
தொகுப்பு: எஸ்.சுபா
26.10.1997 ஆனந்த விகடன் இதழில்..
ஒரு பிஸியான கிளினிக் போல இருக்கிறது ரஜினியின் சிம்பிளான வீடு. ஹாலில் மையமாக டேபிள் போட்டு, சேரின் நுனியில் அமர்ந்தவாறு ஏதோ ஃபைலை புரட்டிக் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருக்கும் லதா ரஜினிகாந்த், இன்ஸ்டன்ட் புன்னகையுடன் நம்மை வரவேற்று எதிர்ப்புறத்தில் உள்ள சோபாவைக் காட்ட... அமர்கிறோம். ஓர் உதவியாளர் காதருகே மெல்லிய குரலில், ‘‘சார் ரெடியா இருக்காரு’’ என்கிறார். பக்கத்து அறைக்குள் நுழைந்தால் ரஜினி! பளிச்சென்று எழுந்து வந்து உற்சாகமான புன்னகையுடன் கைகுலுக்கி, ‘‘ஹலோ, வாங்க மதன்! ப்ளீஸ் ஸிட்’’ என்கிறார் சூப்பர் ஸ்டார். ‘வள்ளி’ பட தாடி இல்லை. அழுத்தமான ஷேவ் செய்யப்பட்ட முகம், வெள்ளை குர்தா, பைஜாமா, பெருக்கல் படைகளோடு வெண்மையான காலணிகள். அழகான ஒரு சிரிப்புடன் சிகரெட் கேஸிலிருந்து சிகரெட் எடுத்து அதை உயரத்தூக்கி எல்லாம் போட்டுப் பிடிக்காமல், நிதானமாகவே ஒரு ஹோல்டரில் பொருத்திப் பற்றவைத்துக்கொண்டு ரஜினி தயாரானார். பேட்டி ஆரம்பமானது...

மதன்: வள்ளி படம் மூலமா உங்கள் அரசியல் கண்ணோட்டத்தை சொல்லப் போறதா முன்பு சொன்னீங்க.. ஒருவேளை படத்துல வர நல்ல முதலமைச்சர் மாதிரி நீங்க...?!
ரஜினி: இப்படியெல்லாம் என் ரசிகர்கள் வெறியா எதிர்பார்க்கிறாங்கன்னு எனக்குத் தெரியும். ஆனால், எனக்கு அரசியலுக்கு வர விருப்பமில்லே. காரணம் யார் எங்கே முதல்வரா வந்து உட்கார்ந்தாலும் எதுவும் பண்ண முடியாது. நல்லது நடக்காது. நடக்க விடமாட்டாங்க! இந்த நிலைமையில புரட்சி வர்றதுதான் ஒரே வழி! மகாத்மா மாதிரி இன்னொரு தலைவரை இந்த தேசம் பார்க்கணும்! அப்பத்தான் சரிப்படும்!”
மதன்: ஏன், தற்போது இருக்கிற அரசியல் சூழல் சரியில்லைங்கறீங்களா?
ரஜினி: “ஆமாம். இப்போ அரசியல் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கு. இதுக்கு மருந்து, மாத்திரையெல்லாம் பத்தாது. அறுவை சிகிச்சைதான் ஒரே வழி! இந்திய அரசியலமைப்பு மொத்தமாக மாறணும். அது மாறினாலேயொழிய மாநில அளவில் எதுவும் செய்ய முடியாது! பெரிய விஷயம் இது. அதை மாற்றி அமைக்கிறது என் கையில் இல்லை.”

மதன்: உங்களுக்குப் பிடித்த திருப்திகரமான அமைப்பு இல்லேங்கறதாலே நீங்க நுழைய விருப்பப்படலே. ஆனாலும் அதே சமயம் அமைப்பு மாறணும்னு தீவிரமா நினைக்கிறீங்க. நான் கொச்சைப்படுத்திப் பேசறதா நினைக்கக்கூடாது. உங்களுடையது கொஞ்சம் அப்பாவித்தனமான ஆசையா இருக்கே?
ரஜினி: “இருக்கலாம்... ஆனால் அரசியலமைப்பு மாறினாலேயொழிய எந்த பிரயோஜனமும் இல்லை. இருக்கிற அமைப்புப்படி யார் வேணாலும் எம்.எல்.ஏ ஆகலாம். எம்.பி ஆகலாம். நம்மை ஆளலாம்... இது சரியில்லே!”
மதன்: அரசியல் மாற்றம் எந்த விதத்தில் நடக்கணும்னு எதிர்பார்க்கிறீங்க?!
ரஜினி: “நமக்கு ஒரு டிக்டேட்டர் வேணும். அவர் நல்லவரா, பொது நலத்துக்குப் பாடுபடறவரா இருக்கிறது ரொம்ப முக்கியம்! மாநில அரசுகளுக்கு எவ்வளவு கம்மியான அதிகாரம் இருக்குன்னு உங்களுக்கே தெரியும். நல்லது செய்ய நினைச்சாலும் செய்ய விட மாட்டாங்கன்னும் தெரியும். இந்த நிலைமையில, முதலில் டிஸிப்ளினுக்கு ஒரே வழி எமர்ஜென்சி தான். நாடு மொத்தமும் முழுமையான எமர்ஜென்சி கொண்டு வந்துடணும். அப்படியொரு அவசர நிலை பிரகடனம் உருவாகணும்னா, மத்தியில் முழுமையான மெஜாரிட்டி இருக்கணும். முழுமையான மெஜாரிட்டி பலத்தோட உட்கார்ந்து கோலோச்சுற அந்தத் தலைவர் அசாத்திய மூளைத்திறன் கொண்டவராக இருக்கணும். மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படற நிஜமான தலைவரா அவர் இருக்கறது அவசியம். இதெல்லாம் நடந்தாதான் இந்த நாடு உருப்படும்!”
மதன்: அப்படி ஒரு நிலை வந்தால், நீங்க நேரடியா அரசியல்லே சேருவீங்களா?
ரஜினி: “சத்தியமா! அப்படி ஒரு நிஜமான தலைவர்கிட்ட இந்த நாட்டோட அதிகாரம் போனால், நான்தான் அவருக்கு ஆதரவு தரும் முதல் ஆளாக இருப்பேன். அப்போது யாரும் கூப்பிடாமலே தாராளமா அரசியலுக்கு வர நான் தயார். அதுவரைக்கும் இப்படி மாநில அரசியலுக்கெல்லாம் என் பெயரை வீணாக இழுக்காதீங்கன்னுதான் கேட்டுக்கறேன்.”

மதன்: ஒரு கட்டத்தில் படிச்சவங்க எல்லாம் அரசியலுக்கு வந்தால் அரசியல் சுத்தப்படும்னாங்க.. இப்ப படிச்சவங்க எவ்வளவோ பேர் அரசியல்லே இல்லியா என்ன? ஆனால் அப்படி எதுவும் சுத்தம் நிகழ்ந்ததா தெரியலே! உங்களுடையது வேற மாதிரியான ஆசையா இருக்கு!
ரஜினி: “படிச்சவங்க வந்தாலும் மாத்த முடியாது சார். இங்கே அரசியலை ரொம்ப கெடுத்து வச்சிருக்காங்க. சோடா பாட்டிலும், சைக்கிள் செயினும்தான் இங்கே அரசியல். படிச்சவங்க வந்தாலும் அந்த சாக்கடைக்குள்ளேதான் போயாகணும். இல்லேன்னா குப்பை கொட்ட முடியாது. அரசியல்வாதியோட வாழவும் முடியாது. அது ஒரு மோசமான வட்டம். Vicious Circle உள்ளே போயிட்டா ஒழுங்கா வெளியே வரமுடியாது. வேஷம் போட்டுத்தான் ஆகணும். இதுதான் அரசியலைப் பத்தின என் பார்வை. பிரிட்டிஷ்காரங்க இந்த நாட்டை ஆண்டபோது அவங்க உருவாக்கி வெச்சிட்டுப் போன அரசியல் சட்டங்களைத்தான் நாம இன்னிக்கும் பின்பற்றிக்கிட்டிருக்கோம். காலத்துக்கு ஏத்த மாதிரி தங்கள் நாட்டுச் சட்டங்களை அவங்க எவ்வளவோ மாத்திட்டாங்க. ஆனால் நாம அந்தப் பழமையான சட்டங்களையே பிடிச்சுத் தொங்கிக்கிட்டிருக்கோம். அரசியல்வாதியை மாத்திரமில்லே. இங்குள்ள அரசு அதிகாரிகள் போக்கை, Bureaucracy-யை மாத்த வேண்டியிருக்கு. எல்லாத்துக்கும் ஏற்றபடி அரசியல் சட்டங்களையே மாத்தறதுதான் ஒரே வழி.”
மதன்: எல்லோரும் ஏற்கிற தலைவர் வரணும்ங்றீங்க. அது எப்படி சாத்தியம்?!
ரஜினி: “எந்த ஆளும்கட்சிக்கும் பிரச்னைகள் இருக்கும்தான். இருந்தாலும் அதையெல்லாம் மீறி எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிற உறுதியான தலைவர் லீட் பண்ணணும். உதாரணத்துக்கு இந்திரா காந்தி மாதிரி! இன்னும் சொல்லப்போனால் சஞ்சய் காந்தி மாதிரியான தலைவர்கள் நம் நாட்டுக்குத் தேவை. ஆரம்பத்தில் அவர் சில தவறுகள் செய்திருக்கலாம். இருந்தாலும் அவர் பிரமாதமா வந்திருக்க வேண்டியவர். துரதிர்ஷ்டவசமாக நாம் அவரை இளம் வயதிலேயே இழந்துவிட்டோம்.”
மதன்: காந்திஜி மாதிரியான நல்ல உள்ளம் கொண்ட, அதே சமயம் சஞ்சய் காந்தி மாதிரியான இளமையும், அதிகாரத் துடிப்பும் அந்தத் தலைவரிடத்தில் இருக்கணும்னு ஆசைப்படுறீங்க.... அப்படித்தானே!
ரஜினி: “எக்ஸாக்ட்லி! ஒண்ணு சொல்லட்டுமா?! உலகத்தோட 60 சதவிகித இடத்தை சுற்றிப் பார்த்திருக்கேன். எத்தனையோ நாடுகள் போயிருக்கேன். அங்கே எல்லாம் இல்லாத மன அமைதி இந்த மண்ணில்தான் இருக்கு. இந்தியாவில் இருப்பது போன்ற அமைதியான சூழல் வேற எங்கேயும் கிடையாதுன்னு அடிச்சுச் சொல்லுவேன்! நம்ம நாட்டின் ஒரே குறை பணம் இல்லாதது. அது மட்டும் இருந்தால் போதும். ஆனால் அது ஜனங்களுக்குக் கிடைக்க முடியாமல் இங்கே அரசியல்வாதிங்க நாசப்படுத்தி வெச்சிருக்காங்க. அதனாலதான் மறுபடி சொல்றேன்... புரட்சி வெடிக்கணும், எமர்ஜென்ஸி வரணும்.”
மதன்: ஓகே. அப்படி ஓர் அரசியல் மாற்றம் நிகழ்ந்தால் நீங்கள் உடனடியாக எதிர்பார்க்கிறது எதை?!
ரஜினி: “வேலையில்லாத் திண்டாட்டம் முற்றிலும் தீரணும். இதுதான் மாற்றத்தின் முதல் கட்டமாக இருக்கணும். இன்னிக்கு இந்தியாவில் ஏராளமான நிலம் நீச்சு இருந்தாலும் அதெல்லாம் யார்கிட்ட இருக்கு?! பணக்காரங்ககிட்டேயும் தொழிலதிபர்கள்கிட்டேயும்தான் இருக்கு. அவங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தாராளமா நடக்குது!
இதை அடியோட மாத்தற விதத்துல இந்தியாவின் மொத்த நிலத்தையும் குடிமக்களோட எண்ணிக்கைக்குத் தகுந்தமாதிரி பிரிச்சுடணும். அவன் பணக்காரனா, ஏழையா, வயசானவனா, இளைஞனான்னு பாகுபாடே பார்க்கக்கூடாது. எல்லோருக்கும் சம அளவு நிலம்தான். நிலத்தை விளையச்செய்வது அரசாங்கக் கட்டளைன்னு வந்துவிட்டால் எத்தனை லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். எத்தனை லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் உருப்படியாகி உபயோகப்படும்னு யோசிச்சுப் பாருங்க.”
மதன்: இது ஒருவிதத்தில கம்யூனிஸ சிந்தனையா இருக்கே?
ரஜினி: “ஒரு கோணத்திலே பார்த்தால் அப்படித் தெரியலாம்தான்! ஆனால் நான் எதிர்பார்க்கிறது முழு கம்யூனிஸம் இல்லே. நம் நாட்டுக்குத் தேவையான புதுத் திட்டம், புதிய அணுகுமுறை!”
*******
சுகி - பிரபஞ்சன்.
26.10.1997 ஆனந்த விகடன் இதழில்

மனித குலத்தின் மாண்பு, மானுட நேயம் ஆகியவற்றைத் தன் எழுத்துகளில் தொடர்ந்து பதிவு செய்துவந்தவர் எழுத்தாளர் பிரபஞ்சன். ஆண் சமூகம், பெண்ணினத்தின் மீது ஆண்டாண்டுக்காலமாக நிகழ்த்திவரும் ஆதிக்கம், வன்முறை குறித்த ஆறாத் துயரம் அவர் மனத்தில் அழுத்தமாகப் படிந்திருந்தது. அதை அவர் அடிக்கடி தனது கதைகளில் வெளிப்படுத்தியும் வந்துள்ளார். ‘தனது வலிமையை உணராத யானை சிறு குச்சிக்கும் சின்ன சங்கிலிக்கும் பயப்படுவதுபோல, பெண்களும் தங்களின் சக்தியை உணராதவர்களாக இருக்கிறார்கள்’ என்று எழுதியவர் பிரபஞ்சன்.
இவர் சில காலம் ஆனந்த விகடன் பத்திரிகையிலும் பணிபுரிந்துள்ளார். `காதலெனும் ஏணியிலே', `கனவுகளைத் தின்போம்' என விகடனில் தொடர்கதைகளும் எழுதியிருக்கிறார். 26.10.1997 ஆனந்த விகடன் இதழில், பிரபஞ்சன் எழுதிய ‘சுகி’ சிறுகதை வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
“வியர்வையால் தெப்பலாக நனைந்துவிட்டாள் ப்ரீதி. அவள் பிரமை உச்சியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. அவளுக்கு எதையும் எல்லாவற்றையும் உடைக்க வேண்டும்போல இருந்தது. குடம் உடைத்துக்கொண்டதுபோல வெறியும் கிளர்ச்சியும் உடம்பு முழுக்கவும் பற்றிப் பரவி எரிந்தது. இரவு ஆடை அந்தத் தீயில் புகையும் என்று அவள் பயந்தாள். அதைக் கழற்றி வீசினாள்.கொஞ்சம் கொஞ்சமாக அந்த சத்தம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. தட்... தட்....கூடவே அழைப்புமணி வேறு. கண்ணை சிரமப்பட்டுத் திறந்தாள் ப்ரீதி. தெருக்கதவைத் திறந்தாள்.”
கதையை முழுமையாக வாசிக்க: http://bit.ly/AVPS06