சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

நீருக்குள் மூழ்கிடும் சென்னை! - மீட்கும் வழி என்ன?

வெள்ளம்
பிரீமியம் ஸ்டோரி
News
வெள்ளம்

சென்னை மண்டலத்தில் மட்டும் மொத்தம் 3,748 ஏரிகள் உள்ளன. விரிவுபடுத்தப்பட்ட சென்னைப் பெருநகர எல்லையில் உள்ள அரக்கோணத்தையும் சேர்த்துக்கொண்டால் 4,100 ஏரிகள்.

மீண்டும் ஒருமுறை ஸ்தம்பித்து மீண்டிருக்கிறது சென்னை. ஏரி திறப்பு, உணவுப்பொட்டலங்கள், படகு மூலம் மீட்பு, மின்தடை, நிவாரண முகாம்கள் என 2015 பெருவெள்ளத்தை நினைவுபடுத்தும் அளவுக்கு நிலை மோசமானாலும் ஓரிரு நாள்களில் பிரதான சாலைகள் இயல்புக்குத் திரும்பிவிட்டன. ஆனால் பல உட்புறத் தெருக்கள் இன்னும் தண்ணீருக்குள் மிதக்கின்றன.

எரிசக்தி சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (CEEW), இந்தியாவில் காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் ஒன்றாகச் சென்னையை வகைப்படுத்தியிருக்கிறது. இதுவரை நாம் எதிர்கொண்டிராத மேகவெடிப்பு போன்ற விளைவுகளால் குறுகிய இடைவெளியில் பெருமழை பெய்கிறது. இந்தச்சூழலில் சென்னைப் பெருநகரக் கட்டமைப்பு, பேரிடர்களைத் தாங்கும் நிலையில் இல்லை என்ற எதார்த்தத்தையே இந்த மழை உணர்த்தியிருக்கிறது.

நதிகள், கால்வாய்கள், ஏரிகள் என சென்னையைச் சுற்றிலும் ஏராளமான நீர்நிலைகள் இருந்தாலும் ஒருநாள் மழைக்கே சென்னை வெள்ளக்காடாக மாறிவிடுகிறது. நகரம் பருமனாக்கிக்கொண்டே செல்லும் அளவுக்கு உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாததுதான் இதற்கு முக்கியக் காரணம். பன்னாட்டு நிதி அமைப்புகளின் உதவிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டம் என ஒவ்வோராண்டும் ஏராளமான தொகை கொட்டப்பட்டாலும் பயனில்லை. தொலைநோக்குப் பார்வையில்லாத திட்டங்கள், முறைகேடுகள், கண்காணிப்பின்மை என இதன் பின்னணியில் பல காரணங்கள் இருக்கின்றன.

நீருக்குள் மூழ்கிடும் சென்னை! - மீட்கும் வழி என்ன?

சென்னையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முதன்முறையாக 1871-ல் நடத்தப்பட்டது. அப்போது நகரின் பரப்பளவு 69 சதுர கி.மீ! மக்கள்தொகை 3.97 லட்சம். 1981-ல் நகர எல்லை விரிவுபடுத்தப்பட்டபோது, அதைவிட இரண்டு மடங்கு மட்டுமே பரப்பளவு அதிகரித்திருந்தது. ஆனால், மக்கள்தொகையோ எட்டு மடங்கு உயர்ந்து, 33 லட்சத்தைத் தொட்டிருந்தது. 2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி சென்னையின் மக்கள்தொகை 88.7 லட்சம். மாநகர எல்லைக்குள் 47 லட்சம் பேர் வசிக்கின்றனர். 1980-ல் 47 ச.கி.மீட்டராக இருந்த சென்னையின் கட்டிடப் பரப்பு, 2010-ல் 402 ச.கி.மீட்டராக அதிகரித்திருக்கிறது. இதே காலத்தில் சென்னை சதுப்புநிலப் பகுதிகளின் பரப்பு 186 ச.கி. மீட்டரிலிருந்து 71 ச.கி.மீட்டராகச் சுருங்கிவிட்டது. இந்தப் பத்தாண்டுகளில் நிலை இன்னும் பலமடங்கு மோசமாகியிருக்கிறது. பணமிருந்தால் எந்த அனுமதியையும் முறைகேடாகப் பெற்றுவிடலாம் என்ற நிலைதான் சென்னையை வெள்ளத்தில் மிதக்க வைக்கிறது.

