மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 9

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 9
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 9

பெரியவர் அவர் தம்பிய முடிக்குறதுக்கு என்ன சொல்றார்?’’ சபையில் மூத்தவரான குரூஸ் அண்ணன் கேட்டார்.

“இழப்பைச் சந்தித்தவனின் பேரமைதி,
வரப்போகும் கடும் புயலுக்கு முந்தைய கடலின் அமைதி!’’ -
மூர்க்கர்கள்

ராயப்பனின் வீட்டு ஆட்கள் உடலை அடக்கம் செய்துவிட்டு, கல்லறையில் மாலையும் மெழுகுதிரியும் ஏற்றிவிட்டுக் கிளம்பினார்கள். சமுத்திரமும், அவன் ஆட்களும் அருகில் சிமென்ட் போட்டு கட்டப்பட்ட வெவ்வேறு கல்லறைகளில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடா பாண்டி தான் சொன்னான். “எல்லாம் காளி வீட்டுலதான் கூத்தடிச்சிக்கிட்டு கிடக்கானுங்க. இன்னிக்கிக் காலைல காளி, அவன் மதினிய கல்யாணம் பண்ணியிருக்கான். காலைலயிருந்து மொத்த வீடுமே குடியும் கும்மாளமுமாத்தான் இருக்கு. சின்ன பர்லாந்து அவர் பிளசரக் குடுத்திருக்காரு. அதுல போயித்தான் சம்பவம் பண்ணிட்டு வந்திருக்கானுங்க. சமுத்திரம், கடா பாண்டியின் முகத்தை உன்னிப்பாகப் பார்த்தபடியிருந்தான்.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 9

இங்கு இருப்பதிலேயே கடா பாண்டிதான் வயதில் மிகவும் சிறியவன். இருபத்திரெண்டோ, மூன்றோ இருக்கும். மிகவும் துடியானவன். எதற்கும் முன்னால் `நான் நான்’ என்று ஓடி வருவான். சமுத்திரம் அவனைப் பலமுறை கண்டித்திருக்கிறான். ஆனால், எந்தத் தகவலாக இருந்தாலும் எப்படியாவது கண்காணித்து, விசாரித்துவந்து சொல்லிவிடுவான். நேற்று நடந்த இந்த மரணத்தைப் பற்றி முதலில் எச்சரித்தவனும் இவன்தான். எல்லோரும் கொடிமரத்தின் நடமாட்டத்தை நோட்டமிடுவதிலேயே இருந்துவிட்டார்கள்.

“கொடிமரம் இங்கதான் இருந்திருக்கான். புதுசா மதுரப் பக்கமிருந்து கூலிப்படை ஆட்கள் ரெண்டு பேரக் கூட்டிட்டு வந்திருக்கானுங்க. காளியோட மதினி வீட்டு ஆட்களுக்குத் தெரிஞ்சவனுங்களாம். இப்போம் கிளம்புனாக்கூட அவனுங்க எல்லாத்தையும் நிமிஷத்துல வெட்டிக் கூறு போட்டுடலாம். கையில நாலு உருண்டையும் இருக்கு. என்ன சொல்லுதண்ணே’’ கடா பாண்டி துடியாகப் பேசினான்.

சமுத்திரம் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு, “வேண்டாம்” என்று மறுத்து, தலையாட்டினான்.

“பெரியவர் அவர் தம்பிய முடிக்குறதுக்கு என்ன சொல்றார்?’’ சபையில் மூத்தவரான குரூஸ் அண்ணன் கேட்டார். இத்தனைக்கும் குரூஸ் அண்ணன் சின்ன பர்லாந்தைத் தன் கையால் தூக்கி வளர்த்தவர். பெரிய பர்லாந்தின் வயதிலிருப்பவர்.

சமுத்திரம் எதையோ யோசித்தபடியே சிறிது நேரம் ராயப்பனின் கல்லறையை உற்றுப் பார்த்தபடி பேசாமல் அமர்ந்திருந்தான்.

“தெரிஞ்சதுதான!’’

எல்லோரும் இறுக்கமாக அமர்ந்திருந்தார்கள். குரூஸ் அண்ணனே ஆரம்பித்தார். “நம்ம முருகன செஞ்சதுக்கு பதிலுக்குப் பதிலாத்தான் அவன் தம்பி, ராயப்பனையும் திம்மராசுவையும் போட்டுருக்கான். அவனையும் கழுத்தறுத்துட்டு, திரும்ப அவன் மதினிய தாலியறுக்க வெக்கணுமா?”

