத்து… போஸ்ட்மார்ட்டம் பண்றேன்னு திரும்ப வயித்த அறுத்து குடலு குந்தானினு வெளிய எடுத்துப் போட்டுற வேண்டாம். புரியுதா... துணியச் சுத்தி அப்படியே குடுத்துவிடுங்க. ஜெயராஜ் டாக்டர்ட்ட நான் பேசிக்கிடுதேன்’’ பிணமறுப்பவர் தலையாட்டினார்.
சமுத்திரம் தன் டிரவுசர் பைக்குள் கையைவிட்டு, உடன் வந்தவனிடம் அரைக் கட்டுப் பணத்தை எடுத்து நீட்டினான். “ஆக வேண்டியத கூடமாட இருந்து பாத்துக்கோ. நான் பர்லாந்து அண்ணன் வீடு வரைக்கும் போயிட்டு வாறேன்.”
சமுத்திரம் தன் வண்டியை ஸ்டார்ட் செய்து பெரிய பர்லாந்து வீடு நோக்கி ஓட்டினான். வழியெல்லாம் அவனுக்குச் சின்ன பர்லாந்து மீதும், கொடிமரத்தின் மீதும் ஆத்திரமும் கொலைவெறியுமாயிருந்தது. சமுத்திரத்துக்கு எப்படியும் நாற்பத்து மூன்று வயதிருக்கும். கடல்புறத்து இளைஞன். வருடங்களாய்க் கடல்நீரில் ஊறி, உப்புக்காற்றைச் சுவாசித்துச் சுவாசித்து இறுகிப்போன வல்லம் போன்ற உடற்கட்டு அவனுக்கு. தலையிலும் தாடியிலும், கறுப்பும் வெள்ளையுமாக அடர்ந்த முடிகள். முழு பாட்டில் விஸ்கி குடித்தாலும் அவன் நடையில் சிறு தடுமாற்றமும் இருக்காது. எப்போதும் புல்லட் பாக்ஸில் ஒரு பித்தளைத் தூக்குச்சட்டியில் நாட்டு வெடிகுண்டுகள் இருக்கும். இடுப்பில் எப்போதும் தோலுறை சுற்றப்பட்ட சூரிக்கத்தி ஒன்று.
சமுத்திரம் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால், ரோசம்மாவோடு பழக்கமுண்டு. திரேஸ்புரத்தில் யாரைக் கேட்டாலும் ரோசம்மாவை அடையாளம் சொல்வார்கள். கடல்புறத்தையொட்டி ஓட்டுச்சாய்ப்பு இறக்கப்பட்ட எளிமையான வீடு. வீட்டின் பின்னே நெடுநெடுவென நாலைந்து நாட்டுத் தென்னைமரங்கள். பனை மட்டைகளால் வேலிப்படல். எப்போதும் பின்கட்டில் இறைச்சியோ, மீனோ சமைக்கும் வாசம். பெரும்பாலும் அவை சமுத்திரத்துக்காகத்தான் இருக்கும். அதுவும் நள்ளிரவில் சமைத்துக்கொண்டிருந்தால், சந்தேகமின்றி நிச்சயம் அவனுக்குத்தான். ரோசம்மா தாட்டியமும் வனப்பும்கூடிய கடல்புறத்து அழகி. இப்போதுதான் நாற்பதைத் தாண்டுகிறாள்.
அவளின் கணவன் மரியதாஸ். சரீரரீதியிலும் வருமானரீதியிலும் மெலிந்த, அமைதியான மனிதர். கல்யாண வீடுகளுக்கும், விசேஷங்களுக்கும் பேண்டு வாத்தியம் வாசிக்கும் குழுவில் கிளாரினெட் வாசிக்கும் சிறந்த கலைஞர். பெரிய தேவாலயத்திலும் இசைக்குழுவில் இருக்கிறார். அதில் பெரிய வருமானமில்லை. அது இறைவனுக்கான பணி. ஆத்ம திருப்தி. ஆனால், வெளியே விசேஷங்களுக்கு வாசிப்பதில் அவருக்கு ஓரளவு வருமானமுண்டு. அதுவும் கல்யாண விசேஷ மாதங்களில் மட்டும்தான். மரியதாஸுக்கும் ரோசம்மாவுக்கும் உடலளவிலும் மனதளவிலும் பெரிய பிடிப்பில்லை. இருவருக்கும் பத்து வயதுக்கு மேல் வயது இடைவெளியும், சரீர இடைவெளியும் உண்டு. சொல்லிக்கொள்ளுமளவு இருவருக்குமிடையில் ஒட்டுதல் இல்லை. ரோசம்மா சமுத்திரத்தோடு பழகுவது அரசல் புரசலாக இல்லாமல் மரியதாஸுக்கு நன்றாகவே தெரியும். ‘ச்சீ இந்த நாய்ங்க அலையுறது வெறும் அற்ப உடம்புக்கான சந்தோசத்துக்கு... வெறும் சதை உரசலுக்கு’ என்பதுதான் இருவரைப் பற்றியும் அவரது எண்ணம். நாளுக்கு நாலு வார்த்தைகூட அவர் ரோசம்மாவோடு பேசிக்கொள்வதில்லை.
சிறு அலைகூட எழும்பாத தனுஷ்கோடியின் பெண் கடலைப்போல வெளியே தெரிந்தாலும், மரியதாஸுக்கு உள்ளுக்குள் தாளாத வெக்கையும், குமுறலும், மனப்புழுக்கமும் இருந்துகொண்டேயிருந்தன. அது என்றாவது ஒருநாள் கோபமும் மூர்க்கமுமான பொங்குமாக்கடலாக மாறி மொத்த ஊரையும் அழிக்கும் வாய்ப்பிருக்கிறது.
