மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன நோய்... எந்த டாக்டர்? - 1 - உங்களுக்காக ஒரு கிளினிக் கைடு

என்ன நோய்... எந்த டாக்டர்?
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன நோய்... எந்த டாக்டர்?

புதிய பகுதி

``ஒரு வாரமா தலைவலி... ஏகப்பட்ட பெயின்கில்லர் போட்டும் வலி விட்ட பாடா இல்லை... கண்லதான் பிரச்னையா இருக்கணும்... கண் டாக்டரை பார்த்துட வேண்டியதுதான்...’’

‘`கழுத்துல வலின்னு டாக்டரை பார்த் தேன். ஒரு வாரத்துக்கு ட்ரீட்மென்ட் கொடுத்துட்டு, எலும்பு டாக்டரை பார்க்கச் சொன்னார். அவர்கிட்ட ஒரு மாசம் ட்ரீட்மென்ட் எடுத்த பிறகு `இது நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னை மாதிரி தெரியுது... எதுக்கும் நியூரோ டாக்டரை பாருங்க'ன்றாரு... இதை முதல்லயே சொல்லியிருந்தா, நேரடியா நியூரோவையே பார்த்திருக்கலாம்...’’

‘`பொண்ணுக்கு பதினஞ்சு வயசாச்சு... பிறந்ததுலேருந்து இப்பவரைக்கும் பீடியாட்ரிஷியன்கிட்டதான் காட்டிட் டிருக்கோம்... இப்ப வளர்ந்துட்டா... இனிமே டாக்டரை மாத்தணுமா...’’

- இப்படி மருத்துவம் தொடர்பாகவும் மருத்துவர் தொடர்பாகவும் ஒவ்வொரு வருக்கும் ஓராயிரம் கேள்விகள்... குழப் பங்கள்... சந்தேகங்கள்...

 சுந்தர் ராமன்
சுந்தர் ராமன்

எல்லாவற்றுக்குமான ஆரம்பமாக இருப்பது ‘என்ன பிரச்னைக்கு எந்த மருத் துவரைப் பார்க்க வேண்டும்’ என்ற அடிப் படை தெளிவு. உடல்நலமில்லாதபோது உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டுமா என்பதும், முடியாத நிலையில் பார்த்தால் போதுமா என்பதும் எப்போதும் தொக்கி நிற்கும் சந்தேகங்கள்... இப்படி எல்லா குழப்பங்களுக்கும் கேள்விகளுக்கும் தெளி வளிப்பதே இந்தத் தொடரின் நோக்கம்.

இனி தவறான ஃபார்வேர்டுகளோ, ஆதாரமற்ற ஆலோசனைகளோ உங் களைக் குழப்ப அனுமதிக்காதீர்கள்.

இந்த இதழில் இன்டெர்னல் மெடிசின் குறித்த தகவல்களைப் பகிர்கிறார் இன்டெனிஸ்ட் டாக்டர் சுந்தர் ராமன்.

``திடீரென உடல்நலமில்லாமல் போகிறது... காய்ச்சல், சளி, தலைவலி, அஜீரணம் என நாம் சாதாரணமாக சந் திக்கும் பிரச்னைகள்தான். இதற்கெல் லாம் மருத்துவரைப் பார்க்க வேண்டுமா? அப்படியே பார்த்தாலும் எந்த மருத்து வரைப் பார்க்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். உடல்நலமில்லாதபோது உடனடியாக நாம் சந்திக்க வேண்டியவர் எம்.பி.பி.எஸ் படித்த பொது மருத்துவர் அல்லது இன்டெர்னல் மெடிசின் படித்த இன்டெர்னிஸ்ட்.

அதென்ன இன்டெர்னல் மெடிசின்?

பொது மருத்துவர்களும் இன்டெர் னிஸ்ட் என்பவர்களும் ஒருவர்தானா என்ற கேள்வி பலருக்கும் உண்டு.

