அரசியல்
அலசல்
Published:Updated:

ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை... ஆதரவற்றோரைக் கடத்தி விற்பனை...

கைது செய்யப்பட்டோர்
பிரீமியம் ஸ்டோரி
News
கைது செய்யப்பட்டோர்

விஸ்வரூபம் எடுக்கும் விழுப்புரம் விவகாரம்!

விழுப்புரம் ‘அன்பு ஜோதி ஆசிரம’ அக்கிரமங்கள் குறித்து அடுத்தடுத்து வெளியாகும் செய்திகள் ஆயிரம் வோல்ட் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன!

விழுப்புரம் மாவட்டம், கெடாருக்கு அருகிலிருக்கும் குண்டலிப்புலியூர் கிராமத்தில் இருக்கிறது அன்பு ஜோதி ஆசிரமம். கேரளாவைச் சேர்ந்த ஜூபின் பேபி என்பவர் நிர்வகித்துவந்த இந்த ஆசிரமத்தில் ஆதரவற்றவர்கள், முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், ‘ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த என் மாமாவைக் காணவில்லை’ என சலீம்கான் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதையடுத்து போலீஸாரும் வருவாய்த்துறையினரும் ஆசிரமத்தில் ஆய்வு மேற்கொண்டபோதுதான், அதுநாள்வரை ஆசிரமத்தில் நடந்துவந்த அட்டூழியங்கள் வெளியுலகுக்குத் தெரியவந்தன.

விழுப்புரம் ‘அன்பு ஜோதி ஆசிரமம்’
விழுப்புரம் ‘அன்பு ஜோதி ஆசிரமம்’

“ஆசிரமத்திலுள்ள பெண்களை பாலியல்ரீதியில் துன்புறுத்தியதுடன், அவர்களை வியாபார நோக்கத்தில் விற்பனை செய்வதாகச் சந்தேகம் இருக்கிறது” என்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு கொடுத்த புகாரின் அடிப்படையில் 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, ஆசிரமத்தின் உரிமையாளரான ஜூபின் பேபி, அவரின் மனைவி மரியா, பணியாளர்கள் பிஜூ மோகன், பூபாலன், முத்துமாரி, கோபிநாத், அய்யப்பன், தாஸ், சதீஷ் உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இது குறித்தான வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் டி.ஜி.பி சைலேந்திரபாபு.

கைதுசெய்யப்பட்டிருக்கும் பிஜூ மோகன் என்ற பணியாளர் கொடுத்த வாக்குமூலத்தில், “ஜூபின் பேபி என் உறவினர். கடந்த மூன்று வருடங்களாக குண்டலம்புலியூரில் அவரது அன்பு ஜோதி ஆசிரமத்தில் ரூ.7,000 சம்பளத்தில் வேலை செய்கிறேன். ஜூபின் பேபியும், மரியாவும் சொல்லும் ஆட்களை ஆசிரமத்துக்கு அழைத்து வருவதற்கும், மீண்டும் அவர்கள் சொல்லும் இடத்தில் கொண்டு போய் விடுவதற்கும் அவ்வப்போது பணம் கொடுப்பார்கள். ஆதரவற்றவர்கள், கணவனை இழந்தவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மொட்டையடித்து, அவர்களின் அடையாளம் தொடர்பான ஆவணங்களை ஜூபின் உத்தரவுப்படி அழித்துவிடுவோம். அதன் பிறகு அவர்களைப் புகைப்படம் எடுத்து பராமரிப்புக்காக, ஜூபினும் மரியாவும் வெளிநாட்டினரிடம் பணம் வாங்குவார்கள். அதன் பிறகு இங்கிருப்பவர்களை பெங்களூரு, கேரளா காசா்கோடு, ராஜஸ்தான், வேலூர் வாணியம்பாடி, விழுப்புரம், ஓசூர் உள்ளிட்ட இடங்களிலுள்ள ஆசிரமங்களில் விடச் சொல்வார்கள். அவர்களை வாங்கிக்கொள்ளும் அந்த ஆசிரமங்கள் அதற்காக ஜூபினுக்குப் பணம் கொடுப்பார்கள். அந்தப் பணத்தில் எங்களுக்கும் ஜூபின் கொஞ்சம் கொடுப்பார்.