“2005-ல் ஒரேநாளில் 220 மி.மீ மழை பெய்தது. அப்போதே சென்னை நகரின் கட்டமைப்பில் உள்ள குளறுபடிகளையும், போதாமைகளையும் சுட்டிக்காட்டினேன். இதேநிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும் என்று எச்சரித்தேன். 2015-ல் ஒரே நாளில் 280 மி.மீ மழை கொட்டித் தீர்த்தது. இதிலிருந்தாவது நாம் பாடம் கற்க வேண்டும் என்று சொன்னேன். ஆனால், ஆக்கபூர்வமாக எதுவும் நடக்கவில்லை” என்று வருந்துகிறார், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியரும் தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான எஸ்.ஜனகராஜன்.

சென்னை மண்டலத்தில் மட்டும் மொத்தம் 3,748 ஏரிகள் உள்ளன. விரிவுபடுத்தப்பட்ட சென்னைப் பெருநகர எல்லையில் உள்ள அரக்கோணத்தையும் சேர்த்துக்கொண்டால் 4,100 ஏரிகள். சென்னை அடிப்படையிலேயே பாரம்பரிய நீர்மேலாண்மை மிக்க நகரம். ஆனால் ஆக்கிரமிப்புகளே நகரைத் தீவாக மாற்றுகின்றன.

“இவ்வளவு வளமிக்க நீர்நிலைகள் வேறெந்தப் பெருநகரத்திலும் இல்லை. இவற்றை ஆக்கிரமிக்கவிடாமல் முறையாகப் பராமரித்தாலே வெள்ள பாதிப்பைத் தடுத்துவிடலாம். கடந்த 10 ஆண்டுகளில் ஏரிகளைத் தூர்வாரவும், வெள்ளநீர் வடிகால்கள் அமைக்கவும் பன்னாட்டு அமைப்புகள் மூலம் பல ஆயிரம் கோடி செலவழிக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்குப் பிறகும் வெள்ளம் பாதிக்கிறது. இதுகுறித்து முறைப்படி ஆய்வுசெய்து தவறுகளைக் கண்டறியவேண்டும்” என்கிறார் ஜனகராஜன்.

தமிழகத்தில் துறைகளுக்குள்ளான ஒருங்கிணைப்பு என்பது இல்லவே இல்லை என்கிறார்கள் அக்கறையுள்ள அதிகாரிகள். பேரிடர் காலத்திலும்கூட தனித்தனியாகவே வேலை செய்கிறார்கள். மழைக்காலத்துக்கு முன்பாக, அனைத்துத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து திட்டமிட்டுப் பணிபுரிந்தால் பாதிப்பைக் கணிசமாகக் குறைக்கமுடியும் என்பது அவர்கள் கருத்து.

“காலநிலை மாற்றம் காரணமாக இனி நாம் பேரிடர்களை எதிர்பார்த்துதான் வாழவேண்டும். அதிலும் கடலோரப் பெருநகரங்கள் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கவேண்டும். பேரிடருக்கென்று எல்லாத்துறைகளையும் ஒருங்கிணைத்து ஒரு குழு அமைக்கவேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் அந்தக்குழு கூடி திட்டங்களை வகுக்கவேண்டும்...” என்கிறார் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மீட்பு மேலாண்மை நிபுணர் பிரபுகாந்தி ஜெயின்.

“புதிய கட்டுமானங்கள் உருவாக்கும்போது மழைநீர் வடிகால் கட்டமைப்புக்கு Bill of quantity எனப்படும் திட்ட வரைவிலேயே இடம் ஒதுக்குவதைக் கட்டாயமாக்க வேண்டும். சென்னை மாநகராட்சியிடம் நான்குவிதமான வெள்ளநீர் வடிகால் மாதிரிகளே இருக்கின்றன. அவற்றின் அடிப்படையில்தான் எல்லா இடங்களிலும் வெள்ளநீர் வடிகால்கள் கட்டப்படுகின்றன. சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே கட்டப்படும் வடிகால் கட்டமைப்பு துரைசாமி சுரங்கப் பாதை அருகே கட்டப்படும் வடிகாலுக்குப் பொருந்தாது. அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்றவாறு வடிகால்கள் கட்டப்பட்ட வேண்டும். நீர்நிலைகளில் கட்டுமானங்கள் உருவாக்குவதைத் தவிர்க்கும் விதமாகத் தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும். நீர்ப்பிடிப்புப் பகுதிகளை பத்திரப்பதிவு செய்வதைத் தடுக்கவேண்டும். வருங்காலங்களில் பேரிடருக்கும், பருவநிலை மாற்றத்துக்கும் தனி பட்ஜெட் போட வேண்டிய அவசியம்கூட வரலாம்...” என்கிறார் பிரபுகாந்தி ஜெயின்.

