Published:Updated:

விருதுநகர்: சீனாவிலிருந்து வந்த தாய், மகளுக்கு கொரோனா உறுதி!

சுகாதாரக்குழு
News
சுகாதாரக்குழு

``கொரோனா பாதிப்புக்குள்ளான தாய், மகளை‌ச் சந்தித்த நபர்கள் மற்றும் குடும்ப உறவினர்களிடமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது." - சுகாதாரத்துறை

Published:Updated:

விருதுநகர்: சீனாவிலிருந்து வந்த தாய், மகளுக்கு கொரோனா உறுதி!

``கொரோனா பாதிப்புக்குள்ளான தாய், மகளை‌ச் சந்தித்த நபர்கள் மற்றும் குடும்ப உறவினர்களிடமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது." - சுகாதாரத்துறை

சுகாதாரக்குழு
News
சுகாதாரக்குழு

சீனா உட்பட உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதுமுள்ள விமான நிலையங்களில் வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பி வரும் பயணிகளுக்கும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று காலை 9:40 மணிக்கு இலங்கையிலிருந்து மதுரை விமான நிலையத்துக்கு வந்த 'ஏர்லங்கா' விமானத்தில் 70 பயணிகள் வந்தனர். அவர்களில், சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த தாய், மகள் இருவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பரிசோதனையில் அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சீனாவிலிருந்து மதுரைக்கு வந்த பெண், அவரின் 6 வயது மகள் இருவரும் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள இலந்தைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

ஆய்வு
ஆய்வு

அவர்களிடம், சுகாதாரத்துறையினர் நடத்திய விசாரணையில் , கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட பெண்ணின் கணவர் சுப்பிரமணியம் சீனாவில் வேலை செய்துவந்ததும், மனைவி, மகளுடன் மூன்று பேரும் சீனாவில் வசித்துவந்ததும் தெரியவந்தது. மேலும், பணி நிமித்தமாக சுப்பிரமணியம் கடந்த சில நாள்களுக்கு முன்பு சீனாவிலிருந்து ஜெர்மனிக்குச் சென்ற நிலையில், சுப்பிரமணியத்தின் மனைவி, மகள் இருவரும் சொந்த ஊரில் தங்கியிருப்பதற்காகத் தமிழகத்துக்குத் திரும்பியிருக்கின்றனர். இந்த நிலையில்தான், தாய், மகள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, அவர்களின் சொந்த ஊரான இலந்தைகுளத்தில் உள்ள சுப்பிரமணியத்தின் வீட்டில் தாய், மகள் இருவரும் 15 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து, இலந்தைகுளம் கிராமத்தில் சிவகாசி சுகாதாரத்துறை துணை இயக்குநர் கழுசிவலிங்கம் தலைமையில் மருத்துவக்குழுவினர் ஆய்வுசெய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் கிருமிநாசினி தெளித்தல் மற்றும் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடி சளி பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொரோனா பாதிப்புக்குள்ளான தாய், மகளை‌ச் சந்தித்த நபர்கள் மற்றும் குடும்ப உறவினர்களிடமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருவதாகவும், உருமாறிய பிஎஃப்.7 கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிய தாய், மகளின் சளி பரிசோதனை மாதிரிகள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன. எனவே, மக்கள் அச்சப்படத் தேவையில்லை என சிவகாசி துணை இயக்குநர் கழுசிவலிங்கம் தெரிவித்திருக்கிறார்.