மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றில் கல்லணையிலிருந்து 1.25 லட்சம் கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டதைத் தொடர்ந்து, கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களுக்கு வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.
ஆற்றின் கரையோரக் கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் பிரசாரம்செய்து மேடான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொதுப்பணித்துறையின் கொள்ளிடம் உதவி பொறியாளர் சிவசங்கரன் தலைமையில் கொள்ளிடம் ஆற்றின் கரையில் மென்மையாக உள்ள பகுதிகளைச் சரி செய்யும் வகையில் முதற்கட்டமாக கொள்ளிடம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் 1,000 மணல் மூட்டைகள் தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், உடைப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டால் உடனடியாக விரைந்து அடைத்து சரி செய்வதற்கு 5 டன் சவுக்கு கட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில், மேய்ச்சலுக்காகச் சென்ற 10 எருமை மாடுகள் ஆற்றின் நடுவிலுள்ள திட்டில் சிக்கிக் கொண்டன. தண்ணீர் சூழ்ந்து கொண்டதால் மாடுகளின் உரிமையாளர் நேரே சென்று அவரின் அனைத்து மாடுகளையும் தண்ணீரில் சாதுர்யமாக நீந்தி ஒட்டிவந்து கரை சேர்த்துவிட்டார். இதே போல் 12 ஆடுகள் கொள்ளிடம் ஆற்றின் நடுவில் உள்ள திட்டுப் பகுதியில் சிக்கிக் கொண்டு தத்தளித்தன.
படிப்படியாக தண்ணீர் அதிகரித்ததால் சுற்றியுள்ள புதர்முள் செடிகளில் ஆடுகள் மாட்டிக் கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. கொள்ளிடம் போலீஸார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முயற்சி எடுத்து, அந்தப் பகுதியில் தண்ணீரில் நீந்தக் கூடிய சிலர் மூலம் ஆடுகளை பத்திரமாக மீட்டுவந்து கரையில் சேர்த்தனர்.

கொள்ளிடம், சந்தப்படுகை, நாதல்படுகை, திட்டு படுகை, முதலைமேடு உள்ளிட்ட கொள்ளிடம் ஆற்றின் கரையோரக் கிராமங்களில் சீர்காழி ஆர்.டி.ஓ அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார் மற்றும் அரசு ஊழியர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ளவர்களை மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.