பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான, ஓ.பி.சி பிரிவினருக்கு 27 சதவிகிதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலையில் இதை மத்திய அரசு உறுதி செய்து அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 7-ம் தேதி தற்போதைய இட ஒதுக்கீட்டு நடைமுறைகளின்படி 2021-22-ம் ஆண்டுக்கான இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்தலாம் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

மேலும், இந்த வழக்கு நீதிபதிகள் சந்திரசூட், போபண்ணா அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், ``அகில இந்திய ஒதுக்கீட்டில் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்காக இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகித இடஒதுக்கீடு செல்லும். இது தகுதிக்கு முரணானது கிடையாது. ஒருவர் தகுதியைப் போட்டித் தேர்வுகளை மட்டுமே கணக்கில் வைத்து மதிப்பிட முடியாது. தேர்வின்மூலம் தனிநபரின் சிறப்புத்தன்மை, தகுதி, குணம் ஆகியவற்றைக் கண்டறிய முடியாது. மேலும் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான வருமான வரம்பு குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இது குறித்து பாண்டே கமிஷனின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு. இந்த விவகாரம் தொடர்பாக மார்ச் இறுதியில் விசாரணை நடத்தப்படும்" எனத் தீர்ப்பளித்தார்.

இந்த நிலையில், இது தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ``உச்ச நீதிமன்றம் அளித்துள்ள 27 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பு பெரியாருக்குக் கிடைத்த காணிக்கை. தந்தை பெரியாரின் சமூகநீதி தத்துவத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட காலம் உருவாகியிருக்கிறது. 27 சதவிகித இட ஒதுக்கீட்டுக்காக நாம் எடுத்த சட்ட ரீதியிலான முயற்சி அகில இந்திய அளவில் மாணவர்களுக்கு இனிப்பு செய்தியாகியுள்ளது. இந்தியாவுக்கே சமூகநீதியை உருவாக்கிக் கொடுக்கும் பணியை நாம் செய்துவருகிறோம்" என்றார்.