சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

தனஞ்ஜெயர்களின் சொல்லப்படாத கதை!

வி.பி.தனஞ்ஜெயன்-சாந்தா
பிரீமியம் ஸ்டோரி
News
வி.பி.தனஞ்ஜெயன்-சாந்தா

நாங்க நடத்தின 30 நாள் ஷோவையும் ரெஸ்டாரன்ட்ல இருந்த ஒருத்தர் பார்த்திருக்கார். கடைசி நாள் அன்னிக்கி நாங்க செஞ்ச மாதிரியே ஆடி, நடிச்சுக் காட்டினார்.

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

இந்திய பரதக்கலை வரலாற்றில் கல்வெட்டில் பொறித்ததுபோல் அழுத்தமாகப் பதிந்துவிட்ட பெயர், வி.பி.தனஞ்ஜெயன்-சாந்தா தம்பதி. நூற்றுக்கணக்கான தனிநபர் நடனங்கள், எண்ணற்ற நாட்டிய நாடகங்கள் என இவர்கள் மேடையில் நிகழ்த்திய அற்புதங்கள் ரசிகர்களால் உச்சிமுகரப்பட்டவை. `இந்தியாவின் மிக உயரிய விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்ற தம்பதி’ என்கிற பெருமைக்கு உரித்தானவர்கள். பத்ம பூஷண் மட்டுமல்ல... இவர்கள் பெற்ற விருதுகளின் பட்டியல் இரண்டு மூன்று பக்கங்களுக்கு நீள்கிறது. நடனம் நிகழ்த்துவதுடன் மட்டுமின்றி, நடனக்கலையைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாகவும் இருக்கிறார்கள். அந்தப் பணியையும் இணைந்தேதான் செய்கிறார்கள். இதற்காக `பரத கலாஞ்சலி’ என்கிற நாட்டியப் பள்ளியை சென்னையில் நடத்திவருகிறார்கள். முதுமையிலும் சிறு துளி வாட்டமில்லாமல், உற்சாகத்தோடு வலம்வர முடியுமா... `முடியும்’ என்று நிரூபித்துக் காட்டிவருகிறார்கள். கொஞ்சம்கூட ஊக்கம் குறையாமல், சுற்றிச் சுழன்று நாட்டிய வகுப்புகளைத் தங்கள் மாணவர்களுக்கு எடுக்கிறார்கள்; புதிய நாட்டிய நாடகம் - தனிநபர் நடனத்துக்கான பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள்; அவ்வப்போது மேடை நிகழ்வுகளையும் நடத்துகிறார்கள்... இத்தனை செயல்களையும் துடிப்புடன் இவர்களை நிகழ்த்த வைத்திருப்பது, இவர்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட நடனக்கலை!

தனஞ்ஜெயர்களின் சொல்லப்படாத கதை!

ஒரு நடனக்கலைஞரின் பார்வையில்...

எந்தக் கலையாகவும் இருக்கட்டும்... கலை, ஒரு கலைஞரோடு ஒன்றிப்போகும்போதுதான் அந்தக் கலைஞர் முழுமை பெறுகிறார். நடனக்கலைஞர் தனஞ்ஜெயனும், அவருடைய துணைவியார் சாந்தாவும் முழுமை பெற்றவர்கள். அவர்களுடைய முக்கியத்துவம் குறித்து பிரபல நடனக்கலைஞர் லட்சுமி ராமசுவாமி தன் வார்த்தைகளில் விவரிக்கிறார்... ``நான் அவங்களோட ஸ்டூடன்ட் இல்லை. சித்ரா விஸ்வேஸ்வரனோட ஸ்டூடன்ட். ஆனாலும் தனஞ்ஜெயன் மாஸ்டர் எனக்கு அண்ணா மாதிரி. தனஞ்ஜெயன் மாஸ்டரும், சாந்தா அக்காவும் முக்கியமானவங்களா இருக்கக் காரணம், பரதக்கலையில அவங்க படைச்ச புதுமைகள். கலாஷேத்ராவுல பயிற்சி பெற்றவங்களா இருந்தாலும், தனிநபர் நாட்டியமாகட்டும்... அவங்களோட புரொடக்‌ஷன்ல வந்த நாட்டிய நாடகமாகட்டும்... எக்ஸ்ட்ராவா அவங்களோட கிரியேட்டிவிட்டி இருக்கும். அது பார்க்குற ஒவ்வொரு ரசிகரையும் பிரமிக்க வெச்சுடும்.