மரியா - ஜூபின் பேபி
மரியா - ஜூபின் பேபி

எங்கள் பராமரிப்பில் இருப்பவர்கள் இறந்து போகும்போது நாங்களே தகனம் செய்துவிடுவோம். அதேபோல மற்ற ஆசிரமங்களில் நாங்கள் அனுப்பியவர்கள் இறந்துபோனால், அவர்களை அங்கேயே தகனம் செய்யச் சொல்லும் ஜூபின் பேபி, அதற்காக கெடார் காவல் நிலைய எஸ்.ஐ கொடுத்தது போன்ற ஒரு கடிதத்தை தயார்செய்து கொடுத்து அனுப்புவார். அதன் நகல்களை அலுவலக கம்ப்யூட்டரில் மறைத்துவைத்திருக்கிறேன். ஆசிரமத்தில் இருப்பவர்களைக் கட்டாயப்படுத்தி ஜூபினுடன் சேர்ந்து வேலை வாங்குவோம். வேலை செய்யாதவர்களை அடித்து, சங்கிலியால் கட்டிப்போட்டு, சாப்பாடு தராமல் எங்களுக்கு பயந்து நடக்க வைப்போம். மேலும், அவர்களைக் குரங்குகளைவிட்டும் கடிக்க வைப்பார் ஜூபின். அதனால் எங்களைப் பார்த்தாலே அவர்கள் பயந்து நடுங்குவார்கள். சலீம்கான், அவருடைய மாமாவை எங்களிடம் விட்ட மறுநாளே, அவரையும் சேர்த்து 53 பேரை ஜூபின் பேபி, மரியாவுடன் சேர்ந்து பெங்களூர் கே.ஆர்.சி ரோட்டிலுள்ள டோடாகுபி கிராமத்தில் ஆட்டோ ராஜா நடத்திவரும் நியூ ஆர்க் மிஷன் ஆஃப் இந்தியா (Home of Hope) என்ற ஆசிரமத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்று விட்டுவந்தோம்.

கைது செய்யப்பட்டோர்
கைது செய்யப்பட்டோர்

எங்கள் ஆசிரமத்தில் ரீனா, ராக்கி (பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன) என்ற இரு பெண்கள் இருக்கின்றனர். இருவரும் வயது குறைவானவர்கள் என்பதால் ஜூபின் பேபிக்கு அவர்கள்மீது ஒரு ஈர்ப்பு உண்டு. அதனால் ஜூபின் பேபி அவர்கள் இருவரையும் அடிக்கடி கட்டாயப்படுத்தி சின்ன முதலியார் சாவடியில் இருக்கும் எங்கள் அன்பு ஜோதி ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று பலமுறை உடலுறவுகொண்டிருக்கிறார். அதை அவரே என்னிடம் சொல்வார். இதை வெளியில் சொன்னால் கொலைசெய்து புதைத்துவிடுவோம் என்று நாங்கள் மிரட்டியதால் அந்தப் பெண்களும் யாரிடமும் சொல்லவில்லை” என்று கூறியிருக்கிறார்.

இதேபோல அய்யப்பன், முத்துமாரி என்ற இரு பணியாளர்களும் தங்கள் வாக்குமூலத்தில், “எங்களிடம் இருப்பவர்களை வேறு ஆசிரமங்களுக்கு அனுப்பும்போது அவர்கள் நிறைய பணம் கொடுப்பார்கள். இவ்வளவு பணம் கிடைக்கிறது என்கிற ஆசையில் இரவில் தனியாகச் சுற்றுபவர்களை ஆம்புலன்ஸ் மூலம் கடத்தி வந்து, அவர்களுக்கு மொட்டையடித்து அடையாளங்களைச் சிதைத்து மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப்போல மாற்றி வேறு மாநிலங்களிலுள்ள ஆசிரமங்களுக்கு விற்றுவிடுவோம். அந்தப் பணத்தில்தான் தற்போது ஆசிரமத்தை விரிவுபடுத்தும் பணியையும் தொடங்கினோம்” என்று கூலாகக் கூறியிருக்கிறார்கள்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களிடம் விசாரணை மேற்கொண்ட மாவட்ட மனித உரிமைக் காப்பாளர் லலிதா நம்மிடம் பேசியபோது, ‘‘ஆசிரமத்துக்கு முறையான அனுமதி எதுவும் பெறாத நிலையில், இந்தியா முழுவதும் பல காப்பகங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு ஆட்களைக் கடத்தி வியாபாரம் செய்திருக்கிறார் ஜூபின். கெடார் காவல் நிலையத்திலும் ஆசிரமம் குறித்த பதிவேடுகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.

