அரசியல்
அலசல்
Published:Updated:

மாது, மாமூல், கஞ்சா... திக்... திக்... WELL MURDERS..!

கிணறு கொலை
பிரீமியம் ஸ்டோரி
News
கிணறு கொலை

கருப்பு, அவன் தம்பி தமிழ்மணி நண்பர்கள் மோசஸ், கட்டிங் சிவா, சூர்யா ஆகியோர் சேர்ந்து பிரகாஷைக் கொலை செய்துள்ளனர்.

ஆட்டோ சங்கர் ஸ்டைலில் படுகொலை செய்து, சடலங்களை போலீஸ் கண்ணில்படாதவாறு லாகவமாக மறைத்த, சென்னையைச் சேர்ந்த கொலைக் கும்பலின் கொடூரங்கள் அதிர்வை ஏற்படுத்திவருகின்றன!

கடந்த 2021-ம் ஆண்டு, நவம்பரில் கொலை செய்யப்பட்ட பிரகாஷ் என்ற ரௌடியின் சடலம் 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், கிணற்றிலிருந்து எலும்புக்கூடாக மீட்கப்பட்டிருக்கிறது. இந்தக் கொலைக்குப் பின்னணியில் பெண்கள் விவகாரமும், மாமூல் பிரச்னையும் மல்லுக்கட்டியிருப்பது தெரியவந்துள்ளது.

பிரகாஷ்
பிரகாஷ்

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த ரௌடி பிரகாஷ்மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், கடந்த ஆண்டு தன்னுடைய தோழியுடன் மறைமலைநகர் பகுதியில் தங்கியிருந்த பிரகாஷ், திடீரென மாயமானான். இதையடுத்து பிரகாஷின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பிரகாஷின் தோழியிடம் மறைமலைநகர் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் பிரகாஷின் நண்பர்கள் சிலர் பிரகாஷை அழைத்துச் சென்றது தெரியவந்தது. `குற்றப் பின்னணியிலிருக்கும் பிரகாஷ், ஏதாவது ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கலாம் அல்லது போலீஸ் தேடுதலுக்கு பயந்து தலைமறைவாக இருக்கலாம்’ என போலீஸார் கருதினர். ஆனால், ஐந்து மாதங்கள் கடந்த பிறகும் பிரகாஷ் குறித்து எந்தவொரு தகவலும் போலீஸாருக்குக் கிடைக்கவில்லை. இந்தச் சூழலில், ஆகஸ்ட் மாதம் வேறு ஒரு வழக்கில் பிரகாஷின் நண்பனான கருப்புவிடம் விசாரித்தபோதுதான் பிரகாஷ் கொலைசெய்யப்பட்ட தகவல் வெளியில் தெரியவந்திருக்கிறது.

மாது, மாமூல், கஞ்சா... திக்... திக்... WELL MURDERS..!

இது குறித்துத் தனிப்படை போலீஸாரிடம் பேசினோம், ``கருப்பு, அவன் தம்பி தமிழ்மணி நண்பர்கள் மோசஸ், கட்டிங் சிவா, சூர்யா ஆகியோர் சேர்ந்து பிரகாஷைக் கொலை செய்துள்ளனர். சம்பவத்தன்று மறைமலைநகரில் உள்ள தோழியின் வீட்டில் தங்கியிருந்த பிரகாஷை, நண்பன் மோசஸ் என்பவன் மணிமங்கலத்திலுள்ள சூர்யாவின் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறான். பின்னர் அங்கு அவர்கள் மூவரும் கஞ்சா புகைத்துள்ளனர். பிரகாஷ் உச்சகட்ட போதையிலிருந்தபோது, அங்கு கருப்பு வந்திருக்கிறான். ஏற்கெனவே கருப்புவுக்கும் பிரகாஷுக்கும் மாமூல் வசூலிப்பது, கஞ்சா விற்பனை செய்வது, பெண் விவகாரம் ஆகியவற்றில் முன்விரோதம் இருந்துவந்திருக்கிறது. அதனால், கருப்பு தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து பிரகாஷைக் கொடூரமாகக் கொலை செய்திருக்கிறான். பின்னர் பிரகாஷ் உடலைத் துண்டு துண்டாக வெட்டி, கோணிப்பையில் போட்டு, கூடவே கற்களையும் சேர்த்துவைத்து மூட்டையாகக் கட்டி திருமுடிவாக்கத்தில் உள்ள விவசாயக் கிணற்றுக்குள் வீசியுள்ளனர்.

