உக்ரைன்மீது ரஷ்யா, கடந்த ஆண்டு, பிப்ரவரி 24-ம் தேதி தொடுத்த ஆக்கிரமிப்புப் போர், ஓராண்டைக் கடந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்துவைத்துவிட்டது. ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா-வில் தீர்மானம், மேற்குலக நாடுகளின் கண்டனம், பொருளாதாரத் தடைகள் எனப் பல விதிக்கப்பட்டும் போர் நின்றபாடில்லை.

மாறாக, சில நாள்களுக்கு முன்பு உக்ரைனுக்கு திடீர் விசிட் அடித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 500 மில்லியன் டாலர் அளவில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்போவதாகக் கூறியது, போரைத் தீவிரப்படுத்துமோ என்று சிந்திக்கவைத்திருக்கிறது.
மறுபுறம், பேச்சுவார்த்தை ஒன்றே போரின் முடிவுக்குத் தீர்வு என்று கூறிவரும் இந்தியா, கடந்த வாரம் ஐ.நா-வில் ரஷ்யாவுக்கெதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் எப்போதும்போல வாக்களிக்காமல் புறக்கணித்துவிட்டது.

இந்த நிலையில், `ரஷ்ய அதிபர் புதின், தனக்கு நெருக்கமானவர்களால் கொல்லப்படுவார்' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து வெளியான தகவலின்படி, நேற்று முன்தினம் ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த ஜெலன்ஸ்கி, ``ரஷ்யாவில், புதின் ஆட்சியின் பலவீனம் உணரப்படும் தருணம் நிச்சயம் இருக்கும். அப்போது, ஒரு கொலையாளியை இன்னொரு கொலையாளி கொல்வார்.

அதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள். அப்போது ஜெலன்ஸ்கியின் வார்த்தைகளை அவர்கள் நினைவுகூர்வார்கள். இது நடக்குமா என்றால்... நடக்கும். ஆனால், எப்போது நடக்கும் என்று எனக்குத் தெரியாது" என்றார்.