விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அண்மைக்காலமாகவே தொடர் சர்ச்சைகளுக்குள்ளாகி வருகிறது. இம்மாத தொடக்கத்தில், அமைச்சர் மஸ்தான் ஆய்வு மேற்கொள்கிறார் என்பதற்காக நோயாளிகளின் கிழிந்த படுக்கையின் போர்வைகளைப் புதியதாக மருத்துவ ஊழியர்கள் அவசர அவசரமாக மாற்றியதாகவும், முறையான குடிநீர் வசதிகள்கூட இல்லை எனவும் சர்ச்சைக் கருத்துகள் எழுந்தன.
இந்த நிலையில், முண்டியம்பாக்கத்தில் செயல்பட்டுவரும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தற்போதைய நிலை குறித்து மருத்துவமனை வட்டாரத்தில் சிலரிடம் விசாரித்தோம். ``இந்த அரசு மருத்துவமனை, விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு ஆறுதலாக அமைந்தாலும், இன்னும் உயிர்காக்கும் பெரும்பாலான சிகிச்சைகளுக்கு புதுவை, சென்னை போன்ற பகுதிகளுக்கே செல்லும் சூழல் இருக்கிறது.

சுற்றுலாப் பகுதியைப்போல, மருத்துவமனைக்குள் யாரும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற அளவுக்குப் பாதுகாப்பற்ற மருத்துவமனையாகவே இருக்கிறது. இரவு நேரங்களில், மருத்துவமனை வளாகத்தில் வெளியாள்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும். இரு சக்கர வாகன திருட்டுகளும் அதிகம் நடக்கின்றன. ஒட்டுமொத்த கல்லூரி, மருத்துவமனை வளாகத்துக்கே சுமார் 28 செக்யூரிட்டிகள்தான் இருக்கின்றனர். இவர்களையேதான் மூன்று ஷிப்டுகளுக்கும் மருத்துவமனை நிர்வாகம் பயன்படுத்திக்கொள்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில், ஓரிரு செக்யூரிட்டிகள் மட்டும்தான் பணியில் இருப்பார்கள். இதனால், பிரசவத்துக்கு வருபவர்கள் முதல் மற்றப் பெண்களும் அச்சத்தில்தான் இருப்பார்கள். மருத்துவமனை கட்டியபோது சிகிச்சைக்காக வந்த நோயாளிகளைவிட, இப்போது அதிகம் வருகிறார்கள். ஆனால், மருத்துமனை மேம்படுத்தப்படாமல் அப்படியே இருப்பதால் படுக்கை வசதி மிகவும் குறைவாகவே இருக்கிறது.
முறையான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வசதியும் இல்லாததால், ஆவின் பாலகத்தில் காசு கொடுத்துதான் நோயாளிகள் தண்ணீர் வாங்க வேண்டும். மருத்துவமனை என்றால் சுகாதாரம்தான் முதன்மையானது. ஆனால், குப்பைக் கொட்டுவதற்கு இடமில்லாமல், உள் வளாகத்திலேயே கொட்டி எரித்துக்கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனை வளாகத்தில் நல்ல சாலைகூட கிடையாது. அவசரமாக வரும் ஆம்புலன்ஸ்கூட உள்ளே வந்தால் மெதுவாகத்தான் வரவேண்டிய சூழல். பழுதடைந்த சாலையை சீரமைப்பு செய்யாமல், அவ்வப்போது மண்ணை மட்டும் கொட்டி பள்ளங்களைச் சரிசெய்வார்கள். ஆனால், மழைக்காலம் என்றால் சாலை சேரும் சகதியுமாக மாறிவிடும். இது மட்டுமின்றி, வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதிகூட கிடையாது.
ஆனால், பிரைவேட் ஆம்புலன்ஸ் உரிமையாளர்களின் வாகனங்கள்தான் உள்ளே அதிகம் நிற்கிறது. ஏனெனில், இங்கு சிகிச்சை அளிக்க முடியாத பிரச்னை என்றால், உடனடி சிகிச்சை தேவைப்படுபவர்கள் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்லும் மனநிலையிலேயே இருப்பார்கள். எனவே, அவர்களை கவர்ந்து லாபம் ஈட்டும் நோக்குடன் இரண்டு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குரூப் மருத்துவமனை வளாகத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கிறது. பார்க்கிங் வசதியே சரியாக இல்லாதபோதும், அனாவசியமாக மருத்துவமனை வளாகத்தில் ஆக்கிரமித்து நிற்கும் தனியார் வாகனங்கள்மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை இல்லை.
அதேபோல், நல்ல வெயிட்டிங் ஹாலும் இல்லாமல் இருந்தது. தற்போதுதான் அதற்கானப் பணிகள் தொடங்கி நடைபெறுகிறது. மருத்துவமனையின் அடிப்படைத் தேவைகளுக்கான 'பில்' பாஸ் செய்வது முதல், பணியாட்களின் நியமனம் வரை ஏ.ஓ 'கமிஷன்' இல்லாமல் வேலையே நடக்காது. மேலும், மகப்பேறு பிரிவில் ஆண் குழந்தை பிறந்தால் ரூ.1000, பெண் குழந்தை பிறந்தால் ரூ.500 என இரண்டாம் கட்ட பணியாளர்கள் வாங்கிவிடுவார்கள். பெட் மாற்றுவதற்கு, காயத்துக்கு மருந்து போட, ஸ்டெச்சரில் வைத்துத் தள்ளிச் செல்ல ரூ.50, 100, 200 என அதெல்லாம் தனித்தனி. குறிப்பாக ஆபரேஷன் தியேட்டரில், மருத்துவ உதவியாளராக நியமிக்கப்பட்டிருக்கிற சிலர் மருத்துவம் சாராதவர்களே இருக்கிறார்கள். அதேபோல், பல உயிர்காக்கும் மருந்துகளும் இங்கு இருப்பதில்லை. மருத்துவர்கள் பற்றாக்குறையும் இருக்கிறது.