20 வருடங்களுக்கு முன்பு அப்படித்தான் இருந்தார்கள். மருத்துவ அமைப்புகளில் இன்டெர்னல் மெடிசின் என்றால் என்ன என வரையறுக்கப்பட்டுள்ளது. மருத் துவம் படிக்கிற எல்லோரும் பிரிட்டிஷ் கல்விமுறையையே பயில்கிறோம். அதில் ஃபிசிஷியன், ஜெனரல் பிராக்டிஷனர் என்றுதான் சொல்லப்பட்டது. அதே காலகட்டத்தில் அமெரிக்காவில் ஜெனரல் மெடிசின் என்பது விஞ்ஞான பூர்வமாக மருவி, இன்டெர்னல் மெடிசின் என்று மாறியது.

என்ன நோய்... எந்த டாக்டர்? - 1 - உங்களுக்காக ஒரு கிளினிக் கைடு

இருவருக்கும் என்ன வித்தியாசம்?

எம்.பி.பி.எஸ் படித்த அனுபவமிக்க மருத் துவர் எம்.டி படித்த மருத்துவருக்குச் சமமான வர்தான். இன்றும் கிராமப்புறங்களில் அப்படிப்பட்ட அனுபவமிக்க எம்.பி.பி.எஸ் மருத்துவர்கள் பலரை பார்க்கலாம். பிரச்னை என வரும் நோயாளிக்குச் செய்ய வேண்டிய அடிப்படை சிகிச்சைகளை அவர்கள் அறிந் திருப்பார்கள். ஆனால், இதுதான் தன் எல்லை என்பதை உணர்ந்து, இதற்கு மேல் இதை தன் னால் கையாள முடியாது என்ற நிலையில் அதை சிறப்பு மருத்துவருக்குப் பரிந்துரைக்க வேண்டும்.

உதாரணத்துக்கு, ஒருவர் காய்ச்சல் என வருகிறார் என வைத்துக்கொள்வோம். அதன் அறிகுறிகளை வைத்து, அது மலேரியா சீசனா, டெங்கு சீசனா என பார்த்து அதற்கேற்ப சிகிச்சை அளிப்பார். அதுவே இன்டெர்னிஸ்ட் என்பவர் காய்ச்சலுக்கான தலை முதல் கால் வரையிலான காரணங் களை ஆராய்வார். சைனஸ் தொற்றா, வைரஸ் தொற்றா, வேறு பாதிப்பா என்பதையெல்லாம் யோசித்து அத்தனைக்குமான சிகிச்சைகளை இன்டெர்னிஸ்ட்டால் செய்ய முடியும்.

ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருந்தாலும் அதை இன்டெர் னிஸ்ட்டால் கண்டுபிடிக்க முடியும். அவரால் ஆஞ்சியோகிராமோ, ஆஞ்சியோபிளாஸ்டியோ செய்ய முடியாது. ஆனால் அவை தேவைப் படும்பட்சத்தில் இதயநோய் மருத் துவருக்குப் பரிந்துரைப்பார்.

ஒருவருக்கு சிறுநீரகங்களில் பிரச்னை என வைத்துக்கொள்வோம். முகமும், கை கால்களும் வீங்கியிருக்கின் றன, சோர்வுடன் இருக்கிறார் என்றால் இன்டெர்னிஸ்ட்டால் அவரது பாதிப் பின் தீவிரத்தை யூகித்து, டயாலிசிஸ் தேவையா என்று பார்த்து சிறுநீரக மருத்துவரிடம் அனுப்ப முடியும். அடுத்தகட்ட சிகிச்சையை அந்த சிறப்பு மருத்துவர் முடிவு செய்வார்.

ஒரு காலத்தில் இன்றுள்ளது போல ஒவ்வோர் உறுப்புக்குமான பிரத்யேக மருத்துவர்களோ, பிரிவுகளோ கிடையாது. அதனால் எல்லோருமே நீரிழிவு மருத்துவம், இதய மருத்துவர், முதியோர்நலம் என அனைத்துக்கும் தயார்படுத்தப்படுவோம். எல்லாத் துறைகளை பற்றியும் ஓரளவு தெரிந்த வர்கள் இன்டெர்னிஸ்ட். அவற்றைக் கரைத் துக் குடித்தவர்கள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்கள். இதுதான் வித்தியாசம்.

