Published:Updated:

`நாங்கள் உத்தரவிடவில்லை...!'- ஜின்பிங் நிகழ்ச்சி பேனர் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

மோடி, ஜின்பிங் நிகழ்ச்சிக்கு பேனர் வைக்க அனுமதி அளித்ததாகத் தவறான செய்தியை மீடியாக்கள் வெளியிட்டதாகக் குற்றச்சாட்டு.

மோடியுடன் ஜின்பிங்
மோடியுடன் ஜின்பிங்

மோடி, ஜின்பிங் நிகழ்ச்சிக்கு பேனர் வைக்க அனுமதி அளிக்கவில்லை, தமிழக அரசு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்றே வலியுறுத்தியதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மீடியாக்கள் தவறுதலாகச் செய்திகள் வெளியிட்டதாகவும் உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சமீபத்தில் பேனர் விழுந்ததில் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண் விபத்தில் சிக்கி பலியானார். சுபஸ்ரீ மரணம் தமிழகத்தில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

மோடி, ஜின்பிங்
மோடி, ஜின்பிங்

சுபஸ்ரீ மரணத்தையடுத்து பேனர்களுக்குத் தடை விதிக்க டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு, சுபஸ்ரீ மரண வழக்கு, தன் மகளின் இறப்புக்கு ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு சுபஸ்ரீயின் தந்தை தொடர்ந்த வழக்கு ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஷேஷயா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த 11-ந் தேதி பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடந்தது. இரு தலைவர்களை வரவேற்று, பேனர்கள் வைக்க அனுமதி கேட்டு தமிழக அரசு உயர்நீதிமன்றத்தை அணுகியது. தமிழக அரசின் மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஷேஷயா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் வரை 60 கிலோ மீட்டர் தொலைவு ஜின் பிங் பயணிக்கும் சாலையில் பேனர்கள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இது தவறானது என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், சுபஸ்ரீயின் தந்தை நஷ்டஈடு கேட்ட வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணா, ஷேஷயா அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, நீதிபதிகள், மீடியாக்கள் தவறான செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதாக கடும் எச்சரிக்கை விடுத்தனர். ``மோடி- ஜின்பிங் வருகையின் போது, எந்த இடத்திலும் பேனர்கள் வைக்க அனுமதி அளித்து நாங்கள் உத்தரவிடவில்லை. ஏற்கெனவே, மாநகராட்சி வகுத்த விதிமுறைகள் உள்ளன. அவற்றை அரசு பின்பற்றிக் கொள்ளவும் என்றே தெரிவித்திருந்தோம். எங்கள் கூற்றை மீடியாக்கள் திரித்து செய்தியாக வெளியிட்டுள்ளன. இது தொடர்ந்தால், நீதிமன்றம் மீடியாக்களுக்குக் கண்டனம் தெரிவிக்கும் நிலை ஏற்படும்'' என எச்சரித்தனர்.

சுபஸ்ரீ
சுபஸ்ரீ

சுபஸ்ரீயின் மரணத்தையடுத்து, தி.மு.க தங்கள் கட்சி தொண்டர்களுக்கு பேனர் வைக்க வேண்டாமென்று அறிவுறுத்தியதாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. இந்நிலையில், அ.தி.மு.க-வும் இனிமேல் பேனர்கள் வைக்கமாட்டோம் என்று உயர்நீதிமன்றத்தில் இன்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.