10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை போலீஸாரால் 12 வயதில் இங்கு சேர்க்கப்பட்ட ரீனாவையும், கணவரைப் பிரிந்து வந்த ராக்கியையும் ஜூபின் பேபி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அப்போது வேறு ஒருவர் அதைப் பார்த்துவிட, இடத்தை மாற்றிப் பாலியல் வன்கொடுமையைத் தொடர்ந்திருக்கிறார். இது பற்றி அவர் மனைவி மரியாவிடம் இவர்கள் சொன்னபோது, கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

பிஜூ மோகன், முத்துமாரி, தங்கவேலு
பிஜூ மோகன், முத்துமாரி, தங்கவேலு

இந்த ஆசிரம உரிமையாளரைத் தாண்டி கெடார் காவல்துறை மற்றும் விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரும் தங்களது கடமைகளைச் செய்யத் தவறியிருக்கின்றனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, அந்த ஆசிரமத்திலுள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தேசிய அடையாள அட்டையைக்கூட வழங்கவில்லை. ஆனால், இப்போது ஆசிரமத்துக்கு மெமோ வழங்கியிருப்பதாகக் கூறுகிறார்” என்றார்.

புகார் தொடர்பாக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலுவிடம் விளக்கம் கேட்டபோது, “இந்த ஆசிரமத்திலிருந்து 142 பேரையும், சின்ன முதலியார்சாவடிக் கிளையிலிருந்து 24 பேரையும் மீட்டிருக்கிறோம். தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு ஆதார் போன்ற அடையாள அட்டைகள் வேண்டும். அதை வழங்குவதற்கு, சம்பந்தப்பட்ட ஆசிரம நிர்வாகம் முன்வர வேண்டும். மேலும், ஆசிரமத்திலுள்ள குறைகளை அவர்களிடம் சொல்லியிருக்கிறோம். அவர்கள் திருத்திக்கொள்ளாதபோது மெமோ கொடுத்திருக்கிறோம்” என்றார்.

தமிழக அளவிலுள்ள ஆசிரமங்களை ஆய்வுசெய்யக் குழு ஒன்றை அமைத்து, அந்தக் குழு அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குமாறு செய்தால்தான், இது போன்ற கொடூரச் சம்பவங்கள் அரங்கேறாமல் தடுத்து நிறுத்த முடியும்!

காவல்துறை விருது பெற்ற ஜூபின்

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்களுக்காக ‘காவல் கரங்கள்’ என்ற பிரிவைத் தொடங்கிய சென்னை பெருநகர காவல்துறை, விழா ஒன்றில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கையால் இந்த ஜூபின் பேபிக்கு விருது வழங்கியிருக்கிறது. அரசின் அனுமதி பெறாமல், விதிகளை மீறிச் செயல்பட்ட காப்பகத்துக்குக் காவல்துறையும், அமைச்சரும் விருது வழங்கியது எப்படி என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

பெங்களூர் காப்பகத்துக்கு ஒரு முதியவரை கைமாற்றுவதற்காக ஜூபின் பேபி எழுதிய ஒரு கடிதம், இந்த ஆசிரமத்தின் குப்பையிலிருந்து நமக்குக் கிடைத்தது. அந்தக் கடிதத்தில் ஒரு முதியவரின் புகைப்படத்தை இணைத்து, “இந்த 65 வயது ஆணை, மேலதிக பராமரிப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்காக உங்கள் இல்லத்தில் அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மரணம் ஏற்பட்டால், அவரின் இறுதிச்சடங்குகளை நீங்களே செய்யுங்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார் ஜூபின்.