ஆனந்த விகடன் பொக்கிஷம்
கட்டுரைகள்
Published:Updated:

விகடன் பொக்கிஷம் : “நான் யாருக்கும் எதிரி இல்லை!”

குஷ்பு
பிரீமியம் ஸ்டோரி
News
குஷ்பு

8.11.2006 ஆனந்த விகடன் இதழில்

பெரியார் தன் இறுதிக்காலத்தில் வாழ்ந்த திருச்சி இல்லத்திலேயே படப்பிடிப்பு. பெரியாராக சத்யராஜ், கறுப்புச்சேலை உடுத்திய சுயமரியாதைச்சுடர் மணியம்மையாக குஷ்பு!

‘‘எமோஷனலா இருக்கு! ‘பெரியார்’ படத்தில் மணியம்மையா நடிக்கக் கிடைச்சிருக்க வாய்ப்பு, என் சினிமா வாழ்க்கையில் பெரிய பரிசு!’’ என்கிறார் குஷ்பு.

‘‘திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சார், ‘மணியம்மையார் கேரக்டருக்கு நீங்க ரொம்பப் பொருத்தமா இருப்பீங்க’ன்னு வாழ்த்தினார். பெரியார் பற்றி நிறைய புத்தகங்கள் தந்தார். பெரியாரின் அபூர்வமான புகைப்படங்களைக் காண்பித்தார்.

மணியம்மையைப் பற்றிப் படிச்சப்போ, அவங்க துணிச்சல் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. பெரியாரும் மணியம்மையும் பயத்தைத் தொலைத்த மனிதர்கள். அது எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். நானும் பயமில்லாத ஒரு பெண்ணாத்தான் வளர்ந்தேன். இன்னும் அப்படியே இருக்கேன். மணியம்மையா நடிப்பதால், இன்னும் உற்சாகமா இருக்கேன்!’’ என்கிறார் குஷ்பு பெருமிதமாக.

குஷ்பு
குஷ்பு

‘‘மணியம்மையார் வேடத்தில், நீங்கள் நடிப்பதற்கு எதிர்ப் புகள் வந்தனவே? இப்போதும் நீங்கள் நடிக்கிற காட்சிகளை தங்கர்பச்சான் ஒளிப்பதிவு செய்யவில்லையே?’’

‘‘மணியம்மையா நான் நடிச்சா நல்லா இருக்கும்னு டைரக்டர் நினைச்சார். கி.வீரமணி சாருக்கும் பிடிச்சிருந்தது. சத்யராஜுக்கும் சந்தோஷம். எனக்கு இதைவிட வேறு என்ன அங்கீகாரம் வேணும்?

வேலை பார்க்கிற இடத்தில் எல்லோரும் நண்பர்களா இருக்கணும்னு அவசியம் இல்லை. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டேஸ்ட், கருத்து இருக்கும். வேலை சரியா நடக்கணும், அவ்வளவுதான்! என்னைப் பொறுத்தவரை இது முக்கியமான வரலாற்றுப் படம். அப்புறம், நான் ஒரு நடிகை, இது ஒரு சினிமா... அவ்வளவுதான்! தங்கர்பச்சான் என் காட்சிகளை ஒளிப்பதிவு பண்ணாமல் போனது, அவரோட தனிப்பட்ட விஷயம். கடந்தகாலத்தில் நடந்த கசப்பான அனுபவங்கள் எதுவும் இப்போ என் மனசில் இல்லை. எனக்கு எதிரின்னு யாரும் இல்லை. நான் சந்தோஷமா இருக்கேன்.

எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. நான் மும்பையில், ஒரு இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவள். ஒரு பெண்ணா, நிறைய பிரச்னைகளைச் சந்திச்சிருக்கேன். சில சம்பவங்களையும் கொடுமைகளையும் பார்த்த பிறகு, கடவுள் நம்பிக்கையைச் சுத்தமா விட்டுட் டேன். அது என்னோட புரிதல். ஆனால், சுந்தர் வாராவாரம் வியாழக்கிழமை விரதம் இருக்கும் முருக பக்தர். அது அவரின் நம்பிக்கை. ரெண்டு பேரும் அவங்கவங்க நம்பிக்கைகளுடன் சந்தோ ஷமா இருக்கோம். அந்த ஸ்பேஸ் எல்லோருக்கும் வேணும்!’’ என்றார் குஷ்பு.

- டி.அருள்எழிலன் படம்: ‘தேனி’ ஈஸ்வர்