கிராம உதவியாளர் பணிநியமன ரத்து சர்ச்சை... செய்தி போட்டால் வழக்கு போடுவேன்! - மிரட்டும் நாகை கலெக்டர்

கலப்புத் திருமணம் செய்துகொண்டதால், எங்கள் உறவினர்கள் எங்களைப் புறக்கணித்து விட்டார்கள். இந்த நிலையில், ‘மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில், அரசு வேலை கிடைத்ததே’ என்று நம்பிக்கையோடு வாழ்க்கையை ஆரம்பித்தேன்.
நாகை மாவட்டத்தில், கிராம உதவியாளர்களின் பணி நியமனம் ரத்துசெய்யப்பட்டது தொடர்பான சர்ச்சை அனலைக் கிளப்பிவருகிறது!
2021-ம் ஆண்டில் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தாலுகாவில் 19 கிராம உதவியாளர்கள் (தலையாரி) பணி நியமனம் செய்யப்பட்டார்கள். இவர்களில் ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், ஏழைகள் என 11 பெண்களும் அடக்கம். கொரோனா, புயல், மழை என எட்டு மாதங்களாக இயற்கைப் பேரிடர் காலங்களிலும் பணிபுரிந்து வந்தவர்களின் பணி நியமனத்தை, நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் திடீரென ரத்துசெய்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய நாகை, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் நலச்சங்கத் தலைவர் பாஸ்கரன், “கீழ்வேளூர் தாலுகா தாசில்தாராக இருந்த மாரிமுத்து, உயரதிகாரிகள், ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் சிபாரிசுகளை புறம்தள்ளி அரசு விதிகளின்படி நேர்மையான முறையில் 19 பேரை கிராம உதவியாளர்களாக நியமனம் செய்தார். இதனால் கோபமடைந்த அதிகார வர்க்கத்தினர் மாரிமுத்துவை உடனடியாகப் பணி இடமாற்றம் செய்துவிட்டார்கள்.

மேலும், கலெக்டரின் உதவியாளராக இருந்த ரமேஷ்குமார் என்பவரை தாசில்தாராகப் பணி நியமனம் செய்தார்கள். அவர் மூலமாகத்தான் இந்த நியமன ரத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கில், ‘முறையான விசாரணை செய்து மீண்டும் பணி நியமனம் செய்ய வேண்டும்’ என்று உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து நடைபெற்ற விசாரணையும்கூட நேர்மையாக நடைபெறவில்லை. வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஒரே நாளில் காலை 11 மணிக்கு வரவழைத்து இரவு 11 மணி வரை விசாரணை செய்து அனுப்பியிருக்கிறார்கள். விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களின் கருத்தைப் பதிவுசெய்யாமல், தாங்கள் ஏற்கெனவே எழுதி, கொண்டுவந்த காகிதத்திலேயே மிரட்டி கையெழுத்து வாங்கியிருக்கின்றனர். ‘பெண் ஊழியர்களிடம் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு அலுவல்ரீதியாக விசாரணை மேற்கொள்ளக் கூடாது’ என உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் இருக்கின்றன. ஆனால், இவை எதுவும் பின்பற்றப்படவில்லை. எனவே, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி செயல்பட்டிருக்கும் கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ்குமார், துணை தாசில்தார் ரமேஷ்குமார், உடந்தையாகச் செயல்பட்ட நாகை மாவட்ட ஆட்சியர் ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் கொதிப்பாக.

வேலையிழந்த ஆதரவற்ற விதவைப் பெண்மணி ஒருவர் நம்மிடம் பேசியபோது, “என் கணவர் 10 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்ச்சியாகப் பதிவுசெய்து வந்ததன் அடிப்படையில், ஒரு பைசா செலவில்லாமல் இந்த ஆட்சியில் வேலை கிடைத்தது. பணி நியமனம் செய்யப்பட்ட ஊருக்கே வந்து, வாடகை வீட்டில் குடியேறி என் மகள்களை அங்கேயே படிக்கவும் வைத்தேன். இந்த நிலையில், திடீரென எங்கள் பணியைப் பறித்துவிட்டதால், வீட்டு வாடகை தர முடியவில்லை; பிள்ளை களைத் தொடர்ந்து படிக்கவைக்கவும் முடியவில்லை. என்ன செய்வதென்றே தெரியாமல் தவிக்கிறேன்” என்றார் கண்ணீர்மல்க.
பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்மணி, “கலப்புத் திருமணம் செய்துகொண்டதால், எங்கள் உறவினர்கள் எங்களைப் புறக்கணித்து விட்டார்கள். இந்த நிலையில், ‘மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில், அரசு வேலை கிடைத்ததே’ என்று நம்பிக்கையோடு வாழ்க்கையை ஆரம்பித்தேன். அதற்குள் இப்படியாகி விட்டது. இனி என்ன செய்வதென்று தெரியவில்லை. கண் பார்வை இல்லாதவனுக்குப் பார்வை கொடுத்து, அதை மறுபடியும் பறித்துக்கொண்டால் எப்படியிருக்குமோ அந்த உணர்வில்தான் இப்போது இருக்கிறேன்’’ என்றார் வருத்தத்துடன்.
மாற்றுத்திறனாளியான ஒருவரிடம் பேசியபோது, “அப்பா, அம்மா, மனைவி, குழந்தை என எல்லோரையும் காப்பாற்றவேண்டிய பொறுப்பில் இருக்கிறேன். திடீரென என்னைப் பணி நீக்கம் செய்துவிட்டதால், சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாமல் திண்டாடுகிறோம். விசாரணையின்போது, ‘எனக்கு நீங்க மீண்டும் வேலை கொடுக்கலைன்னா நான் குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கிறதைத் தவிர வேற வழியே இல்லை’ என்று நான் கதறியபோது, ‘இதெல்லாம் மேலிடத்து உத்தரவு. அதைத்தான் நாங்கள் செய்ய முடியும்’ என்று விசாரணை அதிகாரிகள் கூறிவிட்டார்கள். அரசியல்வாதிகள் பணம் வாங்கிய ஆட்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்பதற்காக, நியாயமாகக் கிடைத்த எங்கள் பணியைப் பறிப்பது என்ன நியாயம்?” என்றார் கலங்கிய கண்களுடன்.

இந்த விவகாரம் குறித்து நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜிடம் விளக்கம் கேட்டோம். “அந்த அப்பாயின்மென்ட் 100% தவறு. அதனால் ரத்துசெய்திருக்கிறோம். இந்தச் செய்தியை உங்களுக்கு யார் கொடுத்தது என்பது எனக்குத் தெரியும். அவர் கூறுவதைக் கேட்டு நீங்கள் செய்தி வெளியிட்டால், உங்கள்மீது மான நஷ்ட வழக்கு போடுவேன்” என்றார் மிரட்டலாக.
பத்திரிகையாளர்கள் விளக்கம் கேட்டுப் பேசினாலே, ‘மானநஷ்ட வழக்கு பாயும்!’ என்று மிரட்டுகிற ஆட்சியரின் உத்தரவின்பேரில், விசாரணை எப்படி நடந்திருக்கும் என்பது புரிகிறது!