எனவே, உங்களுக்கு வரக்கூடிய எந்தப் பிரச்னைக்கும் நீங்கள் அணுக வேண்டிய முதல் நபர்கள் எம்.பி.பி.எஸ் படித்த அனுபவ மிக்க மருத்துவர்கள் அல்லது எம்.டி படித்த இன்டெர்னிஸ்ட். 16 வயதுக்கு மேலான ஆண், பெண்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப் பவர்கள் இன்டெர்னிஸ்ட். கார்ப்பரேட் மருத்துவமனைகளில் மட்டுமன்றி, எல்லா மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், மருத் துவக் கல்லூரிகளிலும் எம்டி படித்த மருத் துவர்களை நீங்கள் அணுகலாம். அவர்கள் உங்களைப் பரிசோதித்துவிட்டு, தேவைப் பட்டால் அந்தத் துறை நிபுணர்களுக்குப் பரிந்துரைப் பார்கள்.

ஓர் உதாரணம்...

நெஞ்சுவலிப்பதாக உணர்ந்த ஒரு நபர், அது இதயம் தொடர்பான பிரச்னையாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தில் நேரடியாக இதயநோய் மருத்துவரிடம் சென் றிருக்கிறார். அந்த மருத்துவரும் இசிஜி, எக்கோ, டிரெட்மில் என எல்லா பரிசோதனைகளையும் செய்திருக்கிறார். எல்லா டெஸ்ட்டும் நார்மல். ஆனாலும் சம்பந்தப்பட்ட நபர் திருப்தியாகவில்லை. கடைசி யில் ஆஞ்சியோகிராமும் செய் திருக்கிறார் மருத்துவர். அதிலும் பிரச்னையில்லை. ஆனால் ஆஞ்சியோகிராம் செய்தபிறகும் அந்த நபருக்கு நெஞ்சுவலி சரியாக வில்லை. சிகிச்சையளித்த இதயநோய் மருத்துவர், ‘நீங்க எதுக்கும் ஒரு இன்டெர்னல் மெடிசின் எக்ஸ் பெர்ட்டை பாருங்க’ என அனுப்பி வைத்ததால் என்னிடம் வந்தார்.

உண்மையில் அந்த நபருக்கு என்ன பிரச்னை தெரியுமா? ஈஸ்னோஃபிலியா பாதிப்பு... அதாவது ஈஸ்னோஃபில் செல்கள் அதிகமாக இருந்தன. நம்மூரில் கொசுக்கடியால் ஃபைலேரியாசிஸ் (Filariasis) என்ற பாதிப்பு வரும். அதைக் கண்டுபிடிப்பது சிரமம். இந்த பாதிப்பு ஈஸ்னோஃபில்ஸ் செல்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, அதன் விளைவாக நெஞ்சு வலியை ஏற்படுத்தும். வெறும் 70 ரூபாய் மதிப் புள்ள மருந்துகளைக் கொடுத்து 21 நாள்களில் அந்த நபரை குணப்படுத்தினோம். இது தெரி யாமல் அவர் செலவழித்தது 25,000 ரூபாய்.

இன்டெர்னிஸ்ட் இவற்றையெல்லாம் செய்ய மாட்டார்...

* தையல் போடுவது

* மகப்பேறு தொடர்பான பிரச்னைகளுக்கு சிகிச்சை

* பிரசவம்

* குழந்தைகள் நலம்

நேரடியாக சம்பந்தப்பட்ட துறை சார் மருத்துவர் களை அணுகலாமா?

