சினிமா
Published:Updated:

மண்வாசம் வீசும் மாடு அவிழ்க்கும் விழா!

மாடு அவிழ்க்கும் விழா!
பிரீமியம் ஸ்டோரி
News
மாடு அவிழ்க்கும் விழா!

பொங்கல் வச்சபிறகு அகப்பை கொடுத்தவங்க, பூசாரி, விவசாயத் தொழிலாளிங்கன்னு வரிசையாக எல்லாரும் வீட்டுக்கு வருவாங்க.

கிராமங்களில் படிந்திருக்கும் அத்தனை அழுக்குகளையும் துடைத்தெறிந்து புத்துணர்வாக்கிவிடும் பொங்கல். எவ்வளவு மாற்றங்கள் வந்தபிறகும் பொங்கல் பண்டிகையின் மரபுகளில் இருந்து மட்டும் மக்கள் இன்னும் விட்டு விலகவில்லை. கன்னிப் பொங்கல், ஆயங்கலைப் பொங்கல், கொப்பிப் பொங்கல், தத்தங்கிப் பொங்கல் என ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒவ்வொரு விதமாகப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிக் களிக்கிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் வேங்கராயன் குடிக்காடு கிராமத்தில் கொண்டாடப்படும் பொங்கல் விழா வித்தியாசமானது. மாட்டுப் பொங்கலை ‘முதல் மாடு அவிழ்க்கும் விழா’ என்ற பெயரில் திருமண விழாவைப் போல பிரமாண்டமாக ஊர்கூடி நடத்துகிறார்கள் இந்த கிராம மக்கள். ஒரு வீட்டில் முதல் மாடு அவிழ்க்கும் நிகழ்வு நடந்து முடிந்துவிட்டால், அடுத்து அந்த வீட்டில் அந்த விழா நடக்க 200 வருடங்களுக்கு மேல் ஆகும் என்பதுதான் இதில் சுவாரஸ்யம். பாரம்பர்யமான இந்த விழாவை வாழ்நாள் பயனாகக் கருதி, பல லட்சம் செலவு செய்து கொண்டாடுகிறார்கள் வேங்கராயன் குடிக்காடு கிராம மக்கள்.

மண்வாசம் வீசும் மாடு அவிழ்க்கும் விழா!
மண்வாசம் வீசும் மாடு அவிழ்க்கும் விழா!

இவ்வாண்டு, முதல் மாடு அவிழ்க்கும் விழாவை நடத்தும் வாய்ப்பு குழந்தைவேல் குடும்பத்தாருக்கு வாய்த்திருக்கிறது. ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்த குழந்தைவேலிடம் பேசினோம்.

“பல தலைமுறைக்குப் பிறகு இந்த வாய்ப்பு... திரும்பவும் என் காலத்துல கிடைச்சிருக்கு. நாலு லட்ச ரூபாய்க்கு மேல செலவாகும்னு தோணுது. சைவ, அசைவ விருந்து, பறை இசை, பச்சைக்காளி, பவளக்காளி, காவடியாட்டம்னு நிறைய கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு பண்ணியிருக்கோம்” என்ற குழந்தைவேலிடம் இந்த மரபு குறித்துக் கேட்டேன்.

‘‘விவசாயம் நடக்குதோ இல்லையோ, பொங்கல் வந்துட்டா கடன் வாங்கியாவது சீரும் சிறப்புமா கொண்டாடிருவோம். முதல்மாடு அவிழ்க்கிற விழாவுக்கு பொங்கல் அன்னியில இருந்து தயாராயிடுவோம். பொங்கல் அன்னைக்கு அவங்கவங்க வீட்டு வாசல்ல பனை ஓலை அல்லது தென்னங்கீற்று வச்சு மறைச்சு, குழி அடுப்பு எடுப்போம். ஊர்ல உள்ள விஸ்வகர்மா குடும்பத்துல இருந்து கொட்டாங்கச்சியில கைப்பிடி வச்சு அகப்பை செஞ்சு வீட்டுக்கு ரெண்டு வீதம் கொடுப்பாங்க. அதை வச்சுத்தான் பொங்கல் வைப்போம். கடந்த 200 வருடங்களா இது வழக்கத்துல இருக்கு.

மண்வாசம் வீசும் மாடு அவிழ்க்கும் விழா!
மண்வாசம் வீசும் மாடு அவிழ்க்கும் விழா!

