
04.05.2003 ஆனந்த விகடன் இதழில்
``அழகிரி அண்ணே! தம்பி ஸ்டாலினுடன் சின்ன வயசில் நீங்க எப்படி?’’

“கேள்வி புரியுது. கூடவே நீங்க கேட்கிற அர்த்தமும் புரியுது. எனக்கும் ஸ்டாலினுக்கும் இருக்கும் போட்டி, தி.மு.க என்னும் கட்சியை வளர்ப்பதில் மட்டும்தான். அது ஆரோக்கியமானது.
ஆனா சின்ன வயதில் எங்களுக்குள் பல போட்டிகள் இருந்தன. அதுல முக்கியமானது, ‘யார் சரியாகப் படிக்காமல் இருக்கிறோம்’ என்பதில்தான்! காரணம், அப்போதே எங்களுக்கு அரசியலில் ஆர்வம்.அப்புறம் கோலி, கில்லிதாண்டு, கிரிக்கெட், கேரம் போன்ற விளையாட்டுகளிலும் எங்களுக்குப் போட்டி உண்டு. நானும் ஸ்டாலினும் எதிரெதிர் அணியில் இருந்தால் கேட்கவே வேண்டாம்.
சின்ன வயசில் சாப்பாட்டு விஷயத்தில் நானும் அவரும் (ஸ்டாலின்) இரண்டு துருவங்கள். அவரோ சைவப்பிரியர். நான் அசைவம்னா வெளுத்துக்கட்டுவேன். இதனாலேயே சாப்பிடும் நேரங்களில் எல்லாம் என்னுடைய தட்டை கையில் எடுத்துக்கொண்டு தனியே தள்ளிப்போய் உட்கார்ந்து சாப்பிடுவேன். நம்மால அவருக்கு சங்கடம் வேணாம்னுதான்!”
``ஆதாரங்களைத் திரட்டுவது என்பது உங்கள் உடன்பிறந்த குணமா சுப்பிரமணியம் சுவாமிகளே?’’

``ஆமா, சின்ன வயசுல இருந்தே நான் ஆதாரம் இல்லாமல் எதையும் சொல்லமாட்டேன். அப்போ எனக்கு ஏழு வயசு இருக்கும். ஸ்கூல்ல டீச்சர் கணக்கு ஈக்குவேஷனை தப்பாப் போட்டுட்டாங்க. நான் உடனே சரியான ஈக்குவேஷனுக்குத் தேவையான ஆதாரங்களை சேகரித்து எடுத்துச் சொன்னேன். அவங்களால அதை மறுக்க முடியலை.அப்புறம் அமெரிக்காவில் பால்சாமுவேல்னு ஒரு பெரிய பேராசிரியர். அவரு ஆராய்ச்சியில செஞ்ச ஒரு தப்பைக்கூட நான் ஆதாரத்துடன் நிரூபித்துவிட்டேன். உடனே அவர் தன் ஆராய்ச்சியில என்னையும் சேர்த்துக்கிட்டாரு.”
``ஓ. பன்னீர்செல்வம் சாரே! இந்தப் பணிவு அப்பவே வந்துருச்சா?’’

“என்னுடைய அடக்கம் பணிவு குறித்து யார் என்ன பேசினாலும் நான் கவலைப்பட்டது கிடையாது. பணிவு என்பது என் கூடப்பிறந்த இயல்பு. இன்று நேற்றல்ல, சின்ன வயசு முதற்கொண்டே இப்படித்தான். இந்தப் பணிவால் நான் இழந்தது எதுவும் இல்லை. சேர்த்ததுதான் அதிகம்.
பள்ளி நாட்களில் என் பணிவை எல்லோரும் ஆச்சரியமாகத்தான் பார்ப்பார்கள். அடக்கம் இல்லாமல், கோபமோ வெறுப்போ கொண்டு அலைந்தால் உடலும் உள்ளமும்தான் சோர்வு அடையும்.”
2.12.2020 ஆனந்த விகடன் இதழில், பொக்கிஷம் பகுதியில் 'புலிக்குப் பிடித்த சிங்கம்' என்ற கட்டுரை இடம் பெற்றிருந்தது. அதில், 'பிரபாகரனுக்கு திருக்கோயிலூர் கோயிலில் திருமணம் நடந்தது' என்று தவறாக இடம்பெற்றுவிட்டது. திருப்போரூர் கோயில் என்பதே சரி!