சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

என்ன செய்றாங்க... எக்ஸ் மினிஸ்டர்ஸ்?

என்ன செய்றாங்க... எக்ஸ் மினிஸ்டர்ஸ்?
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன செய்றாங்க... எக்ஸ் மினிஸ்டர்ஸ்?

கொரோனா அலை எப்படி ஓய்வதில்லையோ, அதேபோல அரசியல்வாதிகளுக்குக் கட்சிப்பணிகள் எப்போதும் ஓய்வதில்லை

“நாங்க நாலு பேரு... எங்களுக்கு பயம்னா என்னானே தெரியாது!’’ என்று கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது மீடியா வெளிச்சத்தில் பரபரப்பாக வலம் வந்த அமைச்சர்கள் ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ ஆகியோர். இந்த நால்வர் அணியின் அரசியல் வாழ்க்கை தற்போதைய சூழலில், எப்படி நகர்கிறது? விசாரித்தோம்...

இன்னும் இளமை ஊஞ்சலாடுது!

காலையில் செய்தியாளர்களின் முகத்தில் கண் விழிப்பதில் ஆரம்பித்து இரவு படுக்கச் சொல்லும் முன்னரும் ஒரு பிரஸ்மீட்டை நடத்திமுடித்துவிடுவதென்பது மீன்வளத்துறை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு கடந்த நான்காண்டுக்காலப் பழக்கம். அமைச்சராக வலம் வந்த காலத்தில், தெருவோர சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது, திருமண வீடுகளில் மைக் பிடித்துப் பாடுவது என வடசென்னையைக் கலக்கிவந்தவருக்கு, தேர்தல் தோல்வி இன்னும் கூடுதல் நேரத்தை வழங்கியிருக்கிறது. வீட்டில் பேரக் குழந்தைகளோடு கொஞ்சி விளையாடியதுபோக, மற்ற நேரங்களில் கட்சி நிகழ்ச்சி, தொண்டர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வதென நாள்களைக் கலகலப்பும் சுறுசுறுப்புமாக நகர்த்திவருகிறார்.

என்ன செய்றாங்க... எக்ஸ் மினிஸ்டர்ஸ்?

‘‘கொரோனா அலை எப்படி ஓய்வதில்லையோ, அதேபோல அரசியல்வாதிகளுக்குக் கட்சிப்பணிகள் எப்போதும் ஓய்வதில்லை. இது கொரோனா காலம் என்பதால், செல்பேசி வழியாகவே அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசி மக்கள் பிரச்னைகளை சரிசெய்யவேண்டும். அதிலும் இப்போது எதிர்க்கட்சி என்பதால், ரொம்பவே மெனக்கெட வேண்டியிருக்கிறது.

தினசரி பேப்பர், டி.வி செய்திகளோடு ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் என்று இன்னும் நிறைய படித்துத் தெரிந்துகொண்டால்தான் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியும். ‘ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காது’ இல்லையா? (சிரிக்கிறார்)

வீட்டில், பேரக் குழந்தைகள் ரொம்ப சுட்டி... கடந்த வாரம் 45,000 ரூபாய் செலவில், புதிதாக டி.வி வாங்கிவந்து வீட்டில் மாட்டியிருந்தேன். பேரக் குழந்தைகள் சண்டையில் தூக்கியெறிந்த ‘கிரிஸ்டல் மிட்டாய்’ டி.வி பிக்சர் ட்யூபை காலி செய்துவிட்டது. குடும்பத்தினர் எல்லோரும் குழந்தைகளை சத்தம் போட்டனர். ‘சரி விடுங்க... டி.வி-யில் பட்டது டி.வியோடு போச்சு... குழந்தைகளின் உடம்பில் பட்டிருந்தால் பெரிய காயம் உண்டாகியிருக்கும்...’ என்று சமாதானம் செய்தேன்.

வீட்டில் இருக்கும்போது, எனது 6 வயது பேத்தி ஜெய கையால்தான் கூழ் சாப்பிடுவேன். நானாக எடுத்துவைத்து சாப்பிட்டுவிட்டால் அவ்வளவுதான்... நாள் முழுக்க என்னிடம் பேசமாட்டாள்.

ப்ரஸ்மீட்ல மட்டுமல்ல... வீட்டிலேயும் எக்குத்தப்பா கேள்விகள் வந்து விழும். ஒருநாள், அப்பா பேச்சைக் கேட்காமல் அடம்பிடித்துக்கொண்டிருந்த எனது பேரன் அர்ஜூனனிடம் ‘ரொம்ப சேட்டை பண்ணக்கூடாது. உன் அப்பா பேச்சைக் கேட்டு சமர்த்தா நடந்துக்கணும்’னு அட்வைஸ் பண்ணினேன். ‘என் அப்பா சின்னப் பையனா இருந்தப்ப, உன் பேச்சைக் கேட்டாரா...’ என்று பட்டென்று என்னைத் திருப்பிக் கேட்டுவிட்டான்.