அதேபோல், இங்கு சிகிச்சையளிக்க முடியாத சில அவசியமான அவசர சிகிச்சைகளுக்கு இங்கிருக்கிற நிலையைச் சுட்டிக்காட்டி, தாங்கள் கூடுதலாகப் பணிபுரியும் பிற மருத்துவமனைகளுக்கு மருத்துவர்களே பரிந்துரைத்து லாபம் பார்ப்பதும் நடக்கிறது. இதைப்போல இன்னும் நிறையவே இருக்கிறது" என்றனர் ஆதங்கமாக.
நாமும் சாமனியராக மருத்துவமனை வளாகத்தின் உள்ளே சுற்றி வந்தபோது பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் இல்லாதது உறுதியானது. குறிப்பாக கதவு, பீங்கான் இல்லாத சுத்தமற்ற கழிவறைகளையும், நோயாளிகளை கிடத்துவதற்குப் போதிய இடமின்றி வரண்டாவில்வைத்து சிகிச்சையளிக்கும் அவலத்தையும் காணமுடிந்தது.
இந்த நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் குந்தவி தேவியை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டோம். "இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 2010-ல் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு, 660 படுகைகளுக்குதான் அரசாணை இருக்கிறது. ஆனால், தற்போதைய தேவை 1274 படுகைகளாக உயர்ந்திருக்கிறது. அதற்காகக் கூடுதல் கட்டடங்களும் கட்டப்பட்டுவிட்டது. எனவே, படுக்கை வசதி பிரச்னை என்பதில்லை. இருந்தாலும், அரசாணையில் 660 படுக்கைகளே இருப்பதினால் அதற்கான வசதிகளை மட்டும்தான் அரசு வழங்கிவருகிறது.

கூடுதலான தேவைகளுக்கு இன்ஷூரன்ஸ், மருத்துவமனை நிதியிலிருந்து செய்துகொள்கிறோம். அனைத்துக்கும் இதையே செய்ய முடியாது என்பதால் ஒருசில அடிப்படைக் குறைகள் இருக்கலாம். 1,274 படுக்கை வசதி விரிவாக்கம் குறித்த அனுமதியை அரசிடம் கேட்டிருக்கிறோம். அந்த அனுமதி வழங்கப்பட்டால், அதற்கேற்றதான வசதிகள் தானாக அதிகரித்துவிடும். இது மட்டுமின்றி, புதிதாக மகப்பேறு கட்டடம், தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்கள், தடையில்லா மின்சாரம் கொண்டுவந்தது என மருத்துவமனை மேம்பாடென்பது தொடர்ந்து நடைபெற்றுதான் வருகிறது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டடமும் புதிதாகக் கட்டப்படவிருக்கிறது.
மருத்துவக் கழிவுகளைத் தவிர்த்து, இங்கு தினமும் சேகாரமாகும் குப்பைகளை எடுக்கும்படி ஊராட்சியில் கேட்டால், "நாங்கள் எடுத்துச் சென்று கொட்டுவதற்கு இடமில்லை" என்கிறார்கள். விக்கிரவாண்டி பேரூராட்சியில் கேட்டால், "நாங்கள் செய்ய முடியாது" என்கிறார்கள். ஆகவேதான் மருத்துவமனையின் பின்பகுதியில் கொட்டப்படும் சூழல் இருக்கிறது. எனவே, இந்தக் குப்பை பிரச்னை, கான்கிரீட் சாலை, பார்க்கிங் வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் சிறப்பு கோரிக்கையாக வைத்திருக்கிறோம்.
மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள் துறை, ஐ.சி.யு., அவசர சிகிச்சைப் பிரிவு என முக்கியப் பகுதிகளில் கட்டாயம் செக்யூரிட்டிகள் இருப்பார்கள். சில நாள்களில் செக்யூரிட்டிகள் சிலர் விடுப்பில் சென்றிருக்கலாம். அதேபோல எல்லா நாள்களும் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது.

மகப்பேறு பிரிவில் குழந்தை பிறந்தால் கடைநிலை ஊழியர்கள் காசு வாங்குவதாகப் புகார் வந்ததைத் தொடர்ந்து, அவர்கள் நோயாளிகளுடன் தொடர்பில்லாத பணிகளுக்கு மாற்றப்பட்டுவிட்டனர். மேலும், இதுபோல குற்றச்சாட்டு வந்தால் பணிநீக்க நடவடிக்கை இருக்கும் என எச்சரித்திருக்கிறோம். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மருத்துவமனை பின்புறமும், மகப்பேறு பிரிவிலும் இருக்கிறது. அதுமட்டுமின்றி வழக்கமான ஊராட்சி குடிநீர் வசதியும் இருக்கிறது. சிலர் மினரல் வாட்டர்தான் நல்லது என்று விருப்பப்பட்டு வாங்குகிறார்கள். அதேபோல், மருத்துவர்கள் தங்களது தனிப்பட்ட மருத்துவமனைக்கு பரிந்துரைப்பதெல்லாம் நடப்பதில்லை.
அதேபோல் எங்களுடைய அடிப்படைத் தேவைகளை மருத்துவ பொதுப்பணித்துறைக்குச் சொல்வோம். அதன் அடிப்படையில் அவர்கள் செய்துதருவார்கள். ஏ.ஓ மீது இதுவரை அப்படியான புகார்கள் ஏதும் வரவில்லை. அப்படிக் குறிப்பிட்ட புகார் ஏதும் இருந்தால் விசாரிக்கிறேன்" என்றார்.