எங்க ஊர் வில்லாயி அம்மன் கோயில் பூசாரி திருநாவுக்கரசு, ஒவ்வொரு வீட்டு வாசல்லயும் நின்னு மணி அடிச்சு சங்கு ஊதிக்கிட்டே போவார். அதுக்குப்பிறகு எல்லோரும் ஒரே நேரத்துல பொங்கல் வைப்போம். பொங்கப்பானை பொங்கி வர்ற வரைக்கும் குடும்பமே உட்கார்ந்து அடுப்பெரிக்கும். முதல்ல சர்க்கரைப் பொங்கல் பானைதான் பொங்கி வரணும். அப்பதான் இந்த வருஷம் முழுவதும் இனிப்பா இருக்கும்னு ஐதிகம்.

பொங்கல் வச்சபிறகு அகப்பை கொடுத்தவங்க, பூசாரி, விவசாயத் தொழிலாளிங்கன்னு வரிசையாக எல்லாரும் வீட்டுக்கு வருவாங்க. வெற்றிலை பாக்கு, அரிசி, தேங்காய், பழம், கரும்பு கொடுத்து அவங்களுக்கு மரியாதை செய்வோம். பிறகு, நல்ல நேரம் பார்த்து அவங்கவங்க வீட்டு வாசல்ல சூரியனுக்குப் படையல் போடுவோம்.

ரெண்டாம் நாள்ல இருந்து முதல் மாடு அவிழ்க்கிற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடங்கிரும். காலையில மாடுகளையெல்லாம் மேய்ச்சலுக்கு ஓட்டிக்கிட்டுப் போயி வயிறு நிறைய சாப்பிட வச்சிருவோம். சாயங்காலம் ஊருக்குப் பொதுவான காசாங்குளத்துல அவங்கவங்க மாட்டை ஓட்டிக்கிட்டு குவிஞ்சிருவாங்க. ஊருப்பெரியவங்க, முதல் மாடு அவிழ்க்கிறவங்க வீட்டுக்குப் போயி தாரை தப்பட்டையோட மாடுகளை ஓட்டிக்கிட்டு வந்து குளத்தில குளிக்க வைப்பாங்க. அந்த மாடு குளிச்சபிறகு மத்தவங்க அவங்கவங்க மாட்டைக் குளிக்க வைப்பாங்க.

மண்வாசம் வீசும் மாடு அவிழ்க்கும் விழா!
மண்வாசம் வீசும் மாடு அவிழ்க்கும் விழா!

வீட்டுல இருக்கிற பெண்கள் வீட்டுக்கு முன்னால உலக்கையைப் போட்டு வச்சிருப்பாங்க. குளிக்கவச்சுக் கூட்டிக்கிட்டு வர்ற மாடுகளை அந்த உலக்கையைத் தாண்டவச்சு வீட்டுக்குள்ள அழைச்சுட்டுப் போவாங்க. கன்னிப்பூ மாலை, மாங்கொத்து மாலைன்னு மாடுகளுக்குப் போட்டு அலங்காரம் செய்வோம். பிறகு உப்பில்லாம பொங்கல் வச்சுப் படையல் போடுவோம். மண்சட்டியில நெருப்பெடுத்து நெல்லு, மிளகாய் போட்டு மாடுகளை நிற்கவச்சு திருஷ்டி சுத்தி முச்சந்தியில சட்டியை உடைப்போம். அன்னைக்கு முழுவதும் ஊர்க்காரங்க எல்லாருக்கும் அசைவ விருந்து...’’ - விரிவாகப் பேசுகிறார் குழந்தைவேல்.

முதல் மாடு அவிழ்க்கும் வீடு, ஊரில் தனித்துத் தெரியும். திருமண வீடு போல பரபரப்பாகிவிடும். வீட்டுவாசலில் பெரிய பந்தல் போட்டு வாழைமரம், தோரணம், வண்ண விளக்குகளெல்லாம் கட்டி வண்ணமயமாக்கிவிடுவார்கள். மைக்செட் கட்டி விவசாயம் சார்ந்த பாடல்களையும் போடுவார்கள். சொந்த பந்தங்களுக்கு அழைப்பு போய்விடும். குறிப்பாக திருமணமாகி வெளியூருக்குப் போன பெண்களுக்கெல்லாம் சிறப்பு அழைப்பு விடுத்திருப்பார்கள். கன்னிப்பொங்கலன்று முதல் மாடு அவிழ்க்கும் விழா தொடங்கிவிடும்.