நீருக்குள் மூழ்கிடும் சென்னை! - மீட்கும் வழி என்ன?

சென்னை வறட்சியான நகரம் என்ற எண்ணம் இருக்கிறது. உண்மையில் சென்னையில் சராசரியாக ஆண்டுக்கு 1,300 மிமீ மழை பெய்கிறது. இந்த மழைநீரை முறையாக நிர்வகித்தால் தேவைக்கு மேல் குடிநீர் கிடைக்கும். 2015, நவம்பரில் கூவத்தில் 9,70,000 கன அடி, அடையாற்றில் 1,07,000 கன அடி நீர் கலந்தது. வரலாறு காணாத அந்த வெள்ளத்தால் சென்னையில் தண்ணீர்ப் பஞ்சமே வராது என்றார்கள். ஆனால் அடுத்த ஆண்டே பல பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டது.

“சென்னையைக் காங்கிரீட் காடாக மாற்றிவிட்டோம். மழைநீர் வெளியேறுவதில் பாதிப்பு ஒருபுறம் இருக்க, நிலத்துக்குள் நீர் இறங்குவதும் தடுக்கப்பட்டுவிட்டது. வெள்ளச் சமவெளிகள், நீர்நிலைகள், இயற்கை வடிகால் அமைப்புகள் ஆக்கிர மிக்கப்பட்டு சுருக்கப்பட்டுவிட்டது. நிலைத்தன்மையை மையக் கொள்கையாகக் கொண்ட அறிவார்ந்த நகரத் திட்டமிடல்தான் இதற்குத் தீர்வு...” என்கிறார், சென்னை ஐ.ஐ.டி-யின் சுற்றுச்சூழல், சமூகத்துறை வருகைதரு பேராசிரியர் அவிலாஷ் ரவுல்.

“நகர்ப்புறக் கட்டமைப்புக்கு முன்னுதாரணமாகக் காட்டப்படும் சிங்கப்பூரிலும் வெள்ளம் ஏற்படுகிறது. ஆனால், 5 மணி நேரத்தில் அதை வெளியேற்றும் அளவுக்கு பிரமாண்டமான வெள்ளநீர் வடிகால் அமைப்புகளை அங்கு அரசாங்கம் நிறுவியுள்ளது. காலநிலை மாற்றம் தீவிரமடைந்துவரும் நிலையில், அதன் விளைவுகளை மட்டுப்படுத்துவதற்கு பதிலாக, அவற்றுக்குத் தக்கவாறு தகவமைத்துக் கொள்வதொன்றே வழி.

சென்னையின் புவியியல் அமைப்பை முழுமையாக topography ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இங்கு பன்னெடுங்காலமாக நிலவிவந்த நீரின் வாட்டம், சமீப காலங்களில் நிலை மாறியிருக்கிறது. இதுபற்றி ஆய்வுசெய்து புதிய கட்டமைப்புக் கொள்கையை உருவாக்கவேண்டும். வெள்ளநீர் வடிகால்களைப் பருவமழைக் காலங்களின்போது மட்டும் சீரமைக்காமல், ஆண்டு முழுவதும் கண்காணிக்கவேண்டும். அவற்றில் கழிவுநீர் கலக்காமல் பராமரிக்க வேண்டும். அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் அந்தந்தப் பகுதிகளில் சிறு குழுக்கள் மூலம் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்” என்கிறார், நகர்ப்புற நீரியல் வல்லுநனரான ஜெயன்நாதன் கருணாநிதி.

நீருக்குள் மூழ்கிடும் சென்னை! - மீட்கும் வழி என்ன?

“சென்னையில் மட்டுமல்ல, எல்லாப் பெருநகரங்களிலுமே சாலைகளை மேலும் மேலும் உயரமாக்கிக்கொண்டே செல்கிறார்கள். சென்னை மவுண்ட் ரோட்டை உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால், 40க்கும் மேற்பட்ட லேயர்கள் மேலே மேலே உயர்த்தியிருக்கிறார்கள். ஒரு லேயர் 4 இஞ்ச் என்றால்கூட உயர்த்தப்பட்ட அளவைக் கணக்க்கிட்டுப் பார்த்தால் பிரச்னையின் வீரியத்தைப் புரிந்துகொள்ளலாம். 20 ஆண்டுகளுக்கு முன்னால் ரிப்பன் பில்டிங் முன் செல்லும்போது சாலை இரண்டடி பள்ளத்தில் இருக்கும். இப்போது ஓரடி மேலே இருக்கிறது. தமிழகம் முழுவதும் இதேநிலைதான். இதுதான் சென்னை தீவாக மாற அடிப்படைக் காரணம்” என்கிறார், சென்னை கட்டுமானப் பொறியாளர் சங்க நிறுவனத் தலைவர் கோ.வெங்கடாசலம்.