“ஏன் தாலியறுத்தா என்ன... பாவம் பாக்குறீகளோ?’’ கடா பாண்டி தெனாவெட்டாகக் கேட்டான்.

அவனை அடிக்க கை ஓங்கியபடியே குரூஸ் அண்ணன் கத்தினார். “அவசரம்… என்னதுக்குன்னாலும் அவசரம். அறுதலி நாயே... எத்தன தடவலே சொல்லியிருக்கேன். ஊருக்குள்ளவெச்சு எதுவும் செய்யாதேன்னு...” காலைத் தூக்கிக்கொண்டு கடா பாண்டியை எட்டி மிதிப்பதுபோல் வந்தார்.

“அவனைப் பாத்ததும் உருண்டயத் தூக்கி எறியுற... இப்போம்தான் ரெண்ட ஓலப்பாயில சுத்திட்டு வந்திருக்கோம். கொஞ்ச நாளைக்கி பேசாம கிடங்கலே...”

சமுத்திரம் அவரை ஏறிட்டுப் பார்த்தான். அவன் பார்வையின் அர்த்தம் குரூஸ் அண்ணனுக்கு நன்றாகத் தெரியும். சமுத்திரத்தைப் பெரிய பர்லாந்திடம் வேலைக்குச் சேர்த்துவிட்டவர் அவர்தான். “கொஞ்ச நாளைக்கிப் பொறுமையா கிடந்துட்டு அப்புறம் செய்வோம். இப்போம் எல்லாத்தையும் கிளம்பச் சொல்லு.’’ குரூஸ் அண்ணன் முடிவாகச் சொன்னார். சமுத்திரம் முதலில் எழுந்து, கல்லறையின் வெளிப்பாதை நோக்கி நடக்க ஆரம்பித்தான். பின்னாலேயே அவன் ஆட்கள் எல்லோரும் போனார்கள்.

பாதி தூரம் நடந்து போனதும் சமுத்திரம் கடா பாண்டியைப் பார்த்துச் சொன்னான். ``உருண்டைய எப்பவும் கைலயே வெச்சுரு. தனியா எங்கயும் போகாத. கொஞ்ச நாளைக்கி வீட்ல தங்காத. என்கூட வந்து இரு.’’

“அதெல்லாம் ஒண்ணுமில்லண்ணே. நான் வீட்லயே இருந்துக்கிடுதேன். ஒண்ணும் ஆகாது.’’

“அதான் சொல்லுதாம்ல... போலே... கொஞ்ச நாளைக்கி அவன்கூட போயி கிட.’’ குரூஸ் அண்ணன் கண்டிப்பாகச் சொன்னார்.

“நான் பாத்துக்கிடுதேன். நீரு கம்முனு இரும்.’’

``மணி ஏழு ஆகப் போகுதுலே...’’ கூட்டத்தில் வேறொருவன் சொன்னான். எல்லோரும் எதையோ எதிர்பார்த்தபடியிருந்தார்கள்.சட்டென மின்சாரம் நிறுத்தப்பட்டு, நகரம் முழுக்க இருளடைந்தது. சில மாதங்களாக இது வாடிக்கைதான். தினமும் இரவு 7 மணிக்கு நகரம் முழுக்க மின்சாரம் நிறுத்தப்பட்டு அடுத்த அரை மணி நேரத்தில் வந்துவிடும். மின்சாரப் பற்றாக்குறையால் வேறு வழியில்லாமல், நான்கைந்து மாதங்களாக முதல்வர் எம்.ஜி.ஆர் இப்படியொரு விஷயத்தை அமல்படுத்தியிருக்கிறார்.

