உலகம் சுருங்கி உள்ளங்கைக்குள் வந்து பல காலம் ஆகிவிட்டது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஒற்றைக் கையெழுத்து, கடைக்கோடி இந்தியனின் வாழ்க்கையில் பல மாற்றங்களை நிகழ்த்துகிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு பட்டாம்பூச்சியின் சிறகு அசைப்பு பெரும் புயலை வரவழைக்கிறது என்ற (chaos) கேயாஸ் தியரி, அரங்கேறும் பிரமாண்ட மேடையாக மாறியிருக்கிறது உலகம்.
இத்தகையச் சூழலில், சமூக, கலாசார, வர்த்தக, அரசியல்ரீதியாக இணைந்திருக்கும் உலக நாடுகள் தங்களுக்குள் இணக்கமானதொரு சூழலை உருவாக்கிக்கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கின்றன. அந்த நோக்கத்தின் முன்னெடுப்பே ஜி20 நாடுகளின் மாநாடு.
இந்த 20 நாடுகள் தான் உலகின் 85 சதவிகித ஜி.டி.பி-க்குச் சொந்தம் கொண்டாடுகிறது. உலகின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கும், ஏறத்தாழ உலகின் பாதி நிலப்பரப்பும் இந்த நாடுகளுடையது. இப்படி உலகின் பெரும்பகுதியை எல்லா அலகுகளிலும் உள்ளடக்கியிருக்கும் இந்தப் பெரும் உலக சக்திகள், ஒன்றோடொன்று இயைந்து பணியாற்ற, உலக நாடுகளின் நிலையான பொருளாதாரத்தைப் பற்றிய புரிதலை ஏற்படுத்திக்கொள்ளத்தான் ஜி20 நாடுகளின் மாநாடு.
1999-ம் ஆண்டே ஜி20 அமைப்பு தோற்றுவிக்கப்பட்டாலும், 2008-ம் ஆண்டு உலகம் சந்தித்த மிக அதிகமான பொருளாதார நெருக்கடியின் காரணமாக அந்த ஆண்டு முதல் ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சந்தித்துக்கொள்ளும் அதிமுக்கிய சர்வதேச நிகழ்வாக மாற்றம் கண்டது. 2010 வரை ஆண்டுக்கு இருமுறையும், அதன்பிறகு, ஆண்டுக்கு ஒருமுறையும் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. சுற்றுமுறையில், ஆண்டுக்கு ஓர் உறுப்பினர் நாடு, இந்த அமைப்பிற்குத் தலைமை ஏற்றுக்கொள்கிறது.

இந்த 20 உறுப்பினர்கள் தவிர்த்து ஸ்பெயின், ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கும் விருந்தினர்களாக இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படுகிறது.
சரி, அப்படிச் சர்வதேசத் தலைவர்கள் எல்லாம் ஒன்றுகூடி என்ன பேசுகிறார்கள்? இதன் முக்கியத்துவம் என்ன? இந்த மாநாடு என்ன மாதிரியான ஆக்கப்பூர்வமான விளைவுகளை ஏற்படுத்துகிறது? பார்ப்போம்.....

இந்த மாநாட்டில், குறிப்பிட்ட ஆண்டில் உலகம் எதிர்நோக்கும் முக்கியப் பிரச்னைகளைப் பற்றிக் கலந்துரையாடப்படுகிறது. குறிப்பாக, பொருளாதார விஷயங்கள், வர்த்தகப் பரிவர்த்தனைகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. உறுப்பு நாடுகள் அவர்களுக்குள் ஒரு சுமுகமான, செயல்பாடுகளுக்கான முடிவை எட்டச் செயல்படுகிறார்கள். நேரடியாக, பெரும்தலைவர்கள் சந்தித்துக்கொள்வதால் மிகச் சிக்கலான விஷயங்கள், இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவு ஆகியவை விவாதிக்கப்படுகிறது.
2019-ம் ஆண்டு ஜி20 மாநாட்டில், நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவு, பருவ நிலை மாற்றம், உறுப்பு நாடுகளுக்கு ஈரான் உடனான நட்புறவு ஆகியவை முக்கிய விவாதப்பொருளாகியிருக்கிறது. அதிலும் முக்கியமாக உலகின் மிகப்பெரும் பொருளாதாரச் சக்திகளான சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகப் போர் குறித்து விவாதம் நடைபெற்றுள்ளது. சீனத் தயாரிப்புகளின்மீது அமெரிக்கா கூடுதலாக எந்த வரியும் புதிதாக விதிக்காது என்று ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகச் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
ஜப்பான் - அமெரிக்கா - இந்தியா இடையேயான பேச்சுவார்த்தை, இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஆகியோர் இடையேயான பேச்சுவார்த்தை, ஆகியவை இந்த ஜி20 மாநாட்டில் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை தவிர்த்து,
* ஜி20 உறுப்பு நாடுகள், உலக வர்த்தக கட்டமைப்பை உறுதிப்படுத்துவதற்காக, உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகளைப் புனரமைத்து, நிலைப்படுத்த முடிவெடுத்திருக்கின்றன.
* பருவ நிலை மாற்றத்தைத் தடுக்கவும், உலகின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து நிலைப்படுத்தப்பட்ட வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கவும், பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்கவும் உலக நாடுகள் ஒப்புதல் அளித்திருக்கின்றன.
*துருக்கி - ரஷ்யா வர்த்தக உறவினால், துருக்கிமீது அமெரிக்கா எந்தவித தடைகளும் விதிக்காது என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாகத் துருக்கி அதிபர் தெரிவித்திருக்கிறார்.
*அமெரிக்கா நிறுவனங்கள் சீனாவிற்குத் தொலைத்தொடர்பு சாதனங்களுக்கான உதிரிப்பாகங்கள் அளிப்பதை அமெரிக்கா அரசு தடை விதிக்காது என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
* இதில் முக்கியமாக, தடையற்ற சர்வதேசத் தகவல் பரிமாற்றத்திற்கான ஒப்பந்தத்தில், 24 நாடுகள் ஒப்புதல் அளித்தும், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் கையெழுத்திடவில்லை.
இரு தினங்கள் நடந்த ஜி20 மாநாட்டில் இவ்வாறு எண்ணற்ற முக்கியமான சர்வதேச விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. அதேசமயம், ஜி20 நாடுகளுக்கான எதிர்ப்பும் ஒருபுறம் வலுவடைந்திருக்கிறது. மறுபுறம், அளவில் சிறிதானாலும், 150-க்கும் மேலான உலக நாடுகள் பங்குகொள்ளாத இந்த மாநாட்டில், மற்ற நாடுகள் தன்னிச்சையாக முடிவெடுப்பது விமர்சிக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, அப்படியே எடுக்கப்பட்ட முடிவுகள் யாவும் செயல் வடிவம் பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. உறுப்பு நாடுகளின் எந்த வாக்குறுதியும், சட்டத்தால் செயல்படுத்த முடியாது எனும் பட்சத்தில், இந்த மாநாடு வெறும் கண்துடைப்பு என்ற விமர்சனமும் எழுகிறது.
உலகில் பல்வேறு தரப்பிலிருந்து, இந்த மாநாடுகள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் முடிவாக அந்த விளைவுகள் எதுவும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லை என்பதுதான் உண்மை நிலவரம். செயல்ரீதியாக இந்த மாநாடும் ஒரு சடங்காக மட்டுமே நிகழ்ந்துகொண்டிருக்கின்றன என்பது வல்லுநர் கருத்து.
எது எப்படியாயினும், உலகத் தலைவர்கள் ஒரே இடத்தில் சந்திக்கும்போது, அந்த நாடுகளின் மனநிலை, நட்பு நிலை, சர்ச்சைகள் ஆகியவை நேரடியாகச் சந்திக்கப்படுகின்றன. அது, நிச்சயம் ஒரு பட்டாம்பூச்சியின் சிறகு அசைப்பாகச் சிறு நன்மை பயக்குமெனில் மகிழ்ச்சியே.