‘‘பெறந்த வீட்டுப் புள்ளைங்க, சொந்தக்காரங்க எல்லாம் தாரை, தப்பட்டையோட சீர்வரிசை எடுத்துக்கிட்டு வருவாங்க. முதல் மாடு அவிழ்க்கிற வீட்டுக்காரங்க வாசல்ல நின்னு எல்லாருக்கும் பன்னீர் தெளிச்சு சந்தனம் குங்குமம் கொடுப்பாங்க. அன்னைக்கு மதியம் ஊர்க்காரங்க எல்லாருக்கும் சைவ சாப்பாடு. ஆயிரம் பேராவது கலந்துக்குவாங்க. விருந்து முடிஞ்சதும் மாடுகளைக் குளிப்பாட்டி கொம்பு சீவி அலங்காரம் செய்வாங்க. கிராமத்து மக்களெல்லாம் வில்லாயி அம்மன் கோயில்ல கூடுவாங்க. கலை நிகழ்ச்சிகள் நடத்திக்கிட்டு கலைஞர்கள் முன்னால நடக்க, ஊர்மக்கள் ஊர்வலமா முதல்மாடு அவிழ்க்கிற வீட்டுக்குப் போவாங்க. அங்கே எல்லாரையும் வரவேற்று உபசரிச்சு உக்கார வப்பாங்க. முதல் மாடு அவிழ்க்கிறவங்களுக்கும் அவங்க வீட்டுல பெண்ணெடுத்த மாப்பிள்ளைகளுக்கும் கிராமத்தினர் முன்னிலையில மரியாதை செய்வாங்க. பிறகு சாமி கும்பிட்டு முதல் மாட்டை அவிழ்த்து வெளியே விடுவாங்க. அதுக்குப்பிறகு ஊர்க்காரங்க ஒவ்வொரு வீடாப் போயி தேங்காய் உடைச்சு அந்தந்த வீடுகள்ல இருக்கிற மாடுகளை அவிழ்த்து விடுவாங்க.

முதல்மாடு முன்னே போக எல்லா மாடுகளும் ஊர்வலமா ஊரைச்சுத்தி வரும். ஆட்டம் பாட்டம்னு ஒரே கொண்டாட்டமா இருக்கும். வில்லாயி அம்மன் கோயில்ல மாடுகளுக்குக் கற்பூரம் ஏத்தி பூஜை பண்ணுவாங்க. பிறகு எல்லா மாடுகளையும் மந்தைக்கு அழைச்சுட்டுப் போய் தண்ணீர் தெளிச்சுக் கூடி விடுவோம். புலிப் பாய்ச்சல்ல மாடுக எல்லாம் ஓடும். இதை வேடிக்கை பார்க்க அக்கம்பக்க ஊர்கள்ல இருந்தெல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவாங்க. நேர்த்திக்கடனுக்காக ஆடு, மாடு, கோழியெல்லாம் கொண்டு வந்து தருவாங்க. அதையெல்லாம் மறுநாள் ஏலம் விட்டு ஊர்க்கணக்குல சேத்துக்குவோம். பிறகு வரவு செலவு பார்த்து பூஜை பண்ணி, அடுத்த வருஷம் முதல் மாடு அவிழ்க்கிற உரிமை யாருக்கு வருதோ அவங்க கையில தேங்காய் பழம் கொடுக்கிறதோட விழா முடிஞ்சிரும். அடுத்த பொங்கல் வரைக்கும் அந்த நினைவுகள் எல்லார் மனசுலயும் நிக்கும்” என்கிறார் ஊர் பெரியவர் நல்லமுத்து.

மண்வாசம் வீசும் மாடு அவிழ்க்கும் விழா!

முதல்மாடு அவிழ்க்கும் உரிமை வந்துவிட்டால் மாடு இல்லாதவர்கள்கூட புதிதாக வாங்கிவிடுவார்கள். 200ஆண்டுகளுக்கும் மேலாக வழிவழியாக வீட்டு வரிசைப்படி இந்த விழா நடக்கிறது.

“என்னோட ஆயுசுக்கு இதை நடத்தவும் பாக்கவும் கொடுத்து வச்சிருக்கேன்னு சந்தோஷமா இருக்கு. எல்லாரும் இதைப் பெரிசா நடத்தணும்னு இல்லை. அவங்கவங்க வசதிக்குத் தக்கவாறு நடத்தலாம். அடுத்து 200 வருஷம் கழிச்சு என் கொள்ளுப்பேரனுக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கும். அதனால நாங்க கொஞ்சம் பெரிசா ஏற்பாடு பண்ணியிருக்கோம். ஊருக்கு மட்டுமல்ல... இந்த ஊர்ல வாழுற மனுஷங்களுக்கும் இது பெருமையான விஷயமா இருக்கு...”

நெகிழ்ந்து சொல்கிறார் குழந்தைவேல்!