“மழைநீர்க் கால்வாயை நீர்வாட்டம் பார்த்து அமைக்கவேண்டும் என்பது அடிப்படையான கட்டுமான அறிவு உள்ளவர்களுக்கே தெரியும். ஆனால் சென்னையின் பெரும்பாலான மழைநீர் கால்வாய்கள் நீர்வாட்டத்தில் இல்லை. அதுமட்டுமன்றி, நீர்நிலைகளில் விழும்படி மழைநீர்க் கால்வாய்களை இணைக்கவும் இல்லை. தி.நகரில் ஒரு காண்ட்ராக்டர், கோடம்பாக்கத்தில் ஒரு காண்ட்ராக்டர் என எந்த வரையறையும் இல்லாமல் பணிகள் தரப்பட்டதால் அவரவர் எல்லைக்குள் அப்படியே நிறுத்திவிட்டுப் போய்விட்டார்கள்.

2015 வெள்ளத்தின்போது, சென்னையில் அதிக நீர் தேங்கும் இடங்களென 88 இடங்கள் கண்டறியப்பட்டு சாலைகளை வெட்டி வெள்ளம் வெளியேற்றப்பட்டது. வெட்டப்பட்ட இடங்களில் சிறிய குழாய்கள் போட்டுப் புதைத்திருந்தாலோ, சிறு பாலங்கள் கட்டியிருந்தாலோ பிரச்னை தீர்ந்திருக்கும். ஆனால், வேகவேகமாக சாலைகளை உயர்த்திவிட்டனர். இப்போது சாலையில் தண்ணீர் நிற்பதில்லை. ஆனால் சுற்றியுள்ள இடங்கள் துண்டிக்கப்பட்டுவிட்டன. மழைநீர் கால்வாய்களில் குப்பைகளை வடிகட்டும் பில்ட்டர்கள் அமைக்கப்படவில்லை.

சென்னை நகருக்குள் பெய்யும் மழைநீரை, புறநகர நீர்ப்பிடிப்புப் பகுதிகள்தான் உள்வாங்கும். இப்போது நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பிரமாண்டக் குடியிருப்புகள் அமைக்கப்படுகின்றன. பில்டிங் லே அவுட் போடும்போது ரோடு வசதியிருக்கிறதா, தெருவிளக்கு இருக்கிறதா என்றுதான் பார்க்கிறார்களே ஒழிய மழைநீர் வடிகால் வாய்க்கால் இருக்கிறதா, அது நீர்நிலையோடு இணைக்கப்படுகிறதா என்று பார்ப்பதில்லை.

நீருக்குள் மூழ்கிடும் சென்னை! - மீட்கும் வழி என்ன?

முதலில் சென்னை முழுவதும் மழைநீர்க் கால்வாய்களைத் தணிக்கை செய்து, முழுமையாக இணைக்க வேண்டும். நீர் வாட்டம் இல்லாத இடங்களைக் கண்டறிந்து மறு சீரமைப்பு செய்யவேண்டும். மழைநீர்க் கால்வாய்க்கு நெருக்கமாக 200 அடிக்கு ஒரு மழைநீர் வடிகால் உறைகிணறுகளை வெட்டவேண்டும். சுத்தப்படுத்தும் வகையில் அவற்றில் மூன்று லேயர் பில்ட்டர்கள் அமைக்கவேண்டும். மழைநீர் இந்தக் கிணறுகளில் நிரம்பி, கால்வாய்க்குச் செல்லும். இதன்மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். வாரம் ஒருமுறை இந்தக் கிணறுகளில் உள்ள பில்ட்டர்களைச் சுத்தம் செய்தால் போதும்...” என்கிறார் வெங்கடாசலம்.

இந்தப் பெருமழையின்போது அரசின் செயல்பாடுகள் சிறப்பாகவே இருந்தன. மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டதால் பாதிப்புகள் பெருமளவு குறைந்தன. சென்னையில் வெள்ளத் தடுப்பு ஆலோசனைகளை வழங்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழுவொன்றையும் அரசு நியமித்திருக்கிறது. இதேவேகத்தில் நடவடிக்கைகளைத் தீவிரப் படுத்தினால், சிங்காரச் சென்னை வெள்ளம் வறட்சியற்ற ஸ்மார்ட் சிட்டியாகும்!