மஞ்சள் வெளிச்சத்தோடு சமுத்திரத்தின் புல்லட் அந்தப் பழைமையான பெரிய வீட்டின் முன் வந்து நின்றது. கறுத்த மேகமூட்டம் இன்னும் இறங்கவில்லை. வீட்டின் காம்பவுண்டுக்குள் இரும்பு கேட் அருகே, தெருவைப் பார்த்தபடி இரண்டடியில் பனிமயமாதா சுரூபத்தை கெபி கட்டி வைத்திருந்தார்கள். இவ்வளவு காலை வேளையிலும் அதன் முன்பு யாரோ இரண்டு மெழுகுத்திரிகளை ஏற்றிவைத்து, அது பாதிக்கு மேல் மஞ்சள் வெளிச்சத்தோடு காற்றில் அணைவோமா எரிவோமாவென்று ஆடியபடி கரைந்துகொண்டிருந்தது. வீட்டின் முன்கட்டு முற்றத்தில் பிரம்பு நாற்காலியில் அமர்ந்தபடி பெரிய பர்லாந்தும், வக்கீல் சுந்தரப்பெருமாளும் பேசிக்கொண்டிருந்தார்கள். பெரியபர்லாந்தின் முகத்திலிருந்த தீவிரத்தையும் இறுக்கத்தையும் பார்த்தால், விஷயம் ஏற்கெனவே தெரிந்திருக்கும்போல. கேட்டைத் திறந்து சமுத்திரம் வருவதைப் பார்த்ததும், அங்கிருந்த வேட்டை நாய்கள் குரைக்கத் தொடங்கின. பெரிய பர்லாந்து பேச்சை நிறுத்திவிட்டு, நாற்காலியிலிருந்து எழுந்து நின்று அவன் வருவதைப் பார்த்தார். அருகில் வந்து சமுத்திரம் அமைதியாக நின்றான். கொஞ்ச நேரம் அவனை உறையப் பார்த்தவர், “ராயப்பனுக்கு எத்தன பிள்ளைங்க...?” என்று கேட்க, அவன் `மூணு’ எனத் தன் விரல்களைக் காட்டினான்.
“திம்மராசுக்கு இதுதான முதப் பிள்ள?”
சமுத்திரம் `ஆமாம்’ என்பதுபோல் தலையாட்டினான்.
வக்கீல் சுந்தரப்பெருமாள் அங்கிருந்து கிளம்பினார். அவர் போனதும், பெரிய பர்லாந்து ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தபடி சொன்னார். “கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் ஆறுமுகநேரில ஒரு பயல சரணடைய வெச்சிருக்காய்ங்க...”
சமுத்திரம் இப்போதும் தலையைத்தான் ஆட்டினான்.

“பொணத்த எப்போம் எடுக்குறாங்களாம்..?”
“மதியம் ஒரு மணிக்கி மேல திம்மராச எடுக்குறாங்க. நாலு மணிக்கி ராயப்பன...”
“ம்...”
“தூறல் போடுது. உள்ள வந்து உக்காரு... ரெண்டு நிமிசத்துல கிளம்பி வாறேன். போயி பாத்துட்டு வந்துரலாம்.”
பர்லாந்து வீட்டுக்குள் போக, அவரைத் தொடர்ந்து சமுத்திரமும் வீட்டுக்குள் வந்தான். அந்தப் பழைமையான வீட்டின் மைய அறைக்கு வரும்போதுதான் அந்தச் சத்தம் கேட்டது.
“இறைவா... இவருக்கு முடிவில்லா வாழ்வு ஒன்று உண்டு. இவரது வாழ்வு மாறுபட்டுள்ளதேயன்றி, அழிக்கப்படவில்லை.இவருக்காக விண்ணகத்தில் நிலையான வீடு ஆயத்தமாயிருக்கிறது என்ற திண்ணமான உண்மையை எண்ணி நாங்கள் அமைதி பெற அருள்வீராக...’’
“ஆமென்!”
இரண்டு பெண்களின் இரைஞ்சலான ஜெபம் கேட்டது.
பர்லாந்தின் மனைவி, மகளின் குரல்கள்.
சிறிது நேரத்தில் பர்லாந்து வெளியே வந்தார். “வா... கிளம்பலாம்”
சமுத்திரம் அமைதியாக அவர் முகத்தைப் பார்த்தபடியிருந்தான்.
நிச்சயம் கேட்டுவிடலாமென்றுதான் அவனுக்குத் தோன்றியது.
“இன்னும் எத்தன நாளைக்கி... இன்னும் எத்தனை பேரு...” சமுத்திரம் கோபமாகக் கேட்டான்.
“நீங்க மறுக்கக் கூடாது. நான் அவன முடிக்கணும்... இங்க இதுக்கு மேல ஒரு உசுருகூட போகக் கூடாது. சொல்லுங்க. உங்க தம்பிய நான் கொல்லணும்.’’
பர்லாந்து அமைதியாக இருந்தார்.
அந்தக் கறுத்த வானத்தில் ஒரு பெரிய இடி இடித்து மழை கொட்டத் தொடங்கியது.
“உங்க தம்பிய நான் கொல்லணும்” சமுத்திரம் மீண்டும் அழுத்திச் சொன்னான்.
பெரிய பர்லாந்து அமைதியாகத் தன் பக்கத்து வீட்டின் மாடி அறை ஜன்னலைப் பார்த்தார். அங்கே பெரிய பர்லாந்தின் தம்பி இவர்களைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார்.
(பகை வளரும்...)