இருளுக்குள் திசையை கவனமாகப் பார்த்தபடியே எல்லோரும் நடக்கத் தொடங்கினார்கள். எல்லோரின் கைகளும் அவர்களின் ஆயுதங்களின் மேல் கவனமாக இருந்தன. ஒரு குழந்தையைத் தொடுவதுபோல் மெல்ல அதைத் தொட்டுப் பார்த்துக்கொண்டார்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, இப்படியான ஒரு நேரத்தில்தான் குரூஸ் அண்ணனைப் போட்டுத்தள்ள ஒரு கும்பல் சுற்றிவளைத்தது. அவரிடம் அன்று ஆயுதங்கள் எதுவுமில்லை. அவருக்கு அன்று இருள் மட்டும்தான் ஆயுதம். திபுதிபுவெனக் கிடைக்கும் சந்து பொந்தெல்லாம் ஓடினார். நெஞ்சு அடித்துக்கொள்ளும் சத்தமே அவருக்குக் கேட்டது. `அப்பாடா...’ என்று ஓரிடத்தில் நின்று நிம்மதி பெருமூச்செடுக்கையில். சட்டென மின்சாரம் வந்து ஊர் வெளிச்சமானபோது, கை தொடும் தூரத்தில் கொடிமரத்தின் முதுகுப் பக்கம் அவர் நின்றுகொண்டிருந்தார்... எதற்கும் ஒரு நொடிதான். அவன் திரும்புவதற்குள், அரவமில்லாமல் அங்கிருந்து நகர்ந்து செல்வம் சைக்கிள் கடைக்குள் நுழைந்து தப்பினார். சைக்கிள் கடை ஆட்கள், இவரைப் பார்த்ததுமே சைக்கிள் ரிம்முக்குள் போடும் பால்ரஸ் குண்டு ஒரு டப்பா எடுத்துவைத்தார்கள். குரூஸ் அண்ணன் நாட்டு வெடி தயாரிப்பதில் கைதேர்ந்தவர். எவ்வளவு மருந்து திணிக்க வேண்டும், துருப்பிடித்த ஆணி முனைகள், பால்ரஸ் குண்டுகள், கண்ணாடிச் சில்லுகள் எவ்வளவு சேர்மானம் சேர்க்க வேண்டும், எவ்வளவு இறுக்கமாகக் கயிறு சுற்ற வேண்டுமென்பது அவருக்குத் தெளிவு.

இந்த இருண்ட நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு தூத்துக்குடிக்குள் நிறைய சைக்கிள்கள், பெண்களின் கழுத்து நகைகள் திருட்டுப்போய்க்கொண்டிருந்தன. வீட்டு ஆட்கள் முற்றத்தில் இருக்கும்போதே, அவர்கள் கண்முன்னாலேயே திருடர்கள் திருடிவிட்டு அமைதியாக நடந்து போய்க்கொண்டிருந்தார்கள்.

முதலில் இருப்பது குரூஸ் அண்ணன் வீட்டுத் தெருதான். அவர் விடைபெற்றதும், எல்லோரும் திக்குக்கொருவராக நடந்து இருளுக்குள் கரைந்தார்கள்.

சமுத்திரம் பழைய ஹார்பர் பாதைக்கு நடந்து, அவன் தங்கியிருக்குமிடத்தை நோக்கிப் போனான். அது பர்லாந்து வீட்டினரால் கைவிடப்பட்ட சிறிய கப்பலைப்போலிருக்கும் ஒரு பழைய தோணி. கடலில் ஓடி ஓடி சரக்குச் சுமந்து, அதன் காலம் முடிந்து, இப்போது ஓய்வெடுக்கக் கரையில் இழுத்துப் போட்டிருக்கிறார்கள். பர்லாந்துகளின் அப்பா, அதில் கொழும்பு யாவாரம் பார்த்துவந்தார். வருடம் முழுக்க ஓய்வில்லாமல் அறுபது எழுபது வருடங்கள் ஓடி, பல புயல் மழைகளை எதிர்த்து நின்றது. தோணிக்கும் வயதாகிவிட்டது. சின்னச் சின்ன பிரச்னைகள்தான். ஆனாலும், இப்போதும் நீரில் ஊறி ஊறி இரும்பைப்போலிருந்தன அந்தத் தோணியின் மரப்பலகைகள். இனி விறகுக்காக அதை உடைத்தெடுக்க வேண்டும். மனசில்லாமல் பெரிய பர்லாந்து அதை அப்படியே கரையில் விட்டுவிட்டார். தோணியின் கீழ்த்தளத்தில் சரக்கு சேகரிக்கும் பெரிய தொட்டியும், இரண்டு அறைகளும் இருக்கின்றன. சமுத்திரம் பல காலமாக அதில்தான் தங்கியிருக்கிறான். ரோசம்மாவும் இரண்டு நாளைக்கு ஒரு பொழுதாவது அங்குதான் வருவாள். அவன் அழுக்கு உடைகளைத் துவைத்து, தோணியின் மேல் தளத்தில் காயப் போட்டுவிட்டு, அதன் ஈரம் காயும் வரை கீழ்த்தளத்து அறையில் அவனுக்குத் திளைக்கத் திளைக்கத் தன்னுடலைத் தந்துகொண்டிருப்பாள். பின் அங்கேயே அவனுக்குச் சமைத்தும் கொடுப்பாள். சில நேரங்களில் ஊட்டியும்விடுவாள். அவளின் கணவன் மரியதாஸ், தன் பேண்ட் வாத்தியக் குழுவோடு கிளாரினெட் வாசிக்க வெளியூருக்குச் சென்றுவிட்டால், அந்த இரவு சமுத்திரத்துடனேயே தங்கிவிடுவாள்.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 9