ஒரு நாட்டியம் தொடங்குற நிகழ்வுல இருந்து அது முடியுற தில்லானா வரைக்கும் அவங்களோட பங்களிப்பு அட்டகாசமானது; தனித்துவமானது. பரதத்துல பல புதிய முயற்சிகளை அவங்க செஞ்சுருக்காங்க. உதாரணத்துக்கு ஒண்ணைச் சொல்லலாம். `தி ஜங்கிள் புக்’ கதையையே நாட்டிய நாடகமா வடிவமைச்சிருக்காங்க. அதெல்லாம் யாரும் நினைச்சுப் பார்க்க முடியாத பெரிய சாதனை. எந்த நாட்டுக்குப் போனாலும் அங்கே தனஞ்ஜெயன் மாஸ்டர், சாந்தா அக்காவோட மாணவர்கள் இருப்பாங்க. அந்த அளவுக்கு அவங்களோட சிஷ்ய பரம்பரை ரொம்பப் பெருசு. இவ்வளவு சாதிச்சிருந்தாலும், அவங்களோட எளிமை இருக்கே... அப்பப்பா... அதுதான் இன்னிக்கு வரைக்கும் என்னை பிரமிக்க வெக்கிற ஒண்ணு.

அவங்களைப் போலவேதான் நானும். எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் நானும் என் கணவரும் ஒண்ணாத்தான் போவோம். எப்போ போன் பண்ணினாலும் உடனே எடுத்துப் பேசுவாங்க. சில நேரத்துல ஏதோ புரோக்ராம்ல இருந்தா, அதை முடிச்சுட்டு போன் பண்ணுவாங்க... `காலையில கூப்பிட்டிருந்தியேம்மா. என்ன விஷயம்’னு கேப்பாங்க. கேட்கிற சந்தேகங்களுக்கு உடனே பதில் சொல்லுவாங்க. அவங்க புரொடக்‌ஷன்ல வந்த ஒரு பாட்டு `சப்தம்’... முருகன் பத்தின பாட்டு. அதை என் புரோக்ராமுக்கு பயன்படுத்திக்கலாம்னு தோணிச்சு. போன் பண்ணி கேட்டவுடனே, ஒரு மறுப்பும் இல்லை. `தாராளமா யூஸ் பண்ணிக்கோ’ன்னு சொன்னார் தனஞ்ஜெயன் மாஸ்டர். விஜயதசமி நாள்ல குருகிட்ட நாங்கள்லாம் ஆசீர்வாதம் வாங்குறது வழக்கம். அப்போல்லாம் தனஞ்ஜெயன் மாஸ்டர், சாந்தா அக்காகிட்ட ஆசீர்வாதம் வாங்கியிருக்கேன். எங்களோட நாட்டியப்பள்ளி ஆரம்பிச்சு 25 வருஷம் ஆனப்போ அவங்களை அழைச்சிருந்தேன். சந்தோஷமா வந்து வாழ்த்திட்டுப் போனாங்க. அன்னிக்கி தனஞ்ஜெயன் மாஸ்டர் கொடுத்த அர்த்தநாரீஸ்வரர் ஓவியம், எனக்குக் கிடைச்ச மிகப்பெரிய கிஃப்ட்.’’ லட்சுமி ராமசுவாமியின் குரலில் பரவசம் தெரிகிறது.

தனஞ்ஜெயர்களின் சொல்லப்படாத கதை!

கலாஷேத்ராவில் மலர்ந்த காதல்!

