மும்பை மாநகராட்சி தலைமை அலுவலகத்திலுள்ள சிவசேனா அலுவலகத்தை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவினர் இரண்டு நாள்களுக்கு முன்பு கைப்பற்ற முயன்றனர். இதனால் கைகலப்பு ஏற்பட்டது. தற்போது அந்த அலுவலகம் பூட்டி, சீல் வைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்திருந்தார். ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்துக்குக்கூட ஷிண்டே உரிமை கொண்டாடக்கூடியவர் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்திருக்கும் ஏக்நாத் ஷிண்டே, ``இதற்கு மேலும் எங்களுக்கு எதிரான விமர்சனங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது. அடுத்த தேர்தலில் பாலாசாஹேப் சிவசேனாவும், பாஜக-வும் இணைந்து அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

எங்களது அரசைக் கவிழ்க்க தேதி குறித்தார்கள். ஆனால், நாங்கள் ஏற்கெனவே ஆறு மாதங்கள் ஆட்சி நடத்திவிட்டோம். எங்களது அரசு ஒட்டுமொத்த மகாராஷ்டிராவுக்காக முடிவுகளை எடுக்கிறது. எனவே, அடுத்த தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறுவோம். இரண்டரை ஆண்டுகளாக வீட்டைவிட்டு வெளியில் வராத முதல்வர் யாராவது இருந்தால் காட்டுங்கள். நாங்கள் சன்மானம் கொடுக்கிறோம்” என்று உத்தவ் தாக்கரேவை விமர்சனம் செய்தார். அதோடு, ``நாங்கள் கொடுப்பவர்கள். வசூலிப்பவர்களோ, எடுப்பவர்களோ கிடையாது. முந்தைய தாக்கரே அரசு என்னைக் கைதுசெய்ய திட்டமிட்டது. ஆனால் அது நடக்காமல் போனது.
நடிகை கங்கனா ரனாவத் வீட்டில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட பகுதியை இடிப்பது தொடர்பான வழக்கில் மாநகராட்சிக்குச் சாதகமாக ஆஜரான வழக்கறிஞருக்கு மாநில அரசு ரூ.80 லட்சம் செலவு செய்தது. செமி கண்டக்டர் தொழிற்சாலை குஜராத்துக்குச் செல்வதற்கு, முந்தைய உத்தவ் தாக்கரே அரசுதான் காரணம்” என்று குற்றம்சாட்டினார். துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் தன்னை முந்தைய அரசு கைதுசெய்ய முயன்றது என்று குற்றம்சாட்டியிருந்தார்.