ஹார்ட் அட்டாக் வந்த நிலையிலும், பக்கவாதம் பாதித்த நிலையிலும் ஒருவர் பொது மருத்துவரையோ, இன்டெர் னிஸ்ட்டையோ பார்க்க வேண்டியதில்லை. நேரடியாக இதயநோய் மருத்துவரையோ, நரம்பியல் மருத்துவரையோ அணுகலாம். சில பாதிப்புகளில் நேரம் மிக முக்கியம். குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்தத் துறை சார் சிறப்பு மருத்துவரை அணுகிவிட்டால் பிரச்னை தீவிரமாகாமலும், இறப்புவரை போகாமலும் காப்பாற்ற முடியும். இப்படி சில நிலைகளில் நேரடியாக ஸ்பெஷலிஸ்ட்டுகளை அணுகு வதில் தவறில்லை.

டாக்டரையே பார்க்காதது... எதற்கெடுத்தாலும் டாக்டரிடம் ஓடுவது... இரண்டில் எது சரி?

இந்த இரண்டுமே தவறுதான். மருத்துவரை அணுக வேண்டுமா, வேண்டாமா என்பதை ஒருவரின் வயது தான் முதலில் தீர்மானிக்கும். 20 வயதுக்காரர் டாக்டரெல்லாம் வேண்டாம் என முடிவெடுப்பதுபோல 40 வயதுக்காரர் எடுக்கக்கூடாது. அதிலும் நீரிழிவு, கொலஸ்ட் ரால், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அறிகுறி களை அலட்சியப்படுத்தக் கூடாது. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடனே மருத்து வரைக் கலந்தாலோசிப்பதுதான் சரி.

பெற்றோரில் இருவருக்குமோ, ஒருவருக்கோ நீரிழிவோ, கொலஸ்ட்ராலோ, ரத்த அழுத்தமோ இருந்தால், 30 வயதிலிருந்தே வருடம் ஒருமுறை ரத்தச் சர்க்கரை, கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்த அளவுகளை சரிபார்க்க வேண்டும். 35 வயதில் முழு உடல் பரிசோதனை செய்து பார்க்கலாம். அதில் ஏதேனும் அசாதாரணங்கள் தெரிந்தால் வருடம் ஒருமுறை அந்தச் சோதனையைச் செய்ய வேண்டும். பிரச்னை களே இல்லை என்றால் ஐந்து வருடங்களுக் கொரு முறை செய்து கொள்ளலாம். அதுவே இடைப்பட்ட வருடங்களில் உங்கள் உடல் எடை அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ, உடலில் ஏதோ அசௌகர்யம் இருப்பதாக உணர்ந்தாலோ ஐந்து வருடங்கள் வரை ஹெல்த் செக்கப்பை தள்ளிப்போடாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

எல்லா நோயும் தனக்கு இருப்பதாக நினைப்பது ஒருவகையான மனநல பாதிப்பு. அதை ‘ஹைப்போகாண்ட்ரியாசிஸ்’ (Hypochondriasis) என்று சொல்கிறோம். இதற்கு கவுன்சலிங்கும் சிகிச்சையும் தேவை.''

அடுத்து குழந்தைகள்நலம்...

- அலெர்ட் ஆவோம்...

என்ன நோய்... எந்த டாக்டர்? - 1 - உங்களுக்காக ஒரு கிளினிக் கைடு

டேஞ்சர் டேட்டா

மூன்றில் ஓர் இந்தியருக்கு ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதாகச் சொல்கிறது புள்ளிவிவரம். எனவே வருடம் ஒரு முறையாவது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ரத்த அழுத்த அளவை சரிபார்க்க வேண்டியது மிக அவசியம். ரத்த அழுத்த அளவுகள் அசாதாரணமாக இருந்தால் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். ஒருவருக்கு ஒரு நாளைக்கு 2.5 முதல் 3.5 கிராம் அளவுதான் உப்பு அனுமதி என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஆனால், ஒவ்வோர் இந்தியரும் சராசரியாக ஒரு நாளைக்கு 12 முதல் 15 கிராம் அளவு உப்பு சேர்த்துக்கொள்கிறோம் என்பது நிதர்சனம். அந்த வகையில் ஒவ்வொருவரும் அதீதமான உப்பு சேர்த்த உணவுகளை உட்கொள்கிறோம். இது ரத்த அழுத்த பாதிப்பை வரவழைக்கும்.