கேரளாவில், கண்ணூர் மாவட்டத்திலிருக்கும் பையனூர் என்கிற சின்னஞ்சிறு ஊரில் பிறந்தவர் தனஞ்ஜெயன். எட்டுக் குழந்தைகளைக் கொண்ட பெரிய குடும்பம். அந்தக் குடும்பம் கஷ்டப்படுவதைப் பார்த்தார் கதகளி மாஸ்டர் சந்து பணிக்கர் என்பவர். தனஞ்ஜெயனுக்கு நடனத்தின் மேலிருந்த ஆர்வமும் அவருக்குப் புரிந்தது. தனஞ்ஜெயனின் தந்தையாரிடம் பேசினார். தனஞ்ஜெயனை சென்னை கலாஷேத்ராவில் கொண்டு வந்து சேர்த்தார். தனஞ்ஜெயனுக்கு அங்கு குருவாக வாய்த்தவர், கலாஷேத்ராவின் நிறுவனர், பிரபல பரதநாட்டியக் கலைஞர் ருக்மிணி தேவி அருண்டேல். பரதக்கலையோடு கதகளியையும் சேர்த்துக் கற்றுக்கொண்டார் தனஞ்ஜெயன். இரண்டிலும் முதுகலை டிப்ளோமா பட்டமும் பெற்றார். கூடவே பொருளாதாரம், அரசியலில் பி.ஏ பட்டமும் பெற்றிருந்தார். அது, ஆண்கள் நாட்டியக்கலையை அதிகம் விரும்பாத காலம். ஆனாலும் அவருக்கு நாட்டியக்கலைமீது தீராத காதல். இன்னொருவரையும் காதலித்தார் தனஞ்ஜெயன். அவர், சாந்தா.

சாந்தாவுக்குப் பூர்வீகம் கேரளா. ஆனால், பிறந்து வளர்ந்ததெல்லாம் மலேசியாவில். நடனத்தின் மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டை அவருடைய பெற்றோர் உணர்ந்துகொண்டார்கள். எட்டு வயது நடக்கும்போதே அவரை கலாஷேத்ராவில் கொண்டு வந்து சேர்த்தார்கள். தனஞ்ஜெயன் அங்கு வருவதற்கு ஒரு வருடத்துக்கு முன்பாகவே கலாஷேத்ராவில் சேர்ந்துவிட்டார் சாந்தா. கதகளி, பரதநாட்டியம், கர்னாடக இசை மூன்றிலும் முதுகலை டிப்ளோமா பட்டம் பெற்றவர். சாந்தா, தனஞ்ஜெயன் இருவரும் ஒன்றாகவே நடனம் கற்றார்கள். இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததும் கலாஷேத்ராவில்தான்.

1966-ம் ஆண்டு குருவாயூரில் இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்த ஜோடி மேடையிலும் வாழ்க்கையிலும் இணைந்தே பயணத்தைத் தொடர்ந்தது. கலாஷேத்ராவில் நடன ஆசிரியராகவும் இருந்தார் தனஞ்ஜெயன். ஒரு கட்டத்தில் அந்த வருமானம் போதாமல், கலாஷேத்ராவிலிருந்து வெளியே வந்தார். பெரும் பணக்கார வீட்டுக் குழந்தைகளும், மேட்டுக்குடியினரின் பிள்ளைகளும் மட்டுமே நடனத்தில் கோலோச்சிவந்த காலம் அது. ஆனாலும் சாந்தாவும் தனஞ்ஜெயனும் தங்களின் கலையை, தங்கள் திறமையை மட்டுமே நம்பிக் களத்தில் இறங்கினார்கள். வித்தியாசமான உடைகள், அதுவரை மேடையில் பார்த்தறியாத நடன அசைவுகள், முக பாவங்கள், இதில் ஆணும் பெண்ணும் இணைந்து ஆடும் புதுவகை நடனம், போதாதா... ரசிகர்கள் தனஞ்ஜெயனையும் சாந்தாவையும் வாரி அணைத்துக்கொண்டார்கள். இந்தியாவில் மட்டுமல்ல... வெளிநாடுகளிலிருந்தெல்லாம் நாட்டிய நிகழ்ச்சி நடத்த அழைப்பு வர ஆரம்பித்தது.

லட்சுமி ராமசுவாமி
லட்சுமி ராமசுவாமி

நாட்டியத்தில் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற முனைப்பு சதா இருவருக்குள்ளும் இருந்தது. புதிதாக ஒரு நிகழ்வை நடத்தினால் அதோடு திருப்தி அடைந்துவிடும் சுபாவம் இருவருக்குமே இல்லை. `அடுத்து என்ன பண்ணலாம்...’என்கிற எண்ணமே ஓடிக்கொண்டிருக்கும். அப்படி பண்டிட் ரவிசங்கருடன் இணைந்து நிகழ்த்திய `கண்ஷ்யாம்’, வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,000 குழந்தைகளை ஒருங்கிணத்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடத்திய `சக்ரா’, `தி ஜங்கிள் புக்’ கதையை பாலே நடனக்கலைஞர்களுடன் இணைந்து நடத்திய நிகழ்வு... என ஒவ்வொன்றும் நாட்டிய உலகில் முத்திரை பதித்தன. இன்னமும் அந்த வேட்கை குறையாமல் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள் இருவரும். 1968-ம் ஆண்டு `பரத கலாஞ்சலி’ நடனப் பள்ளியை சென்னையில் தொடங்கினார்கள். 54 ஆண்டுகளைத் தொட்டு எத்தனையோ நடனக்கலைஞர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது `பரத கலாஞ்சலி.’

புத்தகமல்ல... ஆவணம்!

இந்த வருடம், ஜூலை மாதம் `ஆஃப்ஸ்டேஜ்’ (Offstage) என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. தனஞ்ஜெயன், சாந்தா இருவரின் மேடை வாழ்க்கைக்கு அப்பால் நடந்த சில நிகழ்வுகளை மூன்று ஓவியர்கள் சித்திரமாக வரைந்து அந்தப் புத்தகத்தில் காட்சிப்படுத்

தியிருந்தார்கள். சத்விக் கடே, அலமேலு அண்ணாமலை, ரோஹித் பாசி என மூன்று ஓவியக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான இந்தப் புத்தகம், ஓவியங்கள் மூலமாக தனஞ்ஜெயன், சாந்தா இருவர் வாழ்விலும் நடந்த பல முக்கிய நிகழ்வுகளை அசைபோட்டிருக்கிறது. சுருக்கமாகக் குறிப்பிடுவதென்றால், அது சொல்லப்படாத கதை.

ஒரு சம்பவம்... நடன நிகழ்வுக்காக நைஜீரியாவுக்குப் போகிறார்கள் தனஞ்ஜெயனும் அவருடைய குழுவினரும். அவர்களை ஒருங்கிணைத்த இராவோ (Irawo) என்பவர் சரியான பேர்வழியில்லை என்பது அங்கே போன பிறகுதான் தெரிகிறது. ஆளே இல்லாத அரங்கத்தில் நிகழ்ந்தது நாட்டிய நிகழ்வு. `நீங்க நடத்துங்க... ஜனங்க வருவாங்க...’ என கடைசிவரை ஏமாற்றினார் இராவோ. உடன் வந்தவர்களெல்லாம் சோர்ந்துபோகிறார்கள். குழுவினர் தங்க சரியான இடவசதி இல்லை; தண்ணீர் இல்லை; உச்சகட்டமாக ஒருநாள் இரவு உணவே இல்லை. எப்படியோ சில நல்ல மனிதர்களின் உதவியால் வேறு சில இடங்களில் நாட்டிய நிகழ்வுகளை நடத்திவிட்டுத் திரும்புகிறார்கள் தனஞ்ஜெயன் குழுவினர்.

தனஞ்ஜெயர்களின் சொல்லப்படாத கதை!

இந்த சம்பவம் பற்றிக் கேட்டால், சிரித்த முகமாக பதில் சொல்கிறார் தனஞ்ஜெயன்... ``நிகழ்ச்சின்னு போனா இந்த மாதிரி சில சங்கடங்கள் நடக்கத்தான் செய்யும். எத்தனையோ நல்லதும் நடந்திருக்கே! ஒரு முறை ரஷ்யாவுக்குப் போயிருந்தோம். அதாவது அது, ஒன்றுபட்ட சோவியத் யூனியனா இருந்த காலம். அங்கே பல ஸ்டார் ஹோட்டல்கள் இருக்கு. ஆனா, நாம விரும்பற மாதிரி சாப்பாடு கிடைக்காது. அதிலும் வெஜிட்டேரியன்னா ரொம்பக் கஷ்டம். ஒருமுறை ஜார்ஜியாவுல தங்கியிருந்தோம். எங்களோட அவஸ்தையைப் பார்த்த ஹோட்டல் நிர்வாகத்தினர், `வேணும்னா நீங்களே சமைச்சுக்கோங்க, கிச்சனை நாங்க தர்றோம்’னு சொன்னாங்க. எங்க குழுவுல இருந்த ஆண்களும் பெண்களும் அங்கே இருந்த காய்கறிகளைக் கொண்டு சமைச்சாங்க. நாங்க மொத்தம் 19 பேர். இப்படி இந்தியாவுல இருந்து ஒரு குழு வந்து, ஹோட்டல்ல சமைச்சு சாப்பிடுறதுங்கறது அங்கே பத்திரிகைகள்லயும் டி.வி சேனல்கள்லயும் பெரிய நியூஸாகிடுச்சு. இது நல்ல அனுபவம்தானே...’’

தனஞ்ஜெயன் விட்ட இடத்திலிருந்து சாந்தா ஆரம்பிக்கிறார்... ``நாங்க ஐரோப்பாவுல முதல்ல நிகழ்ச்சிக்காகப் போனது பாரிஸுக்கு. பிரெஞ்ச் கவர்ன்மென்ட் எங்களை அழைச்சிருந்தது. அது பெரிய ஓப்பனிங் எங்களுக்கு. அங்கே முப்பது நாளைக்கு ஷோ. நேஷனல் தியேட்டர். கீழ பெரிய ரெஸ்டாரன்ட். என்ன... வெஜிட்டேரியன் கிடைக்காது. நாங்க இங்கேருந்து ரசப்பொடி கொண்டு போயிருந்தோம். அதுக்கு வெந்நீரும் ஒரு எலுமிச்சைப்பழமும் வேணும். அங்கே இருந்தவங்களுக்கோ பிரெஞ்சைத் தவிர வேற ஒண்ணும் தெரியாது. எப்படிக் கேட்கறது. `லெமன்’னு கேட்டா அவங்களுக்குப் புரியலை. முட்டை, தக்காளின்னு என்னென்னவோ கொண்டு வந்தாங்க. நான் என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். அபிநயத்துல சொல்லலாம்னு முடிவு பண்ணினேன். இடது கை விரல்களைத் தூக்கிக் குவிச்சுவெச்சுக்கிட்டு அதுல உருண்டையா ஒண்ணை காட்டி, வலது கை ஆள்காட்டி விரலால அதை கட் பண்ற மாதிரி பாவனை பண்ணி, அதைத் தொட்டு நாக்குல வெச்சு, `ஸ்ஸ்... ப்பா...’னு சொன்னேன். அவ்வளவுதான்... உடனே அது எலுமிச்சைப்பழம்னு அங்கே இருந்தவருக்குப் புரிஞ்சிடுச்சு. நான் கேட்டது ஒண்ணு, அவரோ தட்டு நிறைய எலுமிச்சைப் பழங்களைக் கொண்டு வந்துவெச்சுட்டார்...’’ என்று சொல்லி வாய்விட்டுச் சிரிக்கிறார் சாந்தா.

தனஞ்ஜெயர்களின் சொல்லப்படாத கதை!

``நாங்க நடத்தின 30 நாள் ஷோவையும் ரெஸ்டாரன்ட்ல இருந்த ஒருத்தர் பார்த்திருக்கார். கடைசி நாள் அன்னிக்கி நாங்க செஞ்ச மாதிரியே ஆடி, நடிச்சுக் காட்டினார். நாங்க ஆடிப்போயிட்டோம்’’ என்கிறார் தனஞ்ஜெயன். அர்த்தமுள்ள அனுபவங்கள் எப்போதுமே நெகிழவைப்பவை. பல அனுபவங்கள் பாடம் சொல்லும்; நம்மைப் பக்குவப்பட வைக்கும். தனஞ்ஜெயர்கள் தங்கள் அனுபவங்களைப் பாடமாக்கிக் கொண்டவர்கள். ஒரு சொட்டு புளிப்புக்கூட இல்லாத பழுத்த பழமாகி நிற்பவர்கள். அவர்களுக்குக் கிடைத்த வாழ்வனுபவங்களே நடனக்கலையை சுவாசமாக்கிக்கொள்ளக் காரணமாகியிருக்கின்றன. தனஞ்ஜெயர்களின் கதை சொல்லப்படாத, சொல்லப்படவேண்டிய கதை!