கருப்பு அளித்த இந்தத் தகவலின்படி திருமுடிவாக்கத்துக்குச் சென்றோம். அங்கே கிணற்றிலிருந்த தண்ணீரை மோட்டார் வைத்து முழுவதுமாக வெளியேற்றிய பிறகே பிரகாஷின் எலும்புகளை மீட்க முடிந்தது. அந்த எலும்புகளை டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக் கிறோம். இந்த வழக்கில் இன்னும் சிலரைத் தேடிவருகிறோம். குறிப்பாக, இந்தக் கொலைக் கும்பலில் உள்ள தேடப்படும் குற்றவாளி ஒருவன், ஏற்கெனவே இதே ஸ்டைலில் ஒரு கொலை செய்து சிறையில் இருந்துவருகிறான். அவனையும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கும்போதுதான், இன்னும் எத்தனை பேரை இதே ஸ்டைலில் கொலை செய்து கிணற்றுக்குள் வீசியிருக்கிறார்கள் என்பதெல்லாம் முழுவதுமாகத் தெரியவரும்” என்றனர்.

இந்தச் சம்பவத்தைப் போலவே கடந்த 2020-ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை நம்மிடம் விவரித்த போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்த லோகேஷ்வரன் என்பவனைக் கடந்த 2020-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் முதல் காணவில்லை என்று அவனின் பெற்றோர் சங்கர்நகர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தனர். இந்த நிலையில், கஞ்சா போதையில் லோகேஷ்வரனைக் கொலை செய்த தாக அவனுடைய நண்பர்களே உளறிவிட்டனர். இந்தத் தகவல் போலீஸுக்குத் தெரியவந்ததும், அவர்களைப் பிடித்து விசாரித்தோம்.

மாது, மாமூல், கஞ்சா... திக்... திக்... WELL MURDERS..!

விசாரணையில், கஞ்சா விற்பனை முன் விரோதத்தில் லோகேஷ்வரனைக் கொலை செய்து, பாழடைந்த கிணற்றுக்குள் சடலத்தை வீசியிருப்பது தெரியவந்தது. 2020-ல் நடந்த இந்தக் கொலைச் சம்பவம் 2021-ல்தான் தெரியவந்தது. லோகேஷ்வரன் கொலை வழக்கில் கைதான குற்றவாளி ஒருவனுக்கு, பிரகாஷ் கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பதாக ரகசியத் தகவல் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இந்தக் கும்பலுக்கெல்லாம் தலைவனாக டான் ஒருவனும் இருக்கிறான். அவன்தான் சிறையிலிருந்தபடியே ஸ்கெட்ச் போட்டு, கொலைசெய்து சடலங்களைக் கிணற்றுக்குள் வீசித் தப்பும் வித்தையையும் இந்தக் கும்பலுக்குக் கற்றுக்கொடுத்தவன். சிறையிலிருக்கும் அவனிடம் விசாரணை நடத்தும்போதுதான் இன்னும் அதிர்ச்சிகரமான தகவல்களெல்லாம் வெளியாகும்’’ என்று அதிரவைத்தார்.

சமீபகாலப் பெரும்பான்மையான குற்றங்களில், கஞ்சா ஒரு முக்கியக் காரணியாக இருக்கிறது என்பதை காவல்துறை கூடுதலாக கவனிக்க வேண்டும்!