Published:Updated:

`தேர்தல் அறிக்கை டு பட்ஜெட்’ - பொது, வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ள திட்டங்கள் என்னென்ன?

முதல்வர் ஸ்டாலின்
News
முதல்வர் ஸ்டாலின்

தி.மு.க தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வேளாண்துறை சார்ந்த அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டிலும், மற்ற துறைகள் குறித்த அறிவிப்புகளில் பெரும்பாலானவை பொது பட்ஜெட்டிலும் இடம்பெறும் என்கிறார்கள்.

Published:Updated:

`தேர்தல் அறிக்கை டு பட்ஜெட்’ - பொது, வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ள திட்டங்கள் என்னென்ன?

தி.மு.க தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வேளாண்துறை சார்ந்த அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டிலும், மற்ற துறைகள் குறித்த அறிவிப்புகளில் பெரும்பாலானவை பொது பட்ஜெட்டிலும் இடம்பெறும் என்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின்
News
முதல்வர் ஸ்டாலின்

மே 7-ம் தேதி பதவியேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் 100-வது நாள் ஆகஸ்ட் 15-ம் தேதியன்று வருகிறது. அன்றைய நாள் நாட்டின் சுதந்திர தினம் என்பதால், முதன்முறையாக கோட்டைக் கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றவிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதனால், இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறாராம். 100-வது நாளுக்கு முன்பாகவே ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட அத்தனை மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார். அதுமட்டுமன்றி, தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்ட முக்கியமானவற்றை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஆகஸ்ட் 13-ம் தேதியே தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும், வேளாண்துறைக்கான பட்ஜெட்டை அந்தத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்யவிருக்கிறார்கள். பொது பட்ஜெட்டில் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது என சட்டப்பேரவை வட்டாரத்தில் விசாரித்தோம்.

``தி.மு.க தேர்தல் அறிக்கையில் தெரிவித்த விஷயங்களில் முக்கியமானவை முதல் பட்ஜெட்டில் இடம்பெறும்...

* கருணாநிதியால் உருவாக்கப்பட்ட செம்மொழிப் பூங்கா புதுப்பொலிவு பெறும்வகையில் மாற்றியமைக்க வாய்ப்புள்ளது.

* சென்னை நகரின் ஆறுகள் பாதுகாப்புக்காக 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

* மீன்பிடித் தடைக்கால நிவாரணம் 8,000 ரூபாயாகவும், மழை வெள்ள நிவாரணம் 6,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.

* கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்.

* போக்குவரத்து ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்.

* அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டேப்லெட், அரசுக் கல்வி வளாகங்களில் வைஃபை வசதி.

* பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

* மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும்.

* வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 40 சதவிகிதமாக அதிகரிக்கப்படும்.

* பெண்களுக்கெதிரான சைபர் குற்றங்களைக் களைய சைபர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.

* பணியின்போது இறக்கும் தூய்மைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு உடனடி அரசு வேலை.

* முதியோர் உதவித்தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும்.

* ஊடகத்துறையினர் ஓய்வூதியமும், குடும்ப நிவாரண நிதியும் உயர்த்தப்படும்.

* நகராட்சிகள், மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும்.

* 100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக அதிகரிக்கப்படும்.

இது போன்ற தேர்தல் அறிக்கையில் தெரிவித்த அறிவிப்புகள், பொது பட்ஜெட்டில் நிச்சயம் இடம்பெற வாய்ப்பிருக்கிறது.

விவசாயம்
விவசாயம்

முதன்முறையாக வேளாண்துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. எப்போதும் பொது பட்ஜெட்டில்தான் வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு, சிறப்பு அறிவிப்புகள் இடம்பெறும். பத்தோடு பதினொன்றாக இருப்பதால் குறிப்பிட்ட அளவுக்கு மேலாக அந்தத் துறைக்கு தனி கவனம் செலுத்த முடியாது. ஆனால், தற்போது தனி பட்ஜெட்டே தாக்கல் செய்யப்படவிருப்பதால், முழுமையாகச் சிறப்பு அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளது. அதன்படி தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட வேளாண்துறை சார்ந்த அறிவிப்புகளில் 90 சதவிகிதம் பட்ஜெட்டில் இடம்பெற அதிக வாய்ப்பிருக்கிறது.

* விவசாயிகள் வேளாண் பொருள்களை உரிய விலையில் விற்பனை செய்ய, ஊரகப் பகுதிகளில் விற்பனைச் சந்தைகள் உருவாக்கப்படும்.

* வாழை, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, பருப்பு வகைகள், மிளகாய், சிறு தானியங்கள், தேயிலை, எண்ணெய் வித்துகள் ஆகியவற்றுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

* கொடைக்கானலில் தோட்டக்கலை ஆய்வு மையம் அமைக்கப்படும்.

* மின் இணைப்புக் கோரி விண்ணபிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்படும்.

* சிறு, குறு விவசாயிகள் புதிய மின் மோட்டார் வாங்க 10,000 ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்.

* கிருஷ்ணகிரியில் தோட்டக்கலைப் பல்கலைக்கழகம்.

* பனைவெல்ல உற்பத்தியைப் பெருக்க சிறப்புத் திட்டம்.

* ஒட்டுமொத்தப் பகுதி என்றில்லாமல், தனிநபர் விளை நிலங்கள் மட்டுமே இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டாலும் இழப்பீடு வழங்கப்படும்.

*கண்மாய்கள், அணைகளிலுள்ள வண்டல் மண்ணை விவசாய நிலங்கள், மண்பாண்டங்கள், கைவினைப் பொருள்கள் செய்ய அடையாள அட்டை அடிப்படையில் இலவசமாக எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

* பொள்ளாச்சி மற்றும் பட்டுக்கோட்டையில் ஒருங்கிணைந்த தென்னைப் பொருள்கள் உற்பத்தி வளாகம் அமைக்கப்படும்.

* நெல் குவின்டால் ஒன்றுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையாக 2,500 ரூபாய் என உயர்த்தி வழங்கப்படும்.

* கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் என உயர்த்தி வழங்கப்படும்.

* ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம், வேளாண் கருவிகள் தொழிற்சாலை அமைக்கப்படும்.

* தூத்துக்குடி, வேலூர், கரூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பேரீச்சை வளர்க்க சிறப்பு நிதியுதவி வழங்கப்படும்.

* வேளாண் நோய்த் தடுப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

மேற்குறிப்பிட்ட அத்தனை அம்சங்களும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவற்றில் ’நெல் குவின்டால் ஒன்றுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையாக 2,500 ரூபாய் என உயர்த்துதல்... கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் என உயர்த்துதல்...’ என்ற இரு அறிவிப்புகளைத்தான் நெல் விதைத்த விவசாயிகளும், கரும்பு விவசாயிகளும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்” என்றனர்.