
பதவி விலகுகிறார் என்றாலும் ஜெஃப் எங்கும் போகப்போவதில்லை.
FAANG... ஃபேஸ்புக், அமேசான், ஆப்பிள், நெட்ஃப்ளிக்ஸ், கூகுள் என இணையத்தில் ஆதிக்கம் செலுத்தும் ‘பிக் டெக்’ நிறுவனங்களைச் சுருக்கமாக இப்படியும் அழைப்பார்கள். இந்த வரிசையில் வரும் பெரும் டெக் சாம்ராஜ்யங்களுள் ஒன்றான அமேசானை நிறுவிய ஜெஃப் பெசோஸ், அதன் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து விரைவில் விலகுகிறார். டெக் உலகென்றில்லை, மொத்த உலகிலுமே இன்று மிக முக்கிய ஆளுமையாக இருக்கும் ஜெஃப் பெசோஸின் அடுத்தடுத்த திட்டங்கள் என்ன, அமேசானின் அடுத்த அத்தியாயம் எப்படி இருக்கப்போகிறது?

நேற்று
சுருக்கமாக அவர் வரலாறு சொல்லவேண்டும் என்றால், ‘புதிதாக ஏதாவது கண்டுபிடிக்கவேண்டும்’ எனச் சிறு வயதிலிருந்தே ஆர்வம் கொண்டவர் ஜெஃப். அந்த ஆர்வம்தான் அவரை இங்குவரை கூட்டி வந்தது; உலகின் நம்பர் 1 செல்வந்தராக்கி அழகுபார்த்தது. ‘ஒரு நல்ல ஐடியாவை சரியாகச் செயல்படுத்திவிட்டோமென்றால் நாளடைவில் அது சாதாரண விஷயமாகிவிடும். அதில் வியக்க மக்களுக்கு எதுவும் இருக்காது. அப்படி நடந்துவிட்டால் உங்கள் ஐடியா ஹிட்’ - இதுதான் ஜெஃப்பின் நம்பிக்கை. அப்படித்தான் ஆன்லைன் ஷாப்பிங் தொடங்கி பல விஷயங்களை மக்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றியது அமேசான். 27 வருடங்களுக்கு முன்பு அமேசான் ஆரம்பிக்கும்போது மக்களிடம் ‘இன்டர்நெட்’ என்றால் என்னவென்று விளக்குவதற்கே ஜெஃப் அவ்வளவு பாடுபட வேண்டி இருந்திருக்கும். இருந்தும், ‘இணையம்தான் நாளைய உலகம்’ என்று திடமாக நம்பினார். இணையத்தில் வெறும் புத்தகங்கள் மட்டும் விற்கும் நிறுவனமாகத் தொடங்கிய அமேசான், இன்று விற்காத பொருள்களே இல்லை.
இன்று
இன்று அமேசான் வெறும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் மட்டுமல்ல. தொழில்நுட்ப உலகில் தொடர்ந்து புதுமைகளைப் புகுத்திவரும் ஒரு முன்னோடி. கிளவுட் கம்ப்யூட்டிங் கட்டமைப்புகள், விருப்பத்திற்கேற்ற பரிந்துரைகள், அலெக்ஸா, கிண்டில் எனத் தொழில்நுட்ப உலகிற்கு அமேசான் கொண்டுவந்த விஷயங்கள் ஏராளம். இன்று 13 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவனம், ஏதேனும் ஒரு வழியில் உலகில் இருக்கும் ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையையும் தொட்டுச்செல்கிறது. அமேசான் ப்ரைமில் ‘மாஸ்டர்’ பார்க்கிறோம். அமேசானில் பொருள்கள் வாங்குகிறோம். உலகின் பெரும்பாலான சேவைகள் அமேசானின் கிளவுட் சேவைக் கட்டமைப்புகளைக் கொண்டுதான் இயங்கிவருகின்றன. ‘With great power comes greater responsiblity’ என்பார்கள். அந்தப் பொறுப்பு இப்போது அமேசானுக்கு இருக்கிறது. ‘பெரும் ஆதிக்கம் கொண்ட நிறுவனமாக வளர்ந்திருக்கும் அமேசான், சிறு நிறுவனங்களை ஒடுக்க தன் வலிமையைப் பயன்படுத்துகிறது’ என்பது சில வருடங்களாக அமேசான் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டு. என்னதான் அமேசான் நிறுவனம் தொடர்ந்து வெற்றிப்பாதையில் பயணித்தாலும், லாபம் ஈட்டினாலும், கொரோனா காலத்தில் தங்களை நிறுவனம் மோசமாக நடத்தியதாக ஊழியர்கள் குற்றம்சாட்டினார்கள். இருந்தும் உச்ச அந்தஸ்தில் தற்போது அமேசான் இருப்பதுதான் நிதர்சனம். “உலகத்தின் தேவைக்கேற்ப முழு வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறோம்” என்றே ஜெஃப் பெசோஸும் கூறுகிறார்.

நாளை
சரி, ஜெஃப் கிளம்புகிறார் என்றால் இப்படியான பெரும் பொறுப்பை ஏற்கப்போவது யார்? அமேசான் கிளவுட் சேவைகளின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரியான அண்டி ஜாஸ்ஸி (Andy Jassy)தான் ஜெஃப்பின் இடத்தை நிரப்பப்போகிறார். முன்பு சொன்னது போல இன்று மொத்த இணைய உலகமும் அமேசானின் கிளவுட் கட்டமைப்புகளைத்தான் பயன்படுத்துகின்றன. அமேசானின் வருமானத்தில் பெரும்பகுதி அங்கிருந்தே வருகிறது. இதைச் சிறப்பாக வழிநடத்தியவர், மொத்த நிறுவனத்தையும் சிறப்பாகத் தலைமை தங்குவார் என நம்புகிறார் ஜெஃப். அமேசானின் கவனம் இந்தியாவிலும் இனி அதிகம் இருக்கப்போகிறது. கடந்த வருடம்தான் “21-ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கப்போகிறது” எனக் கணிப்பதாக ஜெஃப் பெசோஸ் கூறியிருந்தார்.
பதவி விலகுகிறார் என்றாலும் ஜெஃப் எங்கும் போகப்போவதில்லை. அமேசானின் உயர்மட்டக் குழுவில் செயல் தலைவராக இருப்பார் அவர். “நான் ஓய்வெடுக்கிறேன் என யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். எப்போதையும் விட இப்போது மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். என் ஆற்றலை வேறு ஆக்கபூர்வமான விஷயங்களில் செலவிடப்போகிறேன், அவ்வளவே!” என்கிறார் ஜெஃப். Bezos Earth Fund, Blue Origin, The Washington Post போன்ற அமைப்புகளை வழிநடத்துவதையே இப்படிக் குறிப்பிடுகிறார் அவர்.
CEO-வாக அவர் ஊழியர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தின் கடைசி சில வரிகள் அனைவருக்கு மானவை. ‘தொடர்ந்து யோசியுங்கள், புதிய ஐடியாக்களைப் பிடியுங்கள். ஐடியா சாத்தியமற்றதாக இருக்கிறது எனத் துவண்டு விடாதீர்கள். அதைக் கைவிட்டுவிடாதீர்கள். ஆர்வம் உங்களை வழிநடத்தட்டும். எல்லா நாளுமே நமக்கான முதல் நாள்தான்!’