
ஓவியம்: ஜீவா
நமக்குப் பிடித்தவரிடம் அன்பை வெளிப்படுத்தும் ஒரு விஷயம், விருந்து உபசரிப்பு. அந்தவகையில் வி.ஐ.பி-க்களிடம் அவர்கள் டின்னர் கொடுக்க விரும்பும் ஐந்து நபர்களையும், அதற்கான காரணத்தையும் கேட்கும் பகுதிதான் இது. இந்த வாரம் விருந்தினர் மேஜையை அலங்கரிக்கிறார் பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன்!
கம்பருடன் சங்ககால உணவும் ராமாயணமும்!
``என் முதல் சாய்ஸ் கவிச்சக்கரவர்த்தி கம்பர்தான். என்னை எப்போதும் ஆச்சர்யப்படுத்துபவர். சங்ககால உணவுகளை விதவிதமாக அவருக்கு சமைத்துப் பரிமாற வேண்டும். அவர் வாயால், கம்பராமாயணத்தைக் கேட்டு ரசிக்க வேண்டும். `வடமொழியில் இருந்த ராமாயணத்தைப் பிழையின்றி, சுவையுற எப்படித் தமிழில் கொடுத்தீர்கள், வடமொழியை எப்படிக் கற்றுக்கொண்டீர்கள்?’ என்று கேட்க வேண்டும். அந்தக் காலகட்டத்தில் புலவர்கள் இரண்டு மொழிக்கும் எப்படி முக்கியத்துவம் கொடுத்துக் கற்றுக்கொண்டார்கள் என்பதைக் கேட்க வேண்டும்.’’
பாரதியும் ஆத்ம தரிசன உரையாடலும்!
``பாரதி என் ஆதர்சம். பசி, பட்டினியிலும் நாட்டின்மீதும், நாட்டு மக்களின்மீதும் இவ்வளவு பக்தியுடன் இருக்க முடியுமா என என்னை ஆச்சர்யப்படுத்திய கலைஞன். சகோதரி நிவேதிதை பாரதியாருக்கு குரு. காங்கிரஸ் மாநாட்டில் அவரைச் சந்தித்த பிறகுதான் பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் பற்றியெல்லாம் தீவிரமாக இயங்க ஆரம்பித்தார் பாரதி. அந்த ஆத்ம தரிசனத்தை அவர் வாயால் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். பாரதியின் கவிதைகள் தந்த உத்வேகத்தால்தான் நாங்கள் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறோம். அதற்காக நான் அவருக்கு நன்றி சொல்வேன்.’’
ராஜேந்திர சோழனும் கடற்படை அதிசயமும்!
``ராஜராஜ சோழனைப் பற்றித் தெரிந்த அளவுக்கு, ராஜேந்திர சோழனை நிறைய பேருக்குத் தெரியவில்லை. அவரிடம் நான் கேட்க விரும்புவது, அவருடைய கடற்படைகளை பற்றித்தான். `கடல் கட்டுமானங்களை அவ்வளவு சிறப்பாக எப்படி நீங்கள் அமைத்தீர்கள்?’ என அவரிடம் கேட்க வேண்டும். `அதற்கான ஆட்களை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள், அவர்களுக்கு எங்கிருந்து பயிற்சி அளித்தீர்கள், கடற்காற்று, கடல் பற்றிய தொழில்நுட்ப அறிவை எங்கிருந்து கற்றீர்கள்?’ என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்!’’

வாஜ்பாய்க்கு நன்றி நவிலல்!
``முன்னாள் பிரதமர் வாஜ்பாயை ஒருசில முறை பார்த்திருந்தாலும், அவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இரண்டு எம்.பி-க்கள் மட்டுமே இருந்த கட்சியை, அவர் வாழும் காலத்தில் இந்தியாவையே ஆள வைத்ததை நன்றியோடு அவரிடம் நினைவுகூர்வேன். அவர் மிகச்சிறந்த உணவுப்பிரியர். ஒருமுறை ஏதோவொரு காரணத்தால் மனம் வருந்தி, ‘இனி நான் கட்சி வேலைகளுக்குச் செல்ல மாட்டேன்’ எனக் கட்சி நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறார். இதைக் கேள்விப்பட்டு, எங்கள் கட்சியின் முன்னோடி தீனதயாள் உபாத்யாயா, வாஜ்பாய்க்குப் பிடித்த உணவுகள் அனைத்தையும் சமைத்து அவருக்குப் பரிமாறியிருக்கிறார். சாப்பிட்டு முடித்ததும் ‘நாளைக்கு நான் எங்கே டூர் போகணும்?’ எனக் கேட்டிருக்கிறார் வாஜ்பாய். அதனால், வாஜ்பாய்க்குப் பிடித்த உணவுகளை நானே சமைத்துப் பரிமாற வேண்டும்!’’
திருமாவளவனுடன் விவாதம்!
``சகோதரர் திருமாவளவன் தனது காலத்திலேயே ஒரு கட்சியை உருவாக்கி, பெரிய அளவில் வளர்த்தெடுத்த திறமையான நபர். நம் சமூகத்தில் தீண்டாமை இருப்பதை மறுக்க முடியாது. அதை நாம் அனைவரும் இணைந்துதான் முறியடிக்க வேண்டும். ஆனால், அம்பேத்கரின் கருத்துகளில் சிலவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு, ஒட்டுமொத்தமாக இந்த நாட்டின் பண்பாடுகளையும் மரபுகளையும் அழித்தொழிக்க நினைக்கும் அளவுக்கு அவரது பேச்சுகள் இருக்கின்றன. அது குறித்து அவரிடம் உரையாட வேண்டும். மத மாற்றத்தால் நம் பண்பாடு, நாகரிகம், கலாசாரம் அழிந்துகொண்டிருக்கிறது என்பதை எடுத்துரைக்க வேண்டும். ஆன்ம எழுச்சி பற்றிய கோல்வால்கரின் புத்தகங்களையும், சகோதரர் வெங்கடேசன் எழுதிய ‘இந்துத்துவ அம்பேத்கர்’ புத்தகத்தையும் அவருக்குப் பரிசளிக்க வேண்டும். அவருக்கு என்ன உணவு பிடிக்கும் என்று அவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, அந்த உணவுகளைப் பரிமாறியபடியே இவற்றை விவாதிப்பேன்!”