வீட்டில் இருக்கும்போது, எம்.ஜி.ஆர்., சிவாஜி பாடல்களை சத்தமாகப் பாடுவேன், பழைய பட டயலாக்குகளை மிமிக்ரி செய்வேன். ‘இன்னும் இளமை ஊஞ்சலாடுது’ என என் மனைவி கிண்டல் செய்வார்’’ என்கிறார் வெட்கம் கலந்த புன்னகையுடன்.

என்ன செய்றாங்க... எக்ஸ் மினிஸ்டர்ஸ்?

என்ன தம்பி சொல்ல?

முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் சிலர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி சலசலப்புகளைக் கிளப்புவார்கள் என்றால், வனத்துறை முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனோ ‘இவர் எப்போதுமே இப்படித்தான்...’ ரகம்! அமைச்சராக வலம் வந்த நாள்களிலேயே தன் வீட்டுப்பக்கம் பெரிதாகக் கூட்டம் சேரவிடாமல் பார்த்துக்கொள்பவருக்கு, கொரோனா காலம் கூடுதல் எச்சரிக்கையைத் தந்திருக்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை கட்சிக்காரர்கள் ஒருவரையும் காண முடியாத அளவுக்கு அமைச்சர் குடியிருக்கும் தெருவே காலியாகக் கிடக்கிறது. தேர்தலுக்கு முன்பே, உடல்நலப் பிரச்னையால் ஆஞ்சியோ சிகிச்சை எடுத்துக்கொண்டார் என்பதால், தேர்தல் பிரசாரத்தில் ரொம்பவும் மெனக்கெடாமல், எச்சரிக்கையோடு உடல்நலம் காத்தார். தேர்தலுக்குப் பிறகு, காலையில் கொஞ்ச தூரம் வாக்கிங்... கட்சிக்காரர்கள் யாரேனும் அழைத்தால் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வது என நாள்களை நகர்த்திவருகிறார்.

தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் அனுபவத்தைக் கேட்டு செல்பேசியில் பேசினால், ‘`இந்தக் கொரோனாவுக்கு பயந்து எல்லோரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். யாரிடமும் வருமானம் இல்லை. சொல்லமுடியாத துயரங்களை எல்லாம் மக்கள் அனுபவித்துவருகிறார்கள். இதில் நான் என்ன தம்பி சொல்ல..!’’ என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

என்ன செய்றாங்க... எக்ஸ் மினிஸ்டர்ஸ்?

பேரனின் ஸ்பெஷல் ராயல் சல்யூட்!

மதுரையை ‘சிட்னி’ ஆக்கும் முயற்சியில் சற்றும் மனம் தளராத, கூட்டுறவுத்துறை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு இன்னொரு வாய்ப்பை அளித்திருக்கிறார்கள் மதுரை மேற்குத் தொகுதி மக்கள். கட்சியில் சசிகலா ஆடிவரும் சடுகுடுவை சமாளிப்பது, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக மக்கள் பணி, கல்லூரி நட்பு வட்டத்தினரோடு சந்திப்பு, குடும்பத்தினர் நடத்திவரும் மெடிக்கல், டெக்ஸ்டைல் பிசினஸ்கள் என இப்போதும் சார் படு பிஸி...

‘‘45 நாள்களுக்கு முன்பு ஷட்டில் காக் விளையாடும்போது தவறி, கீழே விழுந்துவிட்டேன். அதனால் கையில் கட்டுப் போட்டுக்கொண்டு 10 நாள்களாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன். இதோ... கை சரியானபிறகு எப்போதும்போல், கட்சி வேலையில் இறங்கிவிட்டேனே...

அமைச்சராக இருந்தபோது, நின்று பேசுவதற்குக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டேயிருப்பேன். ஆனால், இப்போது குடும்பத்தினரோடு கொஞ்சம் நேரம் செலவழிக்க முடிகிறது. அதேசமயம் ரொம்பவும் அதிகாரம் எடுத்துக்கொண்டு வீட்டிலுள்ளோருக்கு ஆலோசனை சொல்வதெல்லாம் கிடையாது. அப்படிச் செய்தால், ‘ஏன்தான் இவரை வீட்டில் இருக்கச்சொல்லிக் கேட்டோமோ... நம்மைப்போட்டு கழுத்தறுக்கிறாரே...’ என்று சொல்லிடுவாங்கள்ல! (சிரிக்கிறார்)