பெரிய பர்லாந்து தன் தம்பியோடு பங்கு பாகம் பிரிக்கையில், இந்தத் தோணி தனக்குத்தான் வேண்டுமென்று நிபந்தனை போட்டு வாங்கிக்கொண்டார். இதில்தான் பலநூறு முறை கொழும்புக்குப் பயணம் செய்து அவர் யாவாரம் கற்றுக்கொண்டது; ஆர்ப்பரிக்கும் கடலலையில் குதித்து நீந்தவும், பெரிய மீன்களைப் பிடித்துச் சமைத்து உண்ணவும் கற்றுக்கொண்டது. எந்த பயமுமில்லாமல் பெரிய பெரிய அலைகளோடு மோதி வேட்டைக்குச் செல்லும் ஒரு ராட்சச மீனைப்போல், வயது மூத்த திடகாத்திரமான தந்தையைப்போல் அவ்வளவு வேகமும் பாய்ச்சலுமாக அந்தத் தோணி செல்லும்போதெல்லாம் பெரிய பர்லாந்தின் மனம் மிகுந்த சந்தோஷத்தோடும் உற்சாகத்தோடுமிருக்கும். தகப்பனின் பிடரியில் அமர்ந்து பயணிப்பதுபோல… தோராயமாக அவரின் பாதி ஆயுளை இந்தத் தோணிதான் சுமந்திருக்கிறது. எதற்கும் அஞ்சாத துணிவை அவருக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. அவரைப் பொறுத்தவரை இந்தத் தோணி இன்னும் உயிரோடிருக்கும் ஒரு பெரிய கடல் ஜீவன்தான்.

காலையிலிருந்து குடித்துக்கொண்டேயிருந்த சமுத்திரத்துக்குப் பசியெடுத்தது. காலையில் ரோசம்மா வீட்டில் சாப்பிட்ட துண்டுமீன் வால் மட்டும்தான். சமுத்திரத்துக்கு எப்போது, என்ன வேண்டுமென்பது ரோசம்மாவுக்கு நன்றாகத் தெரியும். அவள் அப்போதே பன்றி இறைச்சி சமைத்து, அதில் துண்டு அடுப்புக்கரியைப் போட்டு, தூக்குச்சட்டியில் கொடுத்தனுப்பிவிட்டாள். சமுத்திரம் தோணியில் ஏறும்போதுதான் பார்த்தான். மணலில் புல்லட்டின் டயர் தடமிருந்தது. பழகிய தடம்தான். அவன் புல்லட்டைக் காலையில் இறந்துபோன ராயப்பன் வீட்டில் நிறுத்திவிட்டு வந்திருந்தான். ரோசம்மாவின் மகன் ஜான் அதை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறான். இவன் இல்லையென்பதால், திரும்பிப் போயிருக்கக்கூடும். நிச்சயம் தன்னைத் தேடிக்கொண்டு பெரியவரின் வீட்டுக்குத்தான் போயிருப்பான் என்று சமுத்திரம் யூகித்தான்.

பெரிய பர்லாந்தின் வீட்டு காம்பவுண்டுக்குள் ஜான் புல்லட்டை ஓட்டிக்கொண்டு நுழைந்தான். கரன்ட் இல்லாததால் வீடு இருளடைந்திருந்தது. புல்லட்டின் முகப்பு லைட் வெளிச்சம், தூரத்திலிருக்கும் முற்றம் வரை அடித்தது. அந்தப் பிரகாசமான மஞ்சள் வெளிச்சத்தில், முற்றத்தில் பிரம்பு நாற்காலியில் கடல் தேவதையைப்போல் பெரிய பர்லாந்தின் மகள் அமலி தனியாக அமர்ந்திருப்பது தெரிந்தது.

(பகை வளரும்...)