கட்டுரைகள்
Published:Updated:

ஊருக்குப் போனாலும் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சலாம்!

சந்தோஷ் ஷேத் - தீபிகா
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தோஷ் ஷேத் - தீபிகா

எங்களது நோக்கம் நீர்ப் பாசனத்தை எளிதாக்குவது மற்றும் தண்ணீர் வீணாவதைத் தடுப்பது. இந்த நீர்ப்பாசன ஆட்டோமேஷன் கருவி அல்கலைன் பேட்டரிகள் மூலம் இயங்குகிறது.

‘ஊருக்குப் போயிட்டா செடிக்கு யாரு தண்ணி ஊத்துறது?’ - இது பலரின் கவலை. ஆனால், டெக்னாலஜி உதவியால் வெளிநாட்டில் இருந்தபடியேகூட உங்கள் பால்கனி, மாடித்தோட்டத்துச் செடிகளுக்கு நீர் ஊற்றலாம் என்றால் ஹேப்பிதானே? அதைத்தான் செயல்படுத்திக்கொடுக்கிறார்கள் சந்தோஷ் ஷேத் - தீபிகா தம்பதி!

மங்களூரைச் சேர்ந்த 30 வயதான சந்தோஷ் ஷேத், அவரின் மனைவி தீபிகா இருவரும் இணைந்து செடிகளுக்கு நீர் பாய்ச்சும் ஆட்டோமேஷன் சாதனம் ஒன்றைத் தயாரித்துள்ளனர். இருவரும் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வேலையைத் துறந்தவர்கள். இந்தக் கருவியை ஒரு வருட கடின உழைப்பிற்குப் பிறகு கண்டுபிடித்துள்ளனர்.

ஊருக்குப் போனாலும் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சலாம்!

“எங்களது நோக்கம் நீர்ப் பாசனத்தை எளிதாக்குவது மற்றும் தண்ணீர் வீணாவதைத் தடுப்பது. இந்த நீர்ப்பாசன ஆட்டோமேஷன் கருவி அல்கலைன் பேட்டரிகள் மூலம் இயங்குகிறது. பேட்டரியின் ஒருமுனை தண்ணீர்க் குழாயோடு இணைக்கப்பட்டிருக்கும். மறுமுனை 16 எம்.எம் சொட்டுநீர்ப் பாசனக் குழாயோடு இணைக்கப்பட்டிருக்கும். சொட்டுநீர்க் குழாயைச் செடிகளின் மீது விட்டுவிட வேண்டும். ஆன் செய்ததும், நீர்க் குழாயிலிருந்து சொட்டுநீர்க் குழாய்க்குத் தண்ணீர் செல்ல, தொலைதூரத்தில் இருந்துகொண்டே இதை எளிதாக இயக்க முடியும். பேட்டரியிலேயே இன்னொரு கருவியையும் (Device) இணைத்திருக்கிறோம். இதில் வானிலை அடிப்படையில் இயங்கக்கூடிய அல்காரிதம்களும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மழை, வெயில் உள்ளிட்ட விவரங்களையும் பெற முடியும். இந்த சாதனத்தின் மூலம் பெரிய தோட்டங்கள் முதல் பால்கனிச் செடிகள் வரை நீர்ப்பாசனத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.

இந்த நீர்ப்பாசன ஆட்டோமேஷன் கருவி திறந்தவெளியில் வைக்கப்பட வேண்டும். இது இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் என்பதால், பேட்டரி தீர்ந்துபோவது, மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் இல்லாதுபோவது போன்றவை செல்போன் செயலியின் வழியாகப் பயனருக்குத் தெரிவிக்கப்படும் வசதியும் உள்ளது. இது இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் என்ற இயங்குதளத்தில் இயங்குகிறது. வெளியூர் மற்றும் வெளிநாடு சென்றாலும் இணையதளம் மற்றும் செல்போன் செயலியின் மூலம் இதைக் கட்டுப்படுத்தலாம்.

ஊருக்குப் போனாலும் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சலாம்!

இதிலேயே இன்னொரு மாதிரியையும் வடிவமைத்திருக்கிறோம். அதாவது வீட்டில் உள்ள ஆர்.ஓ மற்றும் ஏ.சி-யில் வடியும் தண்ணீரைச் சேகரித்து அதை 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம்மில் சேகரித்து, அந்த டிரம்மிலேயே இந்த ஆட்டோமேஷன் சாதனங்களைப் பொருத்தி, தண்ணீர் பாய்ச்சும் வசதியை ஏற்படுத்தியிருக்கிறோம். குறிப்பாக பால்கனியில் உள்ள செடிகள் இதனால் பலனடையும். மாடித் தோட்டங்களுக்கும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் லாங் ரேஞ்ச் ரேடியோ (Long Range Radio - LoRa) போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பெரிய விவசாய வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்சக்கூடிய பெரிய மாதிரிகள் பற்றியும் ஆராய்ச்சி செய்துவருகிறோம். மனிதர்களின் உழைப்பு இல்லாமல் தாவரங்களுக்கு நேரடியாகத் தண்ணீர் பாய்ச்சி அவற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கக்கூடிய இந்த டெக்னாலஜி, எங்களுக்கு மாயாஜால அனுபவம்போல உள்ளது. மங்களூரில் ஐந்து இடங்களில் நீர்ப்பாசன ஆட்டோமேஷன் சாதனங்கள் நிறுவப்பட்டு வெற்றிகரமாகச் செயல்படுகின்றன” - உற்சாகமாகச் சொல்கிறார்கள் தம்பதியர்.

பரவட்டும்!