சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

விகடன் பிரஸ்மீட்: “சிவாஜியின் சாதனைகளை நான் முறியடிக்கவில்லை!”

Atlee, kamal, vijay
பிரீமியம் ஸ்டோரி
News
Atlee, kamal, vijay

விகடன் பிரஸ்மீட்டில் கமல்! #VikatanPressMeet: விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது.

‘`சினிமாவில் முன்வைக்கப்பட்ட மீ டூ குற்றச்சாட்டுகள் குறித்து உங்கள் கருத்து என்ன. அந்தக் குற்றச்சாட்டுகள் தமிழ் சினிமாவில் எழுப்பப்பட்டபோது சரியான தாக்கத்தை ஏற்படுத்தவில்லையே?’’

- ஐஷ்வர்யா

“ஒவ்வொரு கலாசாரத்திலும் ஒவ்வொரு மாதிரியான தாக்கம் இருக்கும். அமெரிக்காவில் தொடங்கிய ஹிப்பி மூவ்மென்ட் இங்கே வேர் பிடிக்கவில்லை. அதையும் இதையும் ஒன்றாகச் சொல்கிறீர்களா எனச் சொல்லக்கூடாது. ஹிப்பி மூவ்மென்ட்டினால் ஏற்பட்ட நல்ல தத்துவங்கள் எவையும் இங்கே வந்தடையவில்லை. ஆனால், நல்ல இசை கிடைத்தது. விஷயத்தைப் பொறுத்து ஒவ்வொரு கலாசாரத்திலும் அது வெவ்வேறுவிதமாக ஏற்றுக்கொள்ளப்படும். இந்தியாவில் எல்லாத் தவறுகளையும் கடவுள் வந்து மாற்றுவார் என்கிற நம்பிக்கை உண்டு. அதனால் ‘மீ டூ’ இயக்கம் உடனடி நீதி கேட்டதால் பழைமைவாதிகள் அதைக் கண்டுகொள்ளாமல் போயிருக்கலாம். ஆனால், நியாயம், நேர்மையை நம்புபவர்கள், தாயை, தமக்கையை மதிப்பவர்கள் குரல்கொடுத்தார்கள். அதில் நானும் ஒருவன்.’’

“ரஜினி அரசியலுக்கு வருவதாக 20 வருடங்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால், அவருக்கு முன்பாக நீங்கள் கட்சி ஆரம்பித்துவிட்டீர்கள். நீங்கள் கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொன்னபோது ரஜினி உங்களிடம் என்ன சொன்னார்?’’

- கதிரவன்

“அவர் 20 வருடமாகச் சொல்கிறாரா, 30 வருடமாகச் சொல்கிறாரா என்பது முக்கியமல்ல. நானும் 30 வருடமாகப் பேசிக்கொண்டிருக்கிறேன். வந்துவிட்டேன் என்கிற சந்தோஷம் எனக்கு இருக்கிறது. அவர் வருவார் என்கிற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. ரஜினி சொல்லிக்கொண்டே இருக்கிறார் என்று சொல்வது, அவர் வரவேண்டாம் என்று நினைப்பவர்கள் செய்கிற விமர்சனம். மக்கள் அவரை விரும்புகிறார்கள். அவரும் மக்களை விரும்புகிறார். அதனால் அவர் வந்தாக வேண்டும். அவரை வரவேற்கிறது மக்கள் நீதி மய்யம்.

விகடன் பிரஸ்மீட்:  “சிவாஜியின் சாதனைகளை நான் முறியடிக்கவில்லை!”

நான் கட்சி ஆரம்பிக்கிறேன் என்று முடிவெடுத்தவுடனேயே தனியாக அவரைச் சந்தித்தேன். இரண்டு பேரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டோம். பல கேள்விகளை எங்களுக்குள் கேட்டுக்கொண்டோம். ‘எப்போ எடுத்தீங்க இந்த முடிவை’ என அவர் என்னிடம் கேட்டார். ‘இப்போதைய அரசியல் சூழல் மோசமாக இருப்பதால் வந்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது’ என்று பேசினோம். இப்படித்தான் எங்கள் உரையாடல் இருந்தது.’’

“பிக்பாஸ் நிகழ்ச்சி, விளம்பரங்களில் நடிப்பது... இவையெல்லாமே பொருளாதாரச் சூழலைச் சமாளிப்பதற்காகவே நீங்கள் செய்வதாகச் சொல்கிறார்கள். நீங்கள் பெரிய கடனில் இருப்பதாகவும் சொல்லப்படுவதுண்டு. உண்மைதானா?’’

- பழனியப்பன்

“இது புதிய செய்தி இல்லை. அந்தக் கடன்களையெல்லாம் நான் ஒழுங்காகக் கட்டியிருக்கிறேன் என்பதும் பழைய செய்தி. ‘ராஜபார்வை’ எடுத்த காலத்திலிருந்தே நான் கடனில்தான் இருக்கிறேன். ஒருவேளை கடனே இல்லாமல் சொத்து மட்டும் சேர்த்திருந்தால் நான் சினிமாவைவிட்டே போயிருப்பேன். நான் சினிமாவின் ரசிகன். ஏன் சினிமாவில் மட்டுமே பணத்தைப் போடுகிறேன் என்று இனிமேலும் என்னிடம் கேட்கமுடியாது. மக்களை நோக்கியும் அதைச் செய்கிறேன். தேர்தல் நேரத்தில் மூட்டை மூட்டையாகக் கொண்டுபோய்க் கொடுப்பதில் எனக்கு இஷ்டம் இல்லை. அரசியல் தொழிலாக இருக்கக் கூடாது. அரசியல் கடமையாக இருக்க வேண்டும். அதனால் என் தொழில் தொடர்கிறது. இல்லையென்றால் கட்சிக்காகப் பெரும்பணக்காரர்களிடம் நான் உதவி கேட்கவேண்டியிருக்கும். நான் சம்பாதித்து, நான் சாப்பிட்டு மக்களுக்கும் உதவிசெய்ய வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.’’

விகடன் பிரஸ்மீட்:  “சிவாஜியின் சாதனைகளை நான் முறியடிக்கவில்லை!”

“உங்களை மிகவும் பாதித்த நூல் பூணூல் என்று ஒருமுறை ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தீர்கள். பூணூலால் நீங்கள் எப்படி பாதிக்கப்பட்டீர்கள் என்று சொல்ல முடியுமா?’’

- வைதேகி

“பாதிப்பு என்பது ரத்தம் சொட்டச்சொட்ட ஏற்படும் பாதிப்பு அல்ல. உங்களை மாற்றியமைக்கும் விஷயங்கள்கூட பாதிப்புதான். 11 வயதில் எனக்குப் பூணூல் அணியவேண்டும் என்று முடிவெடுத்தபோது, அதை நான் மறுத்தேன். அப்போது என்னை வற்புறுத்தாமல் என்னுடன் விவாதித்த என் தகப்பனாருக்கு நன்றி செலுத்த வேண்டும். ‘சரி வேண்டாம்’ என என்னை என்போக்கில் விட்டுவிடுவது என என் தந்தையார் எடுத்த முடிவு என்னை பாதித்தது. போடாத பூணூலும் என்னை மிகவும் பாதித்திருக்கிறது. இதை ஏதோ பார்ப்பனர்களைத் திட்டுவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. என் தந்தை பூணூல் போட்டவர்தான். ஆனால் இனி பூணூல் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்.’’

“ ‘மெர்சல்’ ரிலீஸான நேரத்தில் அட்லி உங்களைப் பார்க்கவந்தபோது பின்னால் ‘அபூர்வ சகோதரர்கள்’ படம் இருந்தது. கல்வி தொடர்பான வீடியோக்களில் காமராஜரின் படம், வேறொன்றில் கலாம் படம் என வெவ்வேறு சமயங்களில் ஆளுமைகளைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். உங்களின் ஆதர்சம் யார் என்னும் குழப்பம் மக்களுக்கு வராதா?’’

- கார்க்கிபவா

“நீங்கள் சொன்னதில் அந்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படம் மட்டும் விபத்து. தலைவர்களின் படங்களை நான் பயன்படுத்துவதில் மக்களுக்குக் குழப்பம் வராது என நினைக்கிறேன். எல்லோரும் படிக்க வேண்டும் என காமராஜர் சொன்ன விஷயம் எனக்குப் பிடித்திருக்கிறது. எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என அம்பேத்கர் சொன்னதும் எனக்குப் பிடித்திருக்கிறது. யாரையும் களையவேண்டிய அவசியமில்லை என எண்ணு கிறேன். மய்யத்தின் நிலைப்பாடும் அதுவே. மக்கள் நலனைவிட கொள்கை முக்கியமில்லைஎன நினைப்பது தான் மய்யம்.”

“கருணாநிதி இருந்த தி.மு.க - கருணாநிதி இல்லாத தி.மு.க, ஜெயலலிதா இருந்த அ.தி.மு.க - ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க. என்ன வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்?’’

- சேவியர் செல்வக்குமார்

“தெய்வம் பார்த்த இடத்தில் தெய்வம் இல்லையென்றால் அங்கே அர்ச்சனை கிடையாது. மனிதனைப் பார்த்த இடத்தில் அந்த மனிதன் இல்லையென்றால் அது வீடே கிடையாது. அதற்கு நிகரான ஒரு மனிதர் அங்கே வந்து உட்கார்ந்துவிட்டால் எல்லோரும் அண்ணாந்து பார்த்துவிட்டுப் போகப்போகிறார்கள். அவ்வளவுதான். என் அப்பாவின் கோட்டை எடுத்துப் போட்டுக்கொண்டால் நான் வக்கீல் ஆகிவிட முடியாது. சட்டம் படித்திருக்க வேண்டும்.’’

“சமீபகாலமாக காந்தியின் அடையாளம் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்? காந்தி, அம்பேத்கர், பெரியார் - இவர்களுக்கிடையிலான முரண்பாடுகள், ஒன்றுபடும்புள்ளிகள் குறித்து உங்கள் கருத்து?”

- சுகுணா திவாகர்

“அந்த முரண்பாடுகளின் மூட்டைதான் இந்த தேசமே. அந்த முரண்பாடுகள் இருந்தாக வேண்டும். காந்தியைப் பற்றிப் பேச அனுமதிக்கப்படாதபோது அதைப் புத்தகமாக எழுதியவர் அம்பேத்கர். மிகவும் அழுத்தமான காந்தி எதிர்ப்புக்குரல்களை எழுதினார். ஆனால் ‘சட்டம் இயற்றப்போகிறோம். அதில் உங்கள் பங்கு இருக்க வேண்டும்’ என்று காந்தி சொன்னபோது அதை ஏற்றுக்கொண்டவர் அம்பேத்கர். தேசம் என்று வந்தபோது முரண்களையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு ஒன்றாகச் சேர்ந்தார்கள். பெரியாருக்கும் அது பொருந்தும். காந்தி இறந்தபோது, இந்த நாட்டுக்கு ‘காந்தி நாடு’ என்று பெயர் சூட்டவேண்டும் என்று எழுதியிருக்கிறார் பெரியார்.

விகடன் பிரஸ்மீட்:  “சிவாஜியின் சாதனைகளை நான் முறியடிக்கவில்லை!”

காந்தியின் அடையாளம் அச்சுறுத்தப்படுவதைப் பற்றிக் கேட்டீர்கள். சரித்திரத்தை மாற்றிச்சொல்ல முற்படுவது பல நாடுகளிலும் நடப்பதுதான். சமீபத்தில் காந்தியின் சாம்பலை எடுத்துத் தெருவில் கொட்டினார்கள். காந்தியை சாம்பாலாக்கியிருக்கவே கூடாது. வாழும் நாள் வரை காந்தி வாழ்ந்துவிட்டு செத்திருக்க வேண்டும். அவசரப்பட்டு அவரைச் சாம்பலாக்கியவர்களின் சாம்பல் இன்றும் பாதுகாக்கப்பட்டுவருகிறது. அதன் பாதுகாவலர்கள் நாங்களும்தான். காந்தியின் பேரன்களும் சேர்ந்துதான் நாக்பூரில் உள்ள அந்த சாம்பலுக்கு எந்தக் குந்தகமும் வந்துவிடக்கூடாது எனப் பாதுகாக்கிறோம். அது பாதுகாக்கப்படுவது எங்கள் பண்பினால்.’’

“உங்கள் படங்களைப் பார்த்ததில்லை என்று ஸ்ருதி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ஸ்ருதியிடம் சினிமா தொடர்பாக என்ன பேசுவீர்கள்?”

- கார்த்தி

“சமயங்களில் பழையதைக் காட்டி அடுத்த தலைமுறையை கன்வின்ஸ் செய்ய முடியாது. எங்கப்பா எனக்கு தியாகராஜ பாவதர் படத்தைப் போட்டுக்காட்டி ‘எப்படியிருக்கு’ என்பார். எனக்கு அந்தக் காட்சிகள் அவ்வளவு உவப்பாக இருந்ததில்லை. என் காலத்துக்கான கலரில் படங்கள் பார்க்கத்தான் எனக்குப் பிடிக்கும்.

பழைய படங்களைப் பார்க்கும்போது, தப்பான விஷயங்களைப் பற்றி மட்டுமே கேட்டுக்கொண்டு இருந்தார் ஸ்ருதி. ஒருகட்டத்தில் அவற்றைப் பார்க்க வேண்டாம் என நானே சொல்லிவிட்டேன்.

‘தேவர் மகன்’ பார்த்தபிறகுதான் ஸ்ருதிக்கு சிவாஜி எவ்வளவு பெரிய நடிகர் என்பது புரிந்தது. கண்கலங்கினார் ஸ்ருதி. ‘உலக சினிமா எல்லாம் பாருங்கன்’னு ஸ்ருதிக்கு சொல்லியிருக்கேன். அவங்க பார்த்த படங்களில் தமிழ் சினிமாவும் இருந்துவிட்டால், தமிழ் சினிமா முன்னேறியதாக எடுத்துக்கொள்கிறேன். ஆனால், தமிழ் சினிமா அதை நோக்கித்தான் நகர்ந்துகொண்டிருக்கிறது. அந்தத் தேரை அத்திசை நோக்கி நகர்த்தியதில் நானும் பங்குபெற்றிருக்கிறேன் என்னும் பெருமை எனக்குண்டு.”

விகடன் டீம்
விகடன் டீம்

“சிவாஜியின் ‘நவராத்திரி’யை ‘தசாவதாரம்’ மூலம் முறியடித்தீர்கள். ‘பேசும் படம்’, ‘அபூர்வ சகோதரர்கள்’ என்று எத்தனையோ சாதனைகள் செய்திருக்கிறீர்கள். கமலால் முறியடிக்கப்படாத அல்லது நிறைவேறாத சாதனை எது?”

- எஸ்.கதிரேசன்

‘`சிவாஜி சாரின் நீட்சிதான் நான். என்னுடைய கனவுகளை அரங்கேற்றப்போகின்றவர் நாளை வரும் நடிகர்தான். என்னுடைய நீட்சிதான் அவர். அந்த நடிகரின் கனவுகளை அடுத்த தலைமுறை நிறைவேற்றும். சிவாஜி கணேசனின் சாதனைகளை முறியடிப்பதாகவே நான் நினைக்கவில்லை. அதைப் புரிந்துகொண்டதால்தான் ‘தேவர் மகன்’ படத்தில் அந்த நாற்காலியில் என்னை உட்காரவைத்துவிட்டுப்போனார் அவர். இரண்டு பேருமே அதைப்புரிந்துகொண்டிருக்கிறோம். மோதல் அல்ல, உரசல் அல்ல. நாங்கள் இருவரும் நீண்டநேரம் இதைப்பற்றிப் பேசியிருக்கிறோம். ‘எவ்வளவோ செய்யணும்னு நினைச்சோம். நீங்க செய்றீங்க’ என்பதைப் பெருமிதத்தோடு அவர் என்னிடம் சொல்லியிருக்கிறார். நாம் நீட்சிதான். முறியடித்தவர்கள் அல்ல. நம் பொறுப்பை இன்னொருவரிடம் விட்டுக்கொடுப்போம்.’’

படம்: கே.ஜெரோம்
படம்: கே.ஜெரோம்