Evening Post: மோடிக்கு காத்திருக்கும் சவால்கள்- காயத்ரி ரகுராம் விலகல் - Office Insurance போதுமா?

அமைச்சரவை மாற்றம் மட்டுமே மோடியை ஜெயிக்க வைத்துவிடுமா..? பாஜக-விலிருந்து விலகிய காயத்ரி ரகுராம்... பாமக: இளைஞரணியின் தலைவர் விலகலுக்கு என்ன காரணம்?, புரதச்சத்துக் குறைபாடு... மருத்துவ அலெர்ட்!,ஆபீஸ் இன்ஷூரன்ஸ் மட்டும் போதுமா?,Surya 42 Exclusive லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!

அமைச்சரவை மாற்றம் மட்டுமே போதுமா..?மோடிக்கு காத்திருக்கும் சவால்கள்..!
2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் வருகிற ஜனவரி 14 ஆம் தேதிக்குப் பின்னர் பாஜக மேலிடம் தீவிரப்படுத்த உள்ளது. இந்த நிலையில், அடுக்கடுக்காக காத்திருக்கும் பிரச்னைகளால், வளர்ச்சியை முன்னிறுத்தி பிரசாரம் செய்வதில் அக்கட்சி பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவையில் மாற்றம்
அண்மையில் நடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் கிடைத்த மகத்தான வெற்றியைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் நடைபெற்ற பாஜக பாராளுமன்ற கூட்டத்தில், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
* இதன் ஒரு பகுதியாக தற்போதைய மத்திய அமைச்சரவையில் உள்ள சில முக்கிய அமைச்சர்களை, அமைச்சரவையிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு ஏற்ற மாநிலங்களில் கட்சிப் பணிகளில் ஈடுபடுத்த அனுப்புவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
* கூடவே, சரிவர செயல்படாத அமைச்சர்களை நீக்கவும், பட்டியலின, பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையிலும் மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த அமைச்சரவை மாற்றமும், கட்சி பணிகளைத் தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் வருகிற ஜனவரி 14-ம் தேதிக்குப் பின்னர், அதாவது பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் மேற்கொள்ளப்படலாம் என டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள்
இந்த நடவடிக்கைகள் கட்சி ரீதியாக பாஜக-வுக்கு பலன் அளித்தாலும், மக்கள் செல்வாக்கை திரட்டுவதில் அது எந்த அளவுக்குப் பலன் அளிக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஏனெனில், " பாஜக-வின் தேர்தல் பிரசாரம் பெரும்பாலும் மதவாத மற்றும் தேசியவாத உணர்வுகளைத் தூண்டி ஓட்டுகளைப் பெறும் மலிவான தந்திரமாகவே உள்ளதே தவிர, வளர்ச்சிப் பணிகள், திட்டங்கள், வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி போன்றவற்றை முன்வைத்து செய்யும் பிரசாரமாக இல்லை" என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளிலும் உண்மை இல்லாமல் இல்லை.
இதற்கு உதாரணமாக கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி நளின் குமார் கட்டீல், நேற்று கட்சித் தொண்டர்களிடம் பேசுகையில், பொதுப் பிரச்னையில் கவனம் செலுத்தவேண்டாம் என்றும், லவ் ஜிஹாத் பிரச்னையில் கவனம் செலுத்துங்கள் என்றும் கூறியது சர்சையைக் கிளப்பியதை சுட்டிக்காட்டலாம்.
காத்திருக்கும் சவால்கள்...
இத்தகைய சூழலில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்றவை சாதகமாக இருப்பதாகவும், பணவீக்கம் குறைந்துவிடும் என்றும் பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பேசினாலும், 2023-ம் ஆண்டுக்கான தொடக்கம் அப்படி நம்பிக்கை அளிப்பதாக இல்லை என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், இடதுசாரி கட்சித்தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஏனெனில் கடந்த 2008 ஆம் ஆண்டில் பொருளாதார மந்தநிலையின் தாக்கம், அடுத்து வந்த 2009-ம் ஆண்டில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதேபோன்று 2020-ம் ஆண்டில் கொரோனாவால் ஏற்பட்ட தொழில் முடக்கம், வேலைவாய்ப்பின்மை போன்றவை 2021-ம் ஆண்டில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் 2022 -ல் ரஷ்யா - உக்ரைன் போரால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலக அளவில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தி, பொருளாதார சரிவுக்கு வித்திட்டுள்ளது.
இன்னொருபுறம் அமெரிக்க ஃபெடரல் வங்கி தொடர்ந்து கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதால்,
* டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்து வருகிறது.
கூடவே அன்னிய முதலீடுகளும் இந்திய சந்தைகளிலிருந்து வெளியேறி வருகின்றன.
* பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு ( The Organization for Economic Co-operation and Development - OECD) 2022-க்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 6.6 சதவீதத்திலிருந்து 5.7 சதவீதமாக குறைத்துள்ளது. ,
இத்தகைய சூழ்நிலையில்,
* இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2022-ம் ஆண்டு செப்டம்பர் காலாண்டில் 36.4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது நாட்டின் ஜிடிபி அளவில் 4.4% ஆகும்.
* அடுத்ததாக நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம், கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு 2022 டிசம்பரில் 8.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ( Centre for Monitoring Indian Economy -CMIE) தரவுகள் தெரிவிக்கின்றன.
* அதேபோன்று இந்திய பங்குச் சந்தையும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2022 டிசம்பரில் மிகப் பெரிய சரிவைச் சந்தித்துள்ளது.
2022 தொடக்கத்தில் இந்திய பங்குச் சந்தையின் போக்கு நன்றாக காணப்பட்டபோதிலும், ஆண்டின் இறுதி மிக மோசமான நிலைக்கு சென்றுவிட்டது.
இத்தகைய சூழ்நிலைகளில், கட்சி மற்றும் அமைச்சரவை மட்டத்தில் செய்யப்படும் மாற்றங்கள் மட்டுமே, 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு கைகொடுக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவந்துவிடும்.

பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம்... அண்ணாமலை மீது சரமாரி குற்றச்சாட்டு!
திமுக-விலிருந்து வெளியேறி பா.ஜ.க-வில் இணைந்த திருச்சி சூர்யா சிவா, தமிழக பா.ஜ.க-வின் சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கும் டெய்சி சரணை அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்துப் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் காயத்ரி ரகுராம் போட்ட ட்விட்டர் பதிவு, பாஜக தலைவர் அண்ணாமலையுடனான அவரது மோதலை அதிகப்படுத்தியது. இந்தச் சூழ்நிலையில், அவர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து, அண்ணாமலை மீதும் சரமாரியான குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார்.
இது குறித்த செய்தியை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...
பாமக: இளைஞரணியின் தலைவர் விலகலுக்கு என்ன காரணம்?
பாமக இளைஞரணி தலைவராக செயல்பட்டு வந்த தமிழ்குமரன் சமீபத்தில் தான் வகித்து வந்த பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இது தொடர்பாகக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்-க்கு அவர் எழுதிய கடிதத்தில், ``பாமக-வில் இளைஞரணி தலைவர் பொறுப்பை தாங்களே விரும்பி எனக்கு நியமனக் கடிதம் வழங்கினீர்கள். சில சூழ்நிலை காரணமாக இந்த பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்குமரன் விலகலுக்கு என்ன காரணம்? விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...

பண மதிப்பிழப்பு நடவடிக்கை தவறு... எதிர்ப்பு காட்டிய பெண் நீதிபதி; யார் இந்த நாகரத்னா?
பண மதிப்பிழப்பு சரியே என்ற கருத்தில் இருந்து நான் மாறுபடுகிறேன்’ என தன்னுடைய மாறுபட்ட கருத்தைத் தெரிவித்து அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறார் நீதிபதி பி.வி.நாகரத்னா.
இந்திய அளவில் கவனம் ஈர்த்திருக்கும் இந்த பெண் நீதிபதி பி.வி.நாகரத்னா யார்..? அவரது பின்னணி உள்ளிட்ட தகவல்களை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...

புரதச்சத்துக் குறைபாடு... மருத்துவ அலெர்ட்!
மனித வாழ்க்கையில் புரதச்சத்தின் பங்கு என்ன, அது குறையும்போது என்னவெல்லாம் நடக்கும்?
குறைபாட்டிலிருந்து மீளும் வழிகள் என அனைத்தையும் விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் மெடிசின் நிபுணர் ரம்யா.

மருத்துவக் காப்பீடு: ஆபீஸ் இன்ஷூரன்ஸ் மட்டும் போதுமா?
மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு... இவை இரண்டும் அத்தியாவசியமானவை. மருத்துவக் காப்பீட்டைப் பொறுத்தவரை சிலர், "எங்க ஆபீஸ்ல எனக்கு மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்காங்க" என்பார்கள். அது மட்டுமே போதுமா..?
இது பற்றி என்.விஜயகுமார், (நிர்வாக இயக்குநர், https://www.click4mf.com) சொல்லும் விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

Surya 42 Exclusive : `மிரள வைக்கிறார் சூர்யா' - படக்குழு சொல்லும் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!
சூர்யா இப்போது 'சிறுத்தை' சிவாவின் இயக்கத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் ஹிந்தி ரைட்ஸ் நூறு கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது.
சென்னை, கோவா ஆகிய இடங்களைத் தொடர்ந்து கடந்த டிசம்பரில் மீண்டும் சென்னை எண்ணூரில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு நாளை மீண்டும் ஆரம்பிக்கிறது.
இது குறித்து படக்குழுவிடம் விசாரித்ததில் கிடைத்த தகவல்களை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...