
உடனடித் தேவையாக மளிகைப்பொருள்கள், தார்ப்பாய்கள், உணவு ஆகியவை சில ஆயிரம் பேருக்கு நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டன
‘கஜா’ என்ற பெயரைக் கேட்டால், கனவிலும்கூட நடுநடுங்க ஆரம்பித்துவிடுவார்கள் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்ட மக்கள். 2018 நவம்பர் 15-ம் தேதி நள்ளிரவு கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயல், டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியது. மூன்றாண்டுகளைக் கடந்துவிட்டாலும், மக்களில் பலரிடமும் அந்த நடுக்கம் மறையவில்லை. இதற்கு நடுவே, பலருக்கும் கனவாக இருந்த கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் பணிகளை முடித்து, சில தினங்களுக்கு முன்பு பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைத்திருக்கிறது ஆனந்த விகடன் குழுமம்.
புயலால் பாதிப்பு என்ற செய்தியைக் கேள்விப்பட்டதுமே, தவித்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காகக் களத்தில் இறங்கினோம். கூடவே, நிதி கேட்டு வேண்டுகோளும் விடுத்தோம். விகடன் அலுவலகத்துக்கு நேரடியாக வந்து தன் சார்பாகவும், தன் சகோதரரான நடிகர் சூர்யா சார்பாகவும் 20 லட்சம் ரூபாயை வழங்கினார் நடிகர் கார்த்தி. வாசகர்களும் வாரிவழங்கினார்கள். இத்துடன் விகடன் ஊழியர்கள் மற்றும் ஆனந்த விகடன் குழுமமும் நிதியைச் சேர்க்க, மொத்தமாக ரூ.1,43,79,224 நிதி திரண்டது.
உடனடித் தேவையாக மளிகைப்பொருள்கள், தார்ப்பாய்கள், உணவு ஆகியவை சில ஆயிரம் பேருக்கு நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டன. மின்தடையால் கருக ஆரம்பித்த சுமார் 130 ஏக்கர் பரப்பிலான பயிர்களுக்கு, ஜெனரேட்டர் மூலமாகத் தண்ணீர் பாய்ச்சிக் கொடுக்கப்பட்டது. நிரந்தரத் தீர்வாக, குடிசைகளை இழந்த மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டம் உருவானது. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள புஷ்பவனம், முதலியார்தோப்பு, வேட்டைக்காரனிருப்பு ஆகிய பகுதிகளில் குடிசைகளை இழந்த 10 பயனாளிகளுக்குக் கடந்த 06.12.2019 தேதியன்று வீடுகள் ஒப்படைக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள முத்தன்பள்ளம், கஜாவுக்கு முன்பிருந்தே பரிதாப கிராமம்தான். சுமார் 3 கிலோமீட்டர் தூரத்துக்கு வெறும் மண்சாலை மட்டுமே. கார், பஸ் என்று எந்த வாகனமும் செல்ல முடியாது. இரண்டு இடங்களில் ஆறுகள் குறுக்கிடுவதால் நடந்து மட்டுமே செல்ல முடியும். அவர்களின் கொடுமையான வாழ்க்கைச் சூழலை நேரில் பார்வையிட்டுப் பதைபதைத்துப்போன நாம், கஜா சிதைத்துப்போட்ட 16 சின்னஞ்சிறு குடிசை வீடுகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடுகள் கட்டும் பணியைத் தொடங்கினோம்.
வீட்டுமனைப் பட்டாவுக்கான தாமதம், கொரோனா பிரச்னைகளையெல்லாம் கடந்து கட்டுமானப் பணிகள் நிறைவுற்று 13 குடும்பங்களிடம் முறைப்படி நவம்பர் 18-ம் தேதி வீடுகள் ஒப்படைக்கப்பட்டன (மூன்று வீடுகள் விரைவில் ஒப்படைக்கப்படும். கிராமத்துக்குச் சாலை போடுவது தொடர்பாக அரசுத்துறையிடம் கொடுக்கப்பட்ட தொடர் அழுத்தத்தின் காரணமாக, அந்தப் பணிகள் ஓரளவுக்கு நடந்துவருகின்றன).
‘‘கான்கிரீட் வீட்டை எங்களால் நெனைச்சுக்கூடப் பார்க்க முடியாது’’ என்று கஜா புயலால் உருக்குலைந்த நேரத்தில் கண்ணீர் மல்கச் சொன்னவர்களின் குடிசை வீடுகள், கான்கிரீட் கட்டடங்களாக எழுந்து நிற்க, வீடுகளின் சாவிகள் ஒவ்வொருவரிடமும் ஒப்படைக்கப்பட... கிராமத்தின் பெரியவர்களும் சிறியவர்களும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாகக் கண்களில் ஆனந்தக் கண்ணீர் ததும்ப நின்றனர்.
அவர்களில் ஒருவராக நம்மிடம் பேசிய ராமையா, ‘‘ ‘சிட்டிசன்’ படத்துல வர்ற அத்திப்பட்டி மாதிரிதான் எங்க ஊரு. இன்னும் கொஞ்சம் வருஷம் போனா ஊரே காணாமப் போயிடும்னுதான் நெனைச்சோம். மழை பெஞ்சா ரோட்டுல நடக்கக்கூட முடியாது. தேர்தலப்ப அரசியல்வாதிங்க ஓட்டுக் கேட்டு வருவாங்க. ‘உங்க குடிசைகளை கான்கிரீட் வீடுகளா மாத்தித் தர்றோம்’னு சொல்லிட்டுப் போவாங்க. ஆனா, அடுத்த அஞ்சு வருஷத்துக்குத் திரும்பிக்கூட பார்க்க மாட்டாங்க. ஆனாலும் 30, 40 வருஷமா அவங்க பேச்சை நம்பி நம்பி நாங்க ஏமாந்துக்கிட்டேதான் இருக்கோம்.
புயல் நேரத்துல ரொம்பவே கஷ்டப்பட்டோம். அந்த நேரத்துலகூட சரியான நிவாரணம் கிடைக்கலை. அப்படிப்பட்ட சூழல்லதான் ஆனந்த விகடனோட இந்த உதவி எங்களுக்குக் கிடைச்சுது. பாதிக்கப்பட்டிருக்கிற எங்களுக்கு ஆறுதல் சொல்றதுக்காக வீடு கட்டித்தர்றதா சொல்றாங்கன்னுதான் நெனச்சோம். அரசியல்வாதிங்கபோலவே, திரும்பி வரவே மாட்டாங்கன்னுதான் தோணுச்சு. ஆனா, எங்களோட அந்த எண்ணம் தவறுன்னு உணரவெச்சுட்டாங்க. எங்களோட அடுத்த தலைமுறை, எங்களை மாதிரி குடிசை வீட்டுக்குள்ள இருந்து கஷ்டப்படாம செஞ்சுட்டாங்க. எங்க தலைமுறையே ஆனந்த விகடன் வாசகர்களுக்கும், ஆனந்த விகடனுக்கும் நன்றிக்கடன் பட்டிருப்போம்’’ என்று ஒட்டுமொத்த மக்களின் சார்பாக கைகூப்பினார். கூடவே, அனைவரும் தங்கள் நன்றியை வெளிப்படுத்தினார்கள்.
திரூவாரூர் மாவட்டம், மாங்குடி அருகேயுள்ள பூசலாங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ராஜேந்திரன், மாற்றுத்திறனாளியான தன் தந்தையுடன் வசித்துவந்த குடிசை வீடு, கஜா புயலால் கடுமையாகச் சேதமடைந்த விஷயம் நம் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து, நேரடியாக ஆய்வு செய்த பிறகு, ராஜேந்திரனுக்கும் கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்க முடிவெடுக்கப்பட்டு, தற்போது பணி நிறைவடைந்து, அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
விகடனின் வேண்டுகோளை ஏற்று, ஓடோடி வந்து கைகோத்து நிதியை வழங்கிய வாசகர்கள் அனைவருக்கும் நன்றி. விகடனின் உதவிக்கரம், உங்களோடு சேர்ந்து தொடர்ந்து நீளும்!
க்ளிக் செய்யவும்: