சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

இது வேறமாதிரி வியாசர்பாடி!

வியாசர்பாடி
பிரீமியம் ஸ்டோரி
News
வியாசர்பாடி

தமிழ்நாட்டுல எந்த ஊருக்குப்போய் வியாசர்பாடின்னு சொன்னாலும் நம்மேல இருக்கிற பார்வை மாறிடும். காரணம், எங்க ஊரைப் பத்தி வடிவமைச்சிருக்கிற பிம்பம்.

“இவர் பாஸ்கர்... எம்.பி.ஏ படிச்சிருக்கார். பரத் பி.காம் முடிச்சிருக்கார். ரஹ்மத் எல்.எல்.பி, நான்ஸி எம்.பில்... த்ரிஷா பி.ஏ பட்டதாரி... விஜயலட்சுமி பி.காம்ல கோல்டு மெடலிஸ்ட்... நாங்க எல்லாருமே முதல் தலைமுறைப் பட்டதாரிங்க. வியாசர்பாடின்னா ரவுடி... கஞ்சான்னு எதிர்மறையான பார்வையை மாத்தணும்கிறதுக்காகத்தான் நாங்கெல்லாம் கைகோத்து இங்கே நிக்குறோம்...”

உணர்ச்சிகரமாகப் பேசும் சரத்குமார், சட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றவர். இவரும் சட்ட மாணவரான பிரேம்குமாரும் 50க்கும் மேற்பட்ட இளைஞர்களை இணைத்து உருவாக்கியதுதான் ‘வியாசைத் தோழர்கள்’ அமைப்பு. கொரோனாத் தொற்றுக்குள்ளாகி சுவாசப் பிரச்னையால் தவித்த முகமறியாத 200க்கும் மேற்பட்ட மனிதர்களுக்கு ‘ஆட்டோ ஆம்புலன்ஸ்’ மூலம் உயிர் தந்திருக்கிறார்கள் ‘வியாசைத் தோழர்கள்.’

இது வேறமாதிரி வியாசர்பாடி!

வியாசர்பாடி, முல்லை நகர்ப் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் உள்ள பிளாட்பாரம்தான் கண்ட்ரோல் ரூம். டேபிளில் மாஸ்க், பி.பி.இ கிட், சானிட்டைசர்கள் குவிந்திருக்கின்றன. எட்டு ஆட்டோக்கள் அணிவகுத்து நிற்கின்றன. இன்னொருபுறம் ஒரு அமரர் ஊர்தி இருக்கிறது. ‘வியாசைத் தோழர்கள்’ என்று பனியன் அணிந்த இளைஞர்கள் அங்குமிங்குமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். வரும் போன்கால்களை ஒருங்கிணைத்து த்ரிஷா, ரஷ்யாபானு, நான்ஸி, விஜயலெட்சுமி, சுரேஷ் பாபு ஆகியோர் பைலட்களுக்குத் தெரிவிக்க, அடுத்த நொடி ஆட்டோ ஆம்புலன்ஸ் பறக்கிறது.

“தமிழ்நாட்டுல எந்த ஊருக்குப்போய் வியாசர்பாடின்னு சொன்னாலும் நம்மேல இருக்கிற பார்வை மாறிடும். காரணம், எங்க ஊரைப் பத்தி வடிவமைச்சிருக்கிற பிம்பம். போன தலைமுறை இந்தத் துயரத்தைச் சுமந்துகிட்டே வாழ்ந்திடுச்சு. எங்களால அப்படியிருக்க முடியலே. பத்தாம் வகுப்புல நான் ஸ்கூல் பர்ஸ்ட். பிளஸ்டூலயும் தமிழ்ல முதல்மார்க் வாங்கினேன். பொறியியல் படிக்கக் கல்லூரிக்குப் போன முதல்நாளே, ஆசிரியர் எந்த ஊர்னு கேட்டார்... ‘வியாசர்பாடி’ன்னு சொன்னவுடனே, ‘வியாசர்பாடி ரவுடியா’ன்னார்.

இது வேறமாதிரி வியாசர்பாடி!

இங்கேயிருக்கிற அம்பது பேர்ல நாப்பத்தஞ்சு பேர் பட்டதாரிங்க. நாங்கெல்லாம் பத்தாம் வகுப்பு படிக்கிற காலத்துல இருந்தே ஒண்ணா இணைஞ்சு வேலை செய்ய ஆரம்பிச்சுட்டோம். கல்வி மட்டும்தான் எங்க வாழ்க்கையையும் எங்க ஊரைப்பத்தின பார்வையையும் மாத்தும்னு முடிவு பண்ணி வேலை செஞ்சோம். எங்க பிள்ளைகளுக்காக ‘டாக்டர் அம்பேத்கர் பகுத்தறிவுப் பாடசாலை’ன்னு ஆரம்பிச்சோம்.

படிக்கிற நேரத்துலயே பகுதி நேரமா ஆட்டோ ஓட்டுவோம். பழக்கடை, கண்ணாடிக் கடையில வேலை செய்வோம். கிடைக்கிற காசை வச்சு பிள்ளைகளுக்கு நோட்டுப் புத்தகம் வாங்கிக் கொடுப்போம். மோட்டிவேஷனல் கிளாஸ் நடத்துவோம். ஒரு ஆங்கிலோ இண்டியன் அக்காவை வச்சு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி கொடுப்போம். 9 பிள்ளைகளோட ஒரு மொட்டை மாடியில தொடங்கின டியூஷன் இப்போ ஒரு பொது இடத்துல தனிக்கட்டடத்துல நடக்குது. 120 பிள்ளைங்க படிக்கிறாங்க...” பெருமிதமாகச் சொல்கிறார் சரத்குமார்.

இது வேறமாதிரி வியாசர்பாடி!
இது வேறமாதிரி வியாசர்பாடி!

வியாசைத் தோழர்களின் எல்லாப் பணிகளுக்கும் பின்புலமாக வியாசர்பாடி மக்களே இருக்கிறார்கள். கஜா புயல் வந்தபோது, இந்த மக்கள் கொட்டிக்கொடுத்த நிவாரணப் பொருள்களோடு தஞ்சாவூர்ப் பகுதிகளுக்குச் சென்று துயர் துடைத்திருக்கிறார்கள் தோழர்கள். நிவர் புயல் சமயத்தில் தங்கள் பாடசாலையைத் தற்காலிக முகாமாக்கி அனைவரையும் தங்கவைத்து உணவுதந்து பாதுகாத்திருக்கிறார்கள்.

கொரோனா லாக்டௌன் காரணமாக உலகமே முடங்கியது. கல்விப்பணிகளுக்குத் தற்காலிக விடுப்பளித்து, களத்தில் இறங்கினார்கள் வியாசைத் தோழர்கள். தங்கள் மக்களிடம் மட்டுமன்றி, சமூக ஊடகங்கள் வழியாகப் பொதுவெளியிலும் உதவிகள் பெற்று வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள் கையில் சேர்த்தார்கள்.

இது வேறமாதிரி வியாசர்பாடி!
இது வேறமாதிரி வியாசர்பாடி!

“முதல்ல எங்க பாடசாலை மாணவர்களோட குடும்பங்களுக்கு உதவிகள் செஞ்சோம். அடுத்து தூய்மைப்பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், கணவனை இழந்தவர்கள்னு தேவையை சரியாக் கண்டுபிடிச்சு உதவிகளைக் கொண்டு சேர்த்தோம். 4000 பேருக்கு மேல போய்ச் சேர்ந்திருக்கு. அதுமட்டுமல்லாம, எங்க அக்காக்கள், அம்மாக்களை வச்சு சமைச்சு பத்தாயிரம் பேருக்கு மேல உணவு கொடுத்தோம். நாளாக நாளாக ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகள்ல படுக்கைத் தட்டுப்பாடு வந்து மக்கள் தவிக்கத் தொடங்கினாங்க. உயிரிழப்புகளும் அதிகமாச்சு.

இது வேறமாதிரி வியாசர்பாடி!

கூடிப்பேசினோம். தோழர்கள்ல தமிழ்மணி, பிரேம், சதீஷ், அன்பு, ரமேஷ், சரத், யோகேஷ்னு பத்துப் பேருக்கு மேல பகுதிநேரமா ஆட்டோ ஓட்டுறாங்க. ஆட்டோவுல ஆக்சிஜன் சிலிண்டரை வச்சு அவசரத் தேவைக்கு உதவலாம்னு முடிவெடுத்தோம். எல்லாரும் ஆட்டோவை ஒப்படைச்சாங்க. வெல்டிங் பண்றவங்க, கேஸ் ஏஜென்ஸி நடத்துறவங்களை அணுகினோம். எந்தக் கேள்வியுமில்லாம சிலிண்டர்கள் தந்தாங்க. வடசென்னை அண்ணன்கள் வசந்த், நூர்தீன் ரெண்டு பேரும் ஆட்டோவுல எளிமையா சிலிண்டரைப் பொருத்திக் கொடுத்தாங்க. `சாரல்’னு ஒரு அமைப்புல இருந்து கொஞ்சம் பண உதவி செஞ்சாங்க. நந்தான்னு ஒரு தோழர் வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க வச்சிருந்த பணத்தைக் கொடுத்தார். இன்னொரு தோழர் டியூ கட்ட வச்சிருந்த பணத்தைத் தந்தார். அந்தப் பணத்துல ஆக்சிஜன் நிரப்பிக்கிட்டோம். அவசரத் தேவைக்கு மூணு ஆக்சிஜன் ஆட்டோ, தொற்றுள்ளவங்களுக்கு உதவுறதுக்காக மூணு ஆட்டோ, தொற்று இல்லாதவங்களுக்கு உதவ மூணு ஆட்டோ. சக்திவேல் அண்ணா இறந்தவங்களை அடக்கம் பண்ண உதவுறதுக்காக தன்னோட வாகனத்தைக் கொண்டு வந்து இங்கே நிறுத்திட்டார். இந்தப்பகுதியில இருக்கிற டாக்டர் கீதாப்பிரியா ஆக்சிமீட்டர்கள் வாங்கிக்கொடுத்தாங்க. தோழர்களுக்கு வேலைகளைப் பிரிச்சுக் கொடுத்தோம். இந்தச் சூழல் மாறும் வரைக்கும் பிளாட்பாரத்துலதான் வாழ்க்கைன்னு எல்லார்கிட்டயும் சொல்லிட்டோம். கடந்த 35 நாள்கள்ல 200 பேருக்கு மேல உயிர் மீட்டிருக்கோம்” என்கிறார் சரத்குமார்.

இப்போது விழிப்புணர்வும் மனிதநேயமும்தான் வியாசர்பாடியின் அடையாளங்கள். மாறவேண்டியது அவர்கள் அல்லர்; நாம்!