படிக்கும்போதே நான் டெக்ஸ்டைல் பிசினஸில் இறங்கிவிட்டேன். ஆனால், 93-ல் மதுரையில் மிகப்பெரிய வெள்ளம் வந்து தொழிலில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அத்தோடு தொழிலிருந்து விலகிவிட்டேன். 1985-ல் நான் ஆரம்பித்த ‘ஜேஜே மெடிக்கல் ஸ்டோர்’ இப்போதுவரை சிறப்பாக நடந்துவருகிறது. அதோடு ‘சாகர் சில்க்ஸ் ஷோரூம்’ ஒன்றையும் ஆரம்பித்து எல்லாவற்றையும் கவனித்துவருகிறார் என் மனைவி.

மொத்தம் 3 பேரப்பசங்க... பாசக்காரய்ங்க! காலையில் எழுந்ததும் மூத்த பேரன்கள் இருவரோடும் தெருமுனை டீக்கடைக்குச் சென்று டீ குடிப்பேன். பின்னர் அவர்களோடே ஷட்டில் காக் ஆடுவேன். வீட்டு அருகில் இருக்கும் கிணற்றில் நீச்சல் பயிற்சியும் செய்வது உண்டு. இன்றைக்கு எல்லாமே ஆன்லைன் வகுப்புகளாகிவிட்டது. அதனால், எப்போதும் செல்போன் கையுமாகவே இருக்கிறார்கள். நாம் ஏதாவது குறுக்கே புகுந்து பேசினால்கூட, ‘ஆன்லைன் கிளாஸில் இருக்கிறேன் தாத்தா... பிறகு பேசுங்கள்’ என்று சொல்லிவிடுகிறார்கள்.

மூன்றரை வயது குட்டிப்பேரன் வருண்சாகர், நான் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போதும், வீட்டுக்குத் திரும்பி வரும்போதும் எனக்கு ஸ்பெஷல் ‘சல்யூட்’ அடிப்பார். வீட்டில் பந்தோபஸ்துக்கு இருந்த காவலர்களிடமிருந்து இந்தப் பழக்கத்தை அவன் கற்றுக்கொண்டான்.இதற்காகவே அவனது பாட்டியிடம் போலீஸ் டிரஸ், தொப்பி எல்லாம் அடம்பிடித்துக் கேட்டு வாங்கிப் போட்டிருக்கிறான்!’’ என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

என்ன செய்றாங்க... எக்ஸ் மினிஸ்டர்ஸ்?

நலம்பெற்றுத் திரும்புக!

தொகுதி மாறிவந்து போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவியபிறகு, பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றம். கைநிறையக் கயிறு, தகதக மஞ்சள் நிறச் சட்டை எனத் தன் வித்தியாச கெட்டப்புக்கெல்லாம் விடை கொடுத்து, மறுபடியும் பளீர் வெள்ளை வேட்டி சட்டையில் அடக்கமாக வலம்வர ஆரம்பித்திருக்கிறார். அதிரடி விமர்சனங்களால் அதிரவைத்தவரின் வாழ்க்கை இப்போது ‘அமைதி அமைதி அமைதியோ அமைதி!’

தொகுதியிலுள்ள கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும்கூட, தன் சகோதரிகளின் குடும்பத்திலுள்ள குழந்தைகளோடு விளையாடும்போது மட்டுமே பலூன் உடைத்துக்கொள்கிறார். ‘கேளாத பேச்சையெல்லாம் கேட்டு ரொம்பப் பேசிட்டேன்யா.... இப்போதான் ஒரு தெளிவு கெடைச்சிருக்கு... அதனால இப்போல்லாம் வாயைக் கட்டிட்டேன்’ என நெருக்கமான ரத்தத்தின் ரத்தங்களோடு புலம்பிவருகிறார்.

‘கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் எப்படிக் கழிகிறது வாழ்க்கை...’ என்ற கேள்வியை ராஜேந்திரபாலாஜியிடம் கேட்டபோது, ‘’கொரோனாவோடுதான் கழிகிறது... நானே இப்போது உடல்நலம் சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்துதான் பேசுகிறேன். கொரோனா டெஸ்ட்டுக்குக் கொடுத்துவிட்டு, ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கிறேன்’’ என்றவரிடம், தைரியம் சொல்லிவிட்டு லைனைத் துண்டித்தோம். சில மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் அவரது செல்பேசியைத் தொடர்புகொண்டபோது, ‘சாருக்கு பாசிட்டிவ்... அதனால் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கிறார்’ என்ற தகவல் மட்டும் கிடைத்தது.

நலம் பெற்றுத் திரும்பட்டும்!