வேலூர் ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் இருக்கிறது பாலாறு சுடுகாடு. முட்புதர்கள் அடர்ந்து மண்டிக்கிடக்க அதனுடன் மலையெனக் குவிந்துகிடக்கின்றன மாநகரத்தின் குப்பைக் கழிவுகள். இவற்றுக்கு நடுவில்தான், கிழிந்த தார்ப்பாயில் போர்த்திய சிறு சிறு கொட்டகைகளில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் வசித்துவந்தனர். இவர்களின் துயரம் குறித்து, `பொணம் மட்டும்தான் எங்களைத் தொந்தரவு செய்யறதில்லை!’ என்ற தலைப்பில் 15.08.2021 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

இதழ் வெளியான ஆகஸ்ட் 11-ம் தேதி காலையிலேயே, மாவட்ட நிர்வாகத் தரப்பிலிருந்து உடனடி ரியாக்ஷன். ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், நாடோடி மக்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் செய்துதருமாறு உத்தரவிட... வேலூர் தாசில்தார் தலைமையிலான குழுவினர் சுடுகாட்டுப் பகுதிக்கு விரைந்து சென்று அந்த மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டனர். அரசின் சலுகைகளைப் பெறுவதற்கான அடையாளச் சான்றுகள் எதுவுமே அவர்களிடம் இல்லாததால் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
தொடர்ந்து, வேலூர் அருகே சிறுகளம்பூர் கிராமத்திலுள்ள பச்சையம்மன் கோயில் அருகில் இடத்தைத் தேர்வுசெய்தும் ஒதுக்கினர். இதையடுத்து, சுடுகாட்டிலிருந்த விளிம்புநிலை மக்கள் வாகனங்கள் மூலம் புதிய இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வாகனத்துக்கான வாடகையையும் அதிகாரிகளே கொடுத்தனுப்பினர். புதிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த வாரத்துக்குள்ளாக ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பட்டா வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், விகடன் வாசகர்களிடமிருந்தும் உதவிக்கரங்கள் நீள்கின்றன. அரசுத் தரப்பிலிருந்து நலத்திட்டங்கள் கிடைத்தாலும், தங்களால் முடிந்ததையும் செய்ய விரும்புகிறோம் என்று கூறி காட்பாடி பர்னீஸ்புரத்தைச் சேர்ந்த சசிகுமார், கிங்ஸ்லி, இவர்களின் நண்பர்கள் சிலர் இணைந்து சுமார் 10,000 ரூபாய் மதிப்பிலான அரிசி, மளிகைப் பொருள்களை நேற்று தங்களது வாகனம் மூலம் நாடோடி இன மக்கள் வசிக்கும் புது இடத்துக்கே நேரில் சென்று வழங்கினர். மளிகைப் பொருள்களுடன் நல்ல ஆடைகளையும் உடுத்திக்கொள்ள வழங்கினர். விகடன் வாசகர்களான சசிகுமார், கிங்ஸ்லி, அவரின் நண்பர்களுக்கு நாடோடி இன மக்கள் மனதார